Friday, March 31, 2023
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !

குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !

-

குஜராத்தில் மோடி ஆட்சியின் போது நடந்த மதவெறியாட்டத்தின் ஒரு பகுதியாக 567 மசூதிகள், தர்காக்கள், பிற இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இடிக்கப்பட்ட இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் இருந்த இடத்தில் அவசர கதியில் சாலைகள் போடப்பட்டன; பல இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.

17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் உருது கஜல் கவிஞர் வாலி குஜராத்தியின் நினைவுச் சின்னம் மத வெறி கும்பல்களால் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் இரவோடு இரவாகத் தார் சாலை போடப்பட்டு விட்டது. ”அப்படி ஒரு தர்கா இருந்ததாக வருவாய்த்துறை பதிவே இல்லை” என்று மோடியின் குஜராத் அரசு சொல்லி விட்டது.

”இவ்வாறு இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களைச் செப்பனிட்டு, புதுப்பித்துப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு குஜராத் அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கோத்ரா சம்பவத்தின் எதிர்வினையாக, துரதிருஷ்டவசமாக நடைபெற்ற சம்பவங்கள் என்று குஜராத் இனப்படுகொலையையும் மசூதிகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களையும் வியாக்கியானம் செய்தது மட்டுமின்றி, இவ்வாறு ஒரு மதத்தினை ஊக்குவிப்பதற்காக மட்டும் அரசுப்பணத்தைச் செலவிடுவது மதச்சார்பின்மைக்கு விரோதமாகும் என்றும் வக்கிரமாக வாதிட்டது, குஜராத் அரசு.

”மோடி அரசு கூறுவதைப் போல, துரதிருஷ்டவசமான சம்பவங்களாகவே அவை இருந்தாலும், தனது கடமையிலிருந்து தவறியதை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது” என்று கூறிய குஜராத் உயர் நீதிமன்றம், ”இடிக்கப்பட்ட மசூதிகள், தர்காக்கள், கல்லறைகள் பற்றிய விரிவான கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகளைச் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து, அவற்றைச் செப்பனிட அல்லது புதுப்பிக்க ஆகும் செலவைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டும்” என்று 2012 பிப்ரவரி மாதம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அப்போது தீபக் மிஸ்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு தடை விதிக்க மறுத்ததுடன், ”வெள்ளம் வந்து வீடு அழிந்தால் நிவாரணம் தருகிறீர்களே, இதற்கு ஏன் தரக்கூடாது?” என்று கேட்டுத் தடை அளிக்க மறுத்து விட்டது.

அதன் பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த குஜராத் அரசு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைத்தது.

”பொதுநல வழக்கு என்பது பிரிவு 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்குத்தான் பொருந்தும். வழிபாட்டு உரிமை அடிப்படை உரிமைகளில் இல்லை. எனவே, இந்தப் பிரச்சனைக்குப் பொதுநல வழக்கின் அடிப்படையில் பிறப்பித்த உத்தரவு செல்லாது.”

”குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவது, கடைப்பிடிப்பது, பரப்புவது என்ற உரிமையில் குறிப்பிட்ட இடத்திலிருந்து அந்த மதத்தை கடைப்பிடிப்பது, பரப்புவது என்ற உரிமை இல்லை.”

”மத உரிமை என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டி வாங்க முடியாது.”

”வழிபாட்டுத் தலங்களைக் கட்டித் தரும்படி அரசுக்குச் சொல்வது மத விஷயங்களுக்காக வரி வசூலிக்கப்படக் கூடாது என்ற அரசியல் சட்டத்தின் பிரிவு 27 -க்கு விரோதமானது.”

இவை அத்துணையும் அயோக்கியத்தனமான, வக்கிரமான வாதங்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று கூறி, நாட்டை இரத்தக் களறியாக்கிய கும்பல் இப்படி வாதிடுவதற்குக் கூச்சப்படவில்லை. அதுமட்டுமல்ல, அரசு பணத்திலிருந்து அமர்நாத் யாத்திரை பாதையைச் செப்பனிட ரூ 10 கோடி, பல்வேறு முதல் அமைச்சர்கள் மாநில அரசுகள் சார்பாக திருப்பதி கோயிலில் காணிக்கை செலுத்துவது, ராஜஸ்தானில் கோயில்களைப் புதுப்பிக்கவும், பூசாரிகளுக்குப் பயிற்சி வழங்கவும் ரூ 26 கோடி ஒதுக்கீடு, ஆந்திராவில் பூசாரிகளின் நலனுக்காக ரூ 60 கோடி ஒதுக்கீடு, ஹஜ் யாத்திரைக்குப் பணம், மானியம் என எண்ணற்ற மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரசு, நீதிமன்றத்தில் இப்படிப் பேசுவது குறித்து சிறிதும் வெட்கப்படவில்லை.

மனுதாரர்களான பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்கள் சார்பிலான வழக்கறிஞர் கீழ்க்கண்டவாறு இதனை மறுத்துரைத்தார்.

”சமூகத்தின் பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆதிக்க குழு ஒன்று இடிப்பது அவர்களது நிலையை மேலும் பலவீனமாக்குவதாகும். அரசியல் சட்டத்தின் 14, 21, 25, 26 -ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைத் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது, அவை அனைத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். எனவே, மசூதிகளை இடித்தது அடிப்படை உரிமைகளை மீறுகிறது” என்றும்,

”குஜராத் மாநிலத்தில் ஒட்டு மொத்த சட்ட ஒழுங்கு தோற்றுப் போனதன் விளைவாக வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தவறிய அரசின் மீது நிவாரணத்துக்கான பொறுப்பைச் சுமத்தியது சரியானதுதான்” என்றும்,

”வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்குவது, அந்தக் குற்றச் செயலுக்கான பரிகாரமே தவிர, அரசுத் தரப்பு சொல்வது போல ஒரு குறிப்பிட்ட மதத்தை பரப்புவதற்கான செலவு இல்லை” என்றும்,

”பல நபர்களின் பொதுச் சொத்துக்கு விளைவிக்கப்பட்ட சேதத்துக்கும், தனிநபர் ஒருவரின் சொத்துக்கு இழைக்கப்பட்ட சேதத்துக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அரசு தனது அரசியல் சட்டரீதியான பொறுப்பிலிருந்து தவறியிருக்கிறது என்பதுதான் அடிப்படையான விஷயம்.”

தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின் தீபக் மிஸ்ரா கையாளுகின்ற முக்கியமான வழக்கு இது. 2011-இல் குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த அமர்வில் இவரும் ஒரு நீதிபதி.

”சட்ட ஒழுங்கு நிலைமை தோல்வியடைந்தது, பேரழிவைக் கட்டுப்படுத்துவதில் நிர்வாகத் தலைமையின் பங்கு சுத்தமாக இல்லாதது போன்ற விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. கோபம் கொண்ட கும்பல்களின் காரணமாக சில இடங்களில் வழிபாட்டு தலங்கள் சேதமடைந்திருக்கின்றன” என்று அலட்சியமாக இவ்வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

2002 முசுலீம் படுகொலையின்போது ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர்; பெண்கள் மதவெறிக் கும்பல்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பத்தாயிரக்கணக்கான இசுலாமியர்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்ய மறுத்தது மோடியின் காவல் துறை.

”மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது” என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.

அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிடுவதன் மூலம், நடந்தது இசுலாமியர்கள் மீதான இந்துத்துவ கும்பல்களின் தாக்குதல் அல்ல என்பது போலவும் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் என்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது.

குஜராத் போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் இந்துத்துவ சார்பு காரணமாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்படவேயில்லை. தீஸ்தா சேதல்வாத், முகுல் சின்ஹா போன்ற சமூக ஆர்வலர்களின் விடாப்பிடியான முயற்சியின் காரணமாக, காவி கும்பலின் கொலை, பாலியல் வல்லுறவு, நாசவேலைகளில் பாதிக்கப்பட்ட சிலர் நீதிமன்றங்களை நாடி வழக்கு தொடுத்தனர். பெஸ்ட் பேக்கரி வழக்கு, பில்கிஸ் பானு வழக்கு ஆகியவை மும்பைக்கு மாற்றப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட இந்து மதவெறியர்களும் அவர்களைப் பாதுகாப்பதில் உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசு மருத்துவர்களும் தண்டிக்கப்பட்டனர். நரோதா பாட்டியா படுகொலை வழக்கில் மோடியின் அமைச்சர் மாயா கோத்னானி, பஜ்ரங் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 30 பேர் தண்டிக்கப்பட்டனர்.

இந்தக் கலவரத்தை நடத்தியதிலும், காவல் துறையும் அரசு நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்க்கும்படி உத்தரவிட்டதிலும் முதல்வராக இருந்த மோடியின் பொறுப்பு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஓய்த்துக் கட்டப்பட்டு, இப்போது ஜாகியா ஜாஃப்ரியின் மனு மீதான தீர்ப்பு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நிலைமை இப்படியிருக்க, சேதப்படுத்தப்பட்ட மசூதிகளைச் சரிசெய்வதற்கான நிவாரணத்தை குஜராத் அரசே கருணைத் தொகையாக வழங்குவதாகக் கூறியிருப்பதை அங்கீகரித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

மசூதிகள் தாக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை முசுலிம்களே தம் சொந்த செலவில் திரும்பக் கட்டிவிட்டார்கள். சராசரியாக ஒரு கட்டிடத்துக்கு 85 லட்சம் செலவாகியிருக்கிறது. ஆனால், குஜராத் அரசு தருவதாகக் கூறும் கருணைத்தொகை என்ன தெரியுமா?

சேதமடைந்த, இடிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கும் நிவாரணத்துக்கு இணையாக அதிகபட்சம் ரூ 50,000 அல்லது புதுப்பிப்பதற்கு ஆன செலவு இவற்றில் எது குறைவோ அதைக் கருணை அடிப்படையில் வழங்குவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து, இந்த சொற்பத் தொகைகூட யாருக்கும் கிடைக்காமல் போகும் வகையில் நிபந்தனைகளையும் போட்டிருக்கிறது, குஜராத் அரசு.

”நாங்கள் ஒன்றும் கருணையோ சலுகையோ கோரவில்லை. நாங்கள் கேட்பது உரிமை” என்று  கூறினார் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வழக்கறிஞர்.

”அங்கீகாரம் இல்லாத மதக் கட்டிடங்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கப்படாது. பொதுப் போக்குவரத்து சாலைகளில் அல்லது அங்கீகரிக்கப்படாத இடங்களில் அமைந்துள்ள எந்த வழிபாட்டுத் தலத்துக்கும் உதவி வழங்கப்பட மாட்டாது”  என்றும் நிபந்தனை விதித்து, மத கட்டிடங்களை  இந்து மதவெறிக் கும்பல் திட்டமிட்ட வன்முறை மூலம் இடித்ததைச் சட்டபூர்வமாக்கி விட்டது குஜராத் அரசு. பாபர் மசூதியைக் காவி கிரிமினல் கும்பல் இடித்த பிறகு, அந்த நிலத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று நீதிமன்றங்கள் வழக்கு நடத்துவதைப் போன்றது இது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு அந்த நேரத்தில் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அடுத்த நிபந்தனை.

2002 மதவெறி தாக்குதல்களில் கொலை, பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளில்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்திருக்கிறது மோடியின் போலீசு. இந்த நிபந்தனையின் மூலம் எந்த மசூதிக்கும், தர்காவுக்கும் நிவாரணம் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறது, குஜராத் அரசு.

”இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் நியாயமானவையாகவே உள்ளன” என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்திருக்கிறது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு.

தனது 49 பக்கத் தீர்ப்பில் குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் மறுத்துரைக்கவில்லை. அதேபோல குஜராத் அரசுக்காக வாதாடிய அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தாவின் வாதங்களை ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஆனால், தீர்ப்பு குஜராத் அரசுக்குச் சாதகமாக வழங்கப்பட்டு விட்டது.

நீட் வழக்கின்  உத்தரவைப் போலவே இருக்கிறதல்லவா? இதற்குப் பெயர் உச்ச்ச்ச நீதிமன்றமாம்!

– அழகு

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

பார்ப்பன மதவெறிக்கெதிரான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  • Raj – அது மன்னராட்சி சமயத்தில் நடந்தது. இந்து மன்னர்களும் கூட கோயில் சொத்தை சூறையாடி நாசம் செய்துள்ளனர். உங்க வாதமெல்லாம் ரொம்ப பழசு. வேற எதாவது ட்ரை பன்னுங்க…

   இப்ப ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு அப்படித் தான் இடிப்போம் இடிச்சிட்டு அங்க ரோடு போட்டு நிரவிடுவோம்னு சொல்ல முடியாது ஜி. இந்த நீதிமன்ற தீர்ப்பு இங்க ஜனநாயகம் இல்லங்குறத நிறுவுது. அத தான் நீங்களும் சொல்லுறீங்க.

   • பிற்கால சோழர்களின் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் அவர்கள் சிதம்பரம் பக்கத்தில் குடி பெயர்த்தார்கள்..அப்ப சிதம்பரத்தையே சூரையாடிய பாண்டிய மன்னர்களின் வரலாற்றை பற்றி ராஜ் அவர்களுக்கு கொஞ்சம் வெளக்கமா கூருங்க குரு…. அப்பவாது அறிவில் உரைகின்றதா என்று பார்கலாம்.

    • சோழன் வணங்கியதும் சிவனை தான் பாண்டியன் வணங்கியதும் சிவனை தான் அதனால் தான் பாண்டிய நாடு சோழ தேசத்தின் இருந்த போதும் மதுரை மீனாட்சி கோவிலுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை, அதேபோல் பாண்டிய மன்னன் சோழ நாட்டை பிடித்த போதும் தஞ்சை பெரிய கோவிலை எதுவும் செய்யவில்லை.

     பாண்டிய மன்னர்கள் தில்லை நடராஜனை வழிபட்டது பற்றி கல்வெட்டு ஆதாரம் எல்லாம் இருக்கிறது. போய் உங்கள் கதையை வேறு யாரிடமாவுது சொல்லுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க