Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 213

#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !

3

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியாநத்தல் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி எனும் இளம்பெண் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அவரது வீட்டின் அருகே கழுத்து நெறிபட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கிறார்.

இந்த மரணம் தொடர்பாக விசாரித்த போலீசு, அதே ஊரைச் சேர்ந்த ரெங்கசாமி, ரவீந்திரன், கிருஷ்ணசாமி ஆகிய மூன்று தலித் இளைஞர்களை கொலைக் குற்றத்தில் கைது செய்திருக்கிறது.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சரஸ்வதியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரெங்கசாமியும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் பார்த்த பையனையே சரஸ்வதி திருமணம் செய்துகொள்ளப் போவதை அறிந்த ரெங்கசாமி, சரஸ்வதியை தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாகத் தெரிவிக்கின்றன.

படிக்க :
♦ மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !
♦ வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

சமூக வலைத்தளங்களில் பா.ம.க மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இதனை ஒருதலைக் காதல் என்றும் தனது காதலை சரஸ்வதி ஏற்கவில்லை என்பதற்காக சரஸ்வதியை ரெங்கசாமி கொலை செய்துள்ளான் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்தக் கொலை கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடந்த நிலையில், விசாரணையின் முடிவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் போலீசு கைது செய்துவிட்டது. இந்தக் கொலையைத் தாங்கள்தான் செய்ததாக அந்த மூவரும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்குப் பிறகுதான், #JusticeForSaraswathi எனும் ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அதாவது, குற்றவாளிகளைக் கைதுசெய்த பின்னர் தான் #JusticeForSaraswathi என்ற ஹேஷ்டேக் பரபரப்பாக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண், காதலை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கும் அல்லது ஏற்கெனவே காதலித்த ஒருவனை விட்டுப் பிரிவதற்கும் அனைத்து உரிமையும் அப்பெண்ணிற்கு உண்டு. சரஸ்வதி, ரெங்கசாமியை முன்னரே காதலித்திருந்தால் பின்னர் ரெங்கசாமியை விட்டுப் பிரிவதற்கும், ஒருவேளை அது ரெங்கசாமியின் ஒருதலைக் காதலாக இருந்திருந்தால் அதை மறுப்பதற்கும் சரஸ்வதிக்கு அனைத்து உரிமையும் உண்டு.

தனது காதலை சரஸ்வதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனநாயகமற்ற ஆணாதிக்க மனநிலையில் இந்தக் கொலையை, ‘காதல்’ என்ற பெயரில் அரங்கேற்றியிருக்கிறான் ரெங்கசாமி. இந்தக் கொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒருபுறத்தில், பெண்களை அழகுப் பதுமைகளாகவும், சுய அறிவு அற்றவர்களாகவும், தனக்கென்று ஒர் நிலைப்பாடுகளற்றவர்களாகவும் உருவகப்படுத்தி வரும் சினிமா கழிசடைத்தனங்கள் இத்தகைய கொடூரங்கள் நிகழ காரணமாக இருக்கின்றன. மறுபக்கத்தில், சமூக நடைமுறைகளிலும் குடும்பங்களிலும் எதார்த்தமாக நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் இத்தகைய வன்கொலைகள் தொடரக் காரணமாக இருக்கின்றன.

இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கையில், குற்றம் இழைத்தவர்களின் சமூகப் பின்னணிதான் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை துவங்கி வழக்காடு மன்றங்கள் வரை பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க வேண்டிய நீதியின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருந்து குற்றம் இழைத்தவர்கள் மிகவும் பலமானவர்களாக இருக்கையில் முதல் தகவல் அறிக்கைகள் கூட பதியப்படாமல் பிரச்சினைகள் நிர்மூலமாக்கப் பட்டிருக்கின்றன.

அத்தகைய சமூகச் செல்வாக்கு கொண்டோருக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்டோருக்கு எதிராகவும் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கங்கள் செயல்படும்போது மட்டுமே ஜனநாயகவாதிகள் மற்றும் முற்போக்காளர்கள் களத்தில் இறங்கி குரல் கொடுக்கின்றனர். அதிகாரத்துவத்தின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றனர். அச்சமயங்களில் சமூக வலைத்தளங்களில் #JusticeFor என்ற ஹேஷ்டேக்குகளில் வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் நீதிகேட்டு போராடுகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக விரிவான பரப்புரை செய்கின்றனர்.

தற்போது சரஸ்வதி படுகொலையை ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் #JusticeForSaraswathi எனும் ஹேஷ்டேக் பற்றி பார்க்கலாம். இங்கு கொலையில் ஈடுபட்டதாக போலீசு கைது செய்திருக்கும் மூன்று தலித் இளைஞர்களும் தப்பிச் செல்லவில்லை. இவர்களுக்கு போலீசும் ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. இதுவரையில் அனைத்தும் சட்டப்படி சரியாக நடந்து கொண்டிருக்கிறது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் சூழலில், #JusticeForSaraswathi டிரெண்டிங் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன ?

முகநூலில் தேடிப் பார்த்தால் #JusticeForSaraswathi எனும் ட்ரெண்டிங்கை முன் நின்று நடத்துவது, பாமக, பாஜக, அதிமுக மற்றும் சில சீமானிச தமிழ்த் தேசியவாதிகள் தான். சுருக்கமாகச் சொன்னால் சாதிவெறியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்க்கும் கூட்டம்தான் இதனை செய்து வருகிறது. பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரத்திலிருந்து திடீரென தலையைத் தூக்கி, “இது நாடகக் காதல் கும்பலின் வெறியாட்டம்” என அறிக்கை விட்டிருக்கிறார். அவரது அடிபொடிகள் அனைவரும் திருமாவளவனை குறிவைத்துத் தாக்கத் துவங்கியிருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இதை டிரெண்டிங் செய்து தொடர்பவர்களின் முதல் இலக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் தான். நாடகக் காதலை ஊக்குவிப்பவர் என்பதாகவும், அவரது தூண்டுதலால்தான் இளைஞர்கள் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டு, சரஸ்வதி படுகொலையை நாடகக் காதலோடு இணைத்திருக்கிறது சாதிவெறிக் கும்பல்.

பாலியல் ஜல்சா கட்சி என அழைக்கப்படும் பா.ஜ.கவை சேர்ந்த ஒரு இழிபிறவி ஒருபடி மேலே போய், சரஸ்வதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக எழுதியிருக்கிறது.

கொல்லப்பட்ட இளம்பெண் சரஸ்வதி

ந்த ஹேஷ்டேக்ஐ டிரெண்டிங் செய்வது நிச்சயமாக சரஸ்வதி மரணத்திற்கு நீதி பெற்றுத் தரும் நோக்கத்திற்கு இல்லை என்பது ராமதாஸ் மற்றும் சங்க பரிவாரக் கும்பல்களின் பதிவுகளில் இருந்தே பளீரெனத் தெரிகிறது. சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது இந்த சாதிவெறிக் கும்பல்.

இவர்களது அடுத்த இலக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துவரும் ஜனநாயக சக்திகள் மற்றும் முற்போக்காளர்கள் தான்.

இதுவே ஒரு தலித் பெண் இறந்திருந்தால் கொந்தளித்து எழும் இந்த முற்போக்காளர்கள், ஒரு வன்னிய சாதிப் பெண்ணை தலித் இளைஞன் கொன்றதற்கு வாய் திறக்க மாட்டார்கள்” என்று சமூகச் செயற்பாட்டாளர்களை அவர்களது விழுமியங்களை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர் சாதி வெறியர்கள். இந்தக் கும்பலின் இந்த “மாரல் (Moral) மிரட்டலுக்கு” முகம் கொடுக்கும் சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்களும், #JusticeForSaraswathi என ஹேஷ்டேக் போட்டு தமது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இவர்கள் கூறுவதைப் போல ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் சாதியின் அடிப்படையில் மட்டுமா இவ்வளவு காலமும் பொது வெளியிலும் இணைய வெளியிலும் குரல் கொடுத்தார்கள் ?

சமூகத்தில் யார் யாருக்கெல்லாம் நீதி மறுக்கப்படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்து வந்துள்ளனர். எங்கெல்லாம் பலவீனமானவர்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அக்கெல்லாம் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

சாத்தான் குளத்தில் போலீசால் கொல்லப்பட்ட தந்தை மகனுடைய வழக்குகள் போலீசு அதிகாரத்தால் முடக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பலநூறு பெண்களை சீரழித்த கிரிமினல்களை அடிமை எடப்பாடி அரசு காப்பாற்ற முயற்சிக்கையில் அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இங்கு யாரும் சாதி பார்க்கவில்லையே !

..டி போன்ற உயர் கல்வி நிலைய அக்ரஹாரங்களில், பாத்திமா லத்தீஃப்களும், ரோஹித் வெமுலாக்களும் நஜீபுகளும் சனாதனக் கும்பலால் கொல்லப்படுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தார்கள்.

இப்படி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் சூழல்களில்தான் தமிழக முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் குரல் கொடுத்து வந்தனர். சரஸ்வதி கொலை என்பது முழுக்க முழுக்க ஆணாதிக்கத் திமிரினால் நிகழ்த்தப்பட்ட கொலை. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்புவிக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆகவே இங்கு நீதி மறுக்கப்படும் பிரச்சனை எதுவுமே எழவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தவறிழைக்கையில் அவர்களை உடனடியாக கைது செய்கிறது போலீசு. அது சரியானதுதான். ஆனால் அதே தவறை ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது நடைமுறைப்படுத்துகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறது. ஆதிக்கச் சாதியினரை தப்பிக்கச் செய்கிறது.

இது சாதி ஆதிக்கம் என்பதில் மட்டுமல்ல. ஆதிக்க சாதி எதிர் தலித், இந்து மதம் எதிர் இஸ்லாம், ஆண் எதிர் பெண், அதிகார வர்க்கம் எதிர் சாமானியர்கள், முதலாளிகள் எதிர் தொழிலாளர்கள் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகார வர்க்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக எழுப்பப்படும் குரல் தான் #JusticeFor எனும் ஹேஷ்டேக்.

படிக்க :
♦ கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !
♦ ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

சரஸ்வதி படுகொலை விவகாரத்தில், ஆதிக்கச் சாதி ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் பா.ம.க கும்பல் இந்த ஹேஷ்டேக்ஐ அதன் நோக்கத்திற்குப் பயன்படுத்துகிறது. சமூக விடுதலைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த ஹேஷ்டேக், நாடகக் காதல் எனும் கட்டுக்கதையோடு இணைத்து தலித்துகளுக்கு எதிரான வெறுப்பையும் ஒடுக்குமுறையையும் வளர்ப்பதற்கு பயன்படுத்துகிறது.

ஆதிக்கத்தை செலுத்துவதற்காக #JusticeFor எனும் ஹேஷ்டேக்சாதிவெறி, மதவெறிக் கும்பல்கள் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதுதான் ஆண் ஆதிக்கத்தால் கொல்லப்பட்ட சரஸ்வதிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.


சரண்

கொரோனா 2-வது அலை : பேஷாக கையாளும் மோடி || கருத்துப்படம்

கொரோனா 2-வது அலையை பேஷா கையாளும் மோடி ஜி !

கொரோனா தொற்று வீச்சுடன் பரவும் வேளையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி.


கருத்துப்படம் : மு. துரை

கும்பமேளா – கொரோனா வைரசிற்கு எதிரான போரின் அடையாளமாம் || கருத்துப்படம்

கும்பமேளாவில் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூட அனுமதித்த பின்னர்,  “கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடையாளமாக கும்பமேளா திகழ வேண்டும்” என மோடி பேசுகிறார். உள்நாட்டில் தடுப்புமருந்து தட்டுப்பாடாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார் மோடி !

கருத்துப்படம் : மு. துரை

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் நிலையில் ஏற்பாட்ட பாதிப்புக்களைப் படிப்பினையாகக் கொண்டு தற்போது அதற்குத் தகுந்தாற்போல செய்யப்பட வேண்டியவை குறித்து கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது அரசு. இது குறித்து மக்கள் அதிகாரம் தோழர் மருது மற்றும் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் ஆகியோர் உரையாடுகின்றனர். அதனை இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கிறோம் !

பாகம் 1 – கொரோனா தடுப்பூசியை அரசே தயாரிப்பதில்லை ஏன்?

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்கள் தயாரித்து இந்திய அரசுக்கு கொடுத்துவருவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அதிகமாகக் கிடைக்கச் செய்யும் வகையில் ஏன் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் தற்போது இரண்டாம் அலை பரவி வருகையில் அதனைக் கட்டுப்படுத்த எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஏன் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. இது குறித்து இந்தக் காணொலியில் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் மருது ஆகியோர் விவாதிக்கின்றனர் !

***

பாகம் 2 – கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் தீர்வுகள் என்ன ?

கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் சூழலில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு மக்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகிறது.  “கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்களை, ஊரடங்கு காலங்களில் எப்படி பெற்றுக் கொள்வார்கள்? அவர்களை எப்படி பாதுகாப்பது?” என்பது போன்ற எந்த அக்கறையும் இல்லாமல் ஊடரங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தவும் பார்க்கிறது.

பழைய அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் தவறியிருக்கின்றன மத்திய மாநில அரசுகள். மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற சாத்தியமான தீர்வுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோர் இந்தக் காணொலியில் விவாதிக்கின்றனர்.

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள் !!

வல்லரசு இந்தியா : கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை || கருத்துப்படம்

வல்லரசு இந்தியா

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகளை சேர்த்திருக்கும் அவலம்.  ஆர்.எஸ்.எஸ். -ன் கனவான அகண்ட பாரதத்தில் அதாவது ‘ஹிந்தி’ய வல்லரசில் மருத்துவத்தின் நிலைக்கான சான்று !


கருத்துப்படம் : மு.துரை

கொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்

கோவையில் இரவு பத்தரை மணிக்கு மேல் உணவு விடுதியைத் திறந்து வைத்திருந்ததற்காக உள்ளே புகுந்து அங்கு உணவருந்திக் கொண்டிருந்த சாதாரண மக்களையும் , கடைப் பணியாளர்கள் மற்றும் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கியுள்ளார் அப்பகுதி போலீஸ் எஸ்.ஐ.

சி.சி.டிவி-யில் பதிவான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதன் காரணமாகவே அந்த எஸ்.ஐ-யின் காட்டுமிராண்டித்தனம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்துதான் அந்த காட்டுமிராண்டி போலிசு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

சாதாரண மக்களை ஈவிரக்கமின்றி தாக்கும் போலீசு, இரவு நேர சொகுசு விடுதிகளிலும், சொகுசு பார்களிலும் சென்று என்றாவது இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறதா ? சமூக குற்றத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள், கிரிமினல்கள் மேல் எந்த அடக்குமுறையையும் இந்தப் போலீசு செய்வதில்லை. ஆனால் சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது என போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிரான கேள்விகளை எழுப்புகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.

பாருங்கள் ! பகிருங்கள் !!

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்

கொரோனா மேளா : சைவ இந்து கொரோனா – ரொம்ப சாதுவானது!

ப்லிக் ஜமாத் கூட்டத்தோடு
கும்பமேளாவை ஒப்பிடக்கூடாது.

தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்நியர்கள்;
இது உள்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தப்லிக் ஜமாத் ஒரு காம்பவுண்டிற்குள் நடைபெற்றது;
கும்பமேளா புனித கங்கையின் திறந்தவெளி.

– திரத்சிங் ராவத்
உத்திரகாண்ட் முதலமைச்சர்.


கருத்துப்படம் : மு.துரை

அமெரிக்கப் போலீசின் நிறவெறி : தொடரும் கருப்பின மக்கள் படுகொலை || படக்கட்டுரை

போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி 20 வயது கருப்பின இளைஞனான டான்ட் ரைட்டை அமெரிக்க போலீஸ்  சுட்டு கொன்றுள்ளது.

கைது நடவடிக்கையின் போது தவறுதலாக மின்சார துப்பாக்கிக்கு பதிலாக கைத்துப்பாக்கியினால் போலிஸ் அதிகாரி  சுட்டுவிட்டார் என்று வழக்கம் போல காவல்துறை ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறது. ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரியும் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் சென்று விட்டார்.

இடது : சுட்டு கொல்லப்பட்ட கருப்பின இளைஞன் டான்ட் ரைட், வலது : ரைட்டை சுட்ட அந்த வெள்ளைப்பெண் அதிகாரி

அமெரிக்க போலீசுக்குள் இருக்கும் வெள்ளை நிறவெறி பயங்கரவாதத்திற்கு பலியான கருப்பின மக்கள் ஏராளம்.  2020-ம் ஆண்டு மே மாதத்தில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட அதே மினியாபோலிஸ் நகரத்தில்தான் ரைட்டும் கொல்லப்பட்டிருக்கிறார். ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் படுகொலைக்கு எதிர்வினையாக அமெரிக்கா முழுதும் கடுமையாகப் போராட்டம் வெடித்தது.

அதற்கு இப்பொழுதுதான் வழக்கு விசாரணையே நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புரூக்ளின் மைய மேயர் மைக் எலியட் டான்ட் ரைட்டிற்கு ‘உரிய நீதியை’ எப்படியும் பெற்றுத் தறுவதாக உறுதியளித்துள்ளார். ஆயினும் இந்த உறுதிமொழிகளை கருப்பின மக்கள் நம்பத் தயாராக இல்லை. அவர்கள் வீதிகளில் இறங்கி விட்டனர்.

படிக்க :
♦ இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

 

மினசோட்டா, புரூக்ளின் செண்டரில் உள்ளூர் போலீசால் டுவான்ட் ரைட் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினரால் குறிப்பிடப்படும் இடத்திற்கு அருகில் போலீஸ் அதிகாரியை ஒரு போராட்டக்காரர் எதிர்கொள்கிறார்.

 

டுவான்ட் ரைட் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே போராட்டக்காரார்கள் எதிர்ப்பை தெரிவிக்க கைகளை உயர்த்துகின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் டுவான்ட் ரைட்டை போலீசார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் போது ஒரு ஆர்ப்பாட்டக்காரர் போலிஸை எதிர்கொள்கிறார்.

 

மினியாபோலிஸின் வடமேற்கில் உள்ள புரூக்ளின் சென்டரில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டரில் போலீசால் கொல்லப்பட்ட் 20 வயதான டான்டே ரைட்டின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். ஞாயிற்றுக்கிழமை தனது காரில் ஏறிச் செல்வதற்கு முன்பாக அவரை போலீசார் சுட்டதாகவும் பின்னர் அவர் இறந்து போனதாக செய்தி கிடைத்து என்று குழுமியிருக்கும் கூட்டத்திடம் ரைட்டின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

டான்டே ரைட்டை புரூக்ளின் செண்டர் போலிஸ் சுட்டுக்கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் போலிஸ் வண்டியின் முன் கண்ணாடியின் மீது கோபமாக ஒருவர் ஏறுகிறார்.

 

புரூக்ளின் செண்டர் துப்பாக்கிச்சூட்டில் சம்மந்தப்பட்ட போலிஸ் அதிகாரியை விசாரிப்பதாக” மினசோட்டா குற்றவியல் புலனாய்வு பணியகம் கூறியது. ஆனால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண மறுத்து விட்டது.

 

புரூக்ளின் செண்டரில் போராட்டக்கரார்கள் மற்றும் போலீசாருடனான மோதலில் ரப்பர் குண்டினால் சுடப்பட்ட ஒருவரை மக்கள் கவனிக்கின்றனர்.

 

புரூக்ளின் செண்டர் காவல் துறை அலுவலகத்திற்கு வெளியே காவல் பணியில் ஒரு போலீஸ் அதிகாரி.

 

புரூக்ளின் செண்டர் காவல் நிலையம் முன்பாக கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் புகைமூட்டத்திற்கிடையில் போலீஸ் அதிகாரிகள்.

 

புரூக்ளின் சென்டர் காவல் நிலையம் முன்பு போலீசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளிடம் இருந்து தப்ப, மக்கள் பாதுகாப்பு உடை உடுத்தியிருக்கின்றனர்.

தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera

பெரியார் பெயர் நீக்கம் : முழு சங்கியாக மாறிய எடப்பாடி || கருத்துப்படம்

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை பெயர் மாற்றம் : எடப்பாடி அரசின் தமிழினத் துரோகம் ! பார்ப்பனிய அடிமைத்தனம் !!

பா…ர்…
முழுசா சங்கியாக மாறும்
அடிமை எடப்பாடியைப் பார்.. !


கருத்துப்படம் : மு.துரை

ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

ஸ்புட்னிக்-வி (SPUTNIK – V) கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ரஷ்யா கண்டறிந்துள்ள தடுப்பூசி இந்தியாவில் அவசர காலப் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியை நிபுணர்கள் நிறைந்த பரிந்துரைக்குழு பரிந்துரைத்துள்ளது. கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் வர இருக்கிறது.

உலகின் முதல் செயற்கைக் கோளை 1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி விண்ணிற்கு ஏவி சாதனைப் படைத்தன சோவியத் ரஷ்ய ஒன்றிய நாடுகள். செயற்கைக் கோளின் பெயர் (ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை செலுத்த உதவிய விண்கலத்துக்குப் பெயர்) ஸ்புட்னிக். இந்தப் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகவும் உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி என்ற அடைமொழியுடன் “ஸ்புட்னிக்-V” 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று களமிறக்கப்பட்டது.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

எந்த மருத்துவ அறிவியல் ஏடுகளிலும் ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் நேரடியாக இவ்வாறு அறிவித்ததை அறிவியல் உலகம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகளை ( INTERIM ANALYSIS OF PHASE III CLINICAL TRIAL) வெளியிட்டால் அன்று இதைப் பற்றி பேசலாம் என்றே நான் நினைத்திருந்தேன். நான் நினைத்த அந்த நன்னாளும் வந்துவிட்டது.

லான்சட் எனும் பிரபலமான மருத்துவ இதழ், ஸ்புட்னிக் V தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகளை அலசி ஆராய்ந்து தனது இதழில் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன் சாராம்சம் இதோ உங்களுக்காக…

Gam- Covid- Vac என்றும் ஸ்புட்னிக்-வி என்றும் அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலயா மருந்து கண்டறியும் நிறுவனமும் ரஷ்ய அரசின் நேரடி நிதி முதலீடும் (RUSSIAN DIRECT INVESTMENT FUND) இணைந்து உருவாக்கியுள்ளன. தடுப்பூசியின் “வெக்ட்டார்” (VECTOR) தொழில்நுட்பம் மனிதர்களிடையே தொற்றை ஏற்படுத்தாத அடினோ வைரஸ்களின் மரபணுக்களை நீக்கி விட்டு அவற்றுக்குள் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களை உருவாக்கும் மரபணுக்களைப் புதைத்து உருவாக்கப்படுகின்றது.

இங்கு அடினோ வைரஸ் என்பது கொரோனா வைரஸின் மரபணுவை உடலுக்குள் செலுத்தப் பயன்படும் வாகனமாக மட்டுமே செயல்படும். உடலுக்குள் செலுத்தப்பட்டதும் அடினோ வைரஸ் உடைந்து உள்ளே இருக்கும் கொரோனா வைரஸ் மரபணு – ஸ்பைக் புரதங்களை உண்டாக்கும். அவற்றுக்கு எதிராக நமது உடல் அபரிமிதமான எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். கோவிஷீல்டு தடுப்பூசியும் இதே தொழில்நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏனைய வெக்டார் தடுப்பூசிகள் தடுப்பூசிகளிடம் இருந்து மாறுபடும் இடம்.

யாதெனில், இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணையாக போடப்படும் முதல் தவணையில் அடினோ 26 என்ற வகை வெக்ட்டார் செலுத்தப்படும். இரண்டாம் தவணையில் அடினோ 5 என்ற வகை வெக்ட்டார் செலுத்தப்படும் இதன் மூலம் மிக அதிகமான எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 20,000 நபர்களுக்கு மேல் பங்குபெறும் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால முடிவுகள் இதோ தடுப்பூசி பெறாத குழுவில் இருந்த 4902 பேரில் 62 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்ற குழுவில் இருந்த 14964 நபர்களுள் 16 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அறிகுறிகளுடன் கூடிய கோவிட் நோய் தடுக்கும் விகிதம் – 91.6% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் வழங்கப்பட்டு 18 நாட்களில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தீவிர கோவிட் நோய் தடுக்கும் திறன் 100% என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியில் ஸ்பெசாலிட்டியாக நான் காண்பது இந்த ஆய்வில் 60+ வயதுடையோர் 2144 பேர் பங்குபெற்றனர். அவர்களிடையே கோவிட் நோய் தடுக்கும் திறன் 91.8 % என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பான செய்தி. ஆய்வில் பங்கு பெற்றவர்களில் 25% பேர் பல தொற்றா நோய்களைக் கொண்டவர்கள் என்பதும் இந்த தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. தடுப்பூசி பெற்றவர்களுள் சீரியசான பக்கவிளைவுகள் தோன்றவில்லை. தடுப்பூசி பெற்ற குழுவில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் அந்த மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த நபர்களுக்கு பல தொற்றா நோய்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி தற்போது அர்ஜென்டினா, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளடக்கிய பதினைந்து நாடுகளில் ஏற்கனவே ஆய்விலும் மக்களுக்கு புழக்கத்திலும் உள்ளது.

படிக்க :
♦ பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ரஷ்யாவில் சில கோடி மக்களுக்கு மேல் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் 1600 பேர் கொண்டு மருத்துவ ஆய்வு நடந்து இதன் பாதுகாப்புத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து SUBJECT EXPERT COMMITTEE இந்த தடுப்பூசியை அவசர கால முன் அனுமதி வழங்க பரிந்துரைத்து விட்டது.

விரைவில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்துவிடும். நமது நாட்டின் குளிர் சங்கிலித்தொடரில் எளிதாக இந்த தடுப்பூசியைப் பராமரிக்க முடியும் என்பதாலும் 90%-க்கு மேல் 60+ வயதுடையோரிலும் நோயைத் தடுக்கும் என்பதால் கொரோனாவுக்கு எதிரானப் போரில் சிறப்பான அஸ்திரமாக இது இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.

disclaimer

முதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் !

லகம் முழுவதும் பல கோடி மக்களால் செலுத்தப்படும் உழைப்பின் மதிப்புதான் உருவாக்கப்படும் பணம் ! கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெகு சிலரிடம் மட்டும் பணம் குவிகிறது என்பதன் பொருள், நம் உழைப்புதான் அவர்களின் சொத்தாகக் குவிகிறது. நம் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பணம்தான் முதலாளிகளின் சொத்தாகக் குவிகிறது !

நம் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இந்த முதலாளித்துவ சமூகம். இதனைக் களைந்தெறிந்து உழைக்கும் மக்களின் தலைமையிலான அரசை உருவாக்குவோம் !!

கருத்துப்படம்:

 

உலகப் பணக்காரர் பட்டியலில் இந்தியா 4-வது இடம் : கொரோனா காலத்துல வேலை இல்லாம உலகமே செத்துட்டிருக்கும் போது ஒங்களுக்கு மட்டும் எங்கேயிருந்துடா இவ்ளோ சொத்து ?


கருத்துப்படம் : மு. துரை

கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது

2019 இறுதியில் சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டது. உலகமே செய்வதறியாது திகைத்து நின்றபோது, 2020 பிப்ரவரியில் ட்ரம்பை குஜராத்துக்கு வரவழைத்து சுயதம்பட்டம் என்ற அருவருப்பை இங்கே அரங்கேற்றினார்கள். வெள்ளிங்கிரியில் போதை சாமியார் கூட்டிய கட்டுப்பாடற்ற கூட்டத்துக்கு பிரதமர் வந்தார்.

ஆனால் அனுமதி பெற்று நடத்தப்பட்ட டெல்லி தப்லிக் ஜமாத் இயக்கத்தையும் கூட்டத்தையும் பலிகடா ஆக்க அரசு முனைந்தது எனில் அதற்கு துணை போன அச்சு, டிவி ஊடகங்களும் சற்றும் குறைவில்லாமல் தம் ஒருதலைப்பட்சமான பிரச்சாரத்தின் மூலம் இந்திய சமூகத்தில் அருவருப்பான இஸ்லாமிய சமூக வெறுப்பை விதைத்தன.

டிசம்பர் 2019இல் சீனாவில் கண்டறியப்பட்ட உடனேயே சர்வதேச விமானபோக்குவரத்தை நிறுத்துமாறும் நாடாளுமன்ற கூட்டத்தை தள்ளிவைக்குமாறும் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் கேட்டுக்கொண்டபோதும் மத்திய அரசு அதற்கு செவிசாய்க்காமல் இருந்ததன் காரணம்?

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

மத்தியபிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம் எல் ஏக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுமந்தைகள் போல ஊர் ஊராக கூட்டிக்கொண்டு திரிய பிஜேபிக்கு விமானபோக்குவரத்து தேவைப்பட்டது என்ற ஒற்றைக்காரணம் மட்டுமே. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது, பிஜேபியின் ஒரே ஒரு முதல்வர் பதவி ஏற்ற உடன் பிரதமர் டிவியில் தோன்றி இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த நகர்வையும் நிறுத்தி யதார்த்த வாழ்வின் சங்கடங்களை உணராமல் ஊரடங்கை அறிவித்து பல கோடி உழைக்கும் மக்களின் வயிற்றில் நெருப்பை அள்ளிப்போட்டார்.

தப்லிக் ஜமாத்தை மீண்டும் மீண்டும் பேசிய ஊடகங்கள், தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்த டிவிக்கள், கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாமல் இருந்த ஒரே மாநிலம் பிஜேபி ஆண்ட மத்தியப்பிரதசம் மட்டுமே என்பதையும் அதற்கான காரணத்தையும் சொல்லாமல் அருவருக்கத்தக்க பாறை போன்ற மவுனத்தை வெட்கமின்றி கடைப்பிடித்தன.

சில மாதங்களுக்குப்பின் உச்சநீதிமன்றம், “கொரோனா இந்தியாவில் பரவியதற்கு அரசும் ஊடகங்களும் தப்லிக் ஜமாத்தை திட்டமிட்டு பலியாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்று கண்டித்ததை அதே ஊடகங்கள் மவுனமாக கடந்து சென்றன.

இந்த கேவலங்கள் ஒரு பக்கம். ஊரடங்கு அறிவித்த ஒரே வாரத்தில் பிரதமர் டிவியில் தோன்றி கை தட்ட சொன்னார், சாப்பாட்டு தட்டுகளை தட்ட சொன்னார், விளக்கு ஏற்ற சொன்னார், இதனால் மின்காந்த அலைகள் உற்பத்தி ஆகி கொரோனா கிருமிகள் சாகும் என்று நான் அறிந்த பி., எம்., எம்.எஸ்.சி, ஐ.ஐ.டி. எம்.டெக், பி.டெக் படித்த அறிவாளிகளும் அடிவயிற்றில் இருந்து கூவி விவாதம் செய்தார்கள். மாட்டு மூத்திரம், மாட்டு மலம் ஆகியவை சிறந்த கொரோனா கிருமி கொல்லிகள் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் பேசி இந்திய மக்கள் மத்தியில் அறிவியல் அறிவும் அறிவியல் ஆர்வமும் பரவ ஒப்பற்ற சேவை செய்தார்கள்.

இந்தக் கொடுமைகள் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்க, பலப்பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நடக்க தொடங்கியதில் 1947 பிரிவினைக்குப் பின் ஆன வரலாற்றின் மிக மோசமான மக்கள் இடப்பெயர்ச்சிக்கு மத்திய அரசே காரணமாக இருந்தது. பல்லாயிரம் பேர் செத்து மடிந்தனர். ரயில்வே பிளாட்பாரத்தில் தன் தாய் உயிரிழந்தது தெரியாமல் பாலுக்காக அவள் சேலையை பிடித்து இழுத்துக்கொண்டு இருந்தது குழந்தை. 900 கி.மீ தள்ளி ஊர் திரும்ப வழியின்றி மாட்டிக்கொண்ட மகனை, ஸ்கூட்டரில் சென்று மீட்டுக்கொண்டு வந்தார் தாய். ஏறத்தாழ 1000 கி.மீ பயணித்து தன் தகப்பனை சைக்கிளின் காரியரில் உட்கார வைத்து சொந்த ஊருக்கு ஓட்டிக்கொண்டு வந்தாள் இளம் மகள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டம் கொஞ்சம் இல்லை. கொரோனா குறித்த துளியளவு அறிவியல் பார்வையும் இல்லாத (என்றைக்கு இருந்தது?) காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு படம்‘, கொரோனா நோயாளிகள் இருக்கும் ஒரு வேனில் கொரோனா பாதிக்காத சிலரை அடைத்து விடுவதையும், கொரோனா நோயாளிகள் அவர்களை பயமுறுத்தி பேயாட்டம் ஆடுவதையும் இவர்கள் அலறி துடிப்பதையும் காட்டி தமிழக சமூகத்துக்கு பெரும் சேவை செய்த கேவலத்தையும் பார்த்தோம்.

இதன்றி, கரைவேட்டி ஆசாமிகளும் காவியிஸ்டுகளும் அல்லக்கைகளும் லோக்கல் போலீஸுடன் கைகோர்த்து சாலை சந்திப்புகளில் நின்றுகொண்டு பொதுமக்களை படுத்தியபாடு கொஞ்சமா? நமது உழைப்பில் சேமித்த பணத்தில் அல்லது கடனில் வாங்கிய இரு சக்கர வாகனங்களுக்கு இந்த அல்லக்கைகள் பெயிண்ட் அடித்தன, எவன் உரிமை கொடுத்தான்?

காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் கோரோணாவின் பெயரால் இவர்கள் ஆடிய சர்வாதிகார ஆட்டத்தின் உச்சம்தான் சாத்தான்குளம் மரணங்கள். சென்னை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நிவாரணப்பணிகளுக்கு ஆர் எஸ் எஸ் ஆட்களை நியமித்து கண்டனத்துக்கு உள்ளானதை மறக்க முடியாது.

தேர்தல் முடிந்த கையோடு இப்போது கொரோனா அச்சத்தை சங்கு ஊதும் அரசு நிர்வாகத்தின் இரட்டை நிலையை புரிந்துகொள்ள பெரிய பிரயத்தனங்கள் தேவையில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டை, முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டிய முதலமைச்சரோ அமைச்சர்களோ பின்பற்றினார்களா? ஆயிரக்கணக்கான பேர்கள் பின்தொடர, பல நூறு கார்கள் ஊர்வலம் வர கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தபோது தேர்தல் கமிஷனும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் எங்கே இருந்தார்கள்? அதை விடவும் வேறு முக்கியமான வேலை என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

படிக்க :
♦ இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
♦ இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

தங்கள் காரியம் முடிந்தவுடன் இப்போது தேர்தல் முடிந்த கையோடு மக்கள் மீது பழி சுமத்துவதும் மக்கள் கட்டுப்பாடுகளை மீறுகின்றார்கள் என்று பொய்யாக பழிப்போடுவதும் என்ன நியாயம்? மாட்டு மூத்திரத்திலும் மலத்திலும் கொரோனாவுக்கு மருந்து உள்ளதாக முட்டாள்தனமான பேசும் படித்த அரசியல் அதிகார வர்க்கம், மக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு இல்லை என்று பேசுவதை விடவும் கொடூரம் வேறு எதுவும் இல்லை.

உண்மையில் மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சமூகத்தில், ஒப்பீட்டு அளவில் மரணங்கள் குறைவு. உண்மையில் ஊரடங்கின் பின்னர் தம் உயிர்களை பட்டினியால் துறந்த மக்களையும் வேலை இன்றி வீடுகளில் முடங்கி பட்டினி கிடந்த மக்களையும் இதை விடவும் மோசமாக ஒரு அரசு நிர்வாகம் அவமானப்படுத்தி விட முடியாது.

வெற்று வீண் வார்த்தைகளால் தோரணம் கட்டுவதையும் வீண் ஜம்பங்களை வீசி மார் தட்டுவதையும் விட்டுவிட்டு அறிவியல் பார்வையுடன் கொரோனாவை அணுகினால் மக்கள் ஒத்துழைப்பார்கள். மாட்டு மூத்திரத்திலும் மலத்திலும் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக ஆள்வோர் பிரச்சாரம் செய்தால் மக்களும் ஆட்டுமந்தைகள் ஆக மாடுகளாகத்தான் இருப்பார்கள்.

முகநூலில் : இக்பால் அகமது

disclaimer

அரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்

அரக்கோணம் : வன்னிய சாதிவெறியர்களால் தலித்துக்கள் படுகொலை!

யிரமாயிரம் ஆண்டுகளாய்
அடக்கப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களின்
உரிமைகளுக்காகப் போராடி
உயிர்கொடுத்த எண்ணற்றப் போராளிகளின்
போர்க்குரல் இது.

உட்ராதீங்க யம்மோவ்
உட்ராதீங்க யண்ணோவ்…

கருத்துப்படம்

கருத்துப்படம் : மு. துரை

 

அரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்

அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக் கிரிமினல்களின் வன்னிய சாதி வெறி !

விசிக-விற்கு ஓட்டுப் போட்ட ‘குற்றத்திற்காக’ இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரக் கொலை. ஆற்று மணல் மாஃபியா – வன்னிய சாதி வெறி பாமக கிரிமினல்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம் !

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்க்கத் துப்பில்லாத, பார்ப்பனியத்தின் காலடியில் சேவகம் புரிவதற்குத் தயாராகி – தன்மானத்தை இழந்து – சாதிவெறி பிடித்த தற்குறிகளால் மட்டுமே இத்தகைய கொடூர செயல்களைச் செய்ய முடியும் !!

கருத்துப்படம் : மு. துரை

 

இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!

0

ந்துமத பக்தர்கள் அனைவரையும் அதிரச் செய்த ஒரு காணொலிக் காட்சி மார்ச் 28-ம் தேதி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அந்தக் காணொலியில், ஒரு கோவிலில் உள்ள ‘சீரடி’ சாய்பாபா சிலையை கடப்பாரையைக் கொண்டு ஒருவர் தகர்த்துக் கொண்டிருக்கிறார். உடன் நிற்கும் மற்றொரு நடுத்தர வயது நபரோ அந்த நடவடிக்கைக்கு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அருகில் உள்ள ‘பெரிய மனிதர்கள்’ பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வயது நபர் அந்தக் காணொலியில், “சாய்பாபா கடவுள் அல்ல. அவர் ஒரு முஸ்லீம். அவர் 1918-ல் இறந்துவிட்டார்” என்று கூறுகிறார்.

மற்றொரு காணொலியில் இதே நபர், காசியாபாத்தைச் சேர்ந்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி என்ற இந்து சாமியாருடன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சாமியார் அந்தக் காணொலியில் சாய்பாபாவின் சிலையை உடைத்து தூக்கியெறிந்ததற்காக அதே நடுத்தவயது நபரைப் பாராட்டுகிறார். சாய்பாபாவை “ஏமாற்றுக்கார சாய்” என்று அழைக்கும் இந்தச் சாமியார், “என் வழியில் விட்டிருந்தால் நான் சாய்பாபா போன்ற ஜிகாதிகளை கோவிலுக்குள்ளேயே அனுமதித்திருக்க மாட்டேன்” என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சென்றதை ஒட்டி, ஸ்க்ரால் (Scroll) இணையதளம், எந்தக் கோவிலில் இது நடந்தது என்பதைக் கண்டறிந்து அப்பகுதிக்குச் சென்று இது குறித்து விசாரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

இடித்து உடைக்கப்படும் சாய்பாபா சிலை

தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஷாப்பூர் ஜத் எனும் இடத்தில் கோவிலுக்குள் இருந்த சாய்பாபா சிலைதான் உடைக்கப்பட்டிருக்கிறது. சாய்பாபா சிலை உடைக்கப்பட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் அந்த செய்தியாளர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த பத்திரிகையாளருக்கு இதன் பின்னணி குறித்த வேறு சில தகவல்கள் கிடைத்துள்ளன.

சிலை உடைப்பின் போது அருகில் இருந்து வழிகாட்டுதல் கொடுத்துவிட்டு, சிலையை இடித்த பின்னர், சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற அந்த நடுத்தரவயது நபரின் பெயர் பதம் பன்வார்.

பதம் பன்வார் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவரிடம் ஸ்க்ரால் இணையதளம் சாய்பாபா சிலை உடைப்பு பற்றி விசாரித்த போது அந்த வீடியோ போலியானது என்று கூறிவிட்டு, பின்னர் சிலை ஏற்கெனவே உடைந்திருந்ததால் அதனை எடுப்பதற்காகவே உடைத்ததாக முரணாகக் கூறியிருக்கிறார்.

ஆனால் இது குறித்து சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியிடம் ஸ்க்ரால் பத்திரிகையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “அவரது (சாய்பாபா) உண்மையான பெயர் சந்த்கான். அவர் ஒரு ஜிகாதி. அவர் ஒரு ஒழுங்கற்றக் கொள்ளைக்காரன். நமது இந்துக்களின் முட்டாள்தனம் காரணமாக அவர் நமது கோவில்களில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு திமிர்த்தனமாகப் பேசும் இந்தச் சாமியார் சமீபத்தில் மற்றொரு பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர். சமீபத்தில் ஒரு இந்துக் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முசுலீம் சிறுவனை, இந்துத்துவக் கிரிமினல்கள் அடித்த சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சாமியார் இவர்.

இந்த இடிப்புச் சம்பவம் அந்தக் கோவிலின் தர்மகர்த்தாக்களின் சம்மதத்தோடுதான் நடந்திருக்கிறது. இது குறித்து அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரியிடம் கேட்ட போது, விரிசல் விழுந்து உடையும் நிலையில் இருந்ததால்தான் சாய்பாபா சிலை அகற்றப்பட்டதாகவும், சாய்பாபா சிலையை வேறு எதற்காகவும் உடைக்கவில்லை என்றும் தெரிவித்திருகிறார்.

அந்தப் பகுதி மக்கள் பலரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்தவர்களிடம் பதம்பன்வார் போன்ற செல்வாக்கானவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி வாயடைக்கச் செய்திருக்கிறார் கோவிலின் தலைமைப் பூசாரி.

சாய்பாபா சிலை இடிக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பலரும் அதிருப்தியாக இருக்கின்றனர். ஆனால் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒத்த குரலில், சிலை இடிக்கப்பட்டதற்குக் காரணமாக சிலை ஏற்கெனவே உடைந்ததுதான் எனக் கூறிவதோடு, படம் பன்வாரின் செல்வாக்கைக் காட்டி மிரட்டுவதால் யாரும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து போலீசில் புகார் அளிக்கும் நிலைக்குக் கூடச் செல்லவில்லை.

சாய்பாபாவை முஸ்லீம் என்று அவர்கள் கூறுவது பற்றி கேட்கும்போது, “அதனால் என்ன ? அவர் எங்களின் நம்பிக்கைக்கு உரியவர்” என்று குறிப்பிடுகின்றனர் அந்த மக்கள்.

இந்து மக்களில் பலரும் கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் கும்பிடும் சாய்பாபாவுக்கே இதுதான் கதி. இது ஏதோ தனிப்பட்ட ஒரு நபரின் நரசிங்கானந்த் சரஸ்வதி என்ற சாமியாரின் கொழுப்பெடுத்த தன்மையிலிருந்து செய்யப்பட்ட செயல் என்று கடந்து போய்விட முடியாது. ஏனெனில் சீரடி சாய்பாபாவை கடவுளாக அங்கீகரிக்க முடியாது எனும் முடிவை எடுத்தது சாமியார்களின் கூட்டமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புமான, “தரம் சன்சாத்” எனும் அமைப்பினால் கடந்த 2014-ம் ஆண்டு மோடி ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவு.

பெரும்பாலும் நடுத்தரவர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கம், மேல் தட்டு வர்க்கம் ஆகிய வர்க்கப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே சீரடி சாய்பாபாவை பெருமளவில் கும்பிட்டு வருகின்றனர். அவ்வகையில் ஓரளவுக்கு சமூகச் செல்வாக்குள்ள சீரடி சாய்பாபாவையே ஜிகாதி என்றும் ஏமாற்றுக்கார சாமியார் என்றும் கூறி சிலைகளை உடைத்தெறியத் துவங்கியிருக்கிறது.

சமூகச் செல்வாக்கு உள்ளவர்களின் கடவுளுக்கே இந்துத்துவக் கும்பலிடம் இவ்வளவு தான் மரியாதை என்றால், மாரியாத்தா, அய்யனார், சங்கிலி கருப்பு, முனீஸ்வரன் (முனியன்), கருப்பசாமி போன்ற தமிழக மரபு தெய்வங்கள், அதுவும் மாமிசமும் சாராயமும் உட்கொள்ளும் காவல் தெய்வங்களை என்ன செய்வார்கள் ?

ஏற்கெனவே முனியனை முனீஸ்வரன் என்றும், அய்யனாரை அய்யனார் ஸ்வாமிகள் என்றும், முருகனைக் கந்தன் என்றும் கருப்பனை கருப்பஸ்வாமி என்றும் பார்ப்பனமயப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பனியம். இனி படிப்படியாக மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஒரே வழிபாட்டு முறை அதுவும் சுத்தமான சைவ வழிபாட்டு முறைதான் என்று நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை இந்த சஙக பரிவாரக் கும்பல்.

சாய்பாபா சிலை இடிக்கப்பட்டது வழக்கு இல்லாமல் தப்பிக்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பதைப் பரிசீலித்துப் பார்த்தாலே தெரியும், அந்த கோவிலின் அறங்காவல் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இதற்கு உடந்தையாக இருப்பதுதான்.

இந்த நிலையை தமிகத்தில் இலகுவாக ஏற்படுத்தத்தான் கோவில்களை தனியார்களின் கையில் ஒப்படையுங்கள் என்கிறது சங்க பரிவாரக் கும்பல். ஆரம்பத்தில் எச். ராஜாவை வைத்து முயற்சித்து செல்ஃப் எடுக்காத இந்த சதித் திட்டத்தை தற்போது ஜக்கி வாசுதேவ் எனும் கார்ப்பரேட் சாமியார் மூலம் துவங்கியிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

படிக்க :
♦ கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?
♦ சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !

இன்று தமிழகத்தில் முக்கியமான கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தக் கோவில்களில் உள்ள வழிபாட்டை முடக்குவதோ, ஒரு கடவுளை இல்லை என்று மறுப்பதோ சாத்தியமில்லை. நாம் மேற்கண்ட “யதி நரசிம்மானந்த சரஸ்வதி”யைப் போன்ற சாமியார்களின் கைக்குச் சென்றால், இனி சீரடி சாய்பாபாவுக்கும், முனியனுக்கும் கோவில்கள் தமிழகத்தில் இல்லாமல் போகும் என்பது மட்டும் உறுதி. அவ்வளவு ஏன் முருகனுக்கும், சிவனுக்குமே அனுமதிப்பார்களா என்பதுதான் கேள்வி!

ஆகவே இது வட இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் மட்டும் நடந்த நிகழ்வு அல்ல, மாறாக இந்துத்துவக் கும்பல் 2014-ம் ஆண்டே எடுத்த முடிவு என்பதையும் அதை செயல்படுத்தும் நிலைக்கு வட இந்தியாவில் வளர்ந்து வந்திருக்கும் காவிக் கும்பல் தமிழகத்தில் அதனைச் செய்யவே ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

இந்தக் கிரிமினல் கும்பலிடமிருந்து மக்களின் பலவகைப்பட்ட வழிபாட்டு உரிமைகளைக் காப்போம் ! சாதாரண மக்களின் பக்திக்கும் சங்க பரிவாரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்ந்து கோவில்களை ஆக்கிரமிக்கும் சங்க பரிவாரக் கும்பலின் கனவுக்கு சாவு மணியடிப்போம்.


சரண்
செய்தி ஆதாரம் : Scroll.in