Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 92

நாங்குநேரி கொடூரம்: ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்! | தோழர் வெற்றிவேல் செழியன்

நாங்குநேரி கொடூரம்: ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்! | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!

டந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. நாடாளுமன்றத்திற்கு வராத எம்.பி.க்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மோடி இந்த கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ளவில்லை. முதல் நாள் மட்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து சென்ற மோடி அதற்கு பிறகு நாடாளுமன்றம் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.

ஆனால், இந்தியாவின் ஓர் மாநிலமான மணிப்பூர் மூன்று மாதங்களுக்கும் மேலாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து தார்மீக விளக்கம் அளிக்காமல் இருந்தது நாட்டு மக்களை முகம் சுளிக்க வைத்தது. மோடி எவ்வளவு பெரிய “கல்லுளி மங்கன்” என்பதை மணிப்பூர் சம்பவம் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியது. இதற்கு ‘தீர்வாக’ மோடியை நாடாளுமன்றத்திற்கு வர வைக்க மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தன, எதிர்க்கட்சிகள்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிச்சயம் தோல்வி அடையும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்திருந்தபோதிலும், மோடியின் திருவாயால் மணிப்பூரைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சிகளால் விளக்கம் தரப்பட்டது.

ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளிக்காமலேயே வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் அப்படியே பேசினாலும் கூட எதிர்க்கட்சிகளின் முயற்சியைக் கோமாளித்தனமாக மாற்றும் வகையில் மோடியின் உரை அமையும் என்றும் நாம் முன்பே கூறியிருந்தோம்.


படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!


மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான தேதி கூட்டத்தொடரின் கடைசி நாட்களிலேயே ஒதுக்கப்படும் என்பதும்; அதில் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகளை விமர்சித்து நெஞ்சு புடைக்க உரையாற்றுவார் என்பதும் முன்பே கணிக்கப்பட்டது தான். அதற்கு ஏற்றவாறே ஆகஸ்ட் 11 ஆம் தேதியோடு (நேற்றோடு) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய கடைசி நாட்களே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே ராகுல் காந்திக்கு பறிக்கப்பட்ட எம்.பி. பதவி திரும்பக் கிடைக்கவே நம்பிக்கையில்லாத்தீர்மானம் மீதான விவாதம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.  காங்கிரஸ் கட்சி முதலில் ராகுலைப் பேச வைத்து விவாதத்தைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டது. ராகுல் எதிர் மோடி (Rahul Vs Modi) என்று ஊடகங்களால் இவ்விவாதம் ஊதிப் பெருக்கப்பட்டது ஆனால், ஆகஸ்ட் 8 ஆம் தேதி மோடியின் வருகைக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் காத்துக்கொண்டிருக்க. நாடாளுமன்றத்திற்கே வராமல் எதிர்க்கட்சிகளின் தலையில் இடியை இறக்கினார், மோடி.

நாடளுமன்றதிற்கு வராத மோடியை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட அத்தனை பிரயத்தனங்களும் பாழாய்ப் போனது. அதிலும், விவாதம் நடக்கும் அவைக்குப் பக்கத்து அறைகளுக்கு வந்து பா.ஜ.க எம்.பி.க்களை சந்தித்து பேசிவிட்டு சென்ற மோடி, விவாதம் நடக்கும் மக்களவைக்கு மட்டும் வராமல் தவிர்த்தது மோடியின் பாசிச தன்மையையும் அதனை நாடாளுமன்ற முறைப்படியே வென்றுவிடலாம் என்று எண்ணிய எதிர்க்கட்சிகளின் பரிதாப நிலைமையையும் வெளிப்படுத்தியது.

மோடி அவைக்கு வராத நிலையில் வேறுவழியின்றி எதிர்க்கட்சிகள் விவாதத்தை தொடங்கின. இந்தியாவில் நடந்த 20க்கும் மேற்பட்ட நம்பிக்கையில்லாத்த் தீர்மானங்களில் நாட்டின் பிரதமர் இல்லாமல் விவாதம் நடந்தது இதுவே முதன்முறை. இதில் வி.சி.க எம்.பி தொல்.திருமாவளவன், தி.மு.க எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன்  சவுத்ரி மற்றும் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மௌவா மொய்த்ரா போன்றோரின் உரைகள் முக்கியத்துவமுடையதாக ஊடகங்களால் விவாதிக்கப்பட்டன.

ஆனால், அவர்கள் பேசி முடித்த உடனேயே அவர்கள் பேசியதில் பல கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக, விவாதத்தின் இரண்டாவது நாளில் பேசிய ராகுலின் உரை அனைவராலும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அவரது உரையிலிருந்து 23 பகுதிகள் நீக்கப்பட்டு, உரை வெட்டி சுருக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் (அடிமை) தொலைக்காட்சியான சன்சத் டி.வி  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசிய போது அவர்களைக் காட்டாமல் அவைத் தலைவரையும் பா.ஜ.க எம்.பி.க்களையும் காட்டிக்கொண்டிருந்தது. சான்றாக, ராகுல் பேசிய போது 40 சதவிகிதத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே அவர் சன்சத் டி.வி.யால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டார். மற்ற நேரங்களில் அவைத்தலைவர் ஓம் பிர்லாவும், ஸ்மிருதி இராணியும் காட்டப்பட்டனர்.


படிக்க: தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!


இதையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மௌவா மொய்த்ரா மூன்றாவது நாள் அவைக்கு வருவதற்கு முன்பு ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ”நான் இன்று நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், நான் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற புடவை அணிந்துள்ளேன், நான் பேசும் போது சன்சத் டி.வி வேறு எதையாவது காட்டிக்கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, விவாதத்தின் மூன்றாவது நாளின் இறுதியில் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு நிகரான பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மக்களைவை குழு தலைவரும் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய போது, “மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்தபோது  திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன; அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார்” என்று மோடியைக் குறிப்பிட்டுப் பேசியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ஆளும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களுக்கே உரிய பாசிச நயவஞ்சகத்துடன் பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் “அதானி அதானி” என்று முழங்க, “அதானி” என்ற சொல்லை ஒருமுறை கூட பிரயோகிக்காமல் மோடி  எப்படி வீர தீர  உரை நிகழ்த்தினாரோ அதைப் போலவே பா.ஜ.க. எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசாமல் எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி அடித்துக்கொண்டிருந்தனர்.

ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா என அனைவருமே இந்த பாசிச அணுகுமுறையைக் கையாண்டனர். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கும் வைத்த வாதத்திற்கும் பதில் அளிக்காமல் எதிர்க்கட்சிகளைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். குறிப்பாக எம்.பி.க்கள் பலரும் திட்டமிட்டே தி.மு.க.வை தாக்கிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாள் மாலை 5 மணியளவில் அவைக்கு தரிசனம் தந்தார் மோடி. பா.ஜ.க எம்.பி.க்களை போலவே கொஞ்சமும் பொருத்தமின்றி மிகவும் அலட்சியத்தோடு தனது பதிலுரையை தொடங்கினார். “எதிர்க்கட்சிகள் நோ பால் போட்டுக்கொண்டிருக்கின்றனர், நாங்கள்  சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறோம்”, “எனது மூன்றாவது பதவிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்”, “ஏழைத் தாயின் மகன் பிரதமரானதை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை”, “எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கு மத்தியிலும் எல்.ஐ.சி வளர்ச்சியடைந்தது” என்று தேர்தல் பிரச்சார உரை போன்றதொரு உரையை நிகழ்த்தி தனது கொடூர பாசிச முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டிக் கொண்டார்.

இந்த உரைக்கு இடையில் பல கேலிகளும் நையாண்டிகளும் வேறு இடம்பெற்றது. மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருப்பதையொட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பிரதமரின் உரை எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடுவதிலேயே கவனம் செலுத்தியது. அவரின் உடல்மொழியும், பாவனையும், பேச்சு தொனியும், சிரிப்பும் மணிப்பூர் மக்களையும், நாட்டு மக்களையும், எதிர்க்கட்சிகளையும் ஏளனம் செய்தது.


படிக்க: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!


ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் “மணிப்பூர்” என்ற வார்த்தையை மட்டும் மோடி உச்சரிக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி  நேரத்திற்கும் மேலாகப் பொறுத்துப் பார்த்த எதிர்க்கட்சிகள் “மணிப்பூர் மணிப்பூர்” என்று முழக்கமிட்டுவிட்டு அவையை விட்டு வெளிநடப்பு செய்தன.

அதன் பிறகும் மோடியின் உரை தொடர்ந்தது. கிட்டதட்ட  2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு (160 நிமிடங்கள்) மோடி உரையாற்றினார். மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நீண்ட உரை என்ற ‘சாதனை’யை இவ்வுரை பெற்றது. ஆனால், அவ்வளவு நீண்ட உரையில் மோடி மணிப்பூரைப் பற்றிப் பேசியது 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் தான். கிட்டத்தட்ட மாலை 5 மணிக்குப் பேசத் தொடங்கிய மோடி “மணிப்பூர்” என்ற வார்த்தையை உச்சரிக்க 6:42 மணி ஆனது. அதுவும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் வேறுவழியின்றி கண்த்துடைப்புக்காக பேசினார். அந்த சொற்பமான நேரத்திலும் மணிப்பூர் வன்முறைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்று சொல்லி முடித்தார்.

மோடியின் இந்த ‘பதிலை’ கேட்க தான் எதிர்க்கட்சிகள் இவ்வளவு முயற்சிகளையும் செய்தன!

மோடியை நாடாளுமன்றத்திற்கு வர வைக்க வேண்டும், அவரை மணிப்பூர் குறித்துப் பேச வைக்க வேண்டும் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கியவையே எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள். ஆனால், அதை செய்யக்கூட பாசிஸ்டுகள் தயாராக இல்லை. தனது உரையைத் தவிர்த்து எதிர்க்கட்சிகளின் உரைக்காக நாடாளுமன்றத்திற்கு வரவும் மோடி தயாராக இல்லை, அந்த உரையில் மணிப்பூரைப் பற்றிப் பேசவும் அவர் விரும்பவில்லை.

மோடியைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புளித்துப் போன பழைய அவதூறுகளைப் பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகளால் உருவாக்கித் தரப்பட்ட ஓர் வாய்ப்பு மட்டுமே. அதனைக் கடந்து எதிர்க்கட்சிகளின் எந்த ‘விருப்பத்தையும்’ நிறைவேற்ற மோடி தயாராக இல்லை.

ஆனால் எதிர்க்கட்சிகளோ ஏற்கெனவே புளுத்து நாறிக் கொண்டிருக்கும், அதுவும் தற்போது பாசிஸ்டுகளின் கரங்களில் இருக்கும் இந்திய நாடாளுமன்ற ‘ஜனநாயக’த்திற்குள் சென்று பாசிஸ்டுகளை வழிக்கு வரவைக்கப் போகிறோம் என்று கிளம்புகின்றன, ஆனால், ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும்  நடத்திக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாகத் தெரியும்.

எனவே, பாசிஸ்ட் மோடியை நாடாளுமன்றத்திற்குள் அழைத்துப் பேச வைக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு நாட்டிற்கு வந்து போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், கடையடைப்புகளை நடத்துங்கள். உண்மையில், அதுவே மோடியின் “கல்லுளி மங்கன்” மௌனத்தைக் கலைத்து அவரைப் பேச வைக்கும்.


துலிபா

தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ்

தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ்

கப்பலூர் டோல்கேட் நிர்வாகமும் போலீசும்: தொடரும் வழிப்பறி – அடாவடித்தனம்! ஓட்டுநர் ஜெயராஜ்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!

0

அவரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிங்க..
இருக்கட்டும் நாங்கள் பாசிஸ்டுகள்…

கஸ்ட் 10 அன்று மோடி அரசு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் தொடர்பான புதிய மசோதா {The Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Bill, 2023} ஒன்றை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

இதன்படி பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்வார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அருண் கோயல்-இன் பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதே நாளில் ஜனாதிபதி ஒப்புதலும் வழங்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அருண் கோயல் அதற்கு முந்தைய நாள் தான், நவம்பர் 18 அன்று தான், தான் முன்னர் வகித்த பதவியிலிருந்து விருப்ப ஓய்வை அறிவிக்கிறார்.

மோடி அரசின் இந்த நடவடிக்கை அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து தான், சி.பி.ஐ (CBI) இயக்குநரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வுசெய்வதைப்போல் தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் அடங்கிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அவ்வழக்கை விசாரித்தது.


படிக்க: விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!


இவ்வாண்டு மார்ச் மாதம் அவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன் அடிப்படையில் தான், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதில் தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் தற்போது சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கைகளுக்கே மீண்டும் சென்று சேரும். பிரதமரும், பிரதமரால் பரிந்துரை செய்யப்படும் கேபினட் அமைச்சரும் கொண்ட ஒரு குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரால் எவ்வாறு பெரும்பான்மை பெற முடியும். இது ஒன்றும் மோடி அரசு அறிந்திராதது அல்ல. ஜனநாயகத்தை எள்ளி நகையாடும் பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடு இது.

அது மட்டுமல்ல, நீதிபதிகளின் நியமனமே அரசின் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று கொலீஜிய முறையை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிஸ்டுகள், இதுநாள் வரையிலும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் நீதித்துறை தலையிடுவதை எப்படி சகித்துக் கொள்வார்கள். தங்களது அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதை பாசிஸ்டுகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்பதன் வெளிப்பாடு தான் இந்த சட்ட மசோதா.


படிக்க: கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!


இந்தியா ‘சுதந்திரம்’ அடைந்ததாகக் கூறப்படும் காலத்தில் இருந்து, தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு தானே தேர்வு செய்து வந்துள்ளது என்று சிலர் கேட்கக் கூடும்.

அதற்கான பதில் என்னவென்றால் இதுவரை இருந்துள்ள அரசாங்கங்களையும் மோடி அரசாங்கத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்பதுதான். கடந்த மார்ச் மாதத்தில், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டதே பாசிச மோடி அரசின் மீது கொண்ட அச்சத்தினால் தான். தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தபோது பின்பற்றப்பட்ட வழிமுறைதான் அந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மோடி அரசு ஆயத்தமாகி வருகிறது. தற்போது தேர்தல் ஆணையர்களில் (EC) ஒருவரான அனுப் சந்திர பாண்டே அடுத்தாண்டு பிப்ரவரி 14 அன்று ஓய்வு பெற உள்ளார். தேர்தலை தங்களுக்கு ஏற்ற வகையில் நடத்த மோடி அரசுக்கு அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவைப் போன்ற பொருத்தமான அடியாட்கள் தேர்தல் ஆணையர்களாகத் தேவைப்படுகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதற்கு இடையூறாக இருந்தது. அந்த இடையூறை நாடாளுமன்றத்தைக் கொண்டே, சட்டபூர்வ வழிமுறையைப் பின்பற்றியே, பாசிச மோடி அரசு கடக்க நினைக்கிறது.

பாசிசத்தை சட்டபூர்வ வழிகளில் நிறுவுவதற்கான பாதையைச் செப்பனிடவே தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கான இந்த சட்ட மசோதா.


பொம்மி

அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்று மோடிக்கு நன்கு தெரியும்.

கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வன்முறைக் காணொளி வெளியானதை அடுத்து, 78 நாட்களாக மவுன விரதமிருந்த பிரதமர் மோடி வாய் திறந்து பேசிவிட்டார். அவரது கருத்துக்களும் உடல்மொழியும் இந்தப் பிரச்சினையை எந்த அளவிற்கு அலட்சியப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அலட்சியப்படுத்திவிட்டது.

அவரது உரை குறித்து அனைத்து தரப்பினரும் தத்தமது கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதால் அதற்குள் சென்று மீண்டும் நாம் பேச வேண்டியதில்லை. எதிர்க்கட்சிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எப்படியும் மணிப்பூர் விசயம் தொடர்பாக வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது.

நாடாளுமன்றத்திற்குள்ளே பேசினால், விவாதம் நடத்த வேண்டிவரும் என்றுணர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் பேட்டியளித்துவிட்டு கடமையை முடித்துக் கொண்டார். பிரதமர் மோடியின் இச்செயல், “நாடாளுமன்ற மரபு மீறிய செயல், நாடாளுமன்றத்திற்குள் பேச வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.


படிக்க: ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்


குக்கி இன மக்களுக்கு எதிராக அரசு, அதிகாரவர்க்கத்தின் துணையுடன் திட்டமிட்டு இந்த வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படுகிறது. அவரது கட்சி ஆளும் மாநில அரசுதான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் விவாதத்திற்குள்ளாகும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? ஆகவே அவர் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகளோ, “மோடி, உள்ளே வாருங்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் ஜுலை 26-ஆம் தேதி, மோடியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்திருப்பதால், எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள இத்தீர்மானம் நிச்சயம் தோல்வியடையும். இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டும் மோடி மீது எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்திருக்கிறது.

எனினும் நாடாளுமன்றத்திற்கு வந்து பேசமாட்டேன் என்று வம்படியாக நிற்கும் மோடியை நாடாளுமன்றத்திற்கு இழுத்துவந்து பேசவைப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று எதிர்க்கட்சிகளால் நம்பப்படுகிறது. ஆனால், அவர்கள் ஏமாறுவது நிச்சயம்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மோடி என்ன செய்தார்! குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தனது உரையில், சம்பந்தமே இல்லாமல் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிபற்றி ஒன்றரை மணிநேரம் நெஞ்சுபுடைக்க உரையாற்றினார். மோடிக்கு எதிராக “அதானி” “அதானி” என்று முழக்கமெழுப்பிய எதிர்க்கட்சிகளைப் பார்த்து, “மோடி” “மோடி” என்று முழக்கமிட்டனர் பா.ஜ.க.வினர்.


படிக்க: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!


ஒருவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவைத்தலைவரால் விவாதத்திற்கு கொண்டுவரப்படுமாயின், அதேதான் மீண்டும் நடக்கப்போகிறது. ஆகஸ்டு 10 வரை நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் உச்சக்காட்சியாக (கிளைமாக்ஸ்) அது இருக்கும்.

“நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்” என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கே மோடி மீதான பா.ஜ.க.வினரின் பஜனை கோசத்தைத் தாண்டி, எதிர்க்கட்சிகளின் கதறல்கள் எதுவும் ஒலிக்கப்போவதில்லை.

நாட்டு மக்களின் எதிரியான மோடியை தூக்கியெறிவதுதான் தேவையே ஒழிய, அவரை பேசவைத்து அழகுபார்ப்பது அல்ல. அதற்கு நாடாளுமன்றத்தை முடக்குவது வழிமுறையல்ல. மக்கள் போராட்டங்களால் நாட்டை முடக்குவதே வழி!


வாசு

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!

மோடியே சொல்வதைப் போல, பாசிஸ்டுகள் “சிக்ஸர் அடிக்கும்” மைதானம்தான் நாடாளுமன்றம்!

நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் அதை மற்றொருமுறை உறுதிசெய்துள்ளது!

ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய விவகாரம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் படிப்பினை இருக்கும்போது, மோடி வாய் திறக்க வேண்டும் என்று மூன்று மாத காலமாக எதிர்க்கட்சிகள் செய்தவை எல்லாம் தங்களது ஹீரோயிசத்தை காட்டும் முயற்சியே!

பாசிஸ்டுகளை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தை முடக்குவது அல்ல, நாட்டை முடக்குவதே தீர்வு!

புதிய ஜனநாயகம்
11.08.2023

ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் | தோழர் புகழ்

ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நாங்குநேரி: தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் | மக்கள் அதிகாரம்

11.08.2023

நாங்குநேரி : பெருந்தெரு,
தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது தாக்குதல், முதியவர் இறப்பு !
இனியும் இதை அனுமதிக்க முடியாது!

பத்திரிகை செய்தி

நெல்லை மாவட்டம், நாங்குநேரி, பெருந்தெருவைச்சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச்  சேர்ந்த மாணவன் சின்னதுரை. அவருடன் படித்து வரும் ஆதிக்க சாதிவெறி கொண்ட மாணவர்கள் தொடர்ச்சியாக சின்னத்துரை மீது  வன்கொடுமை செயல்கள் செய்து வந்துள்ளனர்.

இதனால் பாதிப்படைந்த அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை கண்டறிந்த அந்த மாணவனின் தாய்,  பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதிவெறி மாணவர்களை கண்டித்துள்ளார்.

ஆதிக்க சாதிவெறி மாணவர்களோ இரவு 10 மணிக்கு சின்னதுரையின்  வீட்டுக்குள்  புகுந்து  சின்னதுரையையும் அவரது தங்கையையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர். இதை தடுக்க வந்த ஒரு முதியவரும் இறந்து போய் உள்ளார். சின்னத்துரை உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

படிக்க : 100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்!

இது வழக்கமாக நடைபெற்ற  கொலை முயற்சி அல்லது கொலை சம்பவம் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆதிக்க சாதி வெறி நோய் எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

தங்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பள்ளி மாணவர்கள் இந்த படுகொலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆதிக்க சாதிவெறியிலும் வன்கொடுமை சம்பவங்களிலும் ஈடுபடும் மாணவர்களை கைது செய்வது என்றால் தமிழ்நாட்டில் எத்தனை பேரை கைது செய்வது? பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்போரை ஒழித்துக் கட்டாமல் ஆதிக்க சாதி வெறியை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

ஆதிக்க சாதி சங்கங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அந்த ஆதிக்க சாதி சங்கங்களின் நச்சு கருத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் கைகளில் சாதிக் கயிறு கட்டிக் கொள்வதும் இருசக்கர வாகனங்களில் சாதிய வண்ணம் பூசிக் கொள்வதும் சாதாரண செயல்களாகி விட்டன.

படிக்க : பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு

தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடப்புத்தகங்களில்  அச்சடித்து இருந்தாலும் கூட தீண்டாமையை ஒரு புனிதமான செயலாகவே  ஆதிக்க சாதி வெறியர்கள் கருதி  அதை நிலைநாட்டவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். சமூகநீதி, சமத்துவ நீதியை நிலை நாட்ட கூடிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தீண்டாமையை பின்பற்றுவதும் தீண்டாமையை அனுமதிப்பதும் சமூகக் குற்றமாக இனங்காணப்பட வேண்டும். தீண்டாமை குற்றங்களில் ஈடுபடுவோரை மக்களே  சமூகப் புறக்கணிப்பு செய்யும் வகையில் தொடர்ச்சியான பிரச்சாரங்களையும் செயல்களையும் நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்!

செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் நியூயார்க் நகர வீதிகளில் போராட்டத்தில் குவிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா உலகமே ஸ்தம்பித்துள்ளது. நேற்றோடு (09/08/2023) இப்போராட்டம் நூறு நாட்களைக் கடந்துவிட்டது.

ஹாலிவுட்டில் பணிபுரியும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிலாளர் சங்கமான ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவின் (WGA) உறுப்பினர்கள், மோஷன் பிக்சர் மற்றும் டெலிவிஷன் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்புக்கு (Alliance of Motion Picture and Television Producers – AMPTP) எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். வேலைநிறுத்தம் முடிவு பெறும்வரை WGA-இன் எந்த உறுப்பினரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு புதிய ஸ்கிரிப்ட்களை எழுதப் போவதில்லை என்று கூறியுள்ளனர். WGA-வில் கிட்டத்தட்ட 11,500 எழுத்தாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறிவரும் இந்த உலகச் சூழலில் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப அவர்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களங்களை உருவாக்கும் வேலை கடுமையான பணிச்சுமையை கோரும் நிலையில், இதுவரை அவர்களுக்கான வேலை நேரங்கள் முறைப்படுத்தபடவில்லை. இத்துறையில் மற்ற கலைஞர்களைக் காட்டிலும் தங்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது எனவும் போதிய மதிப்பும் கிடைப்பதில்லை என்றும் சில ஆண்டுகளாகவே கதை ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.

இதனையொட்டி தயாரிப்பு நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். அதனை தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடந்த 100 நாட்களைக் கடந்து போராடி வருகின்றனர். ஆனால், தயாரிப்பு நிறுவனங்களோ இவர்களின் கோரிக்கையை மதிக்காமல் கதை ஆசிரியர்களே இனித்தேவையில்லை என்ற விதத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டன. உதாரணமாக, அண்மையில் மார்வெல் நிறுவனம் வெளியிட்ட “சீக்ரெட் இன்வேஷன்” (Secret Invasion) சீரிஸின் தொடக்கத்தில் வரும் காமிக் வரைபடங்கள் AI மூலமாக வரையப்பட்டதே.


படிக்க: ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்


இது போன்ற காரணங்களாலேயே 100 நாட்களைக் கடந்து போராட்டம் தொடர்கிறது. ஆனால், ஊதியம் போன்ற கோரிக்கைகளில் தற்காலிகமாக உடன்பட்டாலும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்று தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் AI அபாயம் குறித்து பல விழிப்புணர்வு வேலைகளிலும் ரைட்டர் கில்ட் அமைப்பு தொடர்ச்சியாக பிரச்சாரப் பணியை செய்து வந்துள்ளது. இதன் விளைவாக சாக் ஆஃப்ட்ரா (SAG-AFTRA) என அழைக்கப்படும் 1,60,000 உறுப்பினர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் சங்கமும் ரைட்டர் கில்ட்-க்கு ஆதரவாக களம் இறங்கியது.

நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் முன்பு ஆயிரக்கணக்கில் கூடி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தப்படுகிறது. இதை நியூயார்க் நகர சபை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல சிறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி, அமேசான், பாரமவுண்ட் மற்றும் என்.டி.சி.யு, யுனிவர்சல் உள்ளிட்ட அலுவலகங்கள் முன்பு முற்றுகையிட்டு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

நூறு நாட்களைக் கடந்து போராடும் கதை ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுதிய கதைகளில் திருத்தம் செய்ய முடியாமல் ஹாலிவுட் சினிமா நெருக்கடியில் இருக்கிறது. எழுத்தாளர்களை ஆதரித்து நடிகர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆன்லைன் வெப் சீரியல் உள்ளிட்ட எந்த நிகழ்வும் வெளிவராமல் ஹாலிவுட்டே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.


படிக்க: செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !


இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், தயாரிப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக பின்வாங்க கூடும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியை எப்படி புறக்கணிப்பது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிகழ்வையொட்டி சன் டி.வி வெளியிட்ட செய்தி தொகுப்பில், “ஆரம்ப காலம் தொட்டே அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஹாலிவுட் சினிமா இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. அதை எப்படி புறக்கணிப்பது?” என்று கூறி தயாரிப்பாளருக்கான வர்க்க பாசத்தை காட்டிக்கொண்டது.

ஆனால், தகவல் தொழில்நுட்பம், பத்திரிக்கை, வணிகவியல் துறை, சினிமா என அனைத்திலும் ஊடுருவிவரும் AI தொழில் நுட்பத்தின் விளைவால் கோடிக்கணக்கில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் நிலையிலிருந்து இதைப் பார்க்க வேண்டும்‌.

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தான் மனித குலத்தை இடையறாது முன்னேற்றியுள்ளது என்ற போதிலும், இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த நவீன சமுதாயத்தில் பெருமுதலாளிகளின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை மாற்றி ஒரு சோசியலிச சமுதாயத்தை அமைப்பதன் மூலம் தான் அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த முடியும்.


கலை

பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு

டந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை!

  • கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14.56 இலட்சம் கோடிக்கான வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
  • ஏமாற்றும் உள்நோக்கம் கொண்ட கடனாளிகளது ( Willful defaulters) பட்டியலை வெளியிட அரசும், ரிசர்வ் வங்கியும் மறுப்பது ஏன்?
  • பொதுச்சொத்தை களவாடிய கார்ப்பரேட் கனவான்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
  • கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 12 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் புதிய கடன் தரப்பட்டது ஏன்?

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.

நன்றி : புதிய தொழிலாளி

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!

ந்த மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிராமப்புற வளர்ச்சித் துறை (rural development) அமைச்சர் கிரிராஜ் சிங் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் குறித்து விவாதத்தில் ஒரு தகவலை தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுகின்ற 34 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வேலைக்கான அடையாள அட்டைகளை (job card) பட்டியலில் இருந்து நீக்கி உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் (2022-2023) சுமார் 61 லட்சம் வேலைக்கான அட்டைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 247 சதவீதம் அதிகமாகும்.

இறந்துவிட்டவர்கள், நகரங்களுக்கு குடிமாறி போய்விட்டவர்கள், சரியான அடையாள ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் போலி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் என்று ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு நீக்கிக் கொண்டு தான் வருகிறார்கள். இருப்பினும் இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி 14.2 கோடி பேர் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது அதிலிருந்து தான் ஐந்து கோடி அடையாள அட்டைகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது மோடி அரசு. சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும்.

முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்போது நிதி அமைச்சராக இருந்த பா.சிதம்பரம், அந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை இதே ரூ.60,000 கோடி தான்.


படிக்க: நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !


ஒருபுறம் பட்ஜெட்டில் திட்டத்திற்கான நிதியை குறைத்து விட்டு மறுபுறம் பயனாளர்களுக்கான கூலியை உயர்த்தி இருக்கிறார்கள். இந்தத் தொகையைக் கொண்டு இத்திட்டப் பயனாளர்களுக்கு வெறும் 40 நாட்களுக்கு மட்டுமே கூலியை கொடுக்க முடியும். உண்மையில் ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் என்றால் பட்ஜெட்டில் ரூ.2.72 லட்சம் கோடி ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால், இதிலும் மோசமான நிலைமை என்னவென்றால் ஒதுக்கீடு செய்துள்ள இந்த குறைந்தபட்ச தொகையை கூட உரிய முறையில் மாநில அரசுகளுக்கு கொடுக்காமல் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,600 கோடியை எட்டு மாதங்களாக பாக்கி வைத்திருக்கிறது இந்த மோடி அரசு. இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் இவற்றையெல்லாம் சாக்காக வைத்துக் கொண்டு சகட்டுமேனிக்கு வேலைக்கான பட்டியலில் இருந்து பயனாளர்களின் பெயர்களை நீக்கி விடுகிறார்கள்.

1990-களில் தனியார்மய தாராளமய கொள்கைகள் அமல்படுத்தபட்ட பிறகு 2000-ஆவது ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாயம் அழிந்து விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசு 2006-ஆம் ஆண்டு இந்த 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தது. இந்தியாவைப் பற்றி மோடி அரசு உலகின் மூன்றாவது பொருளாதாரம் என்று என்னதான் பீற்றிக் கொண்டாலும் பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்னவோ இந்த 100 நாள் வேலையை நம்பித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களின் உயிரை மட்டும் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு குறைந்தபட்ச ஏற்பாடு என்பது தான் இந்த 100 நாள் வேலை திட்டம். இது கிராமப்புறங்களில் வாழும் முதியோர்கள், யாருமற்றவர்கள் உள்ளிட்டு ஏதுமற்ற வாழ வழியற்ற மக்களின் கைகளில் நேரடியாக பணத்தைக் கொண்டு போய் சேர்க்கிறது. இந்தத் திட்டத்தை தான் கைவிட துணிகிறது இந்த மோடி அரசு.


படிக்க: நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?


ஆனால், மக்கள் என்று மோடி அரசுக்கு சிலர் இருக்கிறார்கள்.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்து அதானின் பங்கு மதிப்புகள் சரிவை சந்தித்தபோது எல்.ஐ.சி-யிலும் எஸ்.பி.ஐ-யிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்த மக்களின் பணத்தை ரத்தமும் சதையுமாக கொண்டு போய் கொடுத்து அதானியை காப்பாற்றியது இந்த மோடி அரசு.

அம்பானியின் புதிய மடிக்கணியான ஜியோ புக் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது மோடி அரசு.

அம்பானிக்கும் அதானிக்கும் ஒன்று என்றால் நாட்டையே விற்றுக் கொடுத்து அவர்களைக் காக்க துணியும் இந்த பாசிச கும்பல் தான் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், கிராமப்புறங்களில் உள்ள வாழ வழியற்ற இந்த மக்களால் மோடி அரசாங்கத்திற்கோ கார்ப்பரேட் கும்பல்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. பிறகு ஏன் இவர்கள் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இவர்களின் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு காரணம். இந்த பாசிச கும்பல், உழைக்கும் மக்களை மக்களாகவும் மனிதர்களாகவும் ஒருபோதும் கருதுவதில்லை.

இந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசாங்கம் என்பது அம்பானிக்கும் அதானிக்கும் சேவை செய்யக்கூடியதே தவிர ஒரு போதும் உழைக்கும் மக்களுக்கானதல்ல!!


பாரி

இந்துராஷ்டிரத்தில் இயல்பாக்கப்படும் மதக்கலவரங்களின் உதாரணங்களே மணிப்பூரும் ஹரியானாவும்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பற்ற வைத்த நெருப்பு இன்றுவரை மணிப்பூரில் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஹரியானாவிலும் மதகலவரங்களை அரங்கேற்றி இருக்கின்றனர் காவி கும்பல்கள். நூஹ் மாவட்டத்தில் தற்சமயம் எரிக்கப்பட்ட கார்களும், சூறையாடப்பட்ட கடைகளும் தீக்கிரையாக்கப்பட்ட மசூதிகளும் தான் எஞ்சி இருக்கின்றன. இதுவரை கலவரத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு போலீசு படையினரும் அடங்குவர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட மதக்கலவரம்!

ஆர்.எஸ்.எஸ்-இன் சங்கபரிவாரத்தைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தின் மேவாத் பகுதியில் பிரஜ்மண்டல் ஜலபிஷேக யாத்திரையை ஜூலை 31 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாத்திரை நல்ஹட் சிவன் கோவிலில் இருந்து ஃபிரோஸ்பூர் ஜிர்காவின் ஜிர் கோவிலையும் அதன்பிறகு புன்ஹானா கிருஷ்ணர் கோவிலையும் அடைந்து ஊர்வலம் நிறைவடையும்.

இந்த மத ஊர்வலம் திட்டமிட்டே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான நூஹ் நகரின் வழியாக செல்கிறது. இப்பகுதியை அடைந்த பிறகு காவிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர். குறிப்பாக, “மோனு மானேசர் ஜிந்தாபாத்”, “ஹிந்து மத துரோகிகளை சுட்டுக்கொள்வோம்” என்று முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர். இந்த மோனு மானேசர் என்பவன் தன்னைப் ‘பசு பாதுகாவலர்’ என்று கூறிக்கொண்டு முஸ்லீம்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துபவன். இதனையடுத்து, மோனு மானேசரின் மீது ஆத்திரத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல் வீசினர். இதன்பிறகு இருதரப்பினருக்கிடையில் மோதல் வெடித்துள்ளது.

இதில் காவிக் குண்டர்கள் வாள், தடிகள் மற்றும் குறிப்பாக துப்பாக்கிகளோடு ஊர்வலத்தில் பங்கேற்று இருக்கின்றனர். காவிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீசு படையினர் கொல்லப்பட்டனர். இதுநாள் வரையில் தடிகளை பயன்படுத்தி வந்த காவிகள் இன்று துப்பாக்கிகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.

இதன் பொருள் என்ன? இதன் பொருள் காவிகள் துப்பாக்கிகளால் தான் இனி வரும் ஊர்வலத்தை நடத்துவார்கள் என்பதே. காவிகளின் பலத்தையும் அபாயத்தையும் நாம் இனிமேலும் புரிந்து கொள்ள தவறினால் நமக்கு எஞ்சியிருப்பது மரணம் மட்டுமே.


படிக்க: ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்


நூஹ் மாவட்டத்தை தொடர்ந்து குருகிராம் சோஹ்னா போன்ற பிற பகுதிகளுக்கும் வன்முறை வெடித்தது. குருகிராமில் தான் 22 வயதான இமாம் முகமது சாத் காவி குண்டர்களால் கொல்லப்பட்டார். நூஹ் மாவட்டத்தில் ஊர்வலத்திற்கு முன்பிருந்தே பதற்றமான சூழல் நிலவியது. இந்த பதற்றமான சூழலுக்கு காரணம் மோனு மானேசர்.

யார் இந்த மோனு மானேசர்?

மோனு மானேசர் தன்னை பசு பதுகாவலன் (கெள ரக்சக்) என்று கூறிக்கொள்கிறான். ஹரியானா அரசின் ‘பசு பாதுகாப்பு’ பணிக்குழுவின் உறுப்பினராக இருக்கிறான். பஜ்ரங் தள் அமைப்பின் பசு பாதுகாவலர் பிரிவின் தலைவன். இந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்களை (நசீர் மற்றும் ஜுனைத்) உயிருடன் எரித்து கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளி. ஆனால், இதுவரை மோனு கைது செய்யப்படவில்லை. ஏனென்றால், இவனுக்கு ஆளும் பா.ஜ.க.வின் ஆதரவு உள்ளது. இவன் மத்திய அமைச்சர்களுடனும் (அமித்ஷா, அனுராக் தாக்குர்) உயர் அதிகாரிகளுடனும் எளிதாக புகைப்படம் எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிடுகிறான்.

நசீர் மற்றும் ஜுனைத் கொலை வழக்கில் ராஜஸ்தான் போலீஸ் இவனை தேடி சென்ற போது, ஹரியானா போலீஸ் ராஜஸ்தான் போலீஸிற்கு ஒத்துழைக்காமல் ராஜஸ்தான் போலீஸ் மீதே குற்றப் பத்திரிகையை பதிவு செய்துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். இதிலிருந்தே அவனது செல்வாக்கும் அவன் கைது செய்யப்படாததற்கான காரணமும் விளங்கிவிடும்.

மோனு மானேசர் யூடியூப் சேனலும் முகநூல் பக்கமும் வைத்திருக்கிறான். இந்த பக்கத்தில் இவனும் இவனது கூட்டாளிகளும் பசு கடத்தல்காரர்கள் என ‘சந்தேகிக்கபடுபவர்களை’ (முஸ்லிம்களை) வாகனத்தில் விரட்டி சென்று அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்து விடுவார்கள். அடித்து உதைக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இவனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடுவான். இதற்காகவே இவனை இரண்டு லட்சம் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


ஜுலை 4, 2021 அன்று ஹரியானாவில் நடைபெற்ற ஹிந்து மகாபஞ்சாயத்தில், “சகோதரர்களே நாம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். எனக்கு லவ் ஜிகாத் செய்கிறவர்களது பட்டியலை கொடுங்க. நானும், என் நண்பர்களும் அவர்களை உதைப்போம். நாங்க போலீசுக்கு பயப்படறவங்க இல்லை. ஏன்னா எங்க பெரிய அண்ணன் அங்க உட்கார்ந்திருக்காரு. அவர் பேர் தேவையில்லை. ஆனா, அவரு எங்க பின்னணியில் இருக்கிறார். எவன் லவ் ஜிகாத் பண்றவன்? எவன் நம்ம பொண்ணுங்களை கிண்டல் பண்றவன் சொல்லுங்க பின்னி எடுத்துவிடுவோம். நாங்க இதுல சமரசமே செய்ய மாட்டோம். நம்ம மதத்தின் மேல கைய வைக்கிறவன் மேல நமக்கு சமரசமே இல்லை. ஒரே வழி உதைக்கிறது தான். பேசுவது பயனளிக்காது. அவங்க உதைபட வேண்டியவர்கள். ஜெய் ஸ்ரீ ராம்!” என்று தனது வெறுப்பு பேச்சை பேசியிருக்கிறான். இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பாஜக அரசு. மேலும் இவன் குறிப்பிடும் பெரிய அண்ணன் அமித்ஷா என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

இதே காவி குண்டன் தான் ஊர்வலத்திற்கு முன்பு வீடியோவை வெளியிட்டுள்ளான். அதில், “பிரஜ்மண்டல் யாத்திரை ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா சகோதரர்களும் இதில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ள வேண்டும். நானும் கலந்து கொள்வேன்” என்று அழைப்பு விடுத்திருக்கிறான். இந்த வீடியோ வெளி வந்ததிலிருந்து இஸ்லாமிய சமூகத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தின் தொடக்கப்புள்ளி இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரமும் ஆத்திரமூட்டும் வீடியோக்களும் தான்.

பாதிக்கப்பட்டவர்களையே பலிகடாவாக்கும் பாஜக அரசு!

“குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல” கலவரத்தை நடத்த விட்டு கட்டுப்படுத்த முடியவில்லை என்று கதையளந்து கொண்டிருக்கிறது மோகன்லால் கட்டார் அரசு. பா.ஜ.க.வின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதால, “மத யாத்திரையில் எத்தனை பேர் பங்கெடுக்கப்பார்கள் என்று முன்பே சொல்லவில்லை. சரியான தகவல் இல்லாததால் நிலைமை கட்டுபடுத்த முடியாததாக மாறியது” என்று கதையளக்கிறார். இந்த கலவரம் நடக்க வேண்டுமென்று பா.ஜ.க.வே விரும்பியிருக்கிறது என்பது தான் உண்மை.

ஏனென்றால், இந்து மத ஊர்வலம்  இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குள் செல்ல ஏன் அனுமதிக்க வேண்டும்? மத ஊர்வலத்திற்கு எதற்கு வாள், தடி, துப்பாக்கிகள்? இதனை  கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உளவுத்துறை குருடாகி விட்டதா?  மோனு மானேசர் பங்கெடுப்பாதாக வீடியோ வெளியிட்ட பின் ஏன் அவனை கைது செய்யவில்லை? வீடியோ வெளிவந்த பிறகு பதற்றத்தை தடுப்பதற்கு ஏன் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று இதுபோன்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


படிக்க: ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்


அரசே கலவரத்தை வேடிக்கை பார்த்துவிட்டு 144 தடை உத்தரவு, இணைய முடக்கம், துணை ராணுவப் படைகளை அனுப்புவது என்று கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதே நடவடிக்கை எடுத்து வருகிறது மோகன்லால் கட்டார் அரசு. ஹரியானா அரசாங்கம் மோதல் நடந்த இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில் உள்ள மாவட்டத்தின் டாரு நகரில் 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைகளை இடித்திருக்கிறது. ஆகஸ்ட்-6ம் தேதி கல்வீசிய கட்டிடத்தை இடித்திருக்கிறது. ஆனால் இதுவரை துப்பாக்கிகளை உபயோகித்த காவிக் குண்டர்களது வீடுகள் இடிக்கவில்லை; இடிக்கப்படவும் மாட்டாது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆர்.எஸ்.எஸ் – பாஜக இதுபோன்ற கலவரங்களை திட்டமிட்டு நடத்தும். இது அவர்களுக்கு தேர்தலில் பயனளித்தாலும் தேர்தலுக்காக மட்டுமே கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்தாது. நாஜி ஜெர்மனியில் யூதர்கள் எவ்வாறு கொடுமை செய்யப்பட்டார்களோ அதுபோன்றே இந்துராஷ்ட்ரத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் வதைக்கப்படுவார்கள். இந்த காவி பூதத்தை உழைக்கும் மக்கள் சேர்ந்து விரட்டுவதை தவிர வேறு வழியில்லை.


ஹைதர்

ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்

ஜூலை 31 அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தள் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளால் தொடங்கப்பட்ட மதவெறி கலவரம் குருகிராம் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் தாக்கப்பட்டன. குருகிராம் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கலவரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் காவி குண்டர்களால் மிரட்டப்பட்டுள்ளனர்.

இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை இக்காணொலிகள் எடுத்துக்காட்டுகின்றன..

ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்

0

ரியானாவின் நூஹ் மாவட்டத்தில், ஜூலை 31 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் கலவரத்தைத் தூண்டும் நோக்கோடு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. தங்களின் திட்டத்திற்கேற்ப அந்நாளில் கலவரத்தையும் அரங்கேற்றின.

ஹரியானா மாநிலத்திலேயே முஸ்லீம்கள் பெரும்பான்மை வகிக்கும் ஒரே மாவட்டம் நூஹ் தான். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நூஹ் மாவட்டத்தில் வசிக்கும் 2,80,000 பேரில் கிட்டத்தட்ட 77 சதவீதம் மக்கள் முஸ்லீம்கள். இந்தியா – பாகிஸ்தான் வகுப்புவாத பிரிவினையின் போது கூட மதக்கலவரங்கள் நடக்காத பகுதியாக நூஹ் விளங்கியது.

இந்துக்களும் முஸ்லீம்களும் நல்லிணக்கமாக வசித்துவந்த பகுதியான நூஹ்-இல் தான் தற்போது இந்த இந்துத்துவ கும்பல்கள் கலவரத்தை நடத்தியுள்ளன.

மத சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் தொடர்ந்து தாக்கிவரும் இத்தகைய காவி பாசிச கும்பல்கள் கலவரங்களை நடத்துவதும் அதற்கு அரசு உறுதுணையாக இருப்பதும் பாசிச பா.ஜ.க ஆட்சியில் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன.

இந்துத்துவ கும்பல்கள் நடத்திய தாக்குதலின் பதட்டம் தணிவதற்குள் அரசு அதன் பங்கிற்கு தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து 150-க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை போலீசு கைது செய்தது. இதனால் அச்சமடைந்த பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.


படிக்க: மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!


அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது.  இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

தகரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஆன சிறிய கடைகளை இடிக்க புல்டோசர் ஓட்டுநர் தயங்கியபோது, ​​அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவரிடம், “இவையெல்லாம் அந்த யாத்திரையின்போது கற்களை வீசி வன்முறையைத் தூண்டியவர்களின் கடைகள். யாருக்கும் கருணை காட்டவேண்டாம். அவற்றை முழுவதுமாக அழித்துவிடு,” என்று கூறியுள்ளார். அரசு எந்திரம் பாசிச மயமாகி வருவதற்கு இது தக்க சான்று.

மேலும், வி.எச்.பி – பஜ்ரங் தள் காவி குண்டர்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து கலவரத்தை அரசு தொடர்கிறது என்பதையே இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

”சட்ட ஒழுங்கு பிரச்சினை என்ற போர்வையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அரசால் நடத்தப்படுகிறதா என்னும் கேள்வி எழுகிறது” என்று கூறி நான்கு நாட்களாக ஹரியானா அரசால் நடத்தப்பட்டு வந்த இடிப்பு நடவடிக்கைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7 அன்று தடைவிதித்தது.

ஹரியானாவில் எம்.எல்.கட்டார் அரசால் முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதற்கு முன்மாதிரிகள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசும் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் அரசும் முஸ்லீம்களின் வீடுகளையும் கடைகளையும் அகற்றி மதவெறித் தாக்குதல்களை நடத்துவதில் முன்னுதாரணமாக இருந்துள்ளன.


படிக்க: ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்


’புல்டோசர் பாபா’ என்று சங்கிகளால் அழைக்கப்படும் யோகி ஆதித்யநாத் ”ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பார்களா?” என்று கூறி முஸ்லீம்கள் மீதான தனது மதவெறித் தாக்குதலை நியாயப்படுத்தினார். அதேபோல் ‘புல்டோசர் மாமா’ என்று அழைக்கப்படும் சிவராஜ் சிங் சௌகான் “பேய்களுடன் சமரசம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை” என்று தனது முஸ்லீம் வெறுப்பைக் கக்கினார். உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’என்று கூறி அங்குள்ள மசார்கள் (முஸ்லீம் கல்லறைகள்) புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் புல்டோசர் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. சங்கிகள் புல்டோசர் ஊர்வலம் நடத்தி சிலாகித்துக் கொள்ளும் அளவிற்கு புல்டோசர் என்பது முஸ்லீம் வெறுப்பின் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால் ஹரியானாவில் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசின் துணைகொண்டு சங்க பரிவார கும்பலால் மதவெறிக் கலவரங்கள், தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இச்சூழலை எதிர்கொள்ளும் பொருட்டு மக்களைக் களப் போராட்டத்திற்குத் தயார் செய்வதே பாசிச எதிர்ப்பு சக்திகளின் உடனடிக் கடமையாகும்.


பொம்மி

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஆகஸ்ட் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நேற்று குஜராத், இன்று மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வை தடை செய்!
♦ அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
♦ பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?
♦ உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்
♦ கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!
♦ தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?
♦ வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!
♦ கழன்றது முகமூடி : பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்! – பகுதி 2
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.ழு.வின் 25 ஆண்டுகள்! – இறுதி பகுதி