privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஒரு விபத்து : அனுபவமும், படிப்பினைகளும்!

ஒரு விபத்து : அனுபவமும், படிப்பினைகளும்!

-

டந்த வாரம் வேலை முடிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையை கடந்த பொழுது, பரபரப்பான அந்த சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்தது. அங்கு சிறு கூட்டம் கூடியிருந்தது. 24 வயதுடைய இளைஞனை சாலையோரமாய் கிடத்தியிருந்தார்கள். உடம்பில் எங்கும் அடியில்லை. பின்னந்தலையில் அடிபட்டு, ரத்தம் வந்திருந்தது. காதில் ரத்தம் வெளிவந்து உறைந்து போயிருந்தது.

சாலை விபத்து
(படம் – இணையத்திலிருந்து, விளக்கத்துக்காக மட்டும்)

பலரும் 108 ஆம்புலன்ஸை அழைத்தார்கள். எல்லா ஆம்புலன்ஸும் பிஸியாக இருந்ததாக சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டேயிருந்தது. ஒருவர் அங்கு கடந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி விசயத்தை சொல்ல, பயணிகளை இறக்கிவிட்டு அந்த பையனை நான்குபேர் தூக்கி போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு நகரந்தார்கள்.

இந்த களேபரத்தில் அந்தப் பையனிடமிருந்து எடுத்த செல்போனை யாரோ சுட்டுவிட்டார்கள். அந்த ஹோண்டா வண்டியில் சைடில் இருந்த பெட்டியில் ஆர்.சி. ஜெராக்ஸ் தாளில் இருந்த ஒரு எண்ணை கண்டுபிடித்து பேசிய பொழுது அடிப்பட்டவருடைய தம்பி பேசினார். உடனே மருத்துவமனைக்கு வரச்சொன்னோம்.

ஆம்புலன்சுக்கு போன் செய்யும் பொழுதே, அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள காவல்நிலையத்திற்கும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். அந்தப் பையனை அவ்வளவு போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பிறகு, காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீசும், போக்குவரத்து காவலர் ஒருவரும் அசமந்தமாய் வந்து சேர்ந்தனர். வண்டியை செந்நீர் குப்பம் எடுத்து செல்வதாய் தெரிவித்தார். அடிபட்டவருடைய செல்லை திருடிவிட்டார்களே என பொதுமக்களில் இருவர் மிகவும் ஆதங்கப்பட்டனர்.

இந்த விபத்தில் கவனிக்கத்தக்கவை :

  • தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து கொண்டிருந்த அந்தப் பையனுக்கு ஒவ்வொரு துளியும் முக்கியமானது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை.
  • 1970-களில் எம்.ஜி.ஆர் படங்களில் படத்தில் இறுதிக்காட்சியில் வருவது போலவே இப்பொழுதும் சாகவாசமாய் போலீசு வந்து சேர்கிறது. வந்தும் கூட எந்தவித பதைபதைப்பும் இல்லை.
  • அம்பத்தூர் தொழிற்பேட்டை என்பது சென்னையில் முக்கியமான தொழிற்பேட்டை. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து வாவின் வரும் வழியில் உள்ள பிரதான சாலையில் தான் விளக்கெரியாமல் கும்மிருட்டாக இருந்தது. இந்த விபத்துக்கு அடிப்படை காரணம் இருட்டுதான். இந்த தொழிற்பேட்டையை பராமரிக்கும் பொறுப்பு AIEMA (AMBATTUR INDUSTRIAL ESTATE MANUFACTURER’S ASSOCIATION) -க்கு தான்! அந்த நாள் மட்டுமில்லை. அதற்கடுத்து வந்த நாட்களும் அங்கு கும்மிருட்டாக தான் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சாலை பராமரிப்பு, பார்க்கிங் பிரச்சனை, கால்வாய் பராமரிப்பு என பல பிரச்சனைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவுகின்றன. அய்மாவின் தொடர்ச்சியான அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ!
  • இதே சாலையில் தான் தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் இயங்கிவருகினறன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பல அடிப்படை பிரச்சனைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தினாலே ஓரளவு நிலைமை சீராகும். செய்வதில்லை.

கவலைதரும் அம்சங்கள் :

  • அந்தப் பையனின் வண்டியில் முன்னாடி உள்ள பம்பர் நன்றாக வளைந்து வண்டியோடு ஒட்டிப் போயிருந்தது. இடித்தது தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போயிருக்கிறான்.
  • ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பொழுது, காப்பாற்ற வேண்டிய வேண்டிய நேரத்தில் செல்லை சுட்டு நகர்ந்த நபர். நுகர்வு கலாச்சாரம் மனிதர்களை இந்த அளவுக்கு சீக்குப்பிடித்த நபராக மாற்றுகிறது.

நம்பிக்கை தரும் அம்சங்கள் :

  • அந்த பையனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் பதறி, மருத்துவமனைக்கு தூக்கி சென்ற மனிதர்கள்.
  • தனது ஷேர் ஆட்டோவில் முழுவதுமாய் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பையனை தூக்கிச் சென்ற அந்த ஆட்டோகாரர்.

இரண்டு மூன்று நாட்கள் சாலையில் கிடத்தப்பட்டிருந்த அந்த பையனின் உருவம் நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தது. நடந்த நிகழ்வுகளை அசைபோடும் பொழுது, எனக்கென்னவோ சமூகம் கூட அந்தப் பையனின் நிலையில்தான் இருப்பதாகப் படுகிறது.

குருத்து