privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்சட்டிஸ்கர் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

சட்டிஸ்கர் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

-

சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

படுகொலை

ஜூன் 28ஆம் தேதி. சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம்  கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமம். இவ்வாண்டின் விதைப்புத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பதையொட்டி, யார் முதல் ஏர் ஓட்டுவது என்பதைப் பற்றி அன்று இரவு நிலவொளியில் அப்பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கிராம மக்களைச் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசுப் படை,  திடீரென நாற்புறமிருந்தும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய அம்மக்களைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. பலரது முதுகிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்து சரிந்து விழுந்து மாண்டனர். கொல்லப்பட்டவர்களின் பிணங்களை பூட்சுக்காலால் எட்டி உதைத்தும், கத்தியைக் கொண்டு அவர்களது உடல்களை வெட்டியும் போலீசுப் படை வெறியாட்டம் போட்டது.

அன்று  ஜாலியன்வாலா பாக்கில் பிரிட்டிஷ் இராணுவம் இந்திய மக்களை நாற்புறமும் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டம் போட்டதைப் போன்றதொரு மிகக் கொடிய பயங்கரவாத வெறியாட்டத்தை, சட்டிஸ்கரில் கடந்த ஜூன் 28அன்று இரவில் இந்திய துணை இராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீசுப்படை நடத்தியிருக்கிறது. சிறுவர்சிறுமிகள் உள்ளிட்ட  19  அப்பாவி பழங்குடியினரைத் துடிக்கத்துடிக்கப் படுகொலை செய்துள்ளது.

கொல்லப்பட்ட இரண்டு அப்பாவிகளின் பிணங்களுக்கு மாவோயிஸ்ட் போல இராணுவச் சீருடையை அணிவித்து, பிணங்களின் அருகே துப்பாக்கிகள்  வெடிகுண்டுகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்ட போலீசுப்படை,  பிணங்களைச் சுற்றி தரையில் உறைந்திருந்த இரத்தக் கறைகளை அகற்றிய பின்னர் அன்றிரவே ஒரு டிராக்டரில் பிணங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பசாகுடா கொண்டு சென்றது. அன்று இரவு முழுவதும் கிராமத்தில் முகாமிட்ட போலீசுப் படை, மறுநாள் காலைக்கடன் முடிக்க வீட்டைவிட்டு வெளியே வந்த ரமேஷ் என்பவரை அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொன்றது. இளம் சிறுமிகள்  4 பேரின் ஆடைகளை உருவி மானபங்கப்படுத்தி, அவர்களைத் தாக்கி வண்புனர்ச்சிக்கு முயற்சித்துள்ளது.

இப்படுகொலை நடந்த அடுத்த நாளில், 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் கசியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, 1999க்குப் பிறகு பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக  நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை இதுதான் என்றும், இது மிகப் பெரிய வெற்றி என்றும் அறிவித்தது, மத்திய ரிசர்வ் போலீசுப் படை.

பின்னர், கொல்லப்பட்டவர் பழங்குடியின மக்கள் என்றும், இது மாவோயிஸ்டுகளுடனான மோதல் அல்ல, அப்பட்டமான படுகொலை என்றும்  அடுத்தடுத்து செய்திகள் வெளிவரத் தொடங்கின.  உடனே, “நாங்கள் தீவிரவாதிகளைக் கொல்வதற்கு முன்பாக, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பரிசீலிப்பது எங்கள் வேலை அல்ல” என்று திமிராக அறிவித்தார், மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் தலைமை இயக்குநரான  ‘வீரப்பன் புகழ்’ விஜயகுமார். பின்னர், கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பழங்குடியினர் என்று நிரூபணமானதும், “மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலின்போது  இடையில் சிக்கி அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால், அது மிகவும் வருந்தத்தக்கது” என்று முதலைக் கண்ணீர் வடித்தார்.

அதைத் தொடர்ந்து, “நாங்கள் மாவோயிஸ்டுகளைச் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்காகவே அக்கிராமத்துக்குச் சென்றோம். ஆனால், மாவோயிஸ்டுகள் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதால், நாங்கள் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சில அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடவடிக்கைக்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டனர்” என்று கதையை அவிழ்த்துவிட்டது, மத்திய ரிசர்வ் போலீசுப் படை.

