Thursday, November 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 39

கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்

ந்தியாவில் சாக்கடை மாற்றும் செப்டிக் டேங்க் எனப்படும் கழிவு நீர்த் தொட்டி (sewer and septic tank workers – SSW) சுத்தம் செய்யும் பணியாளர்களில் 67 சதவிகிதம் பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் சமூகநீதி அதிகாரமளித்தல் அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் இணைந்து கழிவு நீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு பணிகள் கையால் மேற்கொள்ளப்படுவதைத் தடை செய்வதற்கும், தொழிலாளர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் விதமாகவும்  சுகாதார  அமைப்புகள் இயந்திரமாக்கப்படுவதற்கான தேசிய நடவடிக்கையாக “நமஸ்தே” திட்டத்தை 2023 ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் செவ்வாயன்று (டிசம்பர் 17 அன்று) நாடாளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம். பி குல்தீப் இந்தோராவின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ”நமஸ்தே திட்டத்தின் கீழ் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேலை செய்கின்ற கிளினிக் தொழிலாளர்களில் (SSW) 57,758 பேரின் சுயவிவரங்கள் கணக்கிடப்பட்டு 54,754 பேரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அத்தொழிலாளர்களில் 37,060 (67%) பேர் பட்டியல் சாதிகளை (SC) சேர்ந்தவர்கள்,  8,587 (15.73%) பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளை (OBC) சேர்ந்தவர்கள், 4,536 (8.31%) பேர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 4,391 (8.5% ) பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிகளில் 67 சதவிகிதத்தினர் பட்டியல் சாதியினராக இருப்பது சாதிய அடிப்படையிலானது அல்ல, தொழில் சார்ந்தது என்று சாதி ரீதியாக அம்மக்கள் ஒடுக்கப்படுவதை மறைத்து அயோக்கியத்தனமாகப் பேசியுள்ளார்.


படிக்க: துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்


தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் நமஸ்தே திட்டத்தின் கீழ் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அரசாங்க தரவுகளே தெரிவிக்கின்ற நிலையில் கணக்கில் வராமல் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாதி அடிப்படையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.

ஒன்றிய அரசு கையால் மனித கழிவுகளை அகற்றுவதைத் தடுத்து இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நமஸ்தே திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினாலும் அது வெறும் திட்டமாக மட்டுமே இருக்கின்றது. மனித கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாததின் காரணமாக இன்று வரை மலக்குழி மரணங்களும் பாதாளச் சாக்கடையைப் பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்வதும் தொடர்கிறது. இதனால் தொடர் மரணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

குறிப்பாக 2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சாதிய அடிப்படையில் துப்புரவு பணிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வால்மீகி சமூக மக்கள் ‘உயர்’ சாதியினர் மற்றும் ஆதிக்க சாதியினருக்குப் பதிலாக பதிலி (Proxy) முறையில் மிகக் குறைந்த ஊதியத்திற்குத் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படுவது குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியானது.

இந்த செய்தியோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது கழிவு நீர்த் தொட்டி (எஸ்.எஸ்.டபிள்யு) சுத்தம் செய்யும் பணியாளர்களில் 67 சதவிகிதம் பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ள தகவல் குறை மதிப்பீடு என்பது திண்ணம்.

சாதி அடிப்படையிலான குலத்தொழிலில் மக்களை இருத்த விஸ்வகர்மா போன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாசிச மோடி அரசு துப்புரவுப் பணியிலிருந்து பட்டியல் சாதி மக்களை எப்படி மீட்டெடுக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா

திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அம்பேத்கரை இழிவுபடுத்திய பாசிசக் கும்பலை போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!

19.12.2024

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலை
மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!

பாசிசக் கும்பலின் திசைதிருப்பும் முயற்சியை முறியடிப்போம்!

பத்திரிகை செய்தி

டந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) நாடாளுமன்றத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது அண்ணல் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் போராட்டங்களில் இறங்கியுள்ளன.

அமித் ஷா தனது உரையின்போது, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என கூறுவது பேஷனாகி விட்டது. இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்” என்று வன்மத்தோடு பேசியுள்ளார்.

இந்தக் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், பதவி விலக வேண்டுமென்றும் கோரியுள்ளன.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே “அம்பேத்கர் மனுஸ்மிருதிக்கு எதிரானவர், அதனால்தான் அவர்மீது இவ்வளவு வெறுப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் அம்பலப்படத் தொடங்கியவுடன் இது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் தள்ளப்பட்டது. தான் அவ்வாறு சொல்லவில்லை எனவும், AI தொழில்நுட்பத்தின் மூலம் தனது கருத்து திரிக்கப்பட்டுள்ளதாகவும் பம்மியுள்ளார் அமித்ஷா.

மேலும் ”அம்பேத்கரை ஒருபோதும் அவமதிக்க முடியாத கட்சியைச் சேர்ந்தவன் நான். அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம்” என்று வெட்கமின்றி கோயபல்ஸ் பாணியில் பேசியுள்ளார், அமித்ஷா.

சாதிய ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பனிய சித்தாந்தத்தையும், மனுஸ்மிருதியையும் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் போராடினார் அண்ணல் அம்பேத்கர். பார்ப்பன சனாதன கும்பலுக்கு பரம வைரியாக களத்தில் நின்றார். இந்த அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு அண்ணல் அம்பேத்கர் மீது எப்போதும் வன்மம் உள்ளது.

அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.

அதே சமயம், அதானியின் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குளிர்கால கூட்டத் தொடரின் தொடக்கத்தில் இருந்து குரல் எழுப்பி வருகின்றன. இன்னொரு பக்கம் ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க துடித்து வருகிறது. தற்போது அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி, புதிய பிரச்சினையை பாசிசக் கும்பல் உருவாக்கியுள்ளது. அதாவது, ஒரு அநீதியில் இருந்து திசைதிருப்ப இன்னொரு அநீதியை உருவாக்குவது என்ற கோணத்திலும் மோடி – அமித்ஷா கும்பலின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.

அதானி – அம்பானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் வரைமுறையற்ற சுரண்டலை உள்ளடக்கிய இந்துராஷ்டிர கொடுங்கோன்மை இலக்கை நிறைவேற்ற எல்லாத் திசையிலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிசக் கும்பல் வேலை செய்து வருகிறது என்பதுதான் அடிப்படையான காரணியாகும். இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.


மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி,
8754674757.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



துளையிடப்படும் விவசாயிகளின் வாழ்க்கை | ஆவணப்படம்

துளையிடப்படும் விவசாயிகளின் வாழ்க்கை
ஆவணப்படம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!

லகம் முழுவதும் தீவிரமாகிவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையால்,  நிலையற்ற பொருளாதாரம்,  வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, சமூகநலத் திட்டங்களுக்கான நிதிக் குறைப்பு,  அகதிகள்-புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை, கார்ப்பரேட் கும்பல்களின் இயற்கைவளச் சுரண்டல் – மக்களின் வாழ்வாதாரம் பறிப்பு, இயல்பாகிவிட்டப் பேரிடர்கள்  என உலகம் ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தப் பேரழிவிலிருந்து மக்களை மீட்பதற்கான மாற்று எதுவும் ஆளும் வர்க்கத்திடம் இல்லாததாலும் பாட்டாளி வர்க்க சக்திகள் பலவீனமாக இருப்பதாலும்,  இந்தப் பேரழிவு சூழலை தங்களது இனவெறி -மதவெறி – நிறவெறி – தேசியவெறிக்கு பயன்படுத்திக் கொண்டு பாசிசக் கும்பல் ஆட்சி அமைக்கின்ற போக்கு உலகெங்கும் நிலவுகிறது.

தற்போது அந்த வரிசையில், அமெரிக்காவில் 47-வது அதிபராக பாசிஸ்டான டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார். ட்ரம்ப் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென பெரும் காப்பரேட் முதலாளியான எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்கிறார். ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன், உக்ரைன் போர் நிறுத்தப்படுமோ, நேட்டோ படை கலைக்கப்படுமோ, காப்புவாதம் மீண்டும் தலைதூக்குமோ என ஐரோப்பிய யூனியன் நாடுகள் மத்தியில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இவ்விரு நிகழ்வுகளும் எதை வெளிப்படுத்துகின்றன? அடுத்து வரும் சர்வதேச நிகழ்ச்சிப் போக்குகள் எத்திசையில் செல்லும்? என்ற கேள்விகளுக்கு விடை காண்பது அவசியம்.

ட்ரம்ப் தேர்தல் வெற்றி: “எலான் மஸ்க் விளைவு”

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் இரு கட்சி ஆட்சி முறையானது கார்ப்பரேட் ஆதிக்கத்தின் துலக்கமான வெளிப்பாடாகும். இரண்டு கட்சிகளைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர்களையும் வெவ்வேறு கார்ப்பரேட்டுகள் ஆதரிப்பதும், தேர்தல் நிதியளிப்பதும் பொதுவில் நடப்பவை. யாருக்கு எவ்வளவு நிதி திரள்கிறது என்பதிலிருந்தே, யாரை அதிபராக்க கார்ப்பரேட்டுகள் விரும்புகின்றன என்பது தெளிவாகிவிடும். அதன் பிறகு நடத்தப்படும் தேர்தல் வெறும் சடங்குதான். அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பதை “எலான் மஸ்க் விளைவு” (The Elon Musk Effect) என்று அந்நாட்டு முதலாளித்துவ ஊடகங்களே விமர்சிக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நாசாவிடமிருந்து ஒப்பந்தங்களையும், மின்சாரக் கார் தயாரிப்புக்கு அமெரிக்க அரசிடமிருந்து மானியத்தையும் பெற்று பல பில்லியன் டாலர்களைக் குவித்தார் எலான் மஸ்க். இருப்பினும் கூட, ஜோ பைடன் அரசாங்கத்தின் ஏகபோக ஆதரவைப் பெற முடியவில்லை. மின்சார வாகனத் தயாரிப்பில் டெஸ்லாவின் போட்டியாளர்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லான்டிஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் பைடன் முக்கியத்துவம் அளித்தார். இதுமட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள லித்தியம் இருப்புகள் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதில் பைடன் அரசாங்கத்தால் சீனாவுடன் திறம்பட போட்டியிட முடியவில்லை. இது மின்சார வாகனத் தயாரிப்பில் டெஸ்லாவின் ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொள்வதில் உள்ள முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

உக்ரைனில் உள்ள யுரேனியம், லித்தியம் போன்ற பல ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புகொண்ட அரியவகைத் தனிமங்களைக் கைப்பற்றும் இலக்கில் துவங்கப்பட்டதே உக்ரைன் – ரஷ்யப் போர். இந்தப் போரும் உடனடியாக முடிவுக்கு வராமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களே பல நூறு பில்லியன் டாலர்களை விழுங்கிக் கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு வகையில் இப்போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, உக்ரைனின் கனிம வளங்களைப் பங்கிட்டுக் கொள்வது எலான் மஸ்க் உள்ளிட்ட முதலாளிகளுக்குத் தேவையாக உள்ளது. எனவே தான், ‘திறமையற்ற’ பைடன் நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவில் எலான் மஸ்க் வகையறாக்கள் வெளிப்படையாகக் களமிறங்கியுள்ளனர்.

ட்ரம்புக்கு ஆதரவும் நிதியளிப்பும்:

அமெரிக்க அரசியல் செயல்பாட்டுக் குழு என்னும் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ட்ரம்புக்கும் இதர குடியரசுக் கட்சியினருக்கும் சுமார் 200 மில்லியன் டாலர்கள் வரை நன்கொடையாக  வழங்கியிருக்கிறார் எலான் மஸ்க். இது வெளியே தெரிந்த கணக்கு மட்டுமே. அதே சமயத்தில் கமலா ஹாரிஸோ, இதுவரை அதிபர் வேட்பாளர்கள் எவரும் பெறாத அளவுக்கு, ட்ரம்பை விடவும் மிக அதிகமாக, சுமார் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான நன்கொடையைத் திரட்டியிருந்தார். இத்தனைக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் கடந்த நான்காண்டுகளில் அதிகரித்த போதிலும், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட எதற்கும் சரியான தீர்வை முன்வைக்காத நிலையிலும் கூட,  பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கமலாவை ஆதரித்து நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், எலான் மஸ்கின் ஆதரவைப் பெற்றதன் மூலமாகவே ட்ரம்ப் இம்முறை வென்றுள்ளார் என்பதே கவனிக்க வேண்டிய செய்தி. குறிப்பாக, வேறு யாரும் செய்யாத வகையில் எலான் மஸ்க், ட்ரம்புடன் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டது இங்கு கவனிக்கத்தக்கது.

ட்ரம்புக்கு நெருக்கடியான ஏழு மாகாணங்களில் உள்ள மக்களைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் செய்தார் மஸ்க். தனது அரசியல் செயல்பாட்டு குழுவின் அறிக்கையை அங்கீகரித்து தேர்தல் முடியும் வரை வாக்களிப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டாலர் இலவசமாக அளிப்பதாகக் கடந்த அக்டோபர் 19- ஆம் தேதி அறிவித்தார். அறிவித்ததோடு மட்டுமல்லாமல், பென்சில்வேனியாவில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலருக்கான காசோலையும் வழங்கினார். இந்த அறிவிப்பிற்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்ததன் மூலம், மஸ்கின் சட்டவிரோத அறிவிப்பையும், செயல்பாட்டையும் பென்சில்வேனியா நீதிமன்றம் அங்கீகரித்தது.

ட்ரம்ப் – மஸ்கின் பொய்ப்பிரச்சாரம்:

டிவிட்டர் என அறியப்பட்ட எக்ஸ் தளத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை சாதாரண மக்கள் யாரேனும் பதிவிட்டால், அத்தளத்தின் நிர்வாகத்திடம் புகார் செய்து நீக்க முடியும். ஆனால், அத்தளத்தின் உரிமையாளரே பொய்த்தகவல்களைப் பகிர்ந்தால் என்ன செய்வது? சமூக ஊடகங்களின் ஜனநாயக வெளியை அதிகரிக்க வேண்டுமென டிவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய போது எலான் மஸ்க் அறிவித்தார். அதன் பிறகு இத்தளத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் கொத்துக்கொத்தான வேலைநீக்கமே அவரது ஜனநாயக வேட்கையின் இலட்சணத்துக்கு சான்று.

கடந்த 2020-ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஆட்சிக்கவிழ்ப்புக்குத் திட்டமிட்டு, வன்முறையைத் தூண்டும் விதமாக செய்திகளைப் பகிர்ந்தார் என்பதற்காக, 2021 ஜனவரியில் அவரது கணக்கை முடக்கியது டிவிட்டர் நிர்வாகம். எலான் மஸ்க் இத்தளத்தின் உரிமையாளரான பிறகு, ட்ரம்பின் கணக்குகளை மீண்டும் அனுமதித்தார். இப்போதைய தேர்தலில் அதே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி, இவர்கள் இருவருமே கமலாவுக்கு எதிராக பல பொய்மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். எலான் மஸ்க் விரும்பிய ஜனநாயகம், பொய்ப் பிரச்சாரத்துக்கான ஜனநாயகம் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது.

“அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம்” (Make America Great Again) என்ற ட்ரம்பின் முழக்கத்தையும், ட்ரம்பின் நிறவெறி, இனவெறி பொய்ப் பிரச்சாரங்களையும் அமெரிக்காவெங்கும் பரப்பியது எக்ஸ் வலைதளம்.  கமலா மற்றும் அகதிகள் குறித்த பொய்ப் பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் ஊதிப்பெருக்கி, அமெரிக்க மக்கள் மத்தியில் பாசிச ட்ரம்புக்கு அடித்தளத்தை உருவாக்கியது. ட்ரம்ப் வந்தால் தங்களது பிரச்சினை தீர்ந்துவிடும் என கண்மூடித்தனமாக சாதாரண அமெரிக்கக் கறுப்பின மக்கள் நம்புமளவிற்கு  இந்தப் பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கமலா அறிவித்த பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் மற்றும் மக்களுக்கான சில சலுகைகளைக் கொண்டு கமலா ஹாரிஸ் ஒரு ‘கம்யூனிஸ்ட்’ என்ற பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. கம்யூனிஸ்டுகள் மத்தியில் கமலா பேசுவது போன்று, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் ஒருபடி மேலே போய், கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் – சுத்தியல் சின்னம் பொறித்த சிவப்பு சீருடையில் கமலா நிற்பது போன்ற புகைப்படத்துடன், முதல் நாளே கமலா ஒரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியாக செயல்பட சபதம் எடுத்துள்ளார்  என்று பதிவிட்டார்.

இதேபோல, கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க வலதுசாரிகள், ட்ரம்ப் ஆதரவாளர்கள்,  நடிகர்கள், கருத்தாக்கம் செய்வோர் என பலரும் அமெரிக்க மக்கள் மத்தியில் சோசலிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்திருக்கின்றனர் என்ற உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது அமெரிக்காவின் டிஜிட்டல் ஜனநாயக நிறுவனம். இதற்காக ஸ்பானிஷ் மற்றும் போர்த்துக்கீசிய மொழியில் 1300 வாட்ஸ் அப் மற்றும் 200 டெலிகிராம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என்பதையும் அந்நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், கமலா ஒரு கம்யூனிஸ்ட் என்று பதிவிட்டதோடு மட்டுமின்றி, அதை  வெகுஜன மக்கள் நம்பும்படியாக கமலாவின் பெயரில் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை ஒன்றையும் போலியாக உருவாக்கி உலவ விட்டிருக்கிறது இந்த கம்யூனிச வெறுப்பு-பாசிசக் கும்பல். இந்தப் பொய்ப் பதிவை 83.9 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர், 5 லட்சம் மக்கள் பகிர்ந்திருக்கின்றனர் என்றால்  ட்ரம்ப்-மஸ்க் கும்பல் சமூக வலைதளங்களில் எந்தளவிற்கு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஊடக விவாதங்களிலும், கமலாவும் அவரது அப்பாவும் கம்யூனிஸ்டுகள் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசினார் டிரம்ப்.

அதேபோல், மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர் தொழிலாளர்கள், செல்லப் பிராணிகளான பூனைகளையும், நாய்களையும் தின்கிறார்கள் என்று ஓகியோ மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் இனவெறியைக் கக்கினார் ட்ரம்ப். இதே கருத்தை வெளிப்படுத்தும் வகையில் “கமலா என்னை வெறுக்கிறார்” என்று கிண்டலுடன் பூனையின் புகைப்படத்தைப் பகிர்ந்தார் எலான் மஸ்க்.

மேலும், எக்ஸ் தளத்தில், சட்டவிரோத ஏலியன்கள் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற பொய்ச் செய்தி பரப்பட்டது. அக்டோபரில், “ஜனநாயகக் கட்சியினர் சட்டவிரோத புலம்பெயர் தொழிலாளர்களை வரவழைத்து, பொது மன்னிப்பு வழங்கி, வரவிருக்கிற தேர்தலில் தங்களது வாக்குவங்கியை அதிகரிக்கத் திட்டமிருக்கின்றனர் என்றும், ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா ஒரு கட்சி ஆட்சிமுறை கொண்ட சோசலிஸ்ட் நாடாக மாறிவிடும் என்றும் ஒரு சதிக்கோட்பாட்டைப் பரப்பினார் எலான் மஸ்க். உச்சக்கட்டமாக, தேர்தலுக்கான கடைசி ஒருவார காலத்தில், “ஒருவேளை ட்ரம்ப் வெற்றி பெறாவிட்டால் இதுவே கடைசி தேர்தல்” என்று அமெரிக்க மக்களுக்குப் பீதியூட்டினர்.

எலான் மஸ்கின் இந்தப் பொய் மற்றும் சதிக்கோட்பாடுகள் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் கருப்பின மற்றும் ஸ்பானிஷ், போர்த்துக்கீசிய மொழி பேசும் மக்களிடம் செல்வாக்கு செலுத்தியிருப்பதையே ட்ரம்ப் பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது. லத்தீன் அமெரிக்க ஆண்கள், முதல் தலைமுறையினரின் வாக்குகளைப் பெருவாரியாக ட்ரம்ப் பெற்றிருப்பதாக தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், இதர கார்ப்பரேட்டுகள் பெருமளவில் ஆதரிக்காத போதிலும், ட்ரம்புக்கு பின்புலமாக இருந்து வெல்ல வைத்ததன் மூலம், இத்தேர்தலில் வெற்றி பெற்றது எலான் மஸ்க் தான்.

ஆதரவும் பிரதிபலனும்

2014-இல் இந்தியாவில் மோடியைப் பிரதமராக்கி, அதன் பலனாக நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் அம்பானி-அதானிகளைப் போல, ட்ரம்பை அதிபராக்கியிருப்பதன் மூலம் எலான் மஸ்கின் கட்டற்ற கொள்ளை நடக்குமென முதலாளித்துவவாதிகளே அனுமானிக்கின்றனர். ட்ரம்ப் வெற்றி பெற்ற ஒரு சில வாரங்களிலேயே எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6 இலட்சம் கோடி ரூபாய்)  அதிகரித்துள்ளது இதன் முன்னோட்டம் தான்.

அடுத்துவரும் தனது ஆட்சியில் யாரையெல்லாம் பொறுப்பில் அமர்த்துவது என்பதை இப்போதே ட்ரம்ப் தேர்வு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, எலான் மஸ்குக்காகவே புதிதாக “அரசு செயல்திறன் துறை” என்னும் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் தலைமைப் பொறுப்பை எலான் மஸ்க் உடன் சேர்ந்து இந்துத்துவவாதியான விவேக் ராமசாமி நிர்வகிப்பார். இத்துறையானது அரசின் செலவீனங்களை ஆண்டுக்கு இரண்டு ட்ரில்லியன் (இரண்டு இலட்சம் கோடி) டாலர் வரை குறைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. இராணுவ சேவை மற்றும் அவசரகாலத்தில் பணியாற்றியவர்களுக்கே வாக்குரிமை, வாக்குரிமை வயதை 25 ஆக அதிகரிப்பது, கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பு, உள்நாட்டு வருவாய் அமைப்பு ஆகியவற்றைக் கலைப்பது, எச்.1பி விசா நிறுத்தம் போன்ற பாசிசத் திட்டங்களை ஏற்கெனவே முன்மொழிந்திருக்கிறார் விவேக். எனவே வருங்காலத்தில் அமெரிக்க மக்களின் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி பெருமளவில் குறைக்கப்படுவதும், அரசுத்துறை வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதுமான  அபாயம் உருவாகியிருக்கிறது.

எலான் மஸ்க் நேரடியாக அரசு நிர்வாகத்தில் பங்கேற்றிருப்பதால், அமெரிக்க விண்வெளித்துறை மற்றும் இராணுவத்திடமிருந்து பல ஒப்பந்தங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2019-ஆம் ஆண்டில், ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் விண்வெளிப்படை என்ற துறை உருவாக்கப்பட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் 733.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. நாசா விண்வெளி அமைப்பானது, கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை இந்நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் மூலம் கிராமப்புறப் பகுதிகளில் செயற்கைகோள் வழி இணைய சேவை வழங்குவதற்கு ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தன. இவற்றை அமெரிக்க அரசு தற்போது மறுபரிசீலனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாவற்றையும் விட, எலான் மஸ்கின் செவ்வாய் கிரகத்துக்கான பயணத் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். பல ட்ரில்லியன் கணக்கிலான அத்திட்டத்தை அரசின் செலவிலோ பெரும் மானியத்துடனோ நிறைவேற்றும் போக்குகள் தீவிரமடையும். இதை முன்கூட்டியே குறிக்கும் வகையில், “OCCUPY MARS” என்ற வாசகம் பொறித்த டி-சர்ட் மற்றும் “MAKE AMERICA GREAT AGAIN” என்னும் வாசகம் பொறித்த தொப்பி ஆகியவற்றை அணிந்து, ட்ரம்பின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் எலான் மஸ்க் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இது தவிர்த்து, டெஸ்லா நிறுவனத்தின் மூலம் மின்சாரக் கார் உற்பத்தியில் உலகு தழுவிய ஏகபோகத்தை நிலைநாட்டுவது மஸ்கின் குறிக்கோள்களில் ஒன்று. சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டு நிறுவனங்களும் இத்துறையில் போட்டியாளர்களாக உள்ள நிலையில், மின்சாரக் கார்களின் பேட்டரியில் பயன்படுத்தப்படும் லித்தியம் மூலப்பொருட்களின் தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 2019-ஆம் ஆண்டில், லித்தியம் கைப்பற்றலுக்கான போட்டியில் தான் பொலிவியாவின் ஈவா மொரேல்ஸ் ஆட்சியைக் கவிழ்த்தது அமெரிக்கா. அதன் பின்னால் இருந்தது எலான் மஸ்கின் இலாபவெறி மட்டுமே. எனவே, உலகம் முழுவதுமுள்ள லித்தியத்தையும், பிற இயற்கை வளங்கையும் கொள்ளையடிப்பதற்காக ட்ரம்ப்- எலான் மஸ்க் கும்பல் மீண்டும் வெறிகொண்டு அலையும் என்பது உறுதி. இதற்காக தனது மேலாதிக்கத்திற்கு ஒத்துவராத நாடுகளில் ஆக்கிரமிப்பையும், ஆட்சிக் கவிழ்ப்புகளையும் இந்த பாசிஸ்டுகள் நடத்துவார்கள். இதை மூடிமறைப்பதற்காக இன-நிற-மதவெறிகளை ஆயுதமாகப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்குவார்கள் என்பதும் உறுதி.

மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையிலும் கால்பதித்துள்ள எலான் மஸ்க், மனித குலத்தையே பேரழிவுக்குத் தள்ளும் அபாயமிக்க, மூளையில் சில்லுகள் பொருத்துகிற  “நியூரா லிங்க்” திட்டத்தைச் செயல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு – டிஜிட்டல் மேலாதிக்கத்திற்கான இந்தத் திட்டத்தை, பாசிச சர்வாதிகாரத்தின் மூலம் அமல்படுத்த முனையும் இவர்களால் ஒட்டுமொத்த மனித குலமும் பேரபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது.

000

இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்திருப்பது, இந்திய பாசிசக் கும்பலுக்கு மேலும் வலுவூட்டுவதாக இருக்கும். ஏனெனில் ட்ரம்பின் ஆட்சி அதிகாரத்தில் இந்துத்துவவாதியான விவேக் பங்கேற்றிருப்பது, பழைமைவாதிகளான குடியரசுக் கட்சியுடன் அமெரிக்காவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு உள்ள நெருக்கம் ஆகியவை இந்திய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு  தார்மீக ரீதியான ஆதரவைப் பெற்றுத்தரும். அதுமட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அமெரிக்காவிலிருந்துதான் அதிகப்படியான நிதி வருகிறது. வருங்காலங்களில் இவ்வரவு இன்னும் அதிகரிக்கும். இவையெல்லாம், இந்தியாவில் தாழ்த்தப்பட்ட-சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள், பாசிச கருப்புச் சட்டங்கள் அமலாக்கம் மற்றும் ஜார்க்கண்ட்-காஷ்மீர்- தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் “தேச வளர்ச்சி-பொருளாதார வளர்ச்சி” என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளையை தீவிரப்படுத்துவது ஆகியவை அதிகரிக்கும் அபாயமிருக்கிறது.

ஐரோப்பா கலங்குவது ஏன்?

ட்ரம்ப் ஒரு பாசிசக் கோமாளி என்பது அவரது கடந்த ஆட்சிக் காலத்திலேயே அம்பலமான ஒன்று. அதே சமயத்தில், அமெரிக்க நலனை முன்னிறுத்தியே பல முடிவுகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டும், சீனாவுடன் வர்த்தகப் போரைத் துவக்கி பெரும் நெருக்கடியைத் தூண்டி விடவும் செய்தார். இப்போதும் அவற்றைத் தொடர்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. நேட்டோ அமைப்பால் அமெரிக்காவுக்கு வெட்டிச் செலவுதான் ஆகிறது – எனவே அதைக் கலைக்க வேண்டும்; ஐ.நா, உலக வர்த்தகக் கழகத்தால் என்ன பயன் – அவற்றைக் கலைக்க வேண்டும்; உக்ரைன் போரில் அமெரிக்காவுக்குத்தான் அதிகம் செல்வாகிக் கொண்டிருக்கிறது – அதை உடனே நிறுத்த வேண்டும் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார் ட்ரம்ப். இப்போது அவர் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், சொன்னதையெல்லாம் செய்தால் என்னாகும் என்ற பீதி ஐரோப்பிய நாடுகளிடம் மேலோங்கியுள்ளது. அதனால்தான், அவசரகதியில் ஐரோப்பிய நாடுகளின் கூட்டத்தைக் கூட்டி, அமெரிக்கா இல்லாவிட்டாலும் நேட்டோவை தொடர்ந்து செயல்படுத்துவது, உக்ரைன் போரைத் தொடர்ந்து நடத்துவது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இவை எதுவும் அவர்களால் முடியாது என்பதே எதார்த்தம். ட்ரம்ப் சொல்வது போலவே நேட்டோவுக்கும், ஐ.நா.வுக்கும், உக்ரைன் போருக்கும் அமெரிக்காதான் மிகப்பெரும் நிதியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது. காரணம், இவையெல்லாம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அவசியம் என அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுவரை கருதியதுதான்.

புதிய முறையில் மேலாதிக்கம்!

சரிந்துவரும் தனது ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. தற்போது ட்ரம்ப் – மஸ்க் கூட்டணியோ, உலக மேலாதிக்கத்தை இனியும் பழைய வழியிலேயே தொடர முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பழைய வகைப்பட்ட மேலாதிக்கக் கருவிகளை, வழிமுறைகளைக் கைவிடத் தயாராகி, அது பற்றி பேசி வருகின்றனர். இவர்களது நோக்கம், அமெரிக்க மேலாதிக்கத்தைப் புதிய வகையில், செயற்கை நுண்ணறிவு – டிஜிட்டல் – மின்வாகனங்கள் – விண்வெளி ஆதிக்கம் என்ற வகையில் நிறுவ வேண்டும் என்ற திசையில் பயணிப்பதாக உள்ளது. இத்திசையில் தமக்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து முரண்பாட்டைத் தீவிரப்படுத்துவர்.

சுருக்கமாகச் சொன்னால், மறுகாலனியாதிக்கத்தைப் புதிய வகையில் நிலைநாட்டும் திசையில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நிதிமூலதன ஆதிக்கக் கும்பலும் இனி பயணிப்பர்; இதற்கேற்ப அமெரிக்க அரசு எந்திரத்தை கார்ப்பரேட்டுகள் நேரடியாகவே கட்டுப்படுத்தி இயக்குவர் என்பதே ட்ரம்ப் – மஸ்க் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி உலகுக்குச் சொல்ல வரும் செய்தி.


அப்பு

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்

டந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி மனித உரிமைகள் தினத்தன்று மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசுகளுக்கு எதிராக, பா.ஜ.க-வை சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள், புதுடெல்லியின் ஜந்தர் மந்தரில் மௌன உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3 அன்று தொடங்கிய சிறுபான்மை குக்கி பழங்குடியின மக்கள் மீதான இனக்கலவரத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 60,000 மக்கள் தங்கள் வீடுகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது மீண்டும் மணிப்பூர் கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில், குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்கள் மோடியை சந்திக்க பலமுறை முயற்சிசெய்துள்ளனர். ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மோடிக்கு அனுப்பிய கடிதங்களுக்கும் எந்த பதிலும் வரவில்லை.

ஒரு வருடத்திற்கும் மேலாக மணிப்பூரில் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரேன் சிங்கிற்கு, ஜூலை 2024-இல் மோடியுடன் ஒரே ஒரு சந்திப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்க 15 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பத்து குக்கி பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்களில் எல்.எம். காட், லெபாவ் ஹொக்கிப், லெட்சமாங் ஹொக்கிப், வுங்ஜாகின் வால்டே, பாவோலியன்லால் ஹாக்கிப், சின்லுன்தாங் மற்றும் நுர்சங்லூர் சனேட் ஆகிய ஏழு பேர் கருப்பு முகமூடி அணிந்து டெல்லியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். “மோடிஜியை அகற்று”, “மணிப்பூரில் அரசு நடத்தும் இனப் படுகொலையை நிறுத்துங்கள்”, “பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு கேளாத செவிகள் மட்டுமே வழங்கப்படும்” போன்ற கோரிக்கைகள் பொறித்த பதாகைகள் ஏந்தி போராட்டத்தை நடத்தினர்.

இப்போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 19 மாதங்களாக இந்திய அரசாங்கத்தால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர். மேலும், மோடியின் பாதந்தாங்கி ஊடகங்கள் மணிப்பூர் குக்கி பழங்குடியின மக்களை திட்டமிட்டு புறக்கணித்து வருவதையும் போராடிய எம்.எல்.ஏ-க்கள் அம்பலப்படுத்தினர்.

இப்போராட்டத்திற்கு ஒரு நாள் கழித்து, பத்து குக்கி பழங்குடியின எம்.எல்.ஏ-க்களும் கையெழுத்திட்ட, அவர்களின்  கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணை ஒன்று பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில்

  • சுகாதாரம், கல்வி, சாலைகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை அந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் நேரடியாக மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்க மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.
  • தற்போதைய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அரசியல் உரையாடலை விரைவுபடுத்தவேண்டும்.
    உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த குறிப்பாணையில் இடம்பெற்றிருந்தது.

மேலும், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை குக்கி மக்கள் வாழும் மலைப் பகுதிகளுக்கு வழங்காமல் பைரன் சிங் அரசு வஞ்சித்துவருதையும், நிதியை பாரபட்சமாக நிர்வகித்து வருவதையும் அதில் சுட்டிக்காட்டினர்.

இதனை “மெய்தி இன-பெரும்பான்மை மாநில அரசாங்கத்தால், வளர்ச்சியின் அடிப்படையில் மலை மாவட்டங்கள் நீண்டகால பாகுபாடுகளை எதிர்கொண்ட போதிலும், கடந்த 19 மாதங்களில் நடந்துவரும் வன்முறையின் போது இந்த பாகுபாடு மோசமடைந்து வருவதைக் காண்பது வருத்தமளிக்கிறது” என்று குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


படிக்க: பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை


இப்போராட்டத்திற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ‘தி வயர்’ பத்திரிக்கையிடம் பேசுகையில், “எங்கள் கோரிக்கைகள் தெளிவாகவும் பரவலாகவும் அறியப்பட்டவை, ஆனால் ஒன்றிய அரசை தவிர” என்று குறிப்பிட்டார். மேலும், பா.ஜ.க. அரசு சிறுபான்மையினர் கோரிக்கைகளுக்கு எப்பொழுதுமே பாராமுகம்தான் காட்டி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

பைரன் சிங் அரசு திட்டமிட்டு நடத்தும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான இக்கலவரத்தில் குக்கி மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. முன்பு உருட்டுக் கட்டைகள், துப்பாக்கிகளைக் கொண்டு வன்முறை நடத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்கள், வெடி மருந்துகள் நிரம்பிய ஏவுகணைகளைக் கொண்டு கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் பல்வேறு குழுமங்களுக்கான தலைவர் பதவியிலிருந்த குக்கி சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டு மெய்தி மற்றும் நாகா இனத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

குக்கி இனத்தை சார்ந்த எம்.எல்.ஏ-களுக்கே, அதுவும் பா.ஐ.க. எம்.எல்.ஏ-களுக்கே இந்த அவலநிலை ஏற்பட்டு அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அமைதியான முறையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாசிச மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, பா.ஜ.க. எம்.பி-களுக்கு தேசியக்கொடியும் ரோசாப்பூவும் வழங்கி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வித்தியாசமான முறையில் ‘போராடி’ வருகின்றனர். மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.

எனவே, மக்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஓர் இயக்கமாக ஒன்றுதிரண்டு மாபெரும் போராட்டங்களை கட்டியமைத்து “பாசிச மோடி அரசே, மணிப்பூர் இனக்கலவரத்தை நிறுத்து” என முழங்குவோம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்!


கபிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram


பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை

பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர்

கித்துக் கொள்ள முடியவில்லை
உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை!

தாங்கிக் கொள்ள முடியவில்லை
உங்கள் (அ)ஹிம்சைகளை!

காந்தியிடம் ஆரம்பித்தது
ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது…

துரோகத்தால் நாறுகிறது
உங்கள் கைகளிலுள்ள
ரோஜாப்பூ!

துவண்டு கிடக்கிறது
உங்கள் கரங்களில் தேசியக் கொடி!

கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்..
ரோஜாக்களை செடியிலேயே
மலர விடுங்கள்..
பாசிசத்தின் பாதங்களில்
அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்!

நரமாமிசம் சுவைக்கும்
பற்களுக்கிடையில்
என்ன தேடுகிறீர்கள்
கருணையா..?

பாசிஸ்டுகளே
முகமூடிகளை கழற்றியபின்
அவர்களுக்கு ஜனநாயக சாம்பல்
பூசாதீர்கள்!

பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல..
நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்!

அதானி பற்றி பேச வேண்டுமா
மக்களோடு பேசுங்கள்!

மணிப்பூருக்கு நீதி வேண்டுமா?
மக்களோடு இறங்குங்கள்!

பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா?
மக்களோடு கைகோருங்கள்!

நாடாளுமன்றம்…

செங்கோலை நட்டுவைத்த
இந்துராஷ்டிரத்தின் குறியீடு..
‘ஜனநாயகத்தை’ புதைத்த
அந்த கல்லறையில்
இன்னும் என்ன முறையீடு?

கொடியின்
மலரின்
பின்னே ஒளியாதீர்கள்!

நாடாளுமன்றத்தில்
பாசிச மோடியை
பேசச் சொல்லி கெஞ்சாதீர்கள்!

நாடாளுமன்றத்தை
விட்டு வெளியேறுங்கள்..
அதை பாசிஸ்டுகளுக்கே கல்லறையாக்கும்
மக்கள் போராட்டம்!

வீதியிலே பிறக்கிறது கலகம்..
மக்கள் மன்றத்தில் பாசிசம்
ஒருநாள் வீழும்!


செங்குரல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?

ஜார்க்கண்ட்,  மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. வெற்றிபெறும் என்றும் ஜார்க்கண்டில் பா.ஜ.க வெற்றிபெறலாம் அல்லது இழுபறி ஏற்படும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் 56 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

இம்மாநிலத்தில் வெற்றிபெற மோடி-அமித்ஷா-ஆர்.எஸ்.எஸ். கும்பல் பல்வேறு சதித்தனங்களை மேற்கொண்ட போதிலும், தொடர்ந்து வெற்றிபெறும் தொகுதிகளைக் கூட இழந்து 21 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றிபெற்றிருப்பது பாசிசக் கும்பலின் சதித்தனங்கள் மக்களிடையே எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. இது பாசிசக் கும்பலுக்கு விழுந்த அடியாகும்.

மாதந்தோறும் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்துவது போன்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் கவர்ச்சிவாதத் திட்டங்கள், மோடி அரசு தன்னுடைய கைப்பாவையான அமலாக்கத்துறை மூலம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததால் ஏற்பட்ட அனுதாப அலை போன்றவைதான் ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டதற்கான காரணங்கள் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்னா மதக்குறியீடு வழங்கக்கோரி கடந்தாண்டு ராஞ்சியில் போராடிய பழங்குடியின மக்கள்.

ஆனால், கவர்ச்சிவாதம், அடையாள அரசியல் உள்ளிட்ட இந்நடவடிக்கைகள் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமின்றி, இதற்கு முந்தைய எல்லா தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகள் பின்பற்றும் வழமையான நடவடிக்கைகளே ஆகும். அத்தேர்தல்களில் எல்லாம் பா.ஜ.க. வீழ்த்தப்படவில்லை. பா.ஜ.க. நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்களில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவே செய்தது. ஆனால், ஜார்க்கண்டில் பா.ஜ.க. தோல்வியடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இத்தேர்தல் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான தேர்தலாக பார்க்கப்பட்டது. இந்த பத்தாண்டு கால பாசிச மோடி ஆட்சியில் பழங்குடி மக்கள் மீது கனிமவளக் கொள்கைக்காக போர் தொடுத்துவரும் பாசிசக் கும்பலின் மீதான எதிர்ப்புணர்வு வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்துமுனைவாக்க அரசியலை வீழ்த்திய
பா.ஜ.க. எதிர்ப்புணர்வு

ஜார்க்கண்ட் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை தீவிரமாக மோடி-அமித்ஷா கும்பல் கையிலெடுத்தது. நவம்பர் 4-ஆம் தேதி சாய்பாசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஊடுருவல்காரர்கள் உங்கள் மகள்களைப் பறித்து, நிலங்களை அபகரித்து, உணவைத் தின்று கொண்டிருக்கிறார்கள்” என்று இஸ்லாமிய வெறுப்பின் உச்சத்திற்கே சென்றார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை ஊடுருவல்காரர்களின் கூட்டணி என குறிப்பிட்ட மோடி, அக்கூட்டணி தங்கள் வாக்குவங்கிக்காக மாநிலத்தின் மக்கள்தொகையை மாற்றுவதாகவும் அவதூறு பரப்பினார்.

நவம்பர் 3-ஆம் தேதி ராஞ்சியில் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் கண்டறிந்து நாடு கடத்துவதாகவும், அவர்கள் அபகரித்த நிலங்களை மீட்பதாகவும் வெறுப்பை கக்கினார். வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவும் ஜார்க்கண்டில் களமிறக்கப்பட்டார்.

மேலும், பா.ஜ.க. கும்பலானது தன்னுடைய ஊடக பலம் மற்றும் சமூக வலைத்தளக் கட்டமைப்பின் மூலமும் இஸ்லாமிய வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சரான ஹேமந்த் சோரன் வங்கதேச இஸ்லாமியர்களை ஜார்க்கண்டிற்குள் ஊடுருவச் செய்வது போன்று சித்தரித்து காணொளிகளை பரப்பியது. இத்தகைய இழிவான, பொய்யான நச்சுப்பிரச்சார காணொளிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இருப்பினும், பா.ஜ.க. கும்பல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தோல்வியடைந்துள்ளது. கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டும் தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பழங்குடி மக்களின் வாக்குகளைக் கவர அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியுடனும், பழங்குடியல்லாத மக்களின் வாக்குகளைக் கவர ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தும், அக்கூட்டணி 24 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.

அதிலும், பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் சம்பை சோரன் போட்டியிட்ட சரைகேலா தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சம்பை சோரன் மகன் பாபுலால் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனத் தலைவரான ஷிபு சோரனின் மருமகளான சீதா சோரன் உள்ளிட்ட கருங்காலிகளும் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். கும்பல் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்துவருகின்ற போதிலும் பா.ஜ.க. இத்தோல்வியை அடைந்துள்ளது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்த ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியின் வாக்குகளும் பா.ஜ.க. எதிர்ப்பு காரணமாக புதியதாக தொடங்கப்பட்ட ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு சென்று 11 தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்து பா.ஜ.க. கூட்டணியை தோல்வியுறச் செய்துள்ளது.

மேலும், ஜார்க்கண்டில் வங்கதேச இஸ்லாமிய மக்கள் ஊடுருவுகின்றனர்; அவர்களால் பழங்குடி மற்றும் இந்து மக்களுக்கு ஆபத்து என்ற பா.ஜ.க. கும்பலின் நச்சுப்பிரச்சாரமும் களத்தில் எடுபடவில்லை. எதார்த்தத்தில் ஜார்க்கண்ட் பழங்குடியின மக்கள் இஸ்லாமிய மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதை அம்மக்களே பத்திரிகைகளிடம் தெரிவிக்கின்றனர். மேலும், ஜார்க்கண்ட் பூர்வீகவாசி மற்றும் பழங்குடியின மக்கள் இஸ்லாமியர்களை அந்நியர்களாகவும் நடத்தவில்லை. உண்மையில், ஜார்க்கண்டின் பெரும்பாலான இஸ்லாமியர்கள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களே.

இதனால் அசாமில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று “தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஜார்க்கண்டில் அமல்படுத்துவோம்; ஆவணங்களை சோதித்து ஊடுருவியர்களின் குடியுரிமையைப் பறிப்போம்” என்ற பா.ஜ.க-வின் வாக்குறுதியை பழங்குடி மக்கள் மட்டுமின்றி, பா.ஜ.க-வின் அடித்தளமாக விளங்கிய இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே பார்த்தனர்.

மேலும், 2014-ஆம் ஆண்டு ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானா ஆகிய குத்தகைச் சட்டங்களை, நிலங்களை எளிதாக கையகப்படுத்தும் வகையில் திருத்தியது. சட்டத்திருத்தங்களுக்கு எதிராகப் போராடிய மக்களை ஒடுக்கிய பா.ஜ.க. குந்ததி மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் பேர் மீது ஊபா கருப்பு சட்டத்தை பாய்ச்சியது. கிராம சபைகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் மற்றும் வனநிலங்களை பழங்குடி மக்களின் அனுமதியின்றி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் வகையில் நிலவங்கி கொள்கையை உருவாக்கியது. தங்களின் உரிமைகளுக்காக போராடிய மக்களை துணை இராணுவப் படைகள் மற்றும் போலீசு மூலம் கடுமையாக ஒடுக்கியது.

இந்த ஒடுக்குமுறைகள் பழங்குடி மக்களிடம்  பா.ஜ.க. எதிர்ப்புணர்வை விதைத்தன. இந்த எதிர்ப்புணர்வுதான், இஸ்லாமிய வெறுப்பூட்டி பழங்குடி மற்றும் இந்து மக்களை தன் அடித்தளத்தின் கீழ் திரட்டிக்கொள்ள விழைந்த பா.ஜ.க. கும்பலின் இந்துமுனைவாக்க அரசியலை களத்தில் முறியடித்தது.

மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்விற்கும்
போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி

ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இத்தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கவர்ச்சிவாதத் திட்டங்களையே நம்பியிருந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் 68 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதால், இந்த கவர்ச்சிவாதத் திட்டங்கள் பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்தே இருந்தது.

18-25 வயதுடைய 52 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் “மைய சம்மான் யோஜனா” திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தியுள்ளது. பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என்று அறிவித்தவுடன், பெண்களுக்கு வழங்கப்படும் தொகையை ரூ.2500-ஆக உயர்த்தி ஹேமந்த் சோரன் அரசு அரசாணையை வெளியிட்டது. மேலும், முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை 50 லட்சம் முதியோர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தியது; 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவது ஆகிய கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு பல கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதிலும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியலுக்கு எதிராக ஹேமந்த் சோரன் முன்னெடுத்த பிரச்சாரமே மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக, பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டும்; பழங்குடி மக்களுக்கு விலக்கு அளித்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. நச்சுப் பிரச்சாரம் செய்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம் என்று ஹேமந்த் உறுதியளித்தார். மேலும், பழங்குடி மக்களின் நில உடைமை உரிமைகளை மாநிலத்தில் அமலில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டங்கள்தான் பாதுகாக்கும் என்று பாசிசக் கும்பலின் பிரச்சாரத்திற்கு நேரெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

அதேபோல், இந்து என்பதற்கு பதிலாக தங்களை “சர்னா” மதத்தினராக அங்கீகரிக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் ஜார்க்கண்ட் பழங்குடியின மக்களின் கோரிக்கைக்கு முகங்கொடுத்தார். சர்னா மதத்தினராக அங்கீகரிப்பதன் மூலம்  அரசியலமைப்பு சட்டத்திலுள்ள தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும் என பழங்குடி மக்கள் கருதுகின்றனர். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது தங்களை சர்னா மதத்தினராக கணக்கெடுக்க வேண்டும் என பெரியளவிலான போராட்டங்களைக் கட்டியமைத்துள்ளனர். 2020-இல் பழங்குடி மக்களை சர்னா மதத்தினராக அங்கீகரிக்கக்கோரி ஹேமந்த் சோரன் அரசு தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் ஒன்றிய மோடி அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இந்நிலையில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்னா பழங்குடி மதத்தை சேர்ப்பதாகவும் பழங்குடி மக்களுக்கு சர்னா மதக் குறியீட்டை வழங்குவதாகவும் இத்தேர்தலின்போது ஹேமந்த் சோரன் வாக்குறுதியளித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட வகையில், பா.ஜ.க. அரசியலுக்கு எதிராக மக்களின் கோரிக்கைகளை கையிலெடுத்தது, பா.ஜ.க-வின்  சதித்திட்டத்தை முறியடித்ததோடு ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுத் தந்தது.

இன்னொருபுறம், சமூக, ஜனநாயக அமைப்புகளும் இத்தேர்தலில் பா.ஜ.க-வின் மக்கள்விரோதத் திட்டங்களையும் இந்துமுனைவாக்கப் பிரச்சாரத்தின் அபாயத்தையும் விளக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துள்ளனர். பல்வேறு ஜனநாயக, சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான லோக்தந்த்ரா பச்சான் அபியான் குழு இந்தப் பிரச்சாரங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இத்தகைய சமூக ஜனநாயக அமைப்புகளின் பணிகள் பா.ஜ.க. தோல்வியுறுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

குறிப்பாக, சமூக ஜனநாயக அமைப்புகளும் பழங்குடி மக்களும் கனிம வளக் கொள்ளை, கார்ப்பரேட் நாசகரத் திட்டங்கள், மக்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள், பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். பா.ஜ.க. மீண்டும் ஜார்க்கண்டில் ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் அபாயத்தையும் உணர்ந்திருந்தனர். பழங்குடியல்லாத மக்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தங்களுக்கு எதிரானதாக கருதியதோடு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பேசாததால் பா.ஜ.க. மீது அதிருப்தி அடைந்தனர்.

ஆகவே, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதானது ஜார்க்கண்ட் மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வுக்கும் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியே ஆகும். மாறாக, முதலாளித்துவ பத்திரிகைகள் கூறுவதுபோல ஹேமந்த் சோரனின் கவர்ச்சிவாத அரசியலுக்கு கிடைத்த வெற்றியல்ல.

வெற்றியை தக்கவைக்க
மக்கள் கோரிக்கைகளுக்கு
முகங்கொடுக்க வேண்டும்
!

ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தற்போது வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியில் பாசிசக் கும்பல் ஈடுபடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். ஏனென்றால் கனிமவளங்கள் நிறைந்த ஜார்க்கண்டில் அதானி-அகர்வால்-வேதாந்தா கும்பலின் கனிம வளக் கொள்ளையை கட்டற்ற முறையில் நடத்துவதற்கு ஆட்சி அதிகாரம் பா.ஜ.க. கையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆகவே, மாநிலத் தேர்தல்களில் தோல்வியடையும் போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுவதைப் போலவே ஜார்க்கண்டிலும் பா.ஜ.க. செயல்படும். அதற்கான அடிப்படைகளும் அம்மாநிலத்தில் உள்ளன.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் உள்ள தலைவர்கள் பாசிச எதிர்ப்பு சித்தாந்த ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டவர்கள் அல்ல. சம்பை சோரன் போன்ற முன்னணி தலைவர்களே பா.ஜ.க-வின் குதிரை பேரத்திற்கு விலைபோன நிலையில், தற்போது வெற்றிபெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும் குதிரை பேரத்தின் மூலம் தன்பக்கம் இழுக்க பா.ஜ.க. முயலும். மேலும், இத்தேர்தலில் பா.ஜ.க. 33.2 சதவிகித வாக்குகளை பெற்றிருப்பதோடு ஜார்க்கண்ட் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் மத்தியில் பா.ஜ.க. ஆதரவு மனநிலை உள்ளது. எனவே, வருங்காலங்களில் ஆர்.எஸ்.எஸ். மதவெறி அமைப்புகள் மூலமும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளின் மூலமும் இந்த அடித்தளத்தை பெருக்கிக்கொள்ளவே பா.ஜ.க. முயற்சிக்கும்.

மேலும், 2019-ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கார்ப்பரேட்டுகளின் கனிம வளக் கொள்ளைக்கு சேவை செய்யும் வகையிலேயே ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க-வால் கொண்டுவரப்பட்ட நில வங்கிக் கொள்கையை ரத்து செய்வதற்கும், நிலங்களை கையகப்படுத்தும் வகையில் குத்தகை சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை நீக்குவதற்கும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஹேமந்த் சோரன் அரசு அதனை செய்யாமல் மக்களுக்கு துரோகமிழைத்து வருகிறது.

மக்கள் எதிர்ப்பையும் மீறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளைக்காக 86 கிராமங்களை அழித்து கர்காய் ஆற்றில் இச்சா அணை கட்டுவதற்கு முயன்று கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டுவரும் சமூக செயற்பாட்டாளர்களை கொடிய கருப்புச் சட்டமான ஊபாவின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. சான்றாக, கிரிதி என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை மாசுபாட்டினால் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை செய்திகளாக வெளியிட்டதற்காக 2022 ஜூலையில் ரூபேஷ் சிங் என்ற பத்திரிகையாளர் மீது ஊபா பாய்ச்சியது. அக்டோபர் 17-ஆம் தேதி நிலக்கரி சுரங்கம் அமைவதற்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

ஜார்க்கண்டின் கோண்டல்புராவில் அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக போராடும் பழங்குடியின மக்கள்.

இதனால் மக்கள் மத்தியில் ஆளும் ஹேமந்த் சோரன் அரசின் மீதான எதிர்ப்பும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்டில் புதியதாக தொடங்கப்பட்ட ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் வாக்களித்திருப்பதும் அதன் தலைவர்கள் மக்கள்  மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதும், ஜார்க்கண்ட் மக்களில் கணிசமானோர் ஹேமந்த் சோரன் கட்சியை மாற்றாக பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியானது பல கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை செயல்படுத்தியும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருவது பா.ஜ.க. கும்பலுக்கே சாதகமானதாக மாறும்.

எனவே, தேர்தலில் வாக்குறுதியளிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, மக்கள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்புணர்வை பாசிச எதிர்ப்பாக வளர்த்தெடுப்பதுதான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கும் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்குமான  ஒரே வழி.

ஆகவே, ஜார்க்கண்டில் பா.ஜ.க. காலூன்றுவதை தடுக்க நினைக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் நாசகரத் திட்டங்களையும் கனிம வளக் கொள்ளையையும் தடுத்து நிறுத்த வேண்டும். அத்தகைய மக்கள் போராட்டங்கள்தான் பாசிசக் கும்பல் ஜார்க்கண்டில் வேரூன்றுவதைத் தடுப்பதற்கும் அதன்  அடித்தளத்தை அறுத்தெறிவதற்கும் வழிவகுக்கும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



பெருகி வரும் இணையக் குற்றங்கள்: தரவுகளைப் பண்டமாக்கும் கார்ப்பரேட் இலாபவெறியே ஆணிவேர்!

சைபர் கிரைம் எனப்படும் இணையக் குற்றங்கள் 21-ஆம் நூற்றாண்டின் புதிய இயல்புநிலையாகியுள்ளன. யாரையும் எங்கும் எந்த நேரத்திலும் இடம், பொருள், ஏவலின்றி ஏதேனும் ஒரு கும்பல் குறிவைத்துக் கொண்டிருக்கிறது. இணையதள வளர்ச்சி, நமது அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் பெரும் புரட்சியை நிகழ்த்தியுள்ளது. ஆனால், இது புதிய வகையிலான சைபர் குற்றவாளிகளை உருவாக்கியுள்ளது. இவ்வகைக் குற்றங்களில், அவற்றின் புவியியல் வரம்புகளும் எல்லைகளும் தகர்க்கப்பட்டுள்ளன.

இணையக் குற்றங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில், தேசிய குற்றப் பதிவுக் காப்பகத் தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான இணையக் குற்றங்கள் தொடர்பான புகார்கள் 4.52 இலட்சம் ஆகும். இது 2022-இல் 9.66 இலட்சமாகவும், 2023-ஆம் ஆண்டில் 15.56 இலட்சமாகவும் இருந்தன. இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கே மாதங்களில் 7.4 இலட்சம் புகார்கள் வந்துள்ளன. இவையனைத்தும் புகார்களாக பதிவானவை மட்டும்தான்.

இத்தகைய குற்றங்கள் இந்தியாவிற்குள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் நடக்கும் 45 சதவிகித சைபர் குற்றங்கள் இந்தோனேஷியா, லாவோஸ், கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து நிகழ்த்தப்படுகின்றன என்று இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் இந்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் இயக்கப்படும் 17,000 வாட்ஸ் அப் கணக்குகளையும் சமீபத்தில் தடைசெய்துள்ளது.

மோசடிகளின் வகைகள்

சிறிய அளவில் பணம் தேவைப்படும் சாதாரண மக்களை இலக்கு வைத்து நடத்தப்படுவது கடன் மோசடியாகும். ஆன்லைன் செயலிகள் மூலம் எளிதான தவணைகளில் கடன் பெறலாம் என்ற விளம்பரங்கள்தான் இதன் தொடக்கம். இவ்வாறு கடன் பெறுபவர்கள் தங்களது போனில் ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதுடன், அந்தச் செயலி மூலமாக தங்களது செல்போனில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள் – காணொளிகள் உள்ளிட்ட தரவுகள், இருப்பிடம், மைக் போன்றவற்றை அணுகுவதற்கு (access) அனுமதியளிக்க வேண்டும்.

கடனை வாங்கிய பிறகு, அதில் கூறப்பட்டிருக்கும் தவணைக்காலம் முடிவதற்கு முன்பாகவே, ஒரு வாரத்திலோ அல்லது பத்து நாட்களுக்குள்ளோ கடனைத் திருப்பிச் செலுத்துமாறு பல்வேறு எண்களில் இருந்து தொலைபேசி வாயிலாக முதலில் மிரட்டல் விடுப்பார்கள். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கட்ட வேண்டிய தொகையை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்வர். இதன் காரணமாக, 13  ஆயிரம் கடன் பெற்ற ஒருவர், தனது வீடு வாசலை விற்று 17 இலட்சங்கள் வரை திருப்பிச் செலுத்திய நிகழ்வுகள் பாகிஸ்தானில் பதிவாகியுள்ளன.

செல்போனில் உள்ள அனைத்துத் தரவுகளையும் இந்தக் கும்பல் சேகரித்துக் கொள்ளும். கட்ட மறுத்தாலோ அல்லது போலீசில் புகார் தெரிவிப்பதாகச் சொன்னாலோ தங்களது மொபைலில் உள்ள புகைப்படங்களை மார்பிங் செய்து சம்பந்தப்பட்ட நபரின் தொடர்புப் பட்டியலில் உள்ள எண்களுக்கு அனுப்புவதாக மிரட்டல் விடுக்கப்படும். இதன் விளைவாகத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.

பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைனில் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன. இவற்றை கிளிக் செய்து உள்ளே சென்றால் தொடக்கத்தில் அவர்களது கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டப்படும். அதன் பிறகு, அந்தப் பணத்தை எடுக்க உங்களது வங்கித் தரவுகள் வேண்டும் என்று கோருகின்றனர். அவற்றை அனுப்பியவுடன் வங்கியில் இருக்கும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு விடுகின்றனர்.

இவைபோக, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கலாம், பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரப்படுத்துகின்றனர். இதனை நம்பி, அந்தச் சமூக வலைதளக் குழுவில் இணைந்து, அந்த மர்ம நபர்கள் அனுப்பிய லிங்கில் கணக்குத் தொடங்கி அவற்றில் முதலீடு செய்து தங்களது பணத்தை பலரும் இழந்து வருகின்றனர்.

மேலும், சுங்கத்துறை அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என்று பேசி, தாங்கள் அனுப்பிய கொரியரில் போதைப் பொருள் இருக்கிறது என்றும், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விடுவோம் என்றும் மிரட்டி, அவர்களது தொலைபேசியில் ஊடுருவி அனைத்துத் தரவுகளையும் கையில் வைத்துக்கொண்டு மிரட்டுவதுடன், டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாரையும் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

டேட்டிங் ஆப்கள் மற்றும் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளைத் தொடங்கி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் காதல் வலையில் விழ வைத்து, ஏதாவது இணையதளத்தில் முதலீடு செய்ய வைப்பது, செல்போனில் உள்ள தரவுகளை வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பது போன்றவற்றைச் செய்கின்றனர். இவ்வளவு ஏன், தேசிய சைபர் கிரைம் போர்ட்டல் போன்றே போலியான போர்ட்டலை உருவாக்கி மோசடி செய்துள்ளது ஒரு மர்மக் கும்பல்.

2024-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.20.30 கோடியும், வர்த்தக மோசடியில் ரூ.1,420.48 கோடியும், முதலீட்டு மோசடியில் ரூ.222.58 கோடியும், காதல்/டேட்டிங் செயலிகளில் ரூ.13.23 கோடியும் ஏமாற்றப்பட்டுள்ளதாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மணி மியூல் கும்பல்

‘மணி மியூல்’ (Money Mule) என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இணையவழி குற்றத்தின் ‘மறைமுக வேலைவாய்ப்பாகும்’. அதாவது, இணையவழி குற்றங்கள் மூலமாகக் கொள்ளையடிக்கப்படும் கோடிக்கணக்கான பணத்தை, சட்டப்பூர்வமாக்குவதற்காக இந்தக் குற்றக் கும்பல்களுக்கு உதவுபவர்களே இந்த ‘மணி மியூல்’ கும்பல்.

ஒருபுறம், வங்கிக் கணக்கு இல்லாதவர்களின் ஆதார் உள்ளிட்ட தரவுகளைப் பயன்படுத்தி போலிக் கணக்குகளை உருவாக்கி, அவற்றில் இந்தக் கொள்ளையர்கள் பரிவர்த்தனை செய்கின்றனர். மேலும், சில செயலி நிறுவனங்களே தனிநபர் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடி, இந்த சைபர் குற்றவாளிகளுக்கு வழங்குகின்றன. அதன் மூலமாக சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவருக்கே தெரியாமல், அவரது வங்கிக் கணக்கை தங்களது பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மற்றொருபுறம், கடன் பிரச்சினை உள்ளவர்கள், பணத்தேவை உள்ளவர்களைக் குறிவைத்து, கொள்ளையடித்த பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் வைத்திருந்து திருப்பித் தருவதற்கு, இலட்சக்கணக்கில் கமிசன் தொகை கொடுத்து இத்தகைய வேலைகளில் ஈடுபட வைக்கின்றனர். மியூல் என்பது கழுதையைக் குறிப்பதாகும். இணையக் குற்றவாளிகளுக்காக பொதி சுமக்கும் இவர்கள்தான் ‘மணி மியூல்’ கும்பல் எனப்படுகிறார்கள்.

சைபர் அடிமைகள்

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுத்துவதற்காக, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, வேலைவாய்ப்பில்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்களை, இந்தோனேஷியா, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளுக்கு சில ஏஜெண்டுகள் அனுப்புகின்றனர். சமீபத்தில், கம்போடியாவில் இணையக் குற்றக்கும்பல் ஒன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரம் இளைஞர்களை அடிமைகளாக்கி இயக்கி வந்தது கண்டறியப்பட்டு, அந்த இளைஞர்கள் மீட்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு ஏமாற்றப்பட்டு குற்றவேலைகளில் ஈடுபடுத்தப்படுவோருக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, எவ்வளவு தொகையை ஏமாற்றி முதலீடு செய்ய வைக்கிறார்களோ, அதற்கு ஏற்பத்தான் சம்பளம் கொடுக்க முடியும் என்று இவர்களுக்கு இலக்கு வைத்து விடுகின்றனர். இவர்களது பாஸ்போர்ட் முதலான ஆவணங்களையும் கல்விச் சான்றிதழ்களையும் தங்களது பிடியில் வைத்துக் கொண்டு, மிரட்டி அடிமைகளாக்கி இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

இதுபோன்று தொழில்நுட்பப் பிரிவு, உளவுப் பிரிவு, தரவுகள் சேகரித்தல், குண்டர் படைகள், வேலைக்கான ஆட்களைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டுகள் என்ற ஒரு சமூக விரோத வலைப்பின்னலை வைத்துக் கொண்டுதான், இத்தகைய இணையக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

000

டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியானது, இதுபோன்ற இணையக் குற்றவாளிகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இதுபோன்ற இணையக் குற்றங்கள் ஆளும்வர்க்கத்தால் திணிக்கப்படும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத விளைவாகும்.

ஆரம்பக்காலத்தில், இது போன்ற மோசடியில் ஈடுபட வேண்டுமென்றால், ஒருவரது தொலைபேசி எண் அல்லது முகவரியைத் தெரிந்துகொள்ள பலவகைப்பட்ட தந்திரங்களைக் கையாள வேண்டியிருக்கும்.

தற்போதோ, ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்தவுடன்; ஒரு விளம்பரத்தைச் சொடுக்கியவுடன்; ஒரு குறுஞ்செய்தி அல்லது மெயிலை கிளிக் செய்தவுடன் அல்லது செல்போனுக்கு வரும் ஒரு அழைப்பை ஏற்றவுடன் செல்போனிலுள்ள அனைத்து தரவுகளும் ஒரு கும்பலால் அல்லது தனிநபரால் அபகரிக்கப்படுகின்றன. அப்படியென்றால், இதுபோன்ற பாதுகாப்பற்ற செயலிகள், தளங்கள் எப்படி இணையத்தில் உலவ முடிகிறது? தனிநபர் தரவுகள் இந்த வகைகளில் மட்டும்தான் திருடப்படுகின்றனவா என்றால் அதுதான் இல்லை. மேற்சொன்னவைகள் எல்லாம் சட்டவிரோதத் திருட்டுகள்.

சட்டப்பூர்வத் திருட்டுகளோ பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. சான்றாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசெக்யூரிட்டியின் அறிக்கையானது, ஆதார் தரவுகளை உள்ளடக்கிய 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க்வெப்பில் விற்பனைக்கு உள்ளன என்னும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாக ஆதார் மாற்றப்பட்டுள்ள சூழலில், வங்கிக் கணக்குகள், பள்ளி-கல்லூரிச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை போன்ற அனைத்து அத்தியாவசிய, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் இராணுவ இரகசியம் போல பாதுகாக்கப்பட வேண்டியவை. இத்தகைய தரவுகள் விற்பனைக்கு வந்துள்ளன என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகும்.

தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு குறித்து பேசுவது ஒருபுறம் இருந்தாலும், இந்தத் தரவுகள் ஏன் சேகரிக்கப்படுகின்றன? தரவுகள் ஏன் ஒன்று குவிக்கப்படுகின்றன என்பதைப் பரிசீலிப்பது முக்கியமான அம்சமாகும்.

21-ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவப் பண்டமயமாக்கல் என்பது அதன் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, மனிதர்களுக்கு வெளியில் உள்ளவற்றைப் பண்டமாக்கி வந்த நிலை மாறி, மனித உடல் உறுப்புகள் அனைத்தும் பண்டமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ‘புனித’ங்களாக கருதப்பட்டு வந்த கருப்பை, தாய்ப்பால் உள்ளிட்டவையும் விற்பனைக்கான பண்டமாக்கப்பட்டன. அதன் உச்சக்கட்டமாக, மனித சிந்தனைகள், விருப்பங்கள், பழக்கவழக்கங்கள், அன்றாட நடவடிக்கைகள், என்ன வகையான நோயால் பாதிக்கப்பட்டவர், என்ன உணவை விரும்பி உண்பார், எந்த நிறம் அவருக்குப் பிடிக்கும், எந்த ஓட்டலுக்கு அடிக்கடி செல்வார், எந்த நண்பருடன் நெருக்கமாக இருப்பார், இடதுசாரியா, வலதுசாரியா உள்ளிட்ட அனைத்துத் தரவுகளும் தற்போது பண்டமாக்கப்பட்டு விட்டன.

தரவுப் பகுப்பாய்வு (data analytics) தற்போது தனித்துறையாகவே பரிணமித்திருக்கிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்றவை தரவு ஏகாதிபத்தியங்கள் (Data Imperialism) எனும் அளவிற்கு தனிநபர் தரவுகளைத் தங்கள் வசம் வைத்துள்ளன.

இந்த ஏகாதிபத்தியங்கள், பலவீனமான நாடுகளில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக அந்நாடுகளின் தரவுகளைப் பயன்படுத்தி சைபர் தாக்குதல்களை நடத்துகின்றன.

கட்சிகள், நபர்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும் இத்தகைய தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனின் தனிப்பட்ட தரவுகள் தேர்தல் நெருங்கும் தருவாயில் வெளியிடப்பட்டதானது, அவரது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தரவுகளின் மூலம், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்பின் பிரச்சாரத்திற்கு உதவியது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், சொந்த நாட்டு மக்களைக் கண்காணிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களே சொந்த நாட்டு மக்களைக் கண்காணிக்கவும், அரசியல் எதிரிகள், ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதற்காகவும் பல வகைகளிலான உளவுச் செயலிகளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பெகாசஸ் உள்ளிட்டு பல உளவுச் செயலிகளால், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் கண்காணிக்கப்பட்டும் உளவு பார்க்கப்பட்டும் வருகின்றனர்.

குறிப்பாக, பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு இலக்கானவர்களைக் கண்டறிந்து, சந்தைப்படுத்துவதை எளிதாக்குவதற்கும் புதிய தேவைகளை உருவாக்குவதற்கும் இத்தகைய தனிநபர் தரவுகளைப் பயன்படுத்துகின்றன.

மேற்கூறிய வகையில் தனிநபர் தரவுகளைப் பயன்படுத்துவது ‘சட்டவிரோதம்’ அல்ல. இதற்கு வெளியே, சில தனிநபர்கள், தனிப்பட்ட மாபியா கும்பல்கள் இந்தத் தரவுகளை எடுத்து குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதுதான் இன்று ‘இணைய மோசடியாக’ பரவலாகப் பேசப்படுகிறது.

இவ்வளவு தரவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன? தரவுகளைச் சேகரிப்பதற்கான வாய்ப்புகளை இந்த ஏகாதிபத்தியங்களும் இந்திய அரசாங்கமும் திட்டமிட்டே குவித்து வைத்துள்ளன. தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்துச் செயலிகளும் மிகப்பெரும் அளவில் தனிநபர் தரவுகளைச் சேகரிப்பதற்கான மையங்களாக விளங்குகின்றன. நமது ஒவ்வொரு அசைவையும் தரவுகளாக்குவதும், செயற்கை நுண்ணறிவு – மீத்திறன் கணினிகள் துணையுடன் மிக விரைவாகப் பகுப்பாய்வு செய்து கொள்வதும் தற்போது சாத்தியமாகியுள்ளன. இத்தகவல்களைத் தமது நிறுவனத்தின் தேவைகளுக்கு மட்டுமல்லாது, பணத்திற்காக விற்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழல்தான், இணையக் குற்றக்கும்பல்கள் மட்டுமல்லாது தனிநபர்கள் கூட, எந்தவொரு தனிநபரின் செல்போனிற்குள்ளும் ஊடுருவி ஒட்டுமொத்தத் தரவுகளையும் சேகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்-2023 என்பது, தனிநபரின் தரவுகள் எந்த நாடுகளுக்கு விற்கப்படலாம், எந்த நாடுகளுக்கு விற்கப்படக் கூடாது என்பதை முறைப்படுத்துவதே தவிர, இதனைத் தடுப்பதல்ல. அதாவது இந்தியர்களின் தரவுகள் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்படாத நாடுகளுக்குப் பகிரப்படுவதை இந்தச் சட்டம் தடை செய்வதில்லை.

எதுவாயினும், தனிநபர் தரவுகள் சேகரிக்கப்படுவதே அடிப்படையில் மனித உரிமைகளுக்கு எதிரானதும் கிரிமினல் குற்றமும் ஆகும். அந்தத் தரவுகள் சேகரிக்கப்படுவதன் நோக்கமே சுரண்டலும், மேலாதிக்கவெறியும்தான். இதனைத் தடுத்து நிறுத்தாமல், இது போன்ற குற்றங்கள் நடப்பதை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றதாகும்.

இருப்பினும், இந்தியாவில் மோடி அரசாங்கமானது தனது பாசிச அடக்குமுறைகளுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும் இத்தகைய தனிநபர் தரவுகளைப் பயன்படுத்துவதும் அல்லது பயன்படுத்துவதைத் தடுப்பதையும் செய்துக் கொண்டுதான் இருக்கிறது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டபோது, சீனாவைச் சேர்ந்த 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அப்போது, சீனா இந்தியர்களைக் கண்காணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது மோடி அரசாங்கம்.

இந்தியாவில், பீமா கொரேகான் போன்ற பொய்யாக புனையப்பட்ட வழக்குகளில், சமூகச் செயற்பாட்டாளர்களின் கணினிகளை காவல்துறையே ஹேக் செய்து, சட்டவிரோதத் தரவுகளை உள்நுழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை நாம் கண்முன்னே கண்டோம்.

கள்ள நோட்டுப் புழக்கமோ கள்ளச் சாராயம் – போதைப் பொருட்கள் விற்பனையோ அரசாங்கத்தின் அனுமதி இன்றியோ, அரசு அதிகாரிகளின் துணையின்றியோ நடந்து விடுவதில்லை. அதுபோலத்தான், இப்படிப்பட்ட இணையக் குற்றங்களும் அரசின் கண்காணிப்பை மீறி ஒருபோதும் நடந்து விடுவதில்லை. மேலும், இதுபோன்ற குற்றங்களில் சாதாரண படிப்பறிவற்ற மக்கள் பிரிவினர் ஈடுபடுவதில்லை. படித்த, தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நபர்களே இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். படித்த பிரிவினருக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இன்மையும், செல்வ ஏற்றத்தாழ்வு நிலையும் இதற்குக் காரணமாக இருக்கின்றன. மறுபக்கத்தில், பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதும், கல்வி – மருத்துவம் போன்றவற்றுக்கான திடீர்ச் செலவுகளும், எளிதில் அணுக முடியாத வங்கிக் கடன்களும் இத்தகைய மோசடி கடன் வலைகளில் அவர்களை வீழ்த்துகின்றன.

ஆனால் அரசோ, இந்த பிரச்சினைகளுக்கான மூலகாரணங்களைக் களையவோ குறைக்கவோ எதையும் செய்வதில்லை. குறைந்தபட்சம், சமூக வலைதளங்களிலோ வெகுஜன ஊடகங்களிலோ விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கூட மேற்கொள்வதில்லை. இணையக் குற்றங்களை மிகுந்த அலட்சியத்துடன் அரசு அணுகுவதுதான் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணமாகும்.

அதே சமயத்தில், தனிநபர்கள் விழிப்படைவதால் மட்டுமே இத்தகைய குற்றங்களை முற்றாக ஒழித்துவிட முடியாது. சில வழிமுறைகள் அம்பலமாகிவிட்டால், பல்வேறு புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து மக்களை ஏமாற்றுவதை இணையக் குற்றக்கும்பல் தொடரவே செய்யும். இவற்றுக்குப் பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதே அடிப்படைத் தேவை. மக்கள் நலன்சார் அரசும், பொருளாதாரக் கட்டமைப்புமே இதற்கான முன்நிபந்தனைகள். இணையக் குற்றங்களுக்கு எதிராகப் பேசும் ஒவ்வொருவரும் இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் தீர்வுகளை நோக்கி நகர முடியாது.


பாரி

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



இளைஞர்களை கொத்தடிமைகளாக்கும் “பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டம்”

டந்த அக்டோபர் மாதம் ஒன்றிய பாசிச மோடி அரசானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்கிற பெயரில், இளைஞர்களின் உழைப்பை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒட்டச் சுரண்டுவதற்கான “பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டம்” (PM Internship scheme) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி இளைஞர்களுக்கு 500 கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 21 முதல் 24 வரை என நியமித்துள்ளது.

மேலும், பி.எம்.இண்டர்ன்ஷிப் திட்டத்தில் பயிற்சி பெற தேர்ச்சியாகும் இளைஞர்களுக்கு ஓர் ஆண்டிற்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படும் என்றும் இந்த பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை என்ற பெயரில் மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பயிற்சியின் அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.

முக்கியமாக இங்கு கவனிக்கவேண்டியது இளைஞர்களுக்கு வழங்கப்படும் ரூ.5,000 தொகையில் ரூ.500 மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களால் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.4,500 மக்களின் வரிப்பணத்திலிருந்து மோடி அரசே வழங்கும். அதாவது பயிற்சி என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக இளைஞர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டிக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு,  இளைஞர்களுக்கு வழங்கப்படும் அடிமாட்டு கூலியைக் கூட  மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊதியமற்ற வேலையாட்களை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

மேலும், பயிற்சி முடிந்த பின்பு நிரந்தர வேலை வழங்கப்படும் என்று சொல்லுவதெல்லாம் அதிகப்படியான இளைஞர்களை கார்ப்பரேட் நிறுவனங்களை நோக்கி ஈர்ப்பதற்காகவே அன்றி வேறல்ல. ஏனென்றால்,பயிற்சி முடிந்த பின்பு கார்ப்பரேட் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்போவது கிடையாது. தன்னுடைய லாபத்திற்காக பயிற்சியை முடித்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சுழற்சி முறையில் அடுத்தடுத்து புதிய இளைஞர்களை இந்நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளும்.

இன்று நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை உள்பட அனைத்து துறைகளிலும் நிரந்தரப் பணி படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். ஒப்பந்த வேலைமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத மோடி அரசானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒப்பந்த முறையை விட மோசமான கொத்தடிமை முறையை தொழில்துறையில் நடைமுறைப்படுத்துகிறது. மோடி அரசின் புள்ளிவிவரப்படியே, நாட்டின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.2 சதவிகிதமாக அதிகரித்துள்ள, நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்கிறோம் என்ற பெயரில் மோடி அரசானது வேலையின்மையை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர். முருகானந்தம்

40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்
தோழர். முருகானந்தம்
மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி.

சந்தா பற்றிய விவரங்களுக்கு:
40-ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ஒரே நாடு! ஒரே தேர்தல்! பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!

12.12.2024

ஒரே நாடு! ஒரே தேர்தல்!
பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!

பத்திரிக்கை செய்தி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு பாசிச மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல்கள் மாறி மாறி நடந்து வருவதால் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை என்றப் பொய்யானக் காரணத்தை கூறி ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்கிறது பாசிச மோடி கும்பல். மக்கள் நலனை ஒழித்துக்கட்டி அம்பானி-அதானி பாசிச கும்பலுக்காக நாட்டையே கூறு போட்டு பிளவுப்படுத்தும் பிஜேபி – ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல் சொல்வதை மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை.

தற்பொழுது நடந்துவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மோசடி செய்த குற்றத்திற்காக அமெரிக்காவில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள அதானியைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பி நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு வரும் பாசிச பா.ஜ.க. அமைச்சர்களுக்கு இந்திய தேசியக் கொடியையும் ரோசாப்பூவையும் வழங்கி வித்தியாசமான முறையில் ‘போராடி’ வருகிறார்கள் .

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே முடியாது; அதற்கு சாத்தியமே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை கூறி வருகிறார்கள். பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இத்திட்டத்திற்கு எதிராக பேசி வருகின்ற இச்சூழலில்தான் இந்த பாசிசத் திட்டத்திற்கு மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றங்கள் மீது பாசிச மோடி கும்பல் வைக்காத நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே மின்னணு தேர்தல் இயந்திரங்களில் மோசடி நடக்கிறது என்று புலம்பிக் கொண்டிருப்பதை தவிர எதிர்க்கட்சிகளால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. மின்னணு தேர்தல் இயந்திரங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனதுதான் மிச்சம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை ஒழித்துக்கட்டி தேசிய இன உரிமைகளை புதைகுழியில் போடும் இந்துராஷ்டித்திற்கான தேர்தல் ஆகும்.

வழக்கம் போன்றதொரு சடங்குத்தனமான எதிர்ப்புகள் மூலமாக ஒருபோதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. மாறாக மாபெரும் மக்கள் போராட்டத்தை கட்டியமைத்து ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிராக மக்களை இயக்கமாக்கி ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி -அதானி பாசிச கும்பலை வீழ்த்தும் வழியில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் தடுத்து நிறுத்த முடியும்.

அந்த மாபெரும் பணியை ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரிகளும் மக்களிடம் கொண்டு சென்று அதனை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை என்று புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மனித உரிமை நாள் தேவையா? கேள்வியெழுப்பும் காசாவின் கொடூரங்கள் | தோழர் மாறன்

மனித உரிமை நாள் தேவையா? கேள்வியெழுப்பும் காசாவின் கொடூரங்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மதுரை அரிட்டாபட்டி : மோடி – அகர்வால் கும்பலுக்கெதிராக மக்கள் போராட்டம்

ச்சைப் பசேல் என காட்சியளிக்கும் வயல்வெளிகள், வானுயர வளர்ந்து நிற்கும் மலைக்குன்றுகள், அரியவகை பறவைகள், பூச்சியினங்கள் மற்றும் விலங்குகள் என இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமமான அரிட்டாபட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தை முற்றிலுமாக அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை பாசிச மோடி அரசு நடத்தி முடித்திருப்பது அக்கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அக்கிராம மக்களோடு இணைந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் அரிட்டாபட்டியை அழிக்கக்கூடாது என குரல் கொடுத்து வருகிறது.

மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள நாயக்கர்பட்டி பிளாக் எனும் 5,000 ஏக்கர் பரப்பளவிலான டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் சுரங்கம் அமைக்க, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-கீழ் ஒன்றிய மோடி அரசு ஏலம் நடத்தியது. அதில் கொலைகார வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் நவம்பர் 7-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளபடி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அரிட்டாபட்டி மட்டுமின்றி, முத்துவேல்பட்டி, கிடாரிப்படி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்படும். இக்கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலம், நீர் மற்றும் காற்று கடுமையாக மாசுபட்டு இப்பகுதிகளில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகும்.

அரிட்டாபட்டியில் உள்ள மலைகளில் 280 வகையான பறவை இனங்கள், 700 வகையான பூச்சியினங்கள், அரியவகை தேவாங்குகள், எறும்புத் தின்னி, மலைப்பாம்பு மற்றும் இந்தியாவிலேயே இங்கு மட்டுமே காணப்படும் லகுடு எனும் அரியவகை வல்லூறு போன்றவை வாழ்ந்து வருகின்றன; 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாகவும் இம்மலைகள் விளங்குகின்றன; மேலும், சுரங்கம் அமைக்க உள்ள பகுதியில் முல்லை பெரியாறு அணையின் நீர்பாசனத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இவையனைத்தும் அழிந்து நாசமாகும்.


படிக்க: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்!


இத்தகைய பேரபாயமிக்க சுரங்கத் திட்டத்தை, தூத்துக்குடியின் நீரையும் நிலத்தையும் காற்றையும் நாசமாக்கிய, தமிழ்நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட, ஸ்டெர்லைட் முதலாளி அணில் அகர்வாலுக்கு தூக்கிக் கொடுத்திருப்பது மோடி அரசின் தமிழ்நாட்டு மக்கள் மீதான வெறுப்பையும் அகர்வாலுடன் உள்ள உறவையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்தி தூத்துக்குடி மக்களை கொன்றொழித்ததைப் போல, டங்ஸ்டன் சுரங்கத்தின் மூலம் மதுரை மாவட்ட மக்களையும் கொன்றொழிக்க மோடி அரசு துடிக்கிறது.

ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொலைகார அகர்வாலின் கோரமுகத்தை உணர்ந்துகொண்டுள்ள தமிழ்நாடு மக்கள் மீண்டுமொரு ஸ்டெர்லைட்டை அனுமதிக்கத் தயாராயில்லை. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியான உடனே அரிட்டாபட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்; டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 25 ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர்; கடையடைப்பு, கருப்பு கொடி ஏற்றம், ஊர்க்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

“கடவுளாக எங்களைக் காத்துவரும் மலைகளை எல்லாம், ஏற்கெனவே கிரானைட் கொள்ளையர்கள் வெட்டி கூறுபோட்டு விற்றுவிட்டார்கள். இப்போது டங்ஸ்டன் சுரங்கம் என்ற பெயரில் இந்த விவசாய பூமியையும் அழிக்கத் துடிப்பவர்களுக்கு எதிராக உயிர் இருக்கும் வரை போராடுவோம்” என்று உறுதியுடன் கூறுகிறார்கள் போராட்டக் களத்தில் உள்ள மக்கள். ஆம், பி.ஆர்.பழனிச்சாமி போன்ற கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிராக போராடி கிரானைட் கொள்ளையை தடுத்து நிறுத்திய மேலூர் பகுதி மக்களின் போராட்டம் இன்று மோடி அரசுடன் நெருங்கிய உறவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளியான அணில் அகர்வாலுக்கு எதிராக தொடங்கியிருக்கிறது. கார்ப்பரேட் எதிர்ப்புணர்வு ஊறிப்போன தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான இப்போராட்டத்திலும் நிச்சயம் வெல்லப்போவது மக்களே ஆவர்.

மறுபுறம், அரிட்டாபட்டியின் வரலாற்று முக்கியத்துவம் கருதி, அதனை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக (Biodiversity Heritage Site) தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறை அறிவித்துள்ளது. அப்படியிருந்தும் மோடி அரசானது ஏலத்தை நடத்துவதற்கு முன்னால் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் கூறாமல் திமிர்த்தனமாகவே செயல்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்கள் உள்ள நிலங்களுக்கான உரிமைகள் மாநில அரசிடம் இருப்பதால், ஒன்றிய அரசு மாநில அரசிடம் முறையான ஒப்புதலைப் பெற வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். ஆனால், தமிழ்நாடு அரசின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளது, மோடி அரசு.

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு தி.மு.க. அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரிட்டாபட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, “சுரங்கம் அமைக்க அரசு அனுமதிக்காது” என்று வாக்குறுதியளித்தார். மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு “டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அனைத்துக் கட்சிகளுடனும் பேசி இதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்வோம்” என்றார்.

ஆனால், மோடி அரசானது டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடே எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும் அத்திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. கடந்த நவம்பர் 29-ஆம் தேதி, ஒன்றிய சுரங்க அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பகுதியில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டங்ஸ்டன் சுரங்கத் திட்டம்  அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு  மக்கள் போராட்டத்திற்கு சவால் விடுகிறது மோடி அரசு.


படிக்க: அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்


ஏனென்றால், இந்தியா முழுவதும் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காக நாட்டை திறந்துவிட்டுள்ளது, மோடி கும்பல். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு சட்டத்தை அடாவடித்தனமாக ரத்து செய்தது, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளையும் அப்பாவி பழங்குடி மக்களையும் வேட்டையாடுவது, மணிப்பூர் கலவரத்தை முன்னின்று நடத்தி வருவது போன்றவை கார்ப்பரேட் கும்பலின் கனிமவளக் கொள்ளைக்கான நடவடிக்கைகளே.

இக்கொள்ளைக்காக வனப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டு பல்வேறு சட்டங்களை திருத்தி வருகிறது. கடந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான குத்தகை மற்றும் உரிமம் வழங்குவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் மோடி அரசு திருத்தங்களை மேற்கொண்டது. அதனடிப்படையிலேயே தற்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை அணில் அகர்வாலுக்கு வழங்கியிருக்கிறது.

எனவே, அரிட்டாபட்டியை அழித்து டங்ஸ்டனை சூறையாடுவதற்கான நடவடிக்கைகளை மோடி-அகர்வால் கும்பல் எளிதாக கைவிடப் போவதில்லை. மக்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை தற்காலிகமாக தள்ளிப்போடலாம்.

ஆகவே, தி.மு.க. அரசானது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மக்களின் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டின் மக்களும் ஜனநாயக சக்திகளும் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் மேலூர் மக்களுடன் களத்தில் தோளோடு தோள் நின்று டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான மோடி-அகர்வால் கும்பலின் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்க வேண்டும்.


கதிர்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



நெல்லை : அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்தும் திமுக கார்ப்பரேட் மாடல் அரசு!

12.12.2024

நெல்லை : பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்தும் திமுக கார்ப்பரேட் மாடல் அரசு!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

தென் தமிழகத்தில் முக்கியமான மருத்துவமனையாக கருதப்படும் இம்மருத்துவமனையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி கட்டண உள்நோயாளிகள் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார்.

ஏற்கெனவே கலைஞர் காப்பீட்டு திட்டம், அம்மா காப்பீட்டு திட்டம் போன்ற காப்பீட்டு திட்டங்களின் கீழ் மக்கள் பணம் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் “இன்னுயிர் காப்போம் – நம்மை காப்போம் 48” திட்டம் மக்கள் பணத்தை நேரடியாகவே தனியார் மருத்துவமனைகளுக்கு தாரை வார்க்கிறது. உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்ற அனைத்து பணிகளும் திமுக, அதிமுக என கட்சி பேதமின்றி இரண்டு ஆட்சி காலத்திலும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் போதாது என்று திமுக அரசு தற்போது அரசு மருத்துவமனைகளில் கட்டண உள்நோயாளிகள் பிரிவை அனுமதித்து அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்துகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள் கையூட்டு பெற்றால் குற்றம். அதையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்கள் பணத்தை கட்டணம் என்ற பெயரில் பறித்தால் சேவை.

இந்த அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சுமார் 1.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டண உள்நோயாளிகள் பிரிவில் 18 முதல் 23 தனி அறைகள் உள்ளது. இதில் சோபா, தொலைக்காட்சி, கட்டில், ஏசி, கழிப்பறைகள் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு நாளைக்கு ஒரு நபர் தங்கி இருந்தால் ரூ.1000, இரண்டு பேருக்கு ரூ.1500, நான்கு பேருக்கு ரூ.2000 என்று கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம். தனியார் மருத்துவமனைகளைப் போலவே பணம் படைத்தவர்களாக இருந்தால் தரமான சிகிச்சை மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று ஒரு அரசே கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, மதுரை, தேனி, சேலம் ஆகிய மருத்துவமனைகளில் கடந்த சில வருடங்களாகவே இந்த கட்டண உள் நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.

சுருக்கமாக சொன்னால் இந்த கட்டணப் பிரிவு என்பது அரசு மருத்துவமனைகளில் வெளிப்படையாக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதே நிதர்சனம்.

குறைவான கட்டணத்தில் தரமான சிகிச்சை என்று விளம்பரப்படுத்தி உள்நோயாளிகள் கட்டண பிரிவை திறக்கும் அரசு, வரும்காலத்தில் கட்டணத்தை உயர்த்துவதுடன் இதை விரிவுபடுத்தி, இன்னும் சிறப்பான சிகிச்சை எனும் பெயரில் தனியார்மயதத்தின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கும்.

மத்தியில் பாசிச மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் திமுக அரசு தனியார்மயத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது

இந்தியாவில் 1990களில் தனியார்மய- தாராளமய- உலகமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவை துறைகள் மனித விழுமியங்கள் அற்ற வெறுமனே கொள்ளை அடிக்கும் துறைகளாக மாற்றப்பட்டு வருகிறது. அதேவேளையில் பாசிசத்தை எதிர்ப்பதாக கூறி வரும் திமுகவும் கார்ப்பரேட் நலனில் இருந்து பின் வாங்காமல் தனது வர்க்க பாசத்தை வெளிப்படுத்தி மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் இத்தகைய நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.


தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram