Monday, March 27, 2023
முகப்புஅரசியல்ஊடகம்பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !

பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !

-

வுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் வரிசையில் அடுத்த களப்பலி. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கவுரி லங்கேஷ் காட்டிய நேர்மையையும், பார்ப்பன இந்து மதவெறியர்களை எதிர்த்து நின்ற அவரது துணிவையும் எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

மிரட்டல்கள், அவதூறு வழக்குகள், நீதிமன்றங்கள் விதித்த சிறைத்தண்டனை.. என இந்துத்துவ சக்திகள் தொடுத்த தாக்குதல்கள் எதுவும் அவரை வீழ்த்த முடியவில்லை. எனவேதான் தோட்டாக்களைக் கொண்டு அந்த வீராங்கனையை வீழ்த்தியிருக்கிறார்கள்.

கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் போன்றோரைக் கொலை செய்த குற்றவாளிகளைப் போலவே, கவுரி லங்கேஷைக் கொலை செய்த குற்றவாளிகளும் இந்து மதவெறிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும். பத்திரிகையாளர் சமூகத்துக்கும் தெரியும்.

இருப்பினும், இன்றிரவு நாடு முழுவதும் நடைபெறக்கூடிய தொலைக்காட்சி விவாதங்களில் கொலையாளிகள் தரப்பைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியினரும் கருத்து சொல்வதற்கு அழைக்கப்படுவார்கள். “இத்தகைய வன்முறைகளிலும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் தங்களுக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது” என்றும் “சநாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” என்றும் அவர்கள் சத்தியம் செய்வார்கள். “ஆதாரம் இல்லாமல் பாஜக மீது குற்றம் சாட்டுவது நியாயமல்ல” என்று நடுநிலையாக கருத்து கூறுவார் இன்னொரு சமூக ஆர்வலர். பிறகு, “கர்நாடகாவில் நடப்பது காங்கிரசு ஆட்சி. சட்டம் ஒழுங்கிற்கு மாநில அரசுதான் பொறுப்பு” என்று எகிறுவார் பாஜக பிரதிநிதி. இறுதியாக “அவதூறு வழக்கில் கவுரி லங்கேஷுக்கு நீதிமன்றமே தண்டனை விதித்திருக்கிறது தெரியுமா, அவர் செய்த தவறை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?” என்று நெறியாளரை நோக்கி துப்பாக்கியைத் திருப்புவார்.

இந்த இடத்தில் நெறியாளர் சரணடைய வேண்டும். அல்லது அவமானகரமான ஒரு சமரசத்துக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அக்லக் முதல் அனிதா வரையிலான விவாதங்கள் அனைத்தும் இப்படித்தான் முடிவடைந்திருக்கின்றன.

இத்தகைய சமரசத்துக்கு கவுரி லங்கேஷ் இணங்கவில்லை என்பதால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். யாரை பொது அரங்கில் பணிய வைக்க முடியவில்லையோ அவர்களைத்தான் கள்ளத்தனமாக சுட்டுக் கொல்கிறார்கள் பாசிஸ்டுகள். “சரணடைவும் சமரசமுமே புத்திசாலித்தனமானது” என்று எண்ணுவோரை “நிரபராதிகள்” என்று நாம் கருதலாமெனில், கவுரி லங்கேஷ் போன்றோரை முட்டாள்கள் என்றுதான் மதிப்பிட வேண்டும்.

சுயமரியாதை உள்ளவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ளவேண்டும் – கவுரி லங்கேஷ் அல்லது அனிதா -என்ற நிலை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நடந்து கொண்டிருப்பது பார்ப்பன பாசிசத்தின் கோரத் தாண்டவம் என்ற போதிலும், பார்ப்பனியம் என்ற சொல்லை பொதுவெளியில் கேட்பதே அரிதாகி வருகிறது.

அனிதாவை மரணத்துக்குத் தள்ளிய நீட் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, அனில் ஆர் தவே, “நான் மட்டும் ஹிட்லராக இருந்தால், பகவத் கீதையை எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்குவேன்” என்று நீதிமன்றத்தில் பிரகடனம் செய்தவர். இருப்பினும், சட்டவிரோதமான அந்த கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்பையும், அதனை சிரமேற்கொண்டு திணித்து வரும் மோடி அரசையும் உந்தித் தள்ளும் உணர்வு பார்ப்பனியம்தான் என்பதை எத்தனை பேர் பேசுகிறார்கள்?

“பார்ப்பன” என்ற சொல்லைப் பயன்படுத்திய தோழர் வே.மதிமாறன் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து காணாமல் போகிறார். தொலைக்காட்சி காமெராவுக்கு முன் சட்டைக்குள்ளேயிருந்து பூணூலை உருவ முனைந்த பாஜக நாராயணன் வழக்கம் போல வலம் வருகிறார். விரைவிலேயே திறந்த மார்பில் முப்புரி நூலோடு அவர் அரங்கத்துக்கு வரக்கூடும். கவுரி லங்கேஷுக்காக இரங்கல் தெரிவிக்கும் ஊடகவியலாளர்களும் அறிவுத்துறையினரும் தமது நிலை இரங்கத்தக்கதா, இயல்பானதா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

பார்ப்பனியத்தை எதிர்த்த மதுரை வீரனையும் ஒண்டிக்கருப்பனையும் முத்துப்பட்டனையும் சாமியாக்கி கொண்டாடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் அன்று ஒடுக்கப்பட்ட சமூகம் இருந்தது. அது புரிந்து கொள்ளத்தக்கது. இன்று கவுரி லங்கேஷையும் அனிதாவையும் வெறும் பூசையறைப் படமாக்குவது ஏற்கத்தக்கதல்ல.

’தோலைக் காப்பாற்றிக்கொள்வது ஒன்றைத்தவிர வேறெந்த தீய உள்நோக்கமும் இல்லாத நிரபராதிகள்’ என்றே பலரும் தம்மைப் பற்றிக் கருதிக் கொள்கிறார்கள். ஆனால், யாரெல்லாம் பார்ப்பன பாசிசத்தின் முன் மண்டியிடுகிறார்களோ அவர்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமின்றி, பணியாமல் நிமிர்ந்து நிற்கும் கவுரி லங்கேஷ் போன்றோரையும் கொலையாளிகளின் துப்பாக்கிக்கு அடையாளம் காட்டி விடுகிறார்கள்.

கொலையாளிகளைப் பற்றி கவலைப்பட்டது போதும். நாம் நிரபராதிகளைப் பற்றி கவலைப்படுவோம். அதுதான் கவுரி லங்கேஷ் என்ற வீராங்கனைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

இவண்,

மருதையன்,

பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. துப்பாக்கியை விட ஊடக வியாபாரிகளின் செயல்கள்தாஜ்ன் மிகவும் ஆபத்தாக இருக்கிறது.எங்கே துளியும் நேர்மை , துணிவு இருந்தால் மருதையன் அவர்களின் இந்த அறிக்கையை வைத்து நேரலையில் விவாத நிகழ்ச்சி நடத்தச்சொல்லுங்கள் பார்ப்போம்.நொடீப்பொழுதில் அனைத்தும் மாறத்தொடங்கிவிடும்.பார்ப்பனியம் அழிந்தே தீரும்.துப்பாக்கிகள் இடம் மாறும்போது.

 2. தொலைக்காட்சி விவாதத்தில் அனிதாவின் நியாயம் குறித்து திரைப்படக்கியக்குனர் திரு.கரு.பழனியப்பன் அவர்கள் நேர்மையாகவும் துணிவோடும் தன் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.பாராட்டுக்கள்.

 3. பார்ப்பனியம் என்பதை பொது வெளியில் அது பார்ப்பனர்களை சாதி ரீதியாக விமர்சிக்கும் ஒரு சொல் என்றே பெரும்பான்மையினர் கருதுகிறார்கள்.”பார்ப்பனியம்” என்பது பார்ப்பனர்களால் பார்ப்பனர்களின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்ட நஞ்சுக்கொள்கை என்பதையும் பெரும்பான்மை மக்கள் பார்ப்பனியம் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் விரிவான கட்டுரை ஓன்றை வெளியிட கோருகின்றேன்.தற்போதைய சூழலில் அது மிகவும் அவசியம் என கருதுகின்றேன்.அஞ்சலி செலுத்தும் வாய்ப்புகளை இனிமேல் பார்ப்பனர்களின் அன்றாட கடமையாக்குவதுதான் நமது “நீட்” டான பணி என்றும் உணர்கின்றேன்.

 4. All those people who represent BJP in the TV debates talk very arrogantly.One such person by name Sekar shown his arrogance by telling that Mrs Sabarimala,the teacher who resigned in the NEET issue does not have “GNANAM”.But,got a fitting reply from Mrs Sabarimala.Kudos to Mrs Sabarimala for her boldness.

  • ராம லக்ஷ்மன் ஸ்ரிநீவாஸ்,

   தப்ப எடுத்துக்காதீங்க…..

   கவுரிய போட்டுத்தள்ளுன இந்துத்துவ வெறியர்களை எதிரின்னு சொல்றீங்களா இல்லை இவ்ளோ நாலு அந்த வெறியர்களை தைரியமாக கருத்துக்களத்தில் எதிர்த்து மோதினாரே அவர்களை எதிரின்னு சொல்றீங்களா?

   உங்களை மாதிரி படிச்சவங்க எழுதும் போது முன்ன ஒரு வரியும் பின்ன ஒரு வரியும் சேத்து எழுதுனா எங்க மாதிரி இருக்குறவங்க புரிஞ்சுக்க உதவியா இருக்கும்.

   நன்றி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க