மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் ! பென்னாகரம் – சென்னை நிகழ்வுகள் !

0

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம்!
பொதுக்கூட்டம்

நாள்: 8-3-2018 வியாழன் மாலை 5 மணி
இடம்: டெம்போ ஸ்டேண்டு அருகில், பென்னாகரம்.
தலைமை : தோழர் பழனியம்மாள், பெண்கள் விடுதலை முன்னணி, பென்னாகரம்.

பெண்கள் அடிமையாய் இருந்ததெல்லாம் அந்தக் காலம். பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பி.வி.சிந்து, மிதாலிராஜ், இந்திரா நூயி போன்றவர்களைக் காட்டி பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்கிறார்கள். ஆனால் இதே நாட்டில் தான் பெண் குழந்தை என்ற காரணத்திற்காக கருக்கலைப்பு நடக்கிறது. நம் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தைகள் தொடங்கி, ஐ.டி துறை, காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண்கள் என பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. சாதியரீதியாகவும், மத ரீதியாகவும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதைவிடக் கொடுமை, பெற்ற தாயே தன் பெண்குழந்தையை வீட்டில் பூட்டி வைத்துதான் வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு என்னாகுமோ? என்று வயிற்றில் நெருப்புக் கட்டிக் கொண்டு பயந்து பயந்து வாழ்கிறோம். இதுவா பெண் சுதந்திரம்?

ஒவ்வொரு நாளும் ஏறுகிற விலைவாசியும் நம் கழுத்தைதானே அறுக்கிறது. தண்ணிரில்லை, விவசாயம் இல்லை, அதனால் விவசாய வேலையும் இல்லை. எனவே பிழைப்பிற்காக திருப்பூருக்கும் பெங்களுரூக்கும் வேலைக்குச் செல்கிறோம். கொளுத்தும் வெயிலில் கட்டிட வேலைசெய்தாலும், கால்கடுக்க பகலில் வேலை செய்தாலும் நமது உழைப்புக்கு நியாயமான கூலிதான் கிடைக்கிறதா? இல்லையே! 10 மணி நேரம் வேலை செய்தாலும் நமக்கு கண்ணீரும், கடன்தானே மிச்சமாகிறது.

இந்தக் கூலியையும், டாஸ்மாக், பேருந்துக் கட்டண உயர்வு என்ற பெயரில் வழிப்பறி செய்கிறது எடப்பாடி அரசு. டாஸ்மாக்கை மூடு என்று போராடினால் போலீசைக் கொண்டு ஒடுக்குகிறது. இதை எல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான், நாள்தோறும் அரங்கேறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையோ, விலைவாசி உயர்வையோ, டாஸ்மாக்கையோ மூட வக்கில்லாத இவர்கள் நமக்கு 33 % இட ஒதுக்கீடு தருகிறோம் என்கிறார்கள்.

பெண் என்பவள் ஆணின் அடிமை, ஆண்களுக்கான போகப் பொருள் என்பதுதானே இந்த சமூகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது. அவ்வளவு ஏன்? ஆனானப்பட்ட சிவபெருமானே பெண் என்பவள் ஆணுக்கு அடிமை என்றுதானே கூறுகிறார் திருவிளையாடல் புராணத்தில். இதைத்தானே ராஜா ராணி, செம்பருத்தி போன்ற சீரியல்களும், அழகுப்பொருட்கள் விளம்பரங்களும் அன்றாடம் நம் மூளைக்குள் திணிக்கின்றன.

பெண்களைப் பற்றி இப்படிப்பட்ட பொதுப்புத்தியுள்ள சமூகத்தை மாற்றாமல் வெறும் 33% சதவீதத்தால் மட்டும் நமக்கு உரிமைகள் கிடைத்துவிடும் என்று கூறி நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இந்த ஆணாதிக்க சமூகத்தை மாற்றுவதன் மூலம்தான் நம்முடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதெல்லாம் சாத்தியமா? என்று நாம் நினைக்கலாம்.

ஏன் முடியாது? பெண்களுக்கு ஜனநாயகம் வழங்கிய ஐரோப்பா போன்ற நாடுகளிலும், ரஷ்யாவிலும், சீனாவிலும் நம்மைப் போன்ற பெண்கள் போராடிதான், ஆண்-பெண் பேதமற்ற, அரசியல் உரிமை, பொருளாதார உரிமைகள் கொண்ட தங்களுக்கான ஒரு புதிய சமூகத்தைப் படைத்தார்கள். நம் நாட்டிலும் தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கல்வி, சொத்துரிமை என அனைத்தும் பெரியார் -அம்பேத்கர் தலைமையில் பெண்கள் போராடிதானே கிடைத்தன. மூடப்பட்ட டாஸ்மாக்குகளும் பெண்களின் கடப்பாரையால் தானே மூடப்பட்டன.

இந்த சட்டத்தாலோ, போலீசாலோ இன்று நாம் அனுபவிக்கிற பாலியல் பிரச்சினை, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் பிரச்சினை, ஆணாதிக்க, சாதி மத ஒடுக்குமுறை என ஏதாவது தீர்ந்திருக்கிறதா? இல்லை என்பதுதானே கடந்தகால, நிகழ்கால உண்மையாக இருக்கிறது. எனவே நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது ஒரு சமூக மாற்றமே என்பதை உணர்வோம். அதற்காக இந்த மகளிர் தினத்தில் பெண்களாகிய நாம் அமைப்பாக ஒன்றிணைவோம்! வாருங்கள்.

டாஸ்மாக், விலைவாசி உயர்வா, பாலியல் பிரச்சனையா ஒரே தீர்வு சமுக மாற்றமே!

சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

இவண்
பெண்கள் விடுதலை முன்னணி

பென்னாகரம் வட்டம்.

***

உழைக்கும் மகளிர் தினம் – மார்ச் 8

07-03-2018 மாலை 5 மணி
பார்கவுன்சில் கட்டிடம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகம், பாரிமுனை

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
சென்னை – 9094666320

 

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க