privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஅச்சப் பத்து - தெருவில் அருளியது !

அச்சப் பத்து – தெருவில் அருளியது !

-

அச்சப் பத்து
(தெருவில் அருளியது)

புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்
பொய்யில்வாழ் ஆர்.எஸ்.எஸ். அஞ்சேன்
மற்றும் ஓர் நஞ்சை அஞ்சேன்
மறைகுரு மூர்த்தி அஞ்சேன்
குடத்தில்வாழ் தேளும் அஞ்சேன்
கொலைவெறி வாளை அஞ்சேன்
மடத்தில் வாழ் உருவைக் கண்டால்
அம்ம நாம்! அஞ்சு மாறே!

விரட்டிடும் நாயும் அஞ்சேன்,
வெருட்டிடும் பேயும் அஞ்சேன்
கத்தியின்  கூர்மை அஞ்சேன்.
பக்தியின் போர்வை அஞ்சேன்
வன்சுடு காடும் அஞ்சேன்
வரும் நரி ஊளை அஞ்சேன்
சின்னவாள் தியானக் கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

டெங்கெலாம் வரினும் அஞ்சேன்
தினம் ஒரு வைரஸ் அஞ்சேன்.
பொங்கிடும் மதுவும் அஞ்சேன்
புழுநெளி உடலை அஞ்சேன்
முத்திய நோயும் அஞ்சேன்
முகமெலாம் வடுக்கள் அஞ்சேன்
‘நித்தியின்’ சிரிப்புக் கோலம்
அம்ம நாம்! அஞ்சு மாறே!

பஸ் டிக்கெட் பார்த்தும் அஞ்சேன்
ரயில்டிக்கெட் பார்த்தும் அஞ்சேன்
ஜி.எஸ்.டி. வரியும் அஞ்சேன்
பி.எச்.டி. ரேட்டும் அஞ்சேன்
எம்பிரான் பித்தை அஞ்சேன்
ஈசன் கை ஓடும் அஞ்சேன்
தம்பிரான் சொத்தைப் பார்த்தால்
அம்ம நாம்!   அஞ்சு மாறே!

பொழுதுக்கும் சீரியல் அஞ்சேன்
புழுத்திடும் டி.வி. அஞ்சேன்.
எச்சுராஜா வாயை அஞ்சேன்
எஸ்.வி. சேகர்  மெய்யை  அஞ்சேன்
நெக்குரு அடிமை அஞ்சேன்
நீடிக்கும் வறுமை அஞ்சேன்
‘சத்குரு’ ஞானக் கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

வரையிலா வாட்ஸ் அப் அஞ்சேன்
வன்மனக் காட்சி அஞ்சேன்
வட்டியின் கொடுமை அஞ்சேன்
வருத்திடும் சாதி அஞ்சேன்
புத்தியில் உரைக்கா தஞ்சேன்
பக்தியின் கொழிப்பைப் பார்த்தால்
அம்ம நாம்!   அஞ்சு மாறே!

காய்கனி விலையை அஞ்சேன்
கட்டணக் கழிப்பறை அஞ்சேன்
பிழிந்திடும் வேலை அஞ்சேன்
பிசிறிடும் கூலி  அஞ்சேன்
தெருக்களின் வெறுமை அஞ்சேன்
தேய்ந்திடும் உழைப்பை அஞ்சேன்
குருக்களின் தட்டைப் பார்த்தால்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

ரஜினியின் பித்துவம் அஞ்சேன்
கமலின் தத்துவம் அஞ்சேன்
போலீசின் தடியடி அஞ்சேன்
பொறுக்கியின் அடிதடி அஞ்சேன்
நாயர் கடை சோடா அஞ்சேன்
நந்துலால் பீடா அஞ்சேன்
ஜீயரின் சோடா கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

வாள் உலாம் எரியும் அஞ்சேன்
வந்திட்ட பட்ஜெட் அஞ்சேன்
தகையிலா விலையை அஞ்சேன்
தறியிலா ஆட்சி அஞ்சேன்
வாடிய பயிரை அஞ்சேன்
வளர்ச்சியின் பக்கோடா அஞ்ச‍ேன்
மோடியின் அறிவு வேகம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

நிலையிலா வேலை அஞ்சேன்
நெறியிலா சம்பளம் அஞ்சேன்
உயிரிலா ஆற்றை அஞ்சேன்
பயிரிலா நிலத்தை அஞ்சேன்
செடியிலா ஊறை அஞ்சேன்
சிதறிய உறவை அஞ்சேன்
மோடியின் வளர்ச்சிப் பாதை
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

– துரை. சண்முகம்