Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!

கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!

-

கூடங்குளம் அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்கூடங்குளம் அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இந்த அழைப்பிதழின் PDF பெற இங்கே அழுத்தவும்

போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல்!

மக்களுடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டு விட்டது!

அணு உலையின் அபாயம் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை!

கேள்வி எழுப்பிய குற்றத்திற்காக அடுக்கடுக்கான பொய்வழக்குகளை தொடுத்துள்ளது!

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய நாட்டுப்பற்றாளர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை இன்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும் போட்டிருக்கிறது தமிழக அரசு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் என்று கூறுவது தேசத்துரோகமாம்!

இ.பி.கோ.120 சதித்திட்டம் தீட்டுவது – இ.பி.கோ.121 அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது – இ.பி.கோ.124 ஏ ராஜத்துரோகம் – இவற்றிற்கு ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வழங்க முடியும்.

இ.பி.கோ.199, 188, 121, 121(A) 123, 124(A), 125, 143, 147, 153(A), 294(b) 341, 342, 353, 447, 500, 505(I), (b) 506(II), 3 Of Ppdl Act, 7(1) (A) CLA Act r\w 120(b) என்ற கடும் குற்றப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூடங்களம் அணு உலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் அனைத்து மக்களுக்குமானது. இந்திய ஆளும் வர்க்கத்தின் அணு குண்டு, வல்லரசு கனவு, மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால்தான் அரசு இயந்திரங்களும் அதன் அடிவருடிகளும் அப்போராட்டத்தை ஒருசேர ஒடுக்க முயல்கிறார்கள். சாலை மறியல் செய்த பெண்கள், சிறுவர்கள், நோயுற்றவர்கள், உள்பட கூட்டப்புளி மக்கள் 178 பேர் மீது தூக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவில் சிறையில் அடைக்கிறார்கள். தலைக்கு இருவர் என 356 பேர் வள்ளியூர் நீதிமன்றம் வந்து ஜாமீன் கொடுத்து பிணையில் வந்தாலும், தினமும் காலையில் கொடும் குற்றவாளிகளைப் போல் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் செய்கிறார்கள். பிணையை தளர்த்த நீதிமன்றம் சென்றால் ஒரு மாதம் கழித்து வாருங்கள் அது எனது கொள்கை என அறிவிக்கிறார்கள். பேருந்து வசதியில்லாத பாதையில் பழவூர் காவல் நிலையத்திற்கு காலை 10-00 மணிக்கு சென்று தினமும் கையெழுத்து போட்டால் பிழைப்புக்கு கடலுக்கு எப்படி செல்வது? குடும்பத்திற்கு கஞ்சி யார் ஊற்றுவது? ஆனால் மக்களின் இப்பிரச்சினைகள் பற்றியும் வாழ்க்கை குறித்தும் அரசு இயந்திரத்திற்கு மயிரளவும் கவலை கிடையாது.

கூடங்குளம் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உட்பட 18 பேர், கூட்டப்புளி ஃபாதர் சுசிலன் உட்பட 30 பேர் மற்றும் முகிலன், சதீஷ் ஆகியோர் நான்கு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 23 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு பிணையில் வந்துள்ளனர். வழக்கம் போல் நக்சலைட் பீதியூட்ட முகிலன், சதீஷ் ஆகியோருக்கு பிணை மறுக்கப்பட்டு சிறையில் வைத்துள்ளனர். உதயக்குமார் உட்பட யாரை வேண்டுமானாலும் ஆயிரக்கணக்கில் கைது செய்யும் வகையில் கடந்த ஆண்டே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இத்தகைய வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதுதான் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படும் போராட்டக்குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளனர். காவல் துறை உயர் அதிகாரிகள், கலெக்டரை பல முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். நேற்று வரை போராட்டத்தில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று நாடகமாடிய ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், 144 தடையுத்திரவு மூலம் போக்குவரத்து, மின்சாரம், பால்,தண்ணீரை நிறுத்திப் போராடும் மக்களை பணிய வைக்க முயற்சித்தார். தமிழக அரசின் இம்முயற்சிக்கு நாடு முழுவதும் கண்டனக்குரல் எழும்பவே பகுதி அளவில் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. வாழ்வுரிமைக்காக போராடியதைத் தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத அப்பகுதி மக்களை வழக்கு, கைது, சிறை என பய பீதியூட்டி வருகிறது தமிழக அரசு. போலீசின் தடியடி, துப்பாக்கி சூட்டைக்காட்டிலும் இது கடுமையான ஒடுக்குமுறை.

ஆபத்தான அணு உலை வேண்டாம் என அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துப் போராடியதால் அப்பகுதி மக்கள் வேலை இழந்தார்கள், உணவை இழந்தார்கள், வருமானத்தின் ஒரு பகுதியை போராட்ட நிதியாகக் கொடுத்து வருமானத்தை இழந்தார்கள். தற்போது வழக்கு, கைது, சிறை துன்பங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாகிறார்கள். நான்கு வழக்குகளில் 200 பேரை பிணையில் எடுக்க ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் 10 பேர் 20 நாட்களாக இரவு பகலாக உழைத்து கட்டணம் வாங்காமல் விடுவித்தோம். நூற்றுக்கணக்கான வழக்குகளில் ஆயிரக்கணக்கான மக்களை அது  போல் பிணையில் எடுப்பது சாத்தியமா? அவசியமா? என்றால் இல்லை. இது நீதிமன்றத்தில் தீர்க்கும் பிரச்சினை அல்ல. மக்கள் மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டியது.

எனவே அணு உலைகளுக்கு எதிராக மட்டுமல்ல, போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற நாம் அனைவரும் போராட வேண்டும். இன்று நாம் போராட விட்டால் அனைத்து மக்கள் போராட்டங்களையும் ஒடுக்க அரசு இம்முறையை கையாளும். போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல். ஆகவே சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தியாகங்களை படித்துப் பெருமை கொள்ளும் நாம் சம காலத்தில் நடக்கும் போராட்டத்தை ஆதரிப்பது, பங்கேற்பது நமது கடமை.

போலீசின் பொய் வழக்குகளும், அரசின் அடக்கு முறைகளும், மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க நாம் அனுமதிக்க கூடாது! அனைவரும் வாரீர்!

___________________________________

ஆபத்தான அணு உலை வேண்டாம் எனப்போராடுவது தேசத்துரோகமா?

அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு!

கருத்தரங்கம்

நாள்: 21.4.12 சனிக்கிழமை, நேரம்: காலை 10-00 முதல் 1-00 மணி வரை

இடம்: எம்.எச்.பிளாசா, கோல்டன் ஹால், மதுரை ரோடு, திருநெல்வேலி ஜங்சன், திருநெல்வேலி.

தலைமை: வழக்கறிஞர். சிவராச பூபதி, மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்.

கருத்துரைகள்:

வழக்கறிஞர். பாலன், உயர் நீதிமன்றம், பெங்களூரு.

வழக்கறிஞர். சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.தோழர். காளியப்பன், இணைப்பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

பேராசிரியர். அமலநாதன். வழக்கறிஞர். புனித சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

வழக்கறிஞர். சே.வாஞ்சிநாதன் உயர்நீதிமன்றம், மதுரை. ம.உ.பா.மை, மாவட்ட து.செயலாளர்,

வழக்கறிஞர். தௌ.அப்துல் ஜப்பார் செ.கு.உறுப்பினர், வழக்கறிஞர் சங்கம், திருநெல்வேலி.

வழக்கறிஞர். இரா.சி.தங்கசாமி மேனாள் தலைவர், வழக்கறிஞர் சங்கம், திருநெல்வேலி.

வழக்கறிஞர். ஜிம் ராஜ் மில்டன் உயர்நீதிமன்றம், சென்னை ம.உ.பா.மை, மாவட்ட செயலாளர்,

நன்றியுரை: வழக்கறிஞர். சுப.ராமச்சந்திரன் மா.செயலாளர். ம.உ.பா.மை, தூத்துக்குடி.

பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கு சொந்த நாட்டு மக்களைக் காவு கொடுக்காதே!

ஆபத்தான அணு உலையை இழுத்து மூடு! அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு!

ராஜத்துரோகம் உள்ளிட்ட காலனியாதிக்க சட்டங்கள் அனைத்தையும் ரத்துசெய்!

அணு உலைக்கு எதிராகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை!

கதிர் வீச்சுக்கும் மரணத்துக்கும் எதிராகப் போராடுவது மக்களின் வாழ்வுரிமை!

21.4.12 அன்று மாலை 2-30 மணிக்கு இடிந்த கரை மத்தியில் போலீசின் பொய் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி? என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விளக்கவுரை ஆற்ற உள்ளனர்.

_____________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

கன்னியாகுமரி & தூத்துக்குடி மாவட்டங்கள்

தொடர்பு: 9443527613, 9486643116,

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: