
01.03.2026
ஈரான் மீது போர் – ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனி படுகொலை!
போர்வெறி பிடித்த அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
கண்டன அறிக்கை
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று பொய்யாகக் குற்றம் சாட்டி அந்த நாட்டின் மீது ஏகாதிபத்திய போர்வெறி பிடித்த அமெரிக்காவும் இஸ்ரேலும் போரை நடத்தி வருகின்றன. இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உயர் மட்டத் தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காமேனி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து இறையாண்மை உள்ள நாட்டின் தலைவரைக் கொன்ற பயங்கரவாத நடவடிக்கையாகும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் ஈரான் மீதான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
சரிந்து வரும் தனது உலக மேலாதிக்கத்தை சரி செய்வதற்கும் இழந்து போன பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் வெறிபிடித்து அலைந்து வருகிறது பாசிச டிரம்ப் அரசு. இஸ்ரேலை தூண்டிவிட்டு லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து காசாவை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளது. வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்துள்ளது. இப்பொழுது ஈரான் மீது போர் நடத்தி அதன் உயர்மட்ட தலைவரையும் படுகொலை செய்திருக்கிறது. இதற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் போர்வெறி பிடித்த டிரம்ப்பும் நெதன்யாகுவும் தங்கள் பாசிச நடவடிக்கைகளை நிறுத்தவில்லை.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கில் போர் நடத்தி அதன் அதிபர் சதாம் உசேனை தூக்கில் ஏற்றிய அமெரிக்காவால் ஈராக்கின் இயற்கை வளங்களை முழுமையாகக் கொள்ளையடிக்க முடியவில்லை. அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலை சாக்காக வைத்துக் கொண்டு ஆப்கான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அமெரிக்கா தன்னுடைய பொருளாதாரத்தை மேலும் இழந்தது. அதுமட்டுமின்றி இரண்டு நாடுகளில் இருந்தும் தங்களுடைய படைகளைத் திரும்பப் பெற வேண்டிய அளவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.
ஏகாதிபத்தியங்கள் தற்போதைக்கு வெற்றி பெற்றதாக மேலோட்டமாக தெரிந்தாலும் அவை இறுதியில் வீழ்ந்தே தீரும் என்பதைத் தான் வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஈரான் மக்களின் போராட்டம் வெல்லட்டும் என்பதே நம்முடைய முழக்கமாக இருக்க வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கொஞ்சிக் குலாவி வரும் பாசிச மோடி, ஈரான் மீது நடத்தப்பட்ட அநியாயமான போரை எதிர்த்து இதுவரை ஒன்றும் பேசவில்லை என்பது வெட்கக்கேடானதாகும்.
பாசிச ட்ரம்ப் மற்றும் பாசிச நெதன்யாகு ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதே இன்றைய அவசியமான நடவடிக்கையாகும்.
ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





