privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅவர்களோடு தொடர்பு வேண்டாம் - ஜோதிஜி திருப்பூர்

அவர்களோடு தொடர்பு வேண்டாம் – ஜோதிஜி திருப்பூர்

-

என் பார்வையில் வினவு – 23 : ஜோதிஜி திருப்பூர்

வினவு தளத்தில் வந்த பாட்டில் தேசம் என்ற கட்டுரையை என் கூகுள் ப்ளஸ் பகிரந்திருந்தேன். அதைப்படித்த ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.

“சில பதிவுகளை படிக்கும் போது மிகுந்த மனச்சோர்வு வருகிறது. ஆனா படிக்காம இருக்கிறது நல்லதில்லைன்னும் தோனுது, நாம கண்ணை மூடிகிட்டே இருக்கிறது நமக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்னாலும், இது கொடுக்கிற மன அழுத்தம் ரொம்பவே அதிகமாயிருக்கு :-(((((((((((”

questionsஒவ்வொரு முறையும் வினவு தளத்தை படித்து முடித்தவுடன் என் மனதில் வந்து போகும் எண்ணங்களை அப்படியே அவர் எழுதியது போலவே இருந்தது.

நாள்தோறும் வினவு தளத்தின் உள்ளே சென்று படித்து முடித்து வெளியே வரும் போது மனம் முழுக்க அங்கலாய்ப்பும், உடம்பு முழுக்க பூச்சிகள் ஊர்வது போலவும் இருக்கும். காத்திரமான கட்டுரைகள் தரும் தாக்கம் அடுத்த இரண்டு நாட்களுக்கு மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். அடுத்தடுத்து தாக்கும் தினசரி வாழ்க்கை அதையும் மாற்றிவிடும்.

இன்று வரையிலும் இடைவிடாத இந்த போராட்டம் என்னுள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனாலும் வினவு தளத்தை வாசிப்பதை நிறுத்த முடியவில்லை. ஒரு வாரம் முழுக்க வினவு பக்கம் செல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் அன்றாடம் காணும் காட்சிகள் ஏதோவொரு வகையில் வினவின் உள்ளே இழுத்து வந்து நிறுத்தி விடுகின்றது.

இன்று வரையிலும் வினவு என்பது எனக்கு அமுதசுரபி. இந்த இடத்தில் நிபந்தனைக்கு உட்பட்டது என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாம்பை கண்டு பயப்படுவதை விட வலையுலகில் வினவு கண்டு பயந்தவர்களை நான் அறிவேன். ஏன் அங்கேயெல்லாம் போய் தொடர்பு வச்சுருக்கீங்க? என்று என்னை பலரும் கேட்டுருக்கின்றார்கள். இன்று வரையிலும் வினவு தளத்தில் என் சொந்த பெயரில் தான் கருத்துக்களை எழுதுகின்றேன்.

எனக்கு வினவு என்ற வார்த்தை மனதில் வரும் பொழுதெல்லாம் கூடவே அதியமான் என்ற வார்த்தையும் சேர்த்து தான் யோசிக்க முடிகின்றது. அவர் வினவு தளத்தில் கம்பு சுற்றும் அழகை ரசிக்க வந்தவன் அப்படியே தளத்திற்கு தீவிர வாசகனாக மாறிப்போனேன். எந்த சமயத்தில் வினவு தளம் எப்போது எனக்கு அறிமுகமானது என்று இப்போதும் கூட என் நினைவில் இல்லை. ஆனால் அறிமுகமானது முதல் தினந்தோறும் ஒரு முறையாவது உள்ளே நுழைந்து எதையோ ஒன்றை தேடி படித்துக் கொண்டே தான் வருகின்றேன்.

வாழ்க்கையில் இரண்டு விசயங்களை முக்கியம் என்கிறார்கள்.

நல்லதே யோசி. நல்லதே நடக்கும். ஆனால் எதார்த்தம் சொல்லும் வாழ்க்கை வேறுவிதமாகவே உள்ளது. இங்கே நல்லது அத்தனையும் நடக்கின்றது. அது பணம், பதவி, அதிகாரம் இருப்பவர்களுக்கும் மட்டுமே நடக்கின்றது. விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே போராடிக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கும் பொழுது மனதில் இருந்த அத்தனை நம்பிக்கைகளும் நாள்தோறும் ஒவ்வொன்றாக கழன்று கொண்டேதான் வருகின்றது. வல்லரசாக மாற நினைக்கும் இந்திய ஜனநாயத்தின் அத்தனை இருட்டுப் பக்கத்தையும் வினவு தள எழுத்துக்கள் அடித்து துவைத்து காயப் போட்டு விடுகின்றது. எனக்கும் நிஜவாழ்க்கைக்கும் உண்டான இடைவெளியை இட்டு நிரப்புவதே வினவு தளம் தான்.

நுகர்வு கலாச்சாரத்தில் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற சராசரி எண்ணம் கொண்ட என்னை ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள ஓராயிரம் அரசியல் அக்கிரம அராஜக நிகழ்வுகளை எவ்வித சமரசமின்றி எழுத்தாக்கி இது தாண்டா நீ காணும் உலகம் என்பதாக வினவு தளம் காட்டிக் கொண்டேயிருகின்றது.

திரைப்படம் மற்றும் சுயசொரிதல் என்ற இரண்டுக்கும் இடையே இருந்த வலையுலகத்தை மாற்றுப்பாதையில் கொண்டு சென்று வலையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த வினவு தள தோழர்களுக்கு என் வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன். வலையுலகத்தின் வீச்சென்பது மிகக் கொஞ்சமே என்று சொல்பவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் வினவு தளத்தை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாசித்துள்ளார்கள் என்பதை வைத்தே வினவின் பெருமையை இனி நான் என்ன எழுதமுடியும்?

வினவு தளத்திற்கு இரண்டு விதமான வாசக வட்டம் உண்டு.
வினவு தளத்தை படிப்பதை யாரிடமும் காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள்.
வினவு தளத்தை மட்டுமே படிப்பவர்கள்.

ஆனால் இன்று வெகுஜன இதழ்களுக்கு சவாலாக இருக்கும் அளவிற்கு வினவு தளத்தின் வீச்சு பிரமிப்பாய் உள்ளது.

இங்கே ஏதாவது மாற்றம் நடந்து விடதா?? என்ற சிறுபான்மை கூட்டத்திற்கும் இனி இங்கு எந்த மாற்றத்திற்கும் வழியில்லை? என்ற பெரும்பான்மையினருக்கும் இடையே உள்ள போராட்டங்கள் அனைத்தையும் வினவு தளம் தான் எனக்கு ஆசானாக கற்பித்துக் கொண்டு வருகின்றது. நான் என்ன செய்ய முடியும்? என்பதை விட வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதுபோன்ற அர்த்தமுள்ள விசயங்களை வினவு தளம் எனக்கு கற்றுத்தந்துள்ளது.

போலி உபதேசிகளை மட்டுமே கொண்டு செயல்படும் வெகுஜன இதழ்களை வாரந்தோறும் நூறு ரூபாய்க்கும் மேலே வாங்கிக் கொண்டு வந்தவனுக்கு இன்று மாதந்தோறும் நூறு ரூபாய்க்கு மட்டுமே வாங்கும் அளவிற்கு இதழ்களின் உபதேச திகட்டல் அலர்ஜியாகி விட அனைத்தும் இங்குண்டு என்று புதிய புதிய வாசிப்பாளர்களை வினவு வரவழைத்துக் கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட கட்டுரைகளால் வாசிப்பவர்களை திக்குமுக்காடவும் வைத்துக் கொண்டிருக்கின்றது.

வலையில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டவுடன் அவர்களை எழுத்தாளர்கள் என்கிறார்கள். ஆனால் உருப்படியாக 30 ஆண்டுகளுக்கு மேல் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை எப்படி அழைப்பது? சூப்பர் ஸ்டார் என்பது போல சூப்பர் எழுத்தாளர் என்று அழைப்பதா?

ஆனால் இன்று எனது டாலர் நகரம் என்ற புத்தகத்தின் மூலம் நானும் ஒரு எழுத்தாளர் என்று அறியப்பட்டதற்கு முக்கியமும் முழு முதற் காரணமும் வினவு தளமே. திருப்பூரில் சாயப்பட்டறைகள் குறித்து நான் எழுதிய திருப்பூர் சாயப்பட்டறைகள் வண்ணமா? அவலமா என்ற பெயரில் வெளி வந்த பிறகு தான் திருப்பூர் குறித்து அதிகமாக எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பிறகு எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இன்று வெற்றி பெற்றுள்ள டாலர் நகரம் என்ற புத்தகம்.

வினவு தளத்தில் எனது பெயர் போட்டு கட்டுரை வந்த போது நெருங்கிய நண்பர்கள் இவ்வாறு கேட்டார்கள். ஏற்கனவே புனைப்பெயர்களில் எழுதியதும் நீங்க தானா? என்றார்கள். இது எனக்கு பெரிய அங்கீகாரமாகத் தெரிந்தது. இன்று உங்கள் பார்வையில் வினவு என்று எழுதக் கேட்ட பிறகு இனி வேறெந்த அங்கீகாரமும் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

காரணம் தொடக்கம் முதல் வினவு என்றால் முகமூடிகளின் உலகம் என்றே பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அங்கே மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அவ்வாறு இருப்பவர்கள் உள்ளே செல்ல முடியாது என்பது போன்ற பல கருத்துக்களை கொண்டுள்ளனர். இதற்கு மேலாக பின்னூட்டத்தில் நாம் நினைக்கும் கருத்தை எழுதி வைத்தால் கும்பலாக வந்து தாக்கத் தொடங்கி விடுகின்றார்கள். ஒருவருக்கும் முறைப்படியான முகவரி இருக்காது போன்ற பல குற்றச்சாட்டுகள் இன்று வரைக்கும் உண்டு.

இதன் காரணமாகவே நான் அங்கே செல்வதில்லை என்பது போன்ற பல விமர்சனங்களை நான் கேட்டுள்ளேன்.

கணினியின் முன்னால் அமர்ந்து படிப்பதற்கும் புத்தகம் வழியே ஒரு கட்டுரையை படிப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. எனவே சிறிய அளவில் கட்டுரையாக்கம் இருந்தால் மட்டுமே அது பலருக்கும் சென்றடையும் என்கிற பொதுப்புத்தி வலையுலகில் உள்ளது. எனக்குத் தெரிந்து அதை பெரிய அளவில் உடைத்த பெருமை வினவு தளத்திற்கே சேரும்.

குறிப்பாக சங்கரியின் நாப்கின் பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த போது 600 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலே அலறும் பலரும் அதை முழுமையாக படித்து முடித்து தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்கள். வால்மார்ட் பற்றி எழுதிய கட்டுரை நிச்சயம் மராத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு சமமான ஒன்று. ஆனால் முதல்வரி முதல் கடைசி வரைக்கும் படித்து முடித்துவுடன் தான் நகர எண்ணம் வந்தது.

காரணம் கற்பனைகள் சிறிது நேரம் தான் குதுகலத்தை கொடுக்கும். ஆனால் நிஜவாழ்க்கை தரிசனங்கள் நமது நேரத்தை திருடுவதில்லை. அதற்கு மேலாக படிப்பவனுக்கு சொல்ல வந்த விசயத்தை அக்குபஞ்சர் சிகிச்சை போல குத்துவது தெரியாமலே குத்தல் நிறைந்த வார்த்தைகளால் இட்டு நிரப்பவுது வினவு தளத்திற்கு கைவந்த கலை.

ஆனாலும் வினவு தளத்திடம் நான் கேட்க விரும்பும் கருத்துக்களையும் இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

1. புரட்சியின் மூலம் மட்டுமே இந்தியாவில் பூபாள ராகம் கேட்கும். மக்கள் ஜனநாயகம் அர்த்தமற்றது என்பதாகத்தான் உங்களின் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் படிப்பவனுக்கு சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்து எண்ணிப்பார்த்தாலும் ஒரு கை விரலுக்குள் கூட அடக்க முடியாத புரட்சியாளர்கள் தான் கடைசி வரைக்கும் மக்களின் சேவைக்கு பாடுபட்டுள்ளார்கள். 90 சதவிகிதம் பழைய குருடி கதவை திறடி கதையாகத்தான் உள்ளது. ஏறக்குறைய பேய்க்கு பயந்து பிசாசுக்கு வாக்கப்பட்ட கதையாக இருக்கும் போது எவ்வித புரட்சியின் மூலம் உண்மையாக மக்கள் நலம் இங்கே பாதுகாக்கப்படும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்??

2. உங்கள் பார்வையில் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அடிவருடி. மோடி என்றால் மதவாதி. கம்யூனிஸ்ட் என்றால் போலி கம்யூனிஸ்ட்டுகள். மூன்றாம் அணி என்பது ஒவ்வொரு சமயத்தில் மூக்குடைபட்டு சந்தர்ப்பவாதிகளாக மாற தயாராக இருப்பவர்கள். வேறு யார் தான் இங்கே மிச்சம் இருக்கின்றார்கள். உங்களின் மாற்றுத் தீர்வை எழுதி வைக்க வேண்டியது தானே?

3. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிக்கசாதிகளின் மூலம் உருவாக்கும் அச்சுறுத்தல்களை, கிடைக்கப்படாத நியாயங்களை, அவர்களின் தரப்புகளை மட்டுமே இங்கே எழுதுகின்றீர்களே? மற்ற அத்தனை பேர்களும் இங்கே சர்வ சுகத்துடன் வாழ்வதாக நினைக்கின்றீர்களா?

4. இளவரசன் விசயத்தில் காட்டிய உங்களின் அக்கறையும், காணொளி காட்சியும் வலையுலகில் எவரும் செய்யாத, நினைத்தே பார்க்க முடியாத ஆச்சரியம். ஆனால் நீங்கள் ஒரு பக்க தரப்புகளை வைத்து மட்டுமே இன்று வரையிலும் பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். பாதிக்கப்படுகின்றார்கள் என்பது எத்தனை தூரம் உண்மையோ அதற்கான காரணத்தையும் நாம் பேச வேண்டும். தொடக்கத்தில் பார்ப்பனீயம் என்றோம். இன்று பா.ம.க என்கிறோம். நாளை மற்றொரு கட்சியை சொல்லப்போகின்றோம்? அப்படி என்றால் அரை நூற்றாண்டு காலம் கிடைத்த சலுகைகள் யாருக்குச் சென்றது? யார் பலன் பெற்றார்கள்? முழுமையான உரிமைகள் கிடைக்க வில்லை என்றால் அதன் உண்மையான காரணம் என்ன? அதனைப் பற்றி எங்கேயாவது நடுநிலையோடு எழுதியிருக்கீங்களா?

5. நான் இன்று வரையிலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவன். நீங்கள் தேர்தல் என்பது ஓட்டு பொறுக்கிகளின் கூடாரம் என்கிறீர்கள். எத்தனையோ ஆதாரங்களை வைத்து எழுதும் நீங்கள் தகவல் அறியும் சட்டத்தை வைத்து எதை எதை பெற்றுள்ளீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா? குறிப்பாக இட ஒதுக்கீடு மூலம் கிராமப் புறத்து பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்களுக்கு உயர்படிப்பு, தொழில் நுட்ப படிப்புகள் கிடைத்துள்ளது போன்ற தகவல்களை எழுத முடியுமா?

6. தென்மாவட்டத்தில் உள்ள சாதிக்கலவரங்களுக்கு ஆதிக்கசாதிகள் தான் முக்கிய காரணம் எனில் இதை வைத்தே பிழைப்பு வாதம் நடத்துபவர்களை ஏன் சுட்டிக்காட்ட தயங்குறீர்கள்? அப்படி நடக்கவில்லை என்பதை ஆதாரபூர்வத்தோடு எழுத முடியுமா?

7. நாங்கள் பாதிக்கப்படுகின்றோம் என்பவர்கள் இடையே அவர்களுக்குள்ளும் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்? அதைப்பற்றி உங்களால் தைரியமாக எழுத முடியுமா? இந்த மக்களை வைத்து ஓட்டரசியல் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களால் இந்த மக்களுக்கு இன்று வரையிலும் என்ன தான் லாபம் கிடைத்தது? ஏன் இதைப்பற்றி நீங்க எழுதுவதில்லை.

சாதி, மதம் விசயங்களில் நீங்கள் காட்டும் அக்கறை தமிழ்மொழியின் வீழ்ச்சி, அதற்கு காரணமானவர்களைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்பதோடு அதைப்பற்றி அக்கறைப்படுவதும் இல்லை. அரசாங்க பள்ளிக்கூடங்கள் பற்றியும் தற்போது செயல் இழந்து போய் நிற்கும் தமிழ்நாட்டின் கல்வித்துறை குறித்தும் காத்திரமான கட்டுரைகள் எதையும் நான் படித்த நியாபகம் இல்லை. கலைஞர் என்றால் கலாய்ப்பதற்குரியவர். ஜெ என்றால் பம்மிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா?

சமூகம், பொருளாதாரம், வளர்ந்த நாடுகள் நம்மை பிச்சைக்காரனாக மாற்றும் உத்திகள், உள்ளூர், இந்திய, உலக அரசியல் என்று கலந்து கட்டி பொளந்து கட்டும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளுடன் என்னையும் அழைத்து எழுத வேண்டும் என்கிற கருத்து சுதந்திரத்தை மதிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

உங்கள் தளத்தை, கட்டுரையில் வரும் நடையை விரும்பும் எனக்கு அது தெரிவிக்கும் ஒரு பக்கச் சார்பை வெறுக்கும் என்னால் முழுமையாக புறக்கணிக்க முடியாத அளவிற்கு உங்களின் சேவை உள்ளது.

ஒரு முதிர்ந்த ஜனநாயகத்திற்கு நூறு ஆண்டுகள் தேவை என்கிறார்கள். எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்தியாவில் மாற்றம் வரும் என்றே நம்புகின்றேன். இன்னும் 35 வருடங்களில் நான் இருப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் என் குழந்தைகளைப் போல பலரும் இந்த மாறுதலுக்கு எவரெல்லாம் உழைத்தார்கள் என்று ஆவணங்களை புரட்டிப் பார்க்கும் போது நிச்சயம் அதில் வினவு தளம் முதன்மையாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

நட்பும் நன்றியும் சேர்த்து

ஜோதிஜி திருப்பூர்
http://deviyar-illam.blogspot.in/