privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாசிச ஜெயாவின் அடுத்த ''கசப்பு மருந்து'' - தண்ணீர் வெட்டு!

பாசிச ஜெயாவின் அடுத்த ”கசப்பு மருந்து” – தண்ணீர் வெட்டு!

-

தண்ணீர்-வெட்டு

‘சென்னை மக்களுக்கு வினியோகித்து வரும் தண்ணீர் அளவில் 25 சதவீதம் வரை குறைக்கப்படும்’ என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பால் விலையேற்றம், பேருந்து கட்டண விலையேற்றம், மின் கட்டண உயர்வு, மின் வெட்டு என்று நாட்டின் வருங்கால நலன் கருதி கசப்பு மருந்தை கொடுக்கும் ஜெயாவின் ஆட்சியில் மக்கள் முழுங்க வேண்டிய அடுத்த கசப்பு மருந்து,‘தண்ணீர் வெட்டு’.

சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு 250 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கி வந்த வீராணம் ஏரி வற்றிப் போய் விட்டது. செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு சுமார் 30 சதவீதம்தான் உள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஏற்படப் போகும் பற்றாக் குறையை சமாளிக்க நகரின் சில பகுதிகளில் அதிகார பூர்வமாக அறிவிக்காமல் தண்ணீர் வினியோகத்தின் அளவை 25 சதவீதம் குறைத்து விட்டதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சொல்கின்றனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குறைவாக பெய்வதாலும் வடகிழக்கு பருவ மழை சராசரியை விட குறைவாகவே பெய்யும் என்று மதிப்பிடப்படுவதாலும் இந்த நிலைமை என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்திய விவசாயத்தை பருவக்காற்றுகளின் சூதாட்டம் என்று சொல்வது போல அடிப்படைத் தேவையான குடிநீர் வினியோகமும் ‘பருவமழையின் சூதாட்டமாக’ மாறியிருக்கிறது. உண்மையில் இது இயற்கை மட்டும் நம்மை வஞ்சிக்கும் பிரச்சினையா?

‘கடந்த 139 வருடங்களில் பருவ மழை ஒரு தடவை கூட வராமல் இருந்ததில்லை என்றும் எல்லா ஆண்டுகளிலும் சராசரியில் 60 சதவீதத்துக்கு குறையாமல் மழை பெய்துள்ளது’ என்றும் இந்து நாளிதழில் ஜூலை 26-ம் தேதி வெளியாகியுள்ள அறிக்கை சொல்கிறது. ஆனால், மழைக் காலத்தில் வெள்ளமும் மற்ற மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் என்பதுதான் சென்னை நகர மக்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.

இதற்கு காரணம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், அடிப்படை கட்டமைப்புகளை புறக்கணித்து, தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவதில்  மட்டுமே கவனம் செலுத்தும் அரசு கொள்கைகள்தான்.

கடந்த 40 ஆண்டுகளில் சென்னை நகரில் வாழும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியால் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்யும் ஊழியர்களின் குடியிருப்புகள், மேட்டுக் குடியினருக்கு தேவைப்படும் ஐந்து நட்சத்திர தரத்திலான கேளிக்கை வசதிகள் இவை அனைத்துக்கும் சேர்த்து நீர் தேவையை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரில் ஒரு நபருக்கு 135 லிட்டர் ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய பொது சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. அந்த கணக்கின்படி சென்னை நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு கடந்த நாற்பது ஆண்டுகளில் மூன்று மடங்காகியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பதோடு, இருக்கும் குடிநீர் வளங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது சென்னையின் பல பகுதிகளில் ஒரு நாளைக்கு நபருக்கு 75 லிட்டரை விட குறைவான அளவு நீரே வினியோகிக்கப் படுகிறது.

காலம் காலமாக பருவ மழை பெய்யும் போது நீரைத் தேக்கி வைத்து மற்ற நாட்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கி வைத்திருந்த நீர் நிலை ஆதாரங்கள் நகரமயமாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை வருமானத்தால் ஏற்றி விடப்பட்ட வீட்டு வாடகை, நில விலை ஏற்றம் காரணமாக பல ஏரிகள் நிரப்பப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்படுவது வெகு வேகமாக நடந்து முடிந்திருக்கிறது.

1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை குடிநீர் வாரியத்திடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்த 29 ஏரிகளின் மொத்த நீர் தேக்கப் பரப்பில் 75 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. முகப்பேர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கொளத்தூர், செந்நீர்குப்பம், ஆதம்பாக்கம், உள்ளகரம், தாம்பரத்தில் இருக்கும் தலக்கன்சேரி ஆகிய இடங்களில் இருக்கும் ஏரிகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இல்லாமல் ஆகி விட்டிருக்கின்றன. தாம்பரம் புதுத்தாங்கல் ஏரியில் 93 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு வெறும் 7 சதவீதம் மட்டுமே குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவில் 77 சதவீதம் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போயிருக்கிறது.

பெருகி வரும் நகரத்துக்கு தேவையான புதிய நீர் வளங்களை உருவாக்கும் முயற்சிகள் அனைத்தும் அரைகுறையாகவே முடிந்திருக்கின்றன. 1968-ல் ஆரம்பிக்கப்பட்ட வீராணம் திட்டம் பல கோடி ரூபாய் விரயத்துக்குப் பிறகு சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட கான்கிரீட் குழாய்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ல் ஏலம் விடப்பட்டன. 1976-ல் திட்டமிடப்பட்ட கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய மொத்த 12 டிஎம்சி நீரில் சுமார் 3 டிஎம்சி அளவே சென்னைக்கு வந்து சேருகிறது. 2004-ல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டிடங்களில் பெய்யும் மழை நீரை நிலத்தடி நீராக தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்தாலும், பொது இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் வீணாக போவதையும், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பதையும் சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமது தேவைகளுக்கான நீரை அடுக்குமாடி குடியிருப்புகளும், தனியார் நிறுவனங்களும் ஆள் துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி நிறைவு செய்து கொள்கின்றன. இதன் விளைவாக 1990க்குப் பிறகு சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 4 மீட்டர் அளவு இறங்கி விட்டிருக்கிறது. மேலும் மேலும் தண்ணீரை இறைப்பதன் விளைவாக நிலத்தடி நீரில் குளோரைடின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அதிக பட்ச வரம்பை விட இரண்டு மடங்கு இருக்கிறது. புளோரைடும் நைட்ரேட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டி விட்டிருக்கின்றன.

பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கில்லாத நிலைமை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அத்தகைய நீரும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டு விடும்.

தண்ணீர்-வெட்டு

பருவ மழை குறைவாக பெய்வதால் ஏற்படும் குறுகிய கால தட்டுப்பாட்டிலும் சரி, நீண்ட கால நோக்கிலான தண்ணீர் இல்லாமையிலும் சரி, பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் மட்டும்தான். மேலும் மேலும் குறைந்து கொண்டே போகும் தண்ணீர் வளங்களை சுட்டிக் காட்டி ‘தண்ணீரை விற்பனை பண்டமாக ஆக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும்’ என்கிறது மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை. என்ன விலை கொடுத்தும் வாங்க பணம் வைத்திருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமைச்சர்களின் வீடுகளுக்கும் தேவையான தண்ணீர் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு தண்ணீர் வினியோகம் குறைக்கப்படும்.

மறுகாலனியாக்கத்தின் மூலம் நம் நாட்டை கொள்ளையடித்து விற்றுக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை வெட்டி விற்பது என்பது குறுகிய கால லாபத்தை கொடுப்பதுதான். ஆனால் தண்ணீர், மருத்துவம், போக்குவரத்து, கல்வி, மின்சாரம் இவையெல்லாம் வற்றாத லாபம் தரும் வளங்கள். நாட்டில் உள்ள 100 கோடி பேரும் தண்ணீர் குடிக்க வேண்டும், மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும், பயணம் செய்ய வேண்டும், மின்சாரம் பயன்படுத்த வேண்டும், இவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டால் தலைமுறை தலைமுறையாக லாபம் சம்பாதிக்கலாம். அதனால்தான் புதுப் புது இடம் தேடி அலையும் பன்னாட்டு மூலதனம், ‘தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியாருக்கும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

மக்கள் தாமாகவே தனியார் மயமாக்கத்தின் அவசியத்தை உணரும்படி அரசின் சேவைத் துறையை திட்டமிட்டு சீரழிக்க வைக்கிறார்கள். காலியாகும் வேலையிடங்கள் நிரப்பப்பட மாட்டாது, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது, அதிகாரிகளின் லஞ்ச, ஊழல்கள் கண்டு கொள்ளப்பட மாட்டாது. மக்களுக்கு தேவையான சேவை கிடைக்காமல் தவிக்கும் நிலைமை ஏற்படும். இப்படித்தான்’காசு கொடுத்தாலாவது தண்ணீர் கிடைத்தால் போதும்’ என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் கல்வி கட்டணத்துக்காக மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு பள்ளிக் கட்டணம் கட்டி விடுவது போல, அவசர மருத்துவ தேவைகளுக்காக சேமிப்புகளையும் சொத்துக்களையும் முற்றிலுமாக இழந்து விடுவது போல தண்ணீருக்கும் தமது வருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்க மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.

சுருங்கக் கூறின் தண்ணீர் தட்டுப்பாடு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சினை என்பதாக இவர்கள் பேசி வருகிறார்கள். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதும், அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், உபயோகிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதன் மூலம் அந்த பொறுப்புணர்ச்சியைகை கொண்டு வருவதும் வேண்டும் என்று இவர்கள் தனியார்மயத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

உண்மையில் தண்ணீரை விரயமாக்குவது யார்? கால் கழுவவும், சமைக்கவும், துவைக்கவும் பொதுக்குழாயை நம்பியிருக்கும் மக்கள்தான் சென்னையில் அதிகம். இவர்களெல்லாம் விரும்பினாலும் கூட தண்ணீரை விரயமாக்க முடியாது. நினைத்த நேரத்தில் தெருக்குழாயில் வரும் நீரை காத்திருந்து பிடிப்பதில் துவங்கி பல இன்னல்களை அடையும் இம்மக்கள்தான் உண்மையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் மூலம் ஏரிகளை சாதாரண மக்கள் வளைக்க வில்லை. கோடி ரூபாயில் விலைபேசப்படும் அப்பார்ட்மெண்டுகளிலும் அவர்கள் வசிக்கவில்லை. நட்சத்திர விடுதிகளும், பங்களாக்களும்தான் பாத்டப், நீச்சல் குளம், குளிப்பதற்கு கூட குடிநீர் என்று நீரை விரயமாக்கி வருகிறார்கள். நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை கேன் நீர், பாட்டில் நீர் இல்லாமல் வாழமுடியாது என்பதற்கு பழகிவிட்டார்கள். இவர்களை குறிவைத்துத்தான் தனியார்மய தண்ணீர் வியாபாரம் கொழித்து வருகிறது. இப்போது அரசே தண்ணீர் வெட்டை அறிவித்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் முழு நீர்ப் பயன்பாடும் தனியார் கையில் மின் கட்டணம் போல தண்ணீர் கட்டணம் வசூலித்து செயல்படும் நிலை ஏற்படும்.

இயற்கையான நீர் ஒரு வணிகப் பொருளாக விற்க்கப்படும் நிலை என்பது வேறு எதனையும் விட கொடூரமானது. வேறு எதற்காகவும் கூட அரசியல் போராட்டங்களை விரும்பாத ‘கண்ணியத்திற்குரியவர்கள்’ தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக போராட வேண்டும். இல்லையேல் உங்களது வருமானத்தில் கணிசமான அளவு நீருக்காக செலவிட வேண்டும். தண்ணீரிலிருந்தாவது உங்களது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கட்டும்.

__________________________________________

– செழியன்.

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

  1. Dear Vinavu ,
    This is one of the best article in the recent past from you.

    100% real problem is ,there is no natural storage of water .

    Ponds,lakes,and all water bodies have all gone away or partially occupied.

    “ERI” scheme :
    Peculiar projects titled “ERI SCHEME” can only be seen in our country.
    Sand Mining:
    And sale of Sands like : Palar Sand :MRP XXX/load , Thamiraparani Sand : MRP XXX/Load Cauvery Sand :MRP XXX/Load etc !

    Really thoughtful article with lots of facts .

    My heart felt congrats to the author!

  2. ஜெயாவை திட்ட பல காரணங்கள் உள்ளன. இந்த அறிக்கைக்கும் பாசிசம்- திற்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. இந்த பற்றாக்குறைக்கும், நீர் சேமிக்காத குற்றத்திற்கும் காரணங்கள் –
    – மக்களின் பேராசை மற்றும் தனி மனித சுகாதாரமின்மை & lack of self – discipline
    – ரியல் எஸ்டேட்
    – நகரமயமாக்கம்
    – கவுன்சிலர்களின் ஒரே சம்பாத்தியம் நில பரிவர்தனைதான்
    – ஏரிகள் ஆக்கிரமிப்பு
    – தூர் வாராதிருதல் (ஒரு contractorgalum இதை ஒழுங்காக செய்வதில்லை)
    – மணல் திருட்டு
    – தண்ணீரை சேமிக்காமல் கடலில் சென்று கொட்டுவது

  3. நட்சத்திர விடுதிகளில் கைகால் கழுவுவதற்கும், கக்கூசு கழுவுவதற்கும், துணி துவைக்கவும் 24 மணி நேரமும் கார்ப்பரேஷன் குடிநீர் தான் பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோல, 200, 300 வீடுகள் என்று ஒரே குடியிருப்பாக இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தரைக்கடியில் ‘ஸ்பெஷல் தண்ணீர் டேங்க்’ கட்டப்பட்டு, குடி நீர் வினியோகக் குழாயுடன் இணைப்பு கொடுக்கப்பட்டு, 24 மணி நேரமும் தண்ணீர் வருகிறது. இதுவும் குளிப்பதற்கும், துணி துவைக்கவும், கக்கூசு கழுவவும் மட்டும்தான்.

  4. ‘சித்ரா பௌர்னமி’ பாலாற்றில் ‘நடப்பாவி’ திருநாள். சோறு கட்டிக்கொண்டு சென்றுவிட்டால், இரவெல்லாம் திருவிழா, ராட்டினம், கூத்து, கடைகள், குழந்தைகள் குதூகலிக்கும் இன்னொரு விசயம், மண்ணை ஒன்றரஅடி தோண்டினால், நல்ல பாலாற்று தண்ணீ வரும். ஒவ்வொரு குடும்பமும் தேவையான தண்ணீரை ஒன்றரை அடி கிணற்றில் எடுத்துப்போம். ஆனால், இப்ப தோண்டிப் பார்த்த கையில ரத்ததான் வருது. காரணம், அரசு இரும்புக்கரம்கொண்டு மணல் கொள்ளைக்கு துணை நிற்பது. மணலை மண்வெட்டியில் அள்ளி மாட்டுவண்டியில் போட்டு வீடு கட்ட எடுத்து வருவார்கள் அப்போ. ஆனால், ஆயிரக்கணக்கான லாரிகளில் ஜெசிபி மூலம் சுடுகாட்டையும் விடாம, பொனங்களை எடுத்து வெளியெ போட்டுட்டு, கம்பெனிக் கட்டவும், வெளி மாநிலத்திற்க்கு அதிக லாபத்துடன் விற்கவும் திருடுவது இப்போ.

    பாலாற்றை சுரண்டி முடித்தது போதாதுனு ஆறு போற வழியெல்லாம் சுரண்டிக் கொண்டு இப்ப, பழையசீவரத்துலயும் மணல் சுரண்டிக் கொண்டுருக்கிறார்கள். மணலை ஒட்டுமொத்தமாக சுரண்டியதால ஆறெல்லாம், நாற்றமடிக்கும் குட்டையாக மாறிப் போச்சு. மீன் வளர்ந்த இடத்துல, பாசியும், பிளாஸ்டிக் கவர்களும் மிதக்குது. பாலாற்றின் பக்கத்தில் இருப்பவர்களுக்கே தண்ணீர் இல்ல. தள்ளியிருக்கறவுங்களுக்கு எங்கே தண்ணீ கெடக்க போவுது. ஆற்றங்கரைகளில் வெட்டிவெச்சுயிருக்கிற பள்ளங்கள் கண்டிப்பா பயன்படும். அத மூடவேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது.

    • // மண்ணை ஒன்றரஅடி தோண்டினால், நல்ல பாலாற்று தண்ணீ வரும். ஒவ்வொரு குடும்பமும் தேவையான தண்ணீரை ஒன்றரை அடி கிணற்றில் எடுத்துப்போம். ஆனால், இப்ப தோண்டிப் பார்த்த கையில ரத்ததான் வருது. //

      அண்டை மாநிலங்கள் ஆற்றில் தண்ணீர் விட மறுக்கிறார்கள் என்றால் மணல் கொள்ளைக்காரர்கள் ஆற்றையே சீரழிக்கிறார்கள். நீர் ஆதாரங்களைப் பராமரிப்பதில் மன்னர்களும், பிரிட்டிஷ்காரனும் செய்ததைக் கூட செய்யாமல் அழிப்பதில் முனைந்திருக்கும் அவல நிலை.. வாழ்க ஜனநாயகம்..

  5. இதற்கெல்லாம் ஒரே தீர்வை பல முறை சொல்லியும் ஒட்டுப்போடும் இயந்திரமும் நேர்மையாளாக பம்மாத்து காட்டும் நடுத்தரமும் கண்டும் காணாமல் இருப்பதும் இந்த கசப்பான கொடுமைகளுக்கும் காரணம்

  6. கனவு காணும் இந்திய குடிமக்களே….
    கொஞ்சம் விழித்துப்பாருங்கள்…
    மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பக்கத்தில் உள்ளது கோட்ட நத்தம் பட்டி கிராமம். இந்த கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக இந்த கிராம மக்களுக்கு குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இது நல்ல விசயம் தானே என நீங்கள் கருதலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சும்மா குடுக்க முடிவு செய்யவில்லை. காசு போட்டு தண்ணீர் பிடிக்கவே முடிவு செய்யப்பட்டது. ( காசு போட்டு போன் பேசுவதைப் போல) அப்படி என்றால் வேறு யாராவது வெளியாட்கள் இங்கு வந்து காசு போட்டு தண்ணீர் பிடித்துச் சென்று விட்டால் என்ன செய்வது என கருதினார்கள்.(கருதியது யார் மாவட்டமா , பஞ்சாயத்தா என தெரியவில்லை) எனவே புதிய முறையை அமுல்படுத்த உள்ளார்கள் அது என்ன புதிய முறை என்றால் பஞ்சாயத்தில் உள்ள வீட்டுக்கு ஒருவர் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் உள்ள கைரேகை பதிவு எந்திரத்தில் கைரேகையை பதிவு செய்து ஒரு நாளுக்கு 30 லிட்டர் தண்ணீரை பிடித்துக் கொள்ளலாம். ஒரு வேலை கைரேகை வைக்க வேண்டியவருக்கு உடல் நிலை சரியில்லை என்றாலோ, வேறு காரணங்களாலோ அவர் செல்லாவிட்டால் அந்த குடும்பத்திற்கு தண்ணீர் கிடையாது. நாம் இஷ்டத்திற்கு இனி தண்ணீரை செலவு செய்ய முடியாது. இது இந்த கிராமத்தில் மட்டுமல்ல இனி இது நாடு பூராவும் பரவலாம். பஞ்சாயத்து கழிவறைகளை குத்தகைக்கு விட்டதைப் போல இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையும் குத்தகைக்கு விடலாம். ரேசன் கடை மண்ணெண்னையைப் போல அளவு குறையலாம். தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் பல நோய்களுக்கும் ஆளாகலாம். அட சீ குடிக்க தண்ணீரும் , கழிக்க கழிவறையையும் கூட கொடுக்க முடியாத இந்த நாட்டில்தான் வல்லரசு கனவு காணச் சொல்கிறார்கள் சில கோமா(ளி)ன்கள்.. ஆரம்பத்திலேயே அப்பகுதியில் உள்ள மக்களும் சமூக அமைப்புகளும் இதை தடுத்து நிறுத்தாவிட்டால் …..? போராட்டம் ஒன்றே தீர்வு.

  7. வேர் இஸ் மிஸ்டர் கே.ஆர். குதியமான்? இந்நேரம் வந்திருக்கனுமே!

  8. இந்தியாவில் உள்ள அனைவரையும் குற்றம் சொல்லும் வினவு அவர்களே உங்களது கொள்கை குற்றம் மட்டும் சொல்வதா ? ஒருவேளை நீங்கள் ஆட்சி கட்டிலில் உட்கார்ந்தால் நீங்கள் என்னதான் செய்வீர்கள் ? உங்கள் கொள்கைதான் என்ன ? உங்களால் என்னதான் செய்ய முடியும் இந்த நாட்டுக்கு ? உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவை எவ்வாறு தலை நிமிர செய்வீர்கள் உங்களது திட்டங்களை கூறுங்கள் ?

    • //இந்தியாவில் உள்ள அனைவரையும் குற்றம் சொல்லும் வினவு அவர்களே உங்களது கொள்கை குற்றம் மட்டும் சொல்வதா?//

      மணற்சோற்றில் கல் தேடிக் காட்டும் போது, ‘என்ன எல்லாமே கல் என்று சொல்கிறார்கள்’ என்று உங்களுக்குத் தோன்றலாம். பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாக, பன்னாட்டு நிறுவனங்கள்/ஆதிக்க சக்திகளின் நலன்களுக்காக மட்டுமே செயல்படுபவைதான் இன்றைய இந்தியாவில் உள்ள அமைப்புகள். பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சார்பாக பிரச்சனைகளை அணுகும் போது ‘அனைவரையும்’ குற்றம் சொல்வது போல உங்களுக்குத் தோன்றுகிறது.

      //ஒருவேளை நீங்கள் ஆட்சி கட்டிலில் உட்கார்ந்தால் நீங்கள் என்னதான் செய்வீர்கள் ? உங்கள் கொள்கைதான் என்ன ? உங்களால் என்னதான் செய்ய முடியும் இந்த நாட்டுக்கு ? உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவை எவ்வாறு தலை நிமிர செய்வீர்கள் உங்களது திட்டங்களை கூறுங்கள் ?//

      வினவு முன் வைக்கும் அமைப்பில் ‘ஆட்சிக் கட்டில்’ என்று ஒன்று இருக்காது. பெரும்பான்மையை சிறுபான்மையினர் சுரண்டும் இன்றைய ‘போலி ஜனநாயகத்தை’ ஒழித்து விட்டு, பரந்து பட்ட மக்கள் பங்கு பெறும் புதிய ஜனநாயக அரசை உருவாக்குவதுதான் வினவு வைக்கும் தீர்வு.

      அத்தகைய அரசின் பணிகள்
      1. விவசாயத்தில் தன்னிறைவு பெறும்படி உழைக்கும் மக்களுக்கு நிலவுடமை வழங்கப்படும்
      2. நாட்டைச் சுரண்டும் அன்னிய மூலதனம், அன்னிய வங்கிகள், அன்னிய தொழில் நிறுவனங்கள் வெளியேற்றப்படுவார்கள்
      3. தேசிய முதலாளிகளின் தொழில்களும் வர்த்தகமும் பாதுகாக்கப்படும்
      4. கைத்தறி, விசைத்தறி மற்றும் கைவினைத் தொழில்கள் உழைப்பாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நெறிப்படுத்தப்படும்.

      5. அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி, அனைத்து நிலைகளிலும் தாய்மொழிக் கல்வி வழங்கப்படும்
      6. அனைத்து தேசிய இன மொழிகளுக்கும் ஆட்சி மொழி என்ற தகுதி வழங்கப்படும்
      7. மதவாதம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்படும், சாதிய, மதவாத அமைப்புகள் தடை செய்யப்படும்.

      8. பிற நாடுகளுடன் சமமான, சமாதானத்தின் அடிப்படையிலான உறவுகள் ஏற்படுத்தப்படும்.

      இதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் வழிகாட்டியான அமைப்பை இந்திய மக்கள் நடத்துவார்கள்.

  9. இப்போது புரிகிறதா, இத்தனை பெரிய தேசத்தை எப்படி சின்னஞ்சிறு நாடான இங்கிலாந்த் 400 ஆண்டுகளுக்கு
    மேல் ஆண்டு வந்தார்கள் ? நமது நீண்ட வரலாற்றை பார்த்தல் , நம்மை ஆள்பவர்கள் தான் நமது எதிரி களாக
    இருந்திருகிரர்கள். மகளை பற்றிய கவலை இல்லாத தலைமை , நாட்டை பற்றிய கவலை இல்லாத மக்கள்
    இந்த நாட்டின் மிக பெரிய சாப கேடு ,

    • மகளை பட்ரிய கவலை இலலதா தலமை என்பதை மக்களை பட்ரிய
      கவலை இல்லத தலைமை என்ரு படிகவும் .

Leave a Reply to புதிய பாமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க