ஒப்பந்த முறை தொழிலாளர் கூட்டமைப்புக்கு வழிகாட்டும் சென்னை கருத்தரங்கம் !

0
45

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

ற்காலிக வேலைகள், திடீரென்று வருகின்ற வேலைகள் தவிர தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற வேலைகளில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என்று 1970 ஆம் வருடத்தில் போடப்பட்ட “காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச் சட்டம்” சொல்லிக் கொண்டது. ஆனால் இன்றைய நிலவரம் என்ன? டாக்டரும் காண்டிராக்ட்; கம்பவுண்ட்ரும் காண்டிராக்ட்; கல்லூரி பேராசிரியரும் காண்டிராக்ட்; பஸ் டிரைவரும் காண்டிராக்ட்; எஞ்சீனியரும் காண்டிராக்ட்; மெஷின் ஆபரேட்டரும் காண்டிராக்ட்; கம்ப்யூட்டர் நிபுணரும் காண்டிராக்ட்; ஐ.டி ஊழியரும் காண்டிராக்ட்; எங்கும், எதிலும் காண்டிராக்ட் மயம். இதில் அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் என்கிற வேறுபாடு இல்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளித்த விவசாயம், நெசவு, சிறுவணிகம், மீன்பிடித்தல் மற்றும் சிறுதொழில்களை அழித்து, கோடிக்கணக்கில் அவர்களை வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக்கி உள்நாட்டின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு வேட்டு வைத்துவிட்டு பன்னாட்டுக் கம்பெனிகளும், அம்பானி, அதானி போன்ற இந்திய தரகு முதலாளிகளும் கொழுத்த இலாபத்தில் திளைப்பதற்காகவே காண்டிராக்ட் மயமாதல் நடவடிக்கை அரசு துணையோடு தீவிரமாக நடக்கிறது. இதே நோக்கத்தில் காண்டிராக்ட் முறைக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்தி உரம் போட்டு வளர்க்கிறது, அரசு.

காண்டிராக்ட் முறையை முறைப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டம் முதலாளியின் காலைத்தான் நக்கி வருகின்றது. விதிமுறை மீறல், விபத்துகளில் கொத்துக் கொத்தான சாவுகள் ஆகிய எந்த குற்றத்திலும் காண்டிராக்ட் முதலாளிகளோ, அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நேரடி முதலாளிகளோ தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. நீதிமன்றங்களே பெரும்பாலும், காண்டிராக்ட் முறையை ஆதரித்து தான் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. காண்டிராக்ட் முறையில் இருக்கும் சட்டமீறல்களை அங்கீகரிப்பதன் மூலம் காண்டிராக்ட் முறையிலான சுரண்டல்களை சட்டப்பூர்வமாக்கி விட்டன நீதிமன்றங்கள்.

எனவே, பணிநிரந்தரம், 8 மணிநேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், பணியிட விபத்துப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடும்போதே சட்டம் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், அந்தக் கைவிலங்கை உடைத்து வெளியேறுவதும், நமக்கான உரிமையை நிலைநாட்ட தொழிலாளர்களாகிய நாமே அமைப்பாகத் திரள்வதும் தான் நம்மீதான வரம்பற்ற சுரண்டல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி. முதலாளிகளால், முதலாளிகளுக்காகவே நடக்கின்ற அரசை தூக்கியெறிந்து, நம்முடைய நலன்களுக்காக, நாமே நடத்துகின்ற அரசு ஒன்றினை அமைக்காமல் நிரந்தர விடியல் இல்லை. இதற்காக வழிநடத்தக்கூடிய, புரட்சிகர அரசியலை தாங்கி நிற்கின்ற தொழிற்சங்கமே நமக்குத் தேவை.

காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லை என்பது வீணர்களின் பேச்சு. ஐ.டி ஊழியர்களுக்கு சங்கம் அமைக்கின்ற உரிமையை நிலைநாட்டி, முதலாளி வர்க்கத்தின் கனவைக் கலைத்த நம்மால், காண்டிராக்ட் தொழிலாளர்களை அமைப்பாக்கி, நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் கூலியடிமை முறைக்கும்  முடிவு கட்ட முடியும்.

தோழர் அபர்ணா

இதனடிப்படையில், இந்திய அளவில் இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க திட்டமிட்டன. இதன் முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது எனவும், கீழ்க்காணும் முழக்கங்கள் அடிப்படையில் 28.1.2018 அன்று கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

  • காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்போம்!
  • வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!
  • 8 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்ய மறுப்போம்!
  • சமவேலைக்கு சமஊதியம் என்கிற உரிமையை அடைந்தே தீருவோம்!
  • முழுமையான பணியிடப் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்யப் போராடுவோம்!
  • வேலை பறிப்பு, பசி-பட்டினியில் தள்ளுகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!
தோழர் பா.விஜயகுமார்

கருத்தரங்கமானது 28.1.2018 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள கேரளா சமாஜம் கட்டிடத்தில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் துவங்கிய இந்த கருத்தரங்கினை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் அபர்ணா, பு.ஜ.தொ.மு சார்பில் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார்,புதிய தொழிற்சங்க முனைப்பு சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் வாசுதேவன், அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் சார்பில் தோழர் தபன் ஆகியாரைக் கொண்ட தலைமைக்குழு வழிநடத்தியது.

கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில் நாடு முழுவதும் 13 மாநிலங்களிலிருந்து வந்த 20 பிரதிநிதிகள் உரையாற்றினர். வேலை நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய உரிமைகளுக்காக தாங்கள் நடத்திய போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பு.ஜ.தொ.மு சார்பில் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், புதுச்சேரி பகுதி செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கின் இறுதியில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் பிரதீப் ஆங்கிலத்திலும்,  , புதிய தொழிற்சங்க முனைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் கவுதம் மோடி இந்தியிலும், பு.ஜ.தொ.மு பொருளாளர் தோழர் விஜயகுமார் தமிழிலும் முன்மொழிந்தனர்.

கருத்தரங்கின்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகளும், தெலுங்கானாவின் அருணோதயா கலைக்குழுவினரது கலைநிகழச்சிகளும் நடைபெற்றன.ஒரு புதிய கருத்தாக்கத்தையும் நம்பிக்கையையும் இந்த கருத்தரங்கம் உருவாக்கியது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 

சந்தா