படுகொலை

இது போலி மோதல் என்றும், இத்தாக்குதலில் பெண்களும் சிறுவர்களுமாக 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உண்மைகள் வெளியானதும், “மத்திய ரிசர்வ் போலீசாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், இது உண்மையான மோதல்தான், போலி மோதலே அல்ல; சிறுவர்கள் எவரும் கொல்லப்படவில்லை; நக்சல்பாரி பெண் போராளிகள்தான் கொல்லப்பட்டுள்ளார்கள்” என்றார்  மைய அரசின் உள்துறைச் செயலாளரான ஆர்.கே. சிங். ஆனால், ரிசர்வ் போலீசுப் படையினர் நாற்புறமும் சுற்றிவளைத்துக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டதால்தான் எதிர்ப்புறமிருந்த படையினருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர், கிராம மக்கள்.

“இது குறித்து எவ்வித விசாரணையும் நடத்தத் தேவையில்லை. கொல்லப்பட்டவர்களில் மகேஷ், நாகேஷ், சோமுலு ஆகியோர் மாவோயிஸ்டு தலைவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன”  என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால்,  காகா நாகேஷ் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன். மற்றவர்கள் மீது பசாகுடா போலீசு நிலையப் பகுதியில் இதுவரை எந்த கிரிமினல் குற்றப் பதிவும் இல்லை.

கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசுப் படை வெறியாட்டம் போட்டுள்ளதை  அங்குள்ள மரங்கள் சிதைந்து குண்டு பாய்ந்திருப்பதையும், ஆடுமாடுகள் கூடக் குண்டடிபட்டுக் கொல்லப்பட்டுள்ளதையும் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. உடனே விஜயகுமார், “கண்ணி வெடிகளுக்கு நடுவே எங்கள் படையினர் உயிரைப் பணயம் வைத்துப் போரிடுகிறார்கள்.  மத்திய ரிசர்வ் போலீசு படை என்பது முறையான போர்ப் பயிற்சி பெற்ற கட்டுப்பாடுமிக்க படை; காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தும் படையல்ல” என்று ஊடகங்களைச் சாடினார்.

பசாகுடா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த  காகா சரஸ்வதி என்ற 12 வயது சிறுமி மற்றும் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர்கள், கோடை விடுமுறையில் கிராமத்துக்கு வந்தவர்கள். பசாகுடா மத்திய ரிசர்வ் போலீசுப் படை முகாமுக்கு 3 கி.மீ. தொலைவில்தான் இந்தக் கிராமம் உள்ளது. கிராம மக்களோ அடிக்கடி பசாகுடா சந்தைக்குச் சென்று வருபவர்கள். அக்கிராம மக்கள் ரேஷன் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் வைத்துள்ளனர்.  இருப்பினும், “அப்பகுதியானது, மாவோயிஸ்டுகளின் விடுதலைப் பிரதேசமாகும். அங்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, எந்தப் பதிவேடுகளும் இல்லை” என்று கூசாமல் புளுகுகிறது போலீசுப் படை.

அன்று நல்ல நிலவொளி இருந்தது என்கிறார்கள் கிராம மக்கள். மேலும், இரவு நேரத்தில் ஊடுருவிப் பார்க்கும் வசதி கொண்ட பைனாகுலர்களையும் ரிசர்வ் போலீசுப் படையினர்  வைத்திருந்தனர். ஆனால்,“எங்கும் இருளாக இருந்தது, அதனால் கிராம மக்கள் யார், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் யார் என்று தெரியவில்லை” என்று நம்பச் சொல்கிறது போலீசுப் படை. பின்னர், நக்சலைட்டுகள் நாற்புறமிருந்தும் ஒரு மணி நேரத்துக்கு சுட்டனர் என்று புதிய கதையை அவிழ்த்து விட்டது இக்கொலைகாரப் படை. ஆனால், சிறுவர்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 30 பேர்தான் அந்தக் கிராமக் கூட்டத்தில் இருந்துள்ளனர்.  200 பேர் கொண்ட போலீசுப் படை சுற்றிவளைத்துத் தாக்கிய போது, இந்த 30 பேர் ஒரு மணி நேரத்துக்குத் தாக்குப் பிடித்துச் சுட்டிருக்கத்தான்  முடியுமா?

ஆனாலும், “கிராம மக்களையும் நக்சல்பாரிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்கள். விவசாயமும் செய்கிறார்கள். தாக்குதல் நடவடிக்கையின் போது அவர்கள் நக்சல்பாரிகளாக மாறுகிறார்கள். அந்தக்  கிராமத்தில் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதால், அவர்கள் நக்சல்பாரிகள் அல்ல என்று கருத முடியாது ” என்று இன்னுமொரு கதையை அவிழ்த்துவிடுகிகிறார், பிஜப்பூர் போலீசு சூப்பிரண்டு . “நக்சல்பாரிகள் அப்பாவி மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்; அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால், அதற்கு நக்சல்பாரிகள்தான் பொறுப்பு” என்று திமிராகப் பேட்டியளிக்கிறார், சட்டிஸ்கர் முதல்வர் ராமன் சிங்.

இது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத படுகொலை என்று அம்பலப்பட்டுப் போனதாலும், இதை எதிர்த்துப் பேசாவிட்டால் மக்களிடம் மேலும் தனிமைப்பட நேரிடும் என்பதாலும், சட்டிஸ்கரில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு இப்படுகொலையைக் கண்டித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் தீவிரவாத மாவோயிஸ்டுகள் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதை, பொறுப்பற்ற பேச்சு என்று சாடி, உண்மையறியும் குழுவை அமைத்து அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. அதேசமயம், மாநில காங்கிரசு கட்சியினர் அமைத்துள்ள உண்மையறியும் குழுவில் இருப்பவர்களில் பாதிப்பேர் மாவோயிஸ்டுகள் என்று அவதூறு செய்துள்ள பா.ஜ.க.வின் மாநில உள்துறை அமைச்சரான நான்கி ராம் கன்வார், நக்சல்பாரிகளுக்கு உதவும் எவரும் மாவோயிஸ்டு தீவிரவாதியாகத்தான் கருதப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்று  ஊடகங்களுக்குத் திமிராகப் பேட்டியளிக்கிறார்.

படுகொலை

மத்திய ரிசர்வ் போலீசுப் படை நடத்திய பச்சைப் படுகொலையும், அதை நியாயப்படுத்த மேற்கொண்ட கீழ்த்தரமான முயற்சிகள் அனைத்தும் அம்பலப்பட்டுப் போனதாலும், இப்படுகொலை நடந்த பத்து நாட்களுக்குப் பின்னர், அரிசி, பருப்பு, ஆடைகள், பாத்திரங்கள்  என  நிவாரணப் பொருட்களுடன் இக்கிராமத்துக்குச் சென்றனர், அரசு அதிகாரிகள். “நாங்கள் மாவோயிஸ்டுகள் என்றால், எதற்காக அரசு எங்களுக்கு அரிசியும் பருப்பும் கொடுக்க வேண்டும்? எங்கள் குழந்தைகளைக் கொல்லும் போலீசுப் படை எங்களுக்குத் தேவையில்லை; முக்கியமாக, கோப்ரா படை தேவையயேயில்லை” என்று  வருவாய்துறை அதிகாரியிடம் தெரிவித்த இக்கிராம மக்கள், நிவாரணப் பொருட்களை வாங்க மறுத்து,  தங்கள் கோபத்தையும் சுயமரியாதையையும் எதிர்ப்பாகக் காட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கண்டனம், மனித உரிமை அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்கள் ஆகியவற்றால் அம்பலப்பட்டுப் போயுள்ள சட்டிஸ்கர் அரசு, வேறுவழியின்றி இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நக்சல்பாரிகள் அப்பாவி கிராம மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினால், துணை இராணுவப் படைகள் அந்த நேரத்தில் தற்காலிகமாகத் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்திவிட வேண்டும்; இருட்டில் ஊடுருவிப் பார்க்கக்கூடிய பைனாகுலர்கள் மூலம் சரிபார்த்துவிட்டுத் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றெல்லாம் கொலைகாரப் படைகளுக்கு உபதேசிக்கிறது மைய அரசின் உள்துறை அமைச்சகம்.

குஜராத்தில் முஸ்லிம் பயங்கரவாதப் பீதியூட்டி அப்பாவி முஸ்லிம்களை மோதலில் கொன்று தீவிரவாதிகள் என்று இந்துவெறி பயங்கரவாத மோடி அரசு முத்திரை குத்தியதைப் போலவே, இப்போது சட்டிஸ்கரில்  மாவோயிஸ்டு பீதியூட்டி அப்பாவி பழங்குடியினரைச் சுற்றிவளைத்துக் கொன்றுவிட்டு, அவர்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். பழங்குடி மக்கள் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறையை ஏவி அச்சுறுத்தி, அவர்கள் எந்த வகையிலும் மாவோயிஸ்டுகளுடன் இணைய விடாமல் தடுப்பது, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தி தாக்குவது என்ற உத்தியுடன்தான் இப்பயங்கரவாதப் படுகொலையை அரசும் துணை ