Sunday, September 15, 2019
முகப்பு செய்தி காவிரி மேலாண்மை வாரியம் : இனியும் ஏன் அமைதி ? போரைத் துவக்குவோம் !

காவிரி மேலாண்மை வாரியம் : இனியும் ஏன் அமைதி ? போரைத் துவக்குவோம் !

-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றோடு (29.03.2018) முடிகிறது. ஆளும் பா.ஜ.க அரசோ கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறும் வெறியில் தமிழகத்தை திட்டமிட்டே வஞ்சிக்கிறது. ஒரு நடுவண் அரசு சட்டத்திற்குட்பட்டோ, நீதிமன்றத்திற்குட்பட்டோ செயல்படாது என்பதை மோடி அரசு தெள்ளத்தெளிவாக நிரூபித்திருக்கிறது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு ஒரு புதிய மனு தாக்கல் செய்யப் போவதாக பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை (ஸ்கீம்) உருவாக்க ஆறு வாரங்கள்” என கெடு விதித்திருந்தது.

அந்த ஸ்கீம் என்ன என்பதற்கு விளக்கம் இல்லையென இந்த காவி வேத பண்டாரங்கள் இப்போது புது மனு தாக்கல் செய்யப் போகிறார்கள். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பே உச்சீநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது என்று சொல்லிவிட்டு, இப்போது ஸ்கீம் என போங்காட்டம் ஆடுவது ஏன்? பிரச்சினைக்கு தீர்வு மேலாண்மை வாரியம் என்று தெள்ளத் தெளிவாக அறிவித்த பிறகு இப்போது அது புரியவில்லை என்று இந்த புரட்டர்கள் கூறுகிறார்கள்.

புரியவில்லை என்றால் உடனேயே மனு தாக்கல் செய்யாமல் இப்போது ஆறு வாரம் முடிந்த பிறகு தாக்கல் செய்வது ஏன் என்று பலர் கேட்கின்றனர். பா.ஜ.க-விடம் பதில் இல்லை. கர்நாடக தேர்தல் அறிவித்த பிறகு அது முடியும் வரை இதை இழுப்பதே இவர்கள் நோக்கம். அப்படி தேர்தல் முடிவுகள் வந்து பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் இவர்கள் இதை மேலும் இழுப்பார்கள். அல்லது அதிகாரமே இல்லாத ஒரு அமைப்பை நிறுவி இழுப்பார்கள். இறுதியில் சட்டப்படி, நீதிப்படி தமிழக்திற்கு வந்தாக வேண்டிய காவிரி நீர் வரவே வராது. இதுதான் பா.ஜ.கவின் நோக்கம். ஜல்லிக் கட்டு, நீட் தேர்வு வரை எப்படி பா.ஜ.க-வினர் கழுத்தறுத்தார்கள் என்பதை தமிழகம் அறியும்.

புரியவில்லை என்று இப்போது மனு தாக்கல் செய்யப் போகும் பா.ஜ.க அரசின் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய நீர்வளத்துறை செயலார் உபேந்திர பிரசாத் சிங் போன்றவர்கள் கூட காவிரி மேலாண்மை வாரியம் என்றே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதாக ஊடக நேர்காணலில் கூறியிருக்கிறார்கள். அந்த வாரியம் அமைப்பது பற்றி நான்கு மாநிலங்களிடம் பேசி முடிவு செய்வோம் என்றார்கள். பிறகு வாரியம் இல்லை என்றார்கள். ஏதோ மேலாண்மை அமைப்பு என்றார்கள். இப்போது தீர்ப்பு புரியவில்லை என்கிறார்கள்.

இதில் தமிழகத்தை ஆளும் பா.ஜ.கவின் பினாமி எடப்பாடி – ஓ.பி.எஸ் கும்பலோ சுரணை ஏதுமின்றி மோடி அரசின் துரோகத்திற்கு ஒத்தூதுகிறது. நேற்று வரை இன்னும் கெடு முடியவில்லை, முடிந்தால்தான் சட்டப்படி ஆவண செய்ய முடியும், கலந்தாலோசிப்போம் என்று பச்சையாக நாடகம் நடத்துகிறார்கள்.

தமிழக எம்.பிக்கள் பதவி விலக வேண்டும் என தமிழகத்தில் பல கட்சிகள், இயக்கங்கள் குரல் கொடுத்த போது அப்படி பதவி விலகினால் வாரியம் வந்து விடுமா என்று கேலி பேசியவர்கள், இப்போது தற்கொலை செய்வேன் என்று நாடாளுமன்றத்தில் நாடகமாடுகிறார்கள். ஆட்சியையும், அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு பா.ஜ.கவின் சாட்டைக்கு சர்க்கஸ் செய்யும் கோமாளிகள் இருக்கும் வரை காவிரி நீரும் வராது, வாரியமும் வராது.

எடப்பாடி கும்பலைப் போன்றே தமிழக பா.ஜ.க தலைவர்களும் பதவி விலகினால் வாரியம் வந்து விடுமா என்று கேலி பேசுகிறார்கள். இன்று பொன் இராதா கிருஷ்ணனும், வாரியம் வருமென்றால் பதவி விலகுகிறேன் என்று தமிழக மக்களை கேலி செய்கிறார். ஒரு மாநிலத் தேர்தலில் வெற்றி பேறவ ஏண்டுமென்ற அறுவெறுப்பான ஆதாயத்திற்கு தமிழகத்தை பலி கொடுக்கிறார்கள்.

இன்னும் இந்த விரோதிகளை விட்டு வைக்கலாமா? தமிழகம் கேட்பது சட்டப்படியான தீர்வைத்தான். அது குறித்து வந்த ஒரு நீதிமன்ற உத்திரவை அமல்படுத்துவதைத்தான். அதைக் கூட இந்த மத்திய மாநில அரசுகளோ, நீதிமன்றங்களோ செய்யவில்லை என்றால் என்ன எழவுக்கு இந்த ஜனநாயகத்தை நாம் கட்டி வைத்து அழவேண்டும்?

தமிழக மக்களின் வாழ்வுரிமை காவிரியோடு கலந்திருக்கிறது. தமிழக விவசாயிகளின் எதிர்காலமே காவிரி நீரோடு பிணைந்திருக்கிறது. இப்போது நாம் வெடிக்கவில்லை என்றால் இனி அழுவதற்கு கூட நம்மிடம் கண்ணீர் இருக்காது. தமிழக மக்கள், விவசாயிகள், தொழிலாளிகள், மாணவர்கள், ஜனயாக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் ஓரணியாக திரண்டு போராட வேண்டிய தருணமிது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகம் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

 1. //அந்த ஸ்கீம் என்ன என்பதற்கு விளக்கம் இல்லையென இந்த காவி வேத பண்டாரங்கள் இப்போது புது மனு தாக்கல் செய்யப் போகிறார்கள்.// இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
  போங்காட்டம்.

 2. What is a scheme?

  scheme
  skēm/
  noun
  noun: scheme; plural noun: schemes

  1.
  a large-scale systematic plan or arrangement for attaining some particular object or putting a particular idea into effect.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க