Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 93

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்

82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து – 35 இலட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை அதிமுக – பாஜக அரசுகள் அனுமதிக்கக்கூடாது.” 2021ல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி இது. ஆனால், இன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் ஜனவரி 30, 2013-இல் செயல்பாட்டைத் துவக்கியது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியது. M/s MARINE INFRASTRUCTURE DEVELOPER PRIVATE LIMITED எனும் பெயரில் இத்துறைமுகத்தை அதானியின் Adani Ports and Special Economic Zone Limited நிறுவனம் நடத்தி வருகிறது.

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி அதானி குழுமம் 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்கள் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலம் . இவற்றை கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்திற்காக, நில மீட்பு (Sea Reclamation) என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, காளாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து  மாற்றுவது என்பது திரும்ப சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும்.

அதானி குழுமன் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு(Environmental Impact Assesment) மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்(Environemntal Management Plan) தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை(Terms of Reference) 15.10.2019 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வழங்கியது. இந்த ஆய்வு எல்லையின் கால அவகாசம் 4 ஆண்டுகளாகும்.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்போதைய அ.தி.மு.க. அரசால் 22.01.2021 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல சுற்றுச்சூழல், மீனவர் அமைப்புகள் இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

இந்த எதிர்ப்பின் தீவிரத்தை உணர்ந்த அ.தி.மு.க. அரசு 22.01.2021 அன்று நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒத்திவைத்தது. அதானி குழுமம் தற்போது15.10.2023ஆம் தேதிக்குள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தேதிக்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை ஒன்றிய அரசிடன் அதானி நிறுவனம் சமர்ப்பிக்காவிட்டால் மீண்டும் தொடக்கத்திலிருந்து அடிப்படை ஆய்வுகளைச் செய்து சுற்றுச்சூழல் அனுமதிகோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். இதனைத் தவிர்ப்பதற்குதான் செப்டம்பர் 5ஆம் தேதியன்று பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை 15.10.2023க்குள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

13.01.2021 அன்று இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர், இப்போதைய தமிழ் நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அதானியின் துறைமுக விரிவாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார்.  “ 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து – 35 இலட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை அதிமுக – பாஜக அரசுகள் அனுமதிக்கக்கூடாது. அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனையும் – சுற்றுப்புறச் சூழலியல் பாதுகாப்பையும் அ.தி.மு.க. அரசும் – மத்திய பா.ஜ.க. அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரைவார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் எவ்விதத்திலும் மக்களுக்கோ – சுற்றுப்புற சூழலியலுக்கோ நண்பன் இல்லை; மாறாகப் பரம விரோதியாகவே இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் அமைந்திருக்கிறது என்பதை அ.தி.மு.க. அரசோ – அதானிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தமிழக மற்றும் ஆந்திர மீனவர்களை வஞ்சிக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசோ யோசித்துக் கூடப் பார்க்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது”  என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதே ஆண்டு தேர்தலைச் சந்தித்த தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் “ தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது” எனக் கூறியது. இந்த நிலையில் அதானி நிறுவனம் விரைவாக இத்திட்டத்தை துவக்குவதற்கு ஏற்ற வகையில் செப்டம்பர் 5ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ் நாடு அரசு எல்லா திட்டங்களையும் காலநிலை மாற்றம் எனும் கண்ணாடியைக் கொண்டே அணுகும் என்று அறிவித்த முதலமைச்சர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கக் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியாமாகி விடும்.

அப்படி நிகழ்ந்தால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரி அழிந்துபோகும். அந்த ஏரியையும் திட்டம் அமையவுள்ள கடற்பகுதியையும் நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களை வெள்ள அபாயம் சூழும்.

இதுமட்டுமின்றி அண்மையில் பிரதமர் மோடி அமெரிக்க சென்று திரும்பியவுடன் வெள்ளை மாளிகை வெளியிட்ட ஆவணத்தில் “அமெரிக்க ராணுவம் காட்டுப்பள்ளியில் உள்ள L&T துறைமுகத்துடன் மேற்கொண்டுள்ள MSRA ஒப்பந்தம் பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது” எனக் கூறியிருந்தது. ஏற்கெனவே காட்டுப்பள்ளிக்கு இதுவரை மூன்று அமெரிக்க ராணுவ கப்பல்கள் வந்து சென்றுள்ளன. இந்த நிலையில் அதானியின் துறைமுக விரிவாக்கம் தமிழ் நாட்டிற்கு பன்னாட்டு அளவில் ஆபத்தையே விளைவிக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவிப்பைத் திரும்பப்பெற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம். இதே கோரிக்கையை தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் முன்வைக்க வேண்டும் எனவும் கோருகிறோம்.

– பூவுலகின் நண்பர்கள்

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

disclaimer

மக்களின் முழக்கமாகிய “BAN BJP – BAN RSS” சிவப்பு அலை பாடல்..

டந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பூர் கலவரத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு சார்பாக BAN BJP – BAN RSS என்ற பாடலை வெளியிட்டோம். இப்பாடல் மாணவர்கள், இளைஞர்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் என்று பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வெளியிட்ட 6 நாட்களில் பத்தாயிரம் பார்வைகளை கடந்துள்ளது.

யூடியூப் சேனலில் பார்த்தவர்கள் மட்டுமின்றி பலரும் “BAN BJP – BAN RSS” பாடலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பதிவுகள் ஆயிரக்கணக்கான பார்வைகளை எட்டியுள்ளது. இதனடிப்படையில், யூடியூப் சேனலில் பார்த்த பத்தாயிரம் பேர் மட்டுமின்றி லட்சகணக்கானோரை இப்பாடல் சென்று சேர்ந்துள்ளது

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மதவெறியை மூர்க்கமான ஆயுதமாக கையாண்டு வரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு சம்மட்டி அடியாக BAN BJP – BAN RSS (பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்-வை தடை செய்) என்று முழங்கிய இப்பாடலானது பாசிச எதிர்ப்பு கொண்ட அனைவரையும் கவர்ந்துள்ளது.

வினவு யூடியூப் சேனலில் இந்த காணொளியை வெளியிட்டதிலிருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் வெளியானதையொட்டி இரண்டு இஸ்லாமியார்கள் (நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களே கூறினர்) தனித்தனியாக நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டனர். அதில் ஒருவர் இன்றைய சூழலுக்கு இப்பாடல் மிகவும் பொருத்தமானது என்றும் மீண்டும் ஒருமுறை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் நாட்டையே ஒழித்துக் கட்டி விடுவார்கள் என்றும் கூறினார். இன்னொருவர், “இது தான் சரியான அரசியல். இதை நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று ஒரு போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்” என்றார்.

மேலும், “தேசபக்தி உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடல்” என்று நமது பாடலை வாட்ஸ் அப் மூலம் அதிகம் பேர் பகிர்ந்துள்ளனர். அதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனுசியா என்பவர் நம்மை அழைத்து மணிப்பூர் கலவரம் தொடர்பான தனது ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார்.

இந்த பாசிச காலகட்டத்தில், குறுகிய காலத்தில் இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பு என்பது புரட்சிகர பாடலுக்கும் மக்களின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்ததற்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். தேர்தலில் பா.ஜ.க வேண்டாம் என்பதே ஜனநாயகம் என்று பலரும் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதே ஜனநாயகம் என்று நாம் முழங்கியுள்ளதை மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கீகரித்துள்ளனர். இனியும் தொடர்ச்சியாக நாம் நடப்பு அரசியல் மீது பாடல்கள் மூலம் வினையாற்றுவோம். அதற்கும் தாங்கள் இதேபோன்று தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஈரோடு புத்தகக்கண்காட்சி – ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் தமிழ்நாடு போலீசு

மே17 இயக்க தோழர்கள்  வெளியிட்ட  ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு) எனும் புத்தகம், மதிமுகவின் பொருளாளர் தோழர்.செந்திலதிபன் அவர்கள் எழுதிய ‘இந்துத்துவ பாசிசம் வேர்களும், விழுதுகளும்’ எனும் நூலும், திராவிடர் கழகத்தின் தோழர்.மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ ஆகிய நூல்களை ஈரோடு புத்தகக்கண்காட்சியின் அரங்கிலிருந்து அகற்றச் சொல்லி காவல்துறை மிரட்டியுள்ளார்கள்.

இப்புத்தகங்களை நீக்க மறுத்த நிமிர் அரங்கின் தோழரை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி காவல்துறை வண்டியில் ஏறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். பின் அவரது கையை பிடித்து காவல்துறை இழுத்துள்ளது. இவற்றிற்கான அடிப்படை காரணம், சமூகவிரோத சங்கிகள் சிலர் இப்புத்தகங்கள் பற்றி காவல்துறையில் புகார் தெரிவித்ததாக காவல்துறை சொல்லுகிறது. சமூகவிரோதிகளுக்கு கட்டுப்பட்டு ஈரோடு காவல்துறை வேலைசெய்கிறதா எனும் கேள்வியை இது எழுப்புகிறது. இந்த நடவடிக்கை எவ்வகையில் சட்டபூர்வமானது என காவல்துறை தெரிவிக்க வேண்டும்.

மேலும், வணிக தளத்திற்குள் நுழைந்து வணிகத்தை தடுக்கும் அதிகாரத்தை எங்கே இருந்து பெறுகிறார்கள். கருத்துரிமை தளத்திலும், பதிப்பக உரிமையிலும் காவல்துறை சங்கிகளின் விருப்பத்திற்காக தலையிடுவது கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபற்றி திமுக அரசு உடனடியாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக நந்தினி ஆனந்தன் சகோதரிகள் கிட்டதட்ட 1 மாதமாக சிறையில் உள்ளார்கள். தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா எனும் கேள்வியை இந்த நடவடிக்கைகள் எழுப்புகின்றன.

திருமுருகன் காந்தி முகநூல் பக்கத்திலிருந்து

disclaimer

இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு!

த்திய கிழக்காசிய நாடான இஸ்ரேல் சமீப மாதங்களாக மக்கள் போராட்டங்களால் குலுங்கி வருகிறது. நீதித்துறை அதிகாரத்தை இல்லாமல் செய்து எதேச்சதிகார அரசை நிறுவும் நோக்கில் பிரதமர் நெதன்யாகு அறிமுகம் செய்த நீதித்துறை மறுசீரமைப்பு தொகுப்பு மசோதாவிற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய போராட்டம் 30 வாரங்களையும் கடந்து இன்னும் ஓயவில்லை. பல லட்ச கணக்கான இஸ்ரேலிய மக்கள் இப்போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இஸ்ரேல் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டமே நடந்ததில்லை என்று இப்போராட்டம் வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இஸ்ரேல் அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

நீதித்துறை அதிகாரத்தை  ஒழித்துக்கட்டும் பாசிஸ்டுகள்:

இஸ்ரேல் நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மதவாத சியோனிச கட்சி, ஷா கட்சி உள்ளிட்ட யூத இனவெறி பாசிச கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தார் நெதன்யாகு. ஆட்சி பொறுப்பெடுத்து கொண்ட கையோடு இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-இல் நீதித்துறையின் விதியான “நியாயமான கோட்பாடு” என்ற அதிகாரத்தை பறிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார், நெதன்யாகு.

இஸ்ரேல் அரசியல் அமைப்பு சட்டத்தில் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள “நியாயமான கோட்பாடு” அதிகாரமானது யூத சட்டமான “ஹலகா”வில் இருந்தே பின்பற்றபடுகிறது. இந்த ஹலகா சட்டத்தில் சட்ட முடிவு எடுப்பதில் நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எழுதப்படாத அரசியலமைப்பு சட்டத்தை (Unwritten Constituition) கொண்ட இஸ்ரேல் நாட்டில் “நியாயமான கோட்பாடு” விதியை பயன்படுத்தி அரசாங்கத்தின் முடிவுகள் நியாயமாக உள்ளதா என்று கண்காணித்து அதை திருத்துவதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது.

இஸ்ரேல் அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லிகொள்ளும் அளவிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாத இஸ்ரேலிய நீதித்துறைக்கு நாடாளுமன்றத்தை சோதிக்க (Check) இருக்கும் ஒரே வழி இந்த “நியாயமான கோட்பாடு” மட்டுமே. இவ்விதியின் மூலம் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தகுதி வாய்ந்தவர்கள் தானா என்று சோதித்து இஸ்ரேல் நீதிமன்றத்தால் அவர்களை நீக்க முடியும். மேலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்களும் அமல்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் “நியாயமான கோட்பாடு” விதிக்கு உட்பட்டுள்ளதா என்று சோதித்து அவற்றையும் நீக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளது. தங்களுக்கு தொந்தரவாக இருக்கும் நீதித்துறையின் இந்த அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்பது பாசிஸ்டுகளின் நெடுநாள் திட்டமாகும்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


எனவே இந்த மசோதா மூலம் நீதித்துறையில் மூன்று முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது நெதன்யாகு அரசு. முதலில் நீதித்துறையின் “நியாயமான கோட்பாடு” என்பது தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளுக்கு “நியாமற்ற” அதிகாரங்களை வழங்குகிறது என்று வாதாடும் பாசிஸ்டுகள் இம்மசோதாவின் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தை பறித்துள்ளனர். இரண்டாவதாக,  “ஓவர்ரைடு ஷரத்”-ஐ அறிமுகம் செய்துள்ளதன் மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவும் நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையை (Simple Majority) நிரூபித்து அம்முடிவுகளை முறியடிக்கவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, நீதிபதிகளை நியமிக்கும் 9 பேர் கொண்ட நீதித்துறை தேர்வு குழுவில் அரசின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிபதிகளை நியமிப்பதில் அரசின் கை ஓங்குகிறது. இஸ்ரேலிய நீதிமன்றத்தில் ஏற்கனவே திட்டமிட்டு வலதுசாரி பாசிச சித்தாந்தம் கொண்டவர்கள் நிரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த சட்ட மசோதாவின் மூலம் பாசிச அடிவருடி நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் சட்டபூர்வமாகவே பாசிஸ்டுகளின் கரங்களில் குவிக்கப்படுகிறது.

இதற்கிடையே பிரதமரை “பதவிக்கு தகுதியற்றவர்’ என்று அறிவிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை நீக்கும் சட்டமும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஒரு நாட்டின் பெயரளவிலான அதிகாரப்பகிர்வு கூட ஒழித்துகட்டப்பட்டு, பாசிஸ்டுகளுக்கு ஏதுவாக ஏற்கனவே அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்த அதிகாரங்களும் குவிக்கப்படுகின்றன.

எனவே, இச்சட்டத்திருத்தத்தின் மூலம் இஸ்ரேலிய பாசிஸ்ட்டுகளின் நெடுநாள் கனவான இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் உள்ளடக்கிய “கிரேட்டர் இஸ்ரேல்” (இந்திய காவி பாசிஸ்டுகளின் “அகண்ட பாரதத்தை” போல) கனவை நனவாக்கிகொள்ள முடியும். அதாவது, பல தாசப்தங்களாக இஸ்ரேலிய வலதுசாரிகள் திட்டமிட்டு ஆக்கிரமித்து வரும் பாலஸ்தீனத்தை முழுமையாக விழுங்கி பாலஸ்தீன மக்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அந்த கொடுங்கனவு. இந்த நோக்கத்தில் பல ஆண்டுகளாகவே நெதன்யாகு ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இஸ்ரேலின் மேற்கு கரையை  வைதீக தீவிர யூதர்கள் (Orthodox Ultra Jews – நம் நாட்டின் உயர்சாதி பார்ப்பனர்களை போல) திட்டமிட்டு ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் நீதிமன்றம் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், தற்போது பாசிஸ்டுகளுக்கு இத்தடை விலகியுள்ளது.

இவையன்றி, இந்த சட்டத்திருத்தத்தின் மூலமாக ஊழல், மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் லஞ்சம் வாங்கிய புகார்களில் சிக்கியுள்ள நெதன்யாகுவும், பிற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது கூட்டாளிகளும் தப்பிக்க முடியும் என்பது இன்னொரு  அம்சம். ஏனெனில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நெதன்யாகுவின் கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவரான ஷா கட்சியின் தலைவர் ஆர்யே டெரியை உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிப்பதற்கு எதிராக “நியாயமான கோட்பாட்டை” பயன்படுத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவரை நீக்க வேண்டிய நிலைக்கு நெதன்யாகு தள்ளப்பட்டார். எனவே, தற்போது  எந்த கவலையுமின்றி பாசிஸ்டுகளால் ஊழல் செய்யமுடியும்.

மேலும், இந்த சட்டத்தை பயன்படுத்தி பாசிஸ்டுகளால் அரபு கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்க முடியும் என்கிறார் இஸ்ரேல் வரலாற்றாசிரியரான யுவால் நோ ஹராரி.  மேலும், தாங்கள் மத நூல்களை படிக்க வேண்டும் என்று காரணம்காட்டி கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலகி இருந்த வைதீக யூதர்களை ராணுவ சேவை செய்யும்மாறு தீர்ப்பு வழங்கிய நீதித்துறையின் தீர்ப்புக்கும் முடிவு கட்ட முடியும். தொகுப்பாக, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் பெயரளவிலான நீதித்துறை அதிகாரம் கூட இனி பாசிஸ்டுகளுக்கு ஒரு தடையாக இருக்க போவதில்லை.

வரலாறு காணாத இஸ்ரேல் மக்கள் போராட்டம்:

ஏற்கனவே நெதன்யாகுவின் ஊழல் மோசடிகள் காரணமாக அவர் மீது ஆத்திரத்தில் இருந்த இளைஞர்களை பாசிஸ்டுகளின் இந்நடவடிக்கை வீதிக்கு அழைத்து வந்தது. ஜனவரி 4 ஆம் தேதி நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் அறிவித்தவுடனேயே கிரைம் மினிஸ்டர் (Crime Minister – நெதன்யாகு ஊழல் வழக்கில் அம்பலப்பட்ட போது அவருக்கு எதிராக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இயக்கம்), ஓம்டிம் பெயசட் (Omdim Beyachad) உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டத்திற்கு அறைகூவின. மூன்றே நாட்களில் ஜனவரி 7 அன்று ஆயிரக்கனக்கானோர் டெல் அவிவ் நகரில் கூடி போராட்டம் நடத்தினர். ஜனவரி 14 தொடங்கி டெல் அவிவ் நகரின் கப்லான் தெருவில் வாராந்திர அடிப்படையில் சனிக்கிழமை இரவுதோறும் 60,000 முதல் 1,50,000 வரையிலான போராட்டக்காரர்கள் கூடத் தொடங்கினர்.

போராட்டகளம் தோறும் இஸ்ரேலின் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் எதிர்ப்பின் அடையாளமாக மாறியது. “இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரம்”, “அவர்களை நிறுத்துங்கள்”, “அவமானம்”, ”ஜனநாயகம் ஜனநாயகம்” உள்ளிட்ட முழக்கங்களும் பதாகைகளும் போராட்டக்களத்தை அலங்கரித்தன. இஸ்ரேலில் இப்படியொரு போராட்டத்தை எதிர்பார்க்காதவர்கள் அதனை “வரலாறு காணாத போராட்டம்” என்றும் “இஸ்ரேல்  வசந்தம்” என்றும் வர்ணித்தனர்.

மார்ச்  மாத இறுதியில்  போராட்டம் நடத்தும் மக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்ன இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மார்ச் 26 அன்று, நூறாயிரக்கணக்கில் ஒன்றிணைந்து இஸ்ரேல் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் செய்தனர். இஸ்ரேலியப் பல்கலைக்கழகங்கள் (மேற்குக் கரையில் அமைந்துள்ள ஏரியல் பல்கலைக்கழகத்தைத் தவிர) காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து வகுப்புகளும் ஆராய்ச்சிகளும் நிறுத்தப்பட்டன. 23 உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், நீதித்துறை சீர்திருத்தத்தை நிறுத்தக்கோரி, பிரதமர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


நாட்கள் செல்ல செல் போராட்டங்களும் அதில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றன. டெல் அவிவ் முதல் ஜெருசலேம் வரை பல பேரணிகள் நடைபெற்றன. பல இடங்களில் சாலை மறியல்கள் நடந்தன. கிட்டத்தட்ட மார்ச் மாத தொடக்கத்திலேயே டெல் அவிவ் நகரம் போராட்டங்களால் முடக்கப்பட்டது. சிலர் ஜெருசேலத்தில் உள்ள பழமைவாத சிந்தனைக் குழுவின் அலுவலகங்களை முற்றுகையிட தொடங்கினர்.

இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிக தலைவர்கள், மருத்துவர்கள், பாதுகாப்பு படையினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்குபெற ஆரம்பித்தனர். மருத்துவர்கள் இரண்டு மணி நேர வேலைநிறுத்தம் செய்தனர். ஜூலை 23 அன்று 200 இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்களும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்தன. விக்ஸ், விஸ், மண்டே மற்றும் ரெடிஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் குழு போராட்டத்திற்கு வருவதற்காக 100 பேருந்துகளை வாடகைக்கு எடுத்தன. ஜூலை 23 அன்று, இஸ்ரேலின் 150 மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அமைப்பான “இஸ்ரேல் பிசினஸ் ஃபோரம்” வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தது.

எந்த ராணுவத்தை வைத்து பாலஸ்தீனத்தை ஒடுக்க வேண்டும் என்று நெதன்யாகு கனவு கண்டு கொண்டிருந்தாரோ அந்த பாதுகாப்பு படையினரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஜூன் 27 அன்று, நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் வீட்டிற்கு வெளியே 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் (Israel Defence Force – IDF) ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றபட்டால் தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே சட்டத்திருத்தத்திற்கு நெசெட் ஒப்புதல் அளித்ததையடுத்து போராட்டங்கள் வீரியமாக நடைபெறுகின்றன.

பாலஸ்தீனியர்களை இணைத்து போராடாமல் தீர்வில்லை:

ஆனால், வினோதமான விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவிகிதமாக உள்ள பாலஸ்தீனியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தான். உண்மையிலேயே இந்த சட்டத்திருத்தின் மூலம் இஸ்ரேல் மாக்களை காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படபோவது பாலஸ்தீனியர்கள் தான்.

அதற்காக, நீதித்துறை பாலஸ்தீனியர்களின் அரணாக இருந்துள்ளது என்று பொருளில்லை. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இராணுவ துப்பாக்கிச் சூடும் வன்முறையும் அடக்குமுறையும் நடக்கும் போது அதனை வேடிக்கை பார்த்து அதற்கு துணை போனது தான் இந்த நீதிமன்றம். ஆனால், நீதிமன்றத்தின் அதிகாரங்கள் ஒழித்துகட்டப்பட்டு அவை பாசிஸ்டுகளின் கரங்களில் குவிக்கப்படுவது தங்கள் மீதான ஒடுக்குமுறையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது பாலஸ்தீனியர்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு காரணம், இந்த போராட்டங்களில் தங்களுக்கு ஒரு வெளி உள்ளது என்ற நம்பிக்கை பாலஸ்தீன மக்களுக்கு அளிக்கப்படவில்லை.

பாலஸ்தீனியர்களின் விடுதலை அவர்களின் நிலத்தில் தான் உள்ளது. ஒருவேளை அதற்கான முழக்கம் இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அப்போராட்டத்தில் பங்குபெற்றிப்பர்.  அப்படி நடக்காததாலேயே இஸ்ரேலின் மதசார்பற்ற யூத மக்கள் நீதித்துறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது, இஸ்ரேல் அரசு தங்கள் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடிய நில தினத்தை பாலஸ்தீனியர்கள் கொண்டாடி கொண்டிருந்தனர்.

மேலும், இப்போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் போராடுவதற்கு ஏற்ற சூழலும் இல்லை. பல இடங்களில் பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கப்படுவதில்லை. அப்படியே அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை. மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றால் நெதன்யாகு அரசால் யூதர்களை காட்டிலும் பாலஸ்தீனியர்களுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்படும்.

எனவே பாலஸ்தீனிய மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு அவர்களின் உரிமை முழக்கத்தையும் முன்வைத்து போராடுவதே இந்த போராட்டத்தின் பலத்தை அதிகரிக்கும். இது குறித்து எழுத்தாளரும், பாலஸ்தீனிய குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலாட் கட்சியின் உறுப்பினருமான ஓர்லி நோய், “அரேபிய மக்களின் பங்கேற்பு இல்லாமலும் பிரதேசங்களிலும் இஸ்ரேலுக்குள்ளும் உள்ள நிறவெறியை பற்றி பேசாமலும் இஸ்ரேலை ஜனநாயகப்படுத்த வழி கிடையாது” என்கிறார்.

பாலஸ்தீனியப் நகரமான நாசரேத்தின் முன்னாள் துணை மேயர் சுஹில் டியாப் கூறுகையில், “இஸ்ரேலிய பாலஸ்தீனியர்களாகிய நாங்கள் போராட்டத்தின் சொற்பொழிவிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும், முந்தைய ஆண்டுகளின் போராட்ட இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் போராட்டக்காரர்கள் சரியான திசையில் நீண்ட தூரம் வந்துள்ளனர் என்று நான் உணர்கிறேன்” என்கிறார். எனவே கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகப்பட்டு கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பாலஸ்தீனியர்களை இணைக்க வேண்டியது மட்டுமே மீதம் உள்ளது. அதுவே பாசிஸ்டுகளுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும்.

தங்கள் வாழ்நாளில் பாசிஸ்டுகளால் சகித்துக்கொள்ள முடியாத விஷயம் என்றால் அது தாங்கள் பிரித்தாண்டு கொண்டிருக்கும் இரண்டு பிரிவினர் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து தங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதே. இந்த வர்க்க அணிசேர்க்கை தான் இலங்கை பாசிஸ்டுகளான ராஜபக்சேக்களுக்கு உயிர் பயத்தை கொடுத்து நாட்டைவிட்டு ஓட வைத்தது. எனவே, தாங்கள் எதிர்த்து போராடி கொண்டிருப்பது பாசிஸ்டுகளை என்பதை உணர்ந்து பொது எதிரிக்கு எதிராக பாலஸ்தீனியர்களையும் இணைத்து அவர்களின் முழக்கங்களையும் முன்வைத்து போராடுவதே இஸ்ரேல் மக்கள் போராட்டத்தை  வெற்றியை நோக்கி கொண்டுசெல்லும். இல்லையேல், இன்று தற்காலிகமாக இஸ்ரேல் சட்டதிருத்த மசோதா திரும்பபெறபட்டாலும் நாளை பாசிஸ்டுகளுக்கு எதிராக கண்டிப்பாக பாலஸ்தீனியர்களோடு இணைந்துதான் போராட வேண்டியிருக்கும்.


துலிபா

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி! | தோழர் வெற்றிவேல் செழியன்

கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி!
– தோழர் வெற்றிவேல் செழியன்

காணொலியை பாருங்கள் பகிருங்கள்

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி
– ஆசிரியர் உமா மகேஸ்வரி

காணொலியை பாருங்கள் பகிருங்கள்

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச குண்டர்படைகளை தடை செய்!

ஆர்.எஸ்.எஸ் சார்பு மெய்தி இனவெறிக் கும்பல்களால் முன்னின்று நடத்தப்பட்ட மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து செல்லும் வீடியோவால் நாடே அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது ஹரியானா கலவரம் அரங்கேறியுள்ளது.

ஜூலை 31 திங்கள்கிழமை அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய ஊர்வலம் கலவரமாக மாற்றப்பட்டது. ஊர்வலம் தொடங்க இருந்த சிவன் கோவிலில் மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வன்முறை கும்பல் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் பரப்பப்பட்டதையடுத்து நூஹ் பகுதியில் வன்முறை மூண்டது.

கோவில் சேதப்படுத்தப்பட்டதாக வந்த தகவல் பொய் என கோவில் தலைமை பூசாரி மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்திற்கு வந்த 2,000 பேர் கோவிலுக்குள் இருந்துள்ளனர். வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள குண்டர்படைகள் திட்டமிட்டு பொய்ச் செய்திகளை பரவச் செய்து கோவிலில் இருந்த மக்களை அச்சமடையச் செய்து கலவரமாக மாற்றியுள்ளனர்.

நூஹ் மாவட்டத்தைத் தொடர்ந்து அன்று மாலையே குருகிராம், சோஹ்னாவில் கலவரம் வெடித்தது. குருகிராமில் 70 பேர் கொண்ட குண்டர்படை மசூதிக்குத் தீ வைத்தது. வெறிபிடித்த  இந்து மதவெறிக் கும்பல் மசூதியிலிருந்த 19 வயது இமாம்-ஐ கொன்றது.


படிக்க: ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்


இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஒரே நாள் இரவில் இரண்டு மசூதிகளை எரித்துள்ளனர். பல இடங்களில் வழிபாட்டு தலங்கள், கார்கள், வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள், போன்றவை சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

***

ஹரியானா ‘பசுப் பாதுகாவலர்’ தலைவரும், பஜ்ரங்  தள் உறுப்பினருமான மோனு மானேசர் மூன்று நாட்களுக்கு முன் “நான் அங்கே வருகிறேன், உங்கள் அண்ணன் வருகிறார்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அப்போதிருந்தே அப்பகுதி பதட்டமடைந்துள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மானேசரின் வீடியோ வைரலானவுடன் மேவாட் (மேவாட் மாவட்டம் 2016 இல் நூஹ் என பெயர் மாற்றப்பட்டது) முஸ்லீம் இளைஞர்கள் தங்களது சொந்த வீடியோக்களை வெளியிட்டு  “மானேசரை  மேவாட்டில் அனுமதிக்க கூடாது, அவரை கைது செய்ய வேண்டும்” என்று ஹரியானா அரசின் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மேவாட் இளைஞர்கள் குழு மானேசருக்கு எதிராக போராடவும் அழைப்பு விடுத்துள்ளது. இப்பதிவுகளில் ஹரியானா அரசின் சமூக ஊடகப் பக்கங்களையும் டேக் (Tag) செய்ததாக இளைஞர்கள் குழு கூறியது. அரசு நிர்வாகமும், ஆளும் பாஜக அரசாங்கமும் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டன.

மானேசர் தனது டிவிட்டர் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான உள்ளடக்கங்களையே தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளான். மானேசர் கொலைக்காரப் பட்டியலில் தேடப்படுபவன். அவன் இந்த யாத்திரையில் இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதே ஹரியானாவில் கலவரம் ஏற்படுவதற்கான துவக்கப்புள்ளி.

இந்த ஊர்வலத்தை பாசிசக் குண்டர்படை “பிரஜ்மண்டல்” யாத்திரை (Brij Mandal Jalabhishek Yatra)  என்ற பெயரில் நடத்தியுள்ளது. இந்த யாத்திரை 2021 முதல் பெரிய அளவில் VHP-ஆல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

***

இப்பகுதியில் ‘பசுப் பாதுகாவலர்’ என்ற பெயரில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இந்து மதவெறி பாசிச அமைப்புகள் நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளன.

இந்தாண்டு, பிப்ரவரியில் பிவானி மாவட்டத்தில் இரண்டு முஸ்லீம் ஆண்களின் (நசீர் மற்றும் ஜூனைட்) எரிந்த எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் பசுப் பாதுகவலர் என்ற பெயரில் மானேசரின் குண்டர்படையினரால் கொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்பு அதேப் பகுதியின், மெக்கானிக்கான வாரிஸ் கான் என்பவரின் மரணத்திலும் தொடர்புள்ளவனாக  மானேசர் இருந்துள்ளான்.

அதேபோல் 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஹரியானாவில் முஸ்லீம் ஆண்களை தாக்கி சித்திரவதை செய்யும் வீடியோக்கள் வெளியானது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டில் முன்னணியில் இருந்த  ராமபக்த் கோபால் மற்றும் மானேசர் ஆகிய இருவரும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இப்பகுதியில் மதக் கலவர பதட்டங்கள், ‘பசுப் பாதுக்காப்பு’ குண்டர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ‘பசுப் பாதுகாவலர்’ கும்பலால் அடித்து கொலைச்செய்யப்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் மானேசரின் வன்முறை தாக்குதலுக்கு எதிராக ஹரியானா அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இவையனைத்தும் தான் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை மானேசருக்கு எதிராக தனித்தனியாக வீடியோ பதிவிட்டு பேச வைத்துள்ளது. ஹரியானா அரசு நினைத்திருந்தால் இந்த கலவரத்தை தடுத்திருக்கலாம். ஆனால் இந்த அரசு தடுக்காமல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரத்தை நடக்கவிட்டு வேடிக்கைப் பார்த்துள்ளது.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


கலவரம் நடந்த பின்னரே 144 தடை, இணையசேவை முடக்கம், துணை ராணுவப்படையை இறக்குவது போன்ற  கண்துடைப்பு நடவடிக்கையை செய்கிறது.

கலவரம் பற்றிப் பேசிய துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா “ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் யாத்திரை குறித்து முழுமையான தகவலை அதிகாரிகளுக்கு கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

“ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாள்கள், லத்திகளை ஏந்திச்சென்றனர்” என்று குருகிராம் மாவட்ட பா.ஜ.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராவ் இந்தராஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்? குண்டர்படையினரும் போலிசும் துணை இராணுவப்படையும் இந்த கலவரத்தை இணைந்து நடத்துவதாக தான் பொருள். இதுதானே குஜராத்திலும் மணிப்பூரிலும்  நடந்தது; நடந்துவருகிறது.

***

ஹரியானாவில் 2014 முதல் பா.ஜ.க தான் ஆட்சியில் உள்ளது. அன்று முதல் இன்றுவரை முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார்.  முஸ்லீம் வெறுப்பைத் தனது அரசியலாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஹரியானாவில் வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற மதவெறி அமைப்புகளை வளர்த்து வருகிறது.

ஹரியானாவில் அமைக்கப்பட்ட புலனாய்வு குழு 2000 வீடியோக்களை ஆய்வு செய்துள்ளது. அதனடிப்படையில் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 93 பேர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. பாசிசக் குண்டர்படை களத்தில் மட்டுமல்லாமல் ஊடகங்கள் மூலமும் மதவெறி அரசியலை புகுத்தி வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்தியா தேர்தலை மட்டும் எதிர்கொள்வதாக இருக்கப்போவதில்லை, இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி குண்டர்படையின் கலவரத்தையும் எதிர்கொள்ள வேண்டும். இந்த கும்பல் இருக்கும் வரை கலவரங்கள் ஓயப்போவதில்லை. அவர்கள் இருக்குமிடமெல்லாம் கலவரம் வெடிக்கும். இதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்வது மட்டுமே.


குழலி

”கொலைகார அகர்வாலே திரும்பிப்போ” – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் | வீடியோக்கள்

“தூத்துக்குடியில் 15 தமிழர் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திருப்பிப்போ! சுரானா பள்ளியே, தமிழர் உணர்வுகளை இழிவுபடுத்தாதே!” என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி கட்சி, வெல்பேர் பார்ட்டி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழர் விடுதலைக்கழகம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம், மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை அடையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்டு 5 அன்று நடைபெற்றது.
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பேசிய தலைவர்களின் வீடியோக்கள் தனிதனியாக பதிவிடுகிறோம்.

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு – ம.க.இ.க சிவப்பு அலை புதிய பாடல்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திரும்பிப்போ! – கண்டன ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்!

ஸ்டெர்லைட்டை மூடவைத்தோம் போராட்டத்தாலே! – ம.க.இ.க சிவப்பு அலை புதிய பாடல்

ஸ்டெர்லைட்டுக்கு விலைபோன ஊடகங்கள்! | தோழர் திருமுருகன்காந்தி

ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகளை தண்டிக்க துப்பில்லாத அரசு! | குடந்தை அரசன்

கொலைகாரன் அகர்வால் வந்தால் தமிழ்நாடு அமைதியாக இருக்காது! | தோழர் மருது

15 பேரின் உயிர் தியாகத்தால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது | தோழர் அமிர்தா

மணிப்பூர் ஊடகங்கள் போல் தமிழ்நாட்டு ஊடகங்களும் மாறிவிட்டதா? தோழர் குமரன்

ஸ்டெர்லைட்டை மீண்டும் தூத்துக்குடி மண்ணில் எந்த காலத்திலும் திறந்துவிட முடியாது | கிருஷ்ணமூர்த்தி

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள் | முகமது பிலால்

எங்கள் போராட்டங்களை கண்டுகொள்ளாத திமுக அரசு ! | முகமது கவுஸ்

என் உயிரை கொடுத்தேனும்… ஸ்டெர்லைட்டை திறக்க விடமாட்டேன் | ஸ்டீபன்

தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல.. தமிழ்நாட்டு மக்களும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள் | காந்தி மள்ளர்

ஸ்டெர்லைட் அகர்வால் வருகை: திமுகவும் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? | அருள் தாஸ்

ஸ்டெர்லைட்டை தரைமட்டமாக்கி 15 தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் | தோழர் சீராளன்

15 தியாகிகளை கொச்சைப்படுத்தும் ஸ்டெர்லைட் அனில் அகர்வால் | காசி புதியராஜா

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!

டந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து எரிக்கப்பட்டு வெளிவரும் நச்சுத்தன்மை வாய்ந்த புகையால் அந்த பகுதியில் பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையான நோய்க்கு பாதிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தனர்.

“லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழித்ததைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்களின் பேரணி அடைந்தபோது கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை சிதறடித்து நிலைக் குலையச் செய்தது கார்ப்பரேட்களின் கைக்கூலியான போலீஸ்.

படிக்க : அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

அத்துடன் நில்லாது குருவியை சுடுவதுபோல் -இரக்கமற்ற மிருகம் இரையை வேட்டையாடி விழுங்குவதைப் போல்- அப்பாவி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நரவேட்டையாடியது ஸ்டெர்லைட் அடியாட்படையான போலீஸ். முன்னணியாளர்களை குறிவைத்து கொலை செய்தது – கொலைவெறி தாக்குதல் நடத்தியது. அனில் அகர்வால் என்கிற கொலைகாரனுக்காக சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்தது அன்றைய முதலாளித்துவ அடிமை அரசான அ.தி.மு.க அரசு. இதில் 15 உயிர்கள் பலியாக்கபட்டது. 40 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது, அதனால் பலர் கை, கால்களை இழந்து ஊனமாக்கப்பட்டார்கள். மேலும் 60 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தமிழக வரலாற்றின் ஜாலியன்வாலாபாக் என்று கருதப்படும் இந்த படுகொலைக்கு காரணமான -ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான “வேதாந்தா” குழுமத்தின் தலைவனான- கொலைகாரன் அனில் அகர்வால் நமது தமிழ்நாட்டிற்கு இன்று(06.08.23) வரவிருக்கிறான்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அளித்த 215 பக்க தீர்ப்பால் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடியது.

ஏற்கனவே, அந்நிறுவனத்தை சரியான இடத்தில் கட்டவில்லை என்றும், ஆலையில் இருந்து வெளியே வரக்கூடிய மிக மிக நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக், பாதரசம் போன்ற கழிவுகள் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் கலக்கப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மறுபடியும் ஏதாவது ஒரு வழியில் ஸ்டெர்லைட்டை திறக்க வைப்பதற்கான வேலைகளை கொலைகார அகர்வாலும் அரசும் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கும் இதே வேளையில் -அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று தெளிவான தீர்ப்பு வராத சூழலில்- 4000 நபர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வோம் என்ற ஸ்டெர்லைட்டின் அறிவிப்பு, அவர்கள் ஆலையை மீண்டும் திறக்க முற்படுகிறார்கள் என்பதை உறுதிபடுத்துகிறது.

இந்தியாவில் மூன்று மாநிலங்களில் ஆலையை வைத்து மக்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டிய, ஆப்பிரிக்காவில் ஆலை தொடங்கி அங்கு உள்ள வளங்களையும் ஒட்டச் சுரண்டி அதனை எதிர்த்து போராடியவர்களை படுகொலை செய்த கொலையாளி அனில் அகர்வால் என்கிற பனியா, மார்வாடி குஜராத்தில் பிறந்து இங்கிலாந்தில் குடியுரிமைப் பெற்ற கார்ப்பரேட் முதலாளி எனும் கொலைகாரன் இன்று(06.08.23) சென்னையில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளி நிறுவனமான சுரனா ஹை டெக் (surana hi-tech) முதலாளியின் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தருவதென்பது தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்துவதாகும்.

படிக்க : நேரலை | ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே…

ஈழத்தில் இனப் படுகொலை நடத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை எப்படி தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோமோ! அதைப்போல தூத்துக்குடியில் தமிழர்களை படுகொலை செய்த கொலைகாரன் அகர்வாலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது!

அப்படி அனுமதித்தால் தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள், மே 17 இயக்கம், மற்றும் ஜனநாயக சக்திகள் ஆகிய அனைவரும் இன்று ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலை அடித்து விரட்டு என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டக்களத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொலைகாரனுக்கு எதிராக கிளர்ந்தெழும்.

மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் “தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே” என்று!

தென்றல்

நேரலை: கொலைகாரன் அகர்வாலே தமிழ்நாட்டுக்குள் நுழையாதே! நெல்லை கண்டன ஆர்ப்பாட்டம்

கொலைகாரன் அகர்வாலே தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!
நெல்லை கண்டன ஆர்ப்பாட்டம்

 

நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!

அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

ஓ…  எம் மண்ணே..
கலங்காதே!
முத்து நகரில்
பதினைந்து உயிர்களை காவு வாங்கிய
கார்ப்பரேட் நரி
தலைநகருக்குள்ளே நுழைகிறதே என்று!

ஓ… எம் உறவே..
வருந்தாதே!
கல்லறைக்குப் போன பின்னும்
போராட்டம் ஓயவில்லையே என்று!

ஓ… எம் தாயின் கருப்பையே..
நடுங்காதே!
கொலைகாரன் கால் பதித்த மண்
இனி தலைமுறைக்கும் சுடுகாடு தான் என்று!

ஓ… எம் நிலமே..
பதறாதே!
உன் மேல் தெறித்த ரத்தம்
நீதி கேட்குமே என்று!

புள்ளினமே
நீரோடையே
காற்றே
மரமே
கடலே
ஒடுங்காதே!
வெடிச்சத்தம் கேட்டதும்
வீழும் உடல்கள் கூக்குரல் இட்டதும்
காதில் ஓயவில்லையே என்று!

தெறித்த ரத்தமும்
சிதறிய சதைகளும்
எழும்பிய ஓலமும் ஓயவில்லை இன்றும்!
உடல்கள் மண்ணில் புதையலாம்
உணர்வுகள் மக்களிடம் விதைகளாய்!

படைகள் புடை சூழ
அதிகாரம் தலைவணங்க
ராஜமரியாதையுடன் வந்தாலும்
அவனொரு  சர்வதேச கொலைகாரன்!
அவனொரு சர்வதேச பயங்கரவாதி!

பஞ்சத்தில் வாழ்ந்தாலும்
பட்டினியில் நடந்தாலும்
ஊண் உறுப்புகளை இழந்த
உறவுகளை இழந்த
எம் மக்களுக்கு
அவன் எதிரி!

லட்சம் பேர் திரண்டோம்
ஆலையை மூடினோம்!
கோடிகளாய் திரள்வோம்!
அவன் இடத்தை
அவனுக்கே கல்லறையாக்குவோம்!

– செங்குரல்

ரணில்: இலங்கையின் மோடி!

லங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20, 21 ஆகிய இரண்டு நாட்களில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்து சென்றுள்ளார். அதிபரான ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வந்த அவர், தனது பயணத்தின் போது பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆயோரை சந்தித்தார். இந்தப் பயணம் இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என ரணில் சொன்னாலும், அவரது இந்தியப் பயணத்திற்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கிறது.

இலங்கைக்குக் ‘கை’ கொடுக்கும் இந்தியா:

கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட இலங்கையில் நடந்த எழுச்சிமிக்க மக்கள் போராட்டங்களால் ராஜபக்சேக்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, தனது அடிவருடியான ரணில் விக்ரமசிங்கவை அதிபராக்கியது. அமெரிக்காவின் இந்த நகர்வானது ஒருவகையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கு இந்தியாவிற்கும் சாதகமாக அமைந்துவிட்டது.

இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் இரட்சகராக ரணில் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், உண்மையில் அதன் பிறகுதான் நெருக்கடி தீவிரமானது. உணவு, மருந்துப் பொருட்கள், எரிபொருள் பற்றாக்குறை, 12 மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல்களால் வேலையிழப்பு ஆகியவற்றால் மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மக்களது வாழ்வில் இருள் சூழ்ந்திருக்க 46 பில்லியன் வெளிநாட்டு கடனையும் திருப்பிக்கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தது இலங்கை. இந்நெருக்கடி நிலையில், ஏற்கனவே பொருளாதார ரீதியில் மோசமான நிலையில் இருந்த இலங்கைக்கு மற்ற நாடுகள் உதவத் தயக்கம் காட்டிய போதும், 4 பில்லியன் டாலர் அளவுக்கான உணவு மற்றும் நிதியுதவி வழங்கி தன்னை ஒரு இரக்கக் குணமுடைய வள்ளலாகக் காட்டிக்கொண்டது இந்திய அரசு. இதையடுத்து, சர்வதேச ஆதரவைக் கோரிய இடங்களிலெல்லாம் தனது பங்கிற்கு இந்தியாவைப் புகழ்ந்து பேசி வருகிறார் ரணில். மேலும், இலங்கைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யல்லென் மற்றும் சர்வதேச நிதி நாணயத்தின் (ஐ.எம்.எஃப்) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருடன் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சர்வதேச மகளிர் தினத்தில் பாராட்டிப் பேசியிருந்தார்.


படிக்க: இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!


தற்போதைய இந்தியப் பயணத்தின் போதும் கூட, சவாலான காலத்தை இலங்கை சந்தித்துக் கொண்டிருந்தபோது இந்தியா உதவியதாகப் பாராட்டி பேசிய ரணில், “இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் தனது இந்திய வருகை என்பது நல்லதொரு வாய்ப்பாக அமைக்கிறது” என்றார்.

ரணிலின் பயணத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்:

ரணிலின் இந்த இந்தியப் பயணத்தில், எரிசக்தி, விமான சேவை, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை, இந்தியாவின் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக்கொள்வது மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மேலும், பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும், இந்தியா மற்றும் இலங்கை ஒருங்கிணைந்த எரிசக்தி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தியாவின் உதவியுடன் திரிகோணமலையை எரிசக்தி மையமாக வளர்த்தெடுப்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்மொழிவின் பேரில், நாகப்பட்டினம், கொழும்பு மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள போர்த்தந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமான திரிகோணமலை ஆகியவற்றை இணைக்கும் எண்ணெய் விநியோகக் குழாய்கள் அமைப்பது குறித்து, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் மட்டத்திலான ஒரு கூட்டம் ஏற்கெனவே இலங்கையில் நடைபெற்றது. திரிகோணமலையில் நூற்றாண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாத எண்ணெய்த் தொட்டிகளை மீட்டெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை இரண்டாம் உலகப்போரின் போது பயனபடுத்தப்பட்ட எண்ணெய்த் தொட்டிகளாகும். இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இவை கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு எரிசக்தி வளங்களைக் குறைந்த விலையில் வழங்கவும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும், தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எரிசக்தி விநியோகத்திற்கான குழாய்களை அமைப்பதற்கும், இதன்மூலம் எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தியா ரூபாயில் பரிவர்த்தனை:

கடந்த ஆண்டு திவால் நிலையை அடைந்தபோது இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவு குறைந்தது. தற்போது அதனை மீட்டெடுக்க இலங்கையின் சுற்றுலாத்தளங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிகளை ஈர்ப்பதையும், அதன் மூலம் வரும் வருவாயையும் இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது.

இனிவரும் நாட்களில் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயை பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்துவது குறித்தும் தற்போதிய ரணில் – மோடி சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இந்தியா வருவதற்கு முன்பு, கொழும்புவில் உள்ள இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் ரணில் உரையாற்றியபோது, இலங்கைக்குள் இந்திய நாணயம் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும். இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் இந்திய நிறுவனங்களிடம் இருந்து அதிக தனியார் முதலீட்டை இலங்கை நாடியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்திய நிதியுதவி, வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தின் பின்னும் இலங்கையின் நலன் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் ரணில், அந்த நலனை மேம்படுத்தும் ரகசியம் எதுவென்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். அதுதான் இந்தியத் தனியார் நிறுவனங்களின் முதலீடு. இந்தியாவிலும் கூட மன்மோகன், மோடி உள்ளிட்ட அனைத்து இரட்கர்களும் உதிர்த்த அதே முத்துக்கள் தானே இவை.

இலங்கையின் இரட்சகர் ரணில்! ரணிலின் இரட்சகர் மோதானி!

தந்து இந்தியப் பயணத்தில் இந்தியாவின் பிரமதமரையும் குடியரசுத் தலைவரையும் சந்தித்ததை விட மிக முக்கியமான சந்திப்பை நிகழ்த்தினார் ரணில். அது ரணில் – அதானி சந்திப்புதான். இந்தச் சந்திப்பில், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கம், புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி திட்டம் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உண்மையில் ரணில் வந்தது இதற்காகத்தான். அதாவது, அதானிக்காகத்தான். மோடியின் ஆசியுடன், அதானியின் முதலீட்டைக் கொண்டு இலங்கையை மீட்டெடுக்க போகிறாராம் ரணில்.

அதானியுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரியின் அதானி குழுமத்தின் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நிறைவடையும் என்று இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்தார்.


படிக்க: மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!


கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு வடக்கு மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில் 500 கோடி முதலீட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது இலங்கை மின்சார வாரியம். இதற்கு எவ்வித சட்டப்பூர்வ வழிமுறைகளையும் இலங்கை அரசு பின்பற்றவில்லை.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களிடமும் இந்நடவடிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இது “மோடியின் நண்பரை கொல்லைப்புற வழியாக அனுமதிக்கும் நடவடிக்கை” என்று எதிர்க்கட்சிகள் சாடினர். மக்களும் இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, “அதானியை நிறுத்து”, “இலங்கையிலிருந்து வெளியேறு” என்று முழங்கினர்.

இதற்கெல்லாம் காது கொடுக்காமல், அதானியை சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கும் வகையில், இலங்கை மின்சாரச் சட்டம் 2009-இல் உடனடியாக திருத்தத்தைக் கொண்டு வந்தது, அப்போதைய கோத்தபய அரசு. இந்தக் கோத்தபய அரசு மக்கள் எழுச்சியால் வீழ்த்தப்பட்டுவிட்டது. ஆனால், இலங்கையின் மீதான அதானியின் பிடி கொஞ்சமும் தளரவில்லை. அதானி குழுமத்தின் திட்டங்களை விரைவுபடுத்தவும், மேலும் விரிவுபடுத்தும் வகையிலுமே ரணிலின் தற்போதைய இந்திய பயணம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட இலங்கையில் 1 பில்லியன் டாலர் முதலீடு கொண்ட இத்திட்டங்கள் மூலம் இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் எரிசக்தித் துறையில் அதானியின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.

உண்மையில், இந்தியாவுடனான இத்தகைய ஒப்பந்தங்கள், இலங்கை மீதான இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தையே அதிகரிக்கச் செய்யும். இந்தியாவுடன், குறிப்பாக அதானியுடன் பல திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதன் மூலம் அதானிக்கு இலங்கையை அடமானம் வைப்பதுடன் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை பலி கொடுக்கிறார் ரணில். இந்தக் கார்ப்பரேட் சேவைக்கும் இலங்கையை மறுகாலனியக்குவதற்குமே ரணிலின் இந்திய வருகை பயன்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அதானியின் நலனுக்காக எவ்வாறு, அனுதினமும் மோடி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளாரோ, அதேபோன்று இலங்கையில் மோடியின் நகலாக இருக்கிறார் ரணில். இலங்கையை மீட்கப் போவதாக சொல்லிக்கொண்டே அந்நாட்டை மறுகாலனியாக்கி வரும் ரணிலின் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் இலங்கையை மீட்கப் போவதில்லை. “இலங்கையிலிருந்து வெளியேறு” என்று கடந்த ஆண்டு அதானிக்கு எதிராகப் போராடிய இலங்கை உழைக்கும் மக்கள், இன்று இலங்கையை மறுகாலனியாக்கும் ரணிலுக்கு எதிராகவும், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் சேர்த்தே தங்களது போர்க்குரலை உயர்த்த வேண்டியுள்ளது.


ஆனந்தி

தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறு! | மக்கள் அதிகாரம்

04.08.2023

தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறு!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

தென் கொரியாவைச் சேர்ந்த “ஊசு” கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையானது கட்டுமானப் பணியின் போது  ஆற்று மணலைச் சட்ட விரோதமாகத் திருடி விற்பனை செய்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராம சபையில்  தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் தோண்டி எடுக்கப்படும் மணலை ஊர் மக்கள் பயன்பாட்டிற்கே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை மக்கள் முன்வைத்து போராடினார்கள்.

அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அம்பேத்கர் பொதுவுடைமைத் முன்னணியின் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சாலமன் உட்பட 11 பேரை போலீசு கைது செய்து சிறையில் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 10 பேர் விடுதலை செய்யப்பட்ட போதும் தோழர் சாலமனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

படிக்க : பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?

மேலும் தோழர் சாலமனை குண்டர் சட்டப் படியும் சிறையிலடைக்க மாவட்ட கலெக்டர் ஆணையிட்டுள்ளார்.

மக்களுக்காக போராடும் போராளிகளைத் திட்டமிட்டு ரவுடிப்பட்டியலில் சேர்ப்பது, பொய் வழக்குகள் போடுவது, குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைப்பது  ஆகிய அடக்குமுறைகளை அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

ஊசு நிறுவனத்தின் மீதும் அதன் சட்டவிரோத செயல்பாடுகளுக்குத் துணை போன மாவட்ட கலெக்டர், போலீசு, நிர்வாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தோழர் சாலமன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 9962366321

ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுற்குள் கால் வைக்க கூடாது | மக்கள் நேர்காணல்

ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுற்குள் கால் வைக்க கூடாது | மக்கள் நேர்காணல்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஸ்டெர்லைட்டை இடித்து நொறுக்க வேண்டும் | தோழர் மருது

ஸ்டெர்லைட்டை இடித்து நொறுக்க வேண்டும் | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!