Sunday, December 15, 2019
முகப்பு செய்தி மோடி அரசின் நீட் தேர்வு தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆர்ப்பாட்டம் !

மோடி அரசின் நீட் தேர்வு தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆர்ப்பாட்டம் !

-

நீட் தேர்வில் விலக்கிலை! தமிழக மாணவர்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்! தமிழகமே திரண்டெழு! என்கின்ற முழக்கத்தின் அடிப்படையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக கடந்த 29.08.2017 செவ்வாய் கிழமை அன்று மதுரை தெற்குவாசல் – பள்ளிவாசல் அருகில் காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு வின் மதுரை அமைப்பாளர் தோழர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

தன்னுடைய தலைமையுரையில் “நீட் தேர்வின் மூலம் மோடி அரசும் நீதிமன்றமும் தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் மாபெரும் துரோகத்தை செய்துள்ளனர். சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஏழை மாணவர்களின் மருத்துவக் கன‌வை தூக்கி எறிந்துள்ளனர். இதன் மூலம் மருத்துவம் என்பது சேவை அல்ல கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் ஒரு வியாபார பொருள் என்று தனியார் மருத்துவ கல்லூரி கொள்ளையை சட்ட பூர்வமாக்கியுள்ளது.

நான் இதை இட்டுக் கட்டி சொல்லவில்லை. இந்த நீட் தேர்வு விவகாரம் முதலில் வெளியே வந்தபோது மோடி அரசின் தமிழக அடிப்பொடிகளும் சரி, நீதிமன்றமும் சரி என்ன சொன்னார்கள். ஒரு புறம் தரம் உயரும் என்றும் மறு புறம் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள் என்பதால் தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டண கொள்ளை கட்டுப்படுத்தப்படும் என்று சாமியாடினர். ஆனால் தற்போது அரசு கல்லூரி இடங்களை மட்டுமே நாங்கள் முறைப்படுத்துவோம், தனியார் மருத்துவ கல்லூரி கட்டணங்களில் நாங்கள் தலையிடமட்டோம் என நீட் தேர்வை நம்பிய நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு பெரிய நாமத்தை போட்டுவிட்டது.” என்று ஆர்.எஸ்.எஸ். மோடி அரசு மற்றும் நீதிமன்றங்களின் உயர் சாதி மற்றும் வர்க்க பாசத்தை தோலுரித்தார்.

அடுத்ததாக பேசிய ம.க.இ.க.வின் தோழர் இராமலிங்கம் தனது கண்டன உரையில் “நீட் தேட்வு என்பது மாணவர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. தனியார்மயத்தின், கார்பரேட்மயத்தின் ஒரு பகுதி. இந்த புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் இந்த நாட்டை கொள்ளையடித்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை வீழ்த்துவது ஒன்றுதான் மாணவர்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களின் நலனையும் மீட்டெடுக்கும் ஒரே வழி” என்று மக்களை போராட்டங்களில் கலந்துகொள்ள அறைகூவல் விடுத்தார்.

அடுத்ததாக பு.ஜ.தொ.மு.வின் தோழர் பிரகாஷ் தனது கண்டன உரையில் மருத்துவ கல்வி மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து குழந்தைகளையும் அடிப்படை கல்வியிலிருந்தே விளக்கி வைக்கும் திட்டத்தோடு கல்வித்தரத்தை உயர்த்துகிறேன் என்கின்ற பெயரில் புதிய கல்வி கொள்கை என்கிற ஒரு சதித்திட்டத்தை நடைமுறைப் படுத்தவிருக்கிறது மத்திய அரசு. எனவே மாணவர்கள் மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களும் மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்கி இதை முறியடிக்க வேண்டும் என முழங்கினார்.

மக்கள் அதிகாரம் தோழர் ஆசை பேசும்போது, “தமிழக மருத்துவ மாணவர்கள் தேவையான தரத்தோடு இல்லை, எனவே அவர்கள் நீட் எழுதி தேர்வாகும் அளவுக்கு தங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக‌ ஒரு வருடம் விலக்கு அளிக்கிறோம் என்றார்கள். பிறகு அதையும் நீக்கிவிட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால்  பீகார், உபி, மபி போன்ற வட மாநிலங்களில் இன்னும் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அளவிற்கு கல்வி தரம் குறைவாக இருக்கும் போது தமிழகத்தில் மட்டும்தான் ஏழை ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கூட மருத்துவம் படிக்கின்ற அளவிற்கு தகுதியாக உள்ளார்கள். இதுதான் மத்திய அரசிற்கு எரிச்சலாக உள்ளது.

இன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூட உயர்கல்வி படிக்கும் அளவிற்கு கல்வி உரிமை உள்ளதென்றால் அது அரசு கொடுத்த சலுகை அல்ல. பெரியார் போன்றவர்களும் இன்னும் பலர் போராடி பெற்ற உரிமைதான் இது. மத்திய அரசு நடத்தும் எய்ம்ஸ்,மற்றும் ஜிப்மர் போன்ற மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் கிடையாது ஆனால் நல்ல கல்வி வளர்ச்சி பெற்ற தமிழகத்திற்கு நீட் தேர்வு உண்டு என்றால் அது என்ன நீதி?” என்றார். எனவே அனைத்து மக்களும் மாணவர்களும் சேர்ந்து நம் கல்வி உரிமையை மீட்க போராட வேண்டும்” என்று மக்களுக்கு அறைகூவல்விடுத்தார்.

அதன் பின் பேசிய பு.மா.இ.மு தோழர் ரவி, இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்குவதற்கான அனைத்து தில்லுமுல்லு வேலைகளையும் அரசும் ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. மக்களை மடைமாற்ற பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நம் கண் முன் தள்ளப்படுகின்றன. இன்று ஜிஎஸ்டி மூலம் 92ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் வந்துள்ளதாக ஜெட்லி கூறுகிறார். ஆனால் இந்த வரிப்பணமெல்லாம் யாருடைய நலனுக்காக செலவிடப்படுகிறது. கார்ப்பரேட்களின் கொள்ளை வியாபாரத்திற்கு சேவை செய்ய பயன்படுத்த போகிறார்கள். ஆனால் மக்களுடைய சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் 20 சதவீதம் வெட்டியுள்ளது இந்த அரசு. எனவே இந்த கார்ப்பரேட்மயத்தை உலகமயத்தை முறியடிக்கும் போதுதான் மக்கள் நலனுக்கான ஒரு அரசை அமைக்க முடியும் எனவும் அதற்காக மக்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று பேசினார்.

பின்பு மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில பொது செயலாளர் தோழர் முரளி பேசும் போது “என்னுடைய கவலை எல்லாம் இன்னும் ஏன் தமிழகம் அமைதியாக இருக்கிறது என்பதுதான். பிக் பாஸ், டிவி சீரியல்கள் பார்த்துகொண்டு பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள யாரும் மருத்துவ மாணவர் கிடையாது. அனைவரும் சமூக நீதிக்காக போராடுபவர்கள்தான்.

அந்த உணர்வோடுதான் இங்கே மருத்துவம் படிக்கவில்லையென்றாலும் கல்வி உரிமைக்காக போராடுகிறார்கள். ஒரு ஏழை தலித் மாணவி பிளஸ் டூ தேர்வில் 1180 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் அவருக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இனிமேல் பெற்றோர்கள் நீட் தேர்விற்காக லட்சங்களில் செலவழிக்க வேண்டியிருக்கும். அதை எதிர்த்து பெரியாரின் மொழியில் பேசி இந்த மக்களை புரியவைத்து போராட்டத்திற்கு அழைக்க வேண்டும்” என்றார்.

இறுதியாக பேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின்  மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயோனல் அந்தோணிராஜ். “இங்கே பெயருக்குத்தான் அதிமுக ஆட்சி, உண்மையில் இந்த அதிமுக அமைச்சர்கள் எல்லாம் பாஜக -வின் கூஜா தூக்கிகள். அன்று ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்தார்கள், இன்று மோடியின் காலில் விழுந்துகிடக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். காரணம்; தான் கொள்ளையடித்த சொத்துக்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். ரெய்டு பயம். நீட் தேர்வின் மூலம் தமிழக மக்களின் கண்களை பாஜக தோண்டும் போது இந்த அடிமைகள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக் மக்களின் வரிப்பணத்தில் உருவான மருத்துவ கல்லூரிகளை விழுங்குவதற்குத்தான் மோடி இந்த வேலையை செய்கிறார். நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்க இந்த அடிமைகள் வாயே திறக்கவில்லை. இவர்கள் கொண்டுவந்த அவசர சட்டம், தீர்மானம் எல்லாம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்ச்சியாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. போலி இருப்பிட சான்றிதழ் மூலம் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மோடியும் இந்த அதிமுக அடிமைகளும் வெளிப்படையாக மக்களுக்கு எதிராக வேலை பார்க்கும் போது மக்கள் ஏன் இவர்களுக்கு எதிராக வெளிப்படையாக திரளக் கூடாது.

இந்த நீட் தேர்வின் மூலம் உருவாகும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு வெளிநாட்டில் வேலை பார்க்கவே விரும்புவார்கள்.  சாதாரண உழைக்கும் வர்க்க மாணவர்கள்தான் சேவை மனப்பான்மையோடு இருப்பார்கள். எனவே தான் மருத்துவத்தை கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விட ஏதுவாக நீட்டை கொண்டுவருகிறது. பாஜக என்றாலே இஸ்லாமிய வெறுப்பு, தலித் எதிர்ப்பு என்பதுதான். ஆனால் அதுவும்கூட ஒரு நாடகமே.

கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக இஸ்லாமிய பாகிஸ்தான், அரபு நாடுகளோடு ஒப்பந்தம் போடும் மோடி இங்கே உள்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இஸ்லாமிய வெறுப்பை தூண்டிவிடுகிறது.  இந்த அதிமுக அடிமைகளை பயன்படுத்தி தமிழகத்தில் மதக்கலவரங்களை நடத்தி பெரியார் பிறந்த மண்ணை ஆக்கிரமிக்க துடிக்கிறது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே வரி, ஒரே நாடு என வேடமிட்டு பாசிசத்தை கொண்டுவர துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஒரு மாபெரும் மக்கள் கூட்டணியை உருவாக்குவதன் மூலம்தான் இவர்களை முறியடிக்க முடியும், அதை செய்துகாட்டி பெரியார் பிறந்த மண் இது என்பதை நிரூபிப்போம்.” என்று சூளுரைத்தார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.

_____________

இந்த போராட்டச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. +2 தே ர்வில் 1176 மார்க் எடுத்து இருந்தும் .. நீட் என்கிற அட்டூழியத்தால் .. மருத்துவர் படிப்பு சீட் கிடைக்காததால் .. அரியலூர் மாணவி தற்காெலை செய்துக் காெண்டார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. … எவ்வளவு கேடு கெட்ட அரசுகளின் பிடியில் நாம் சிக்கி காெண்டு இருக்கிறாேம் என்பதை அனைவரும் உணரவேண்டும் … இந்த அரசியல் கபடதாரிகளை விரட்டியே தீரவேண்டும்….!!!

  2. இளைய தலைமுறையின் வாழ்வாதாரத்தை நாசப் படுத்த வந்த நீட் தேர்வுத் திட்டத்தை என்ன விலை கொடுத்தேனும் அடித்து விரட்டாது விட்டால் தமிழ் இனமே இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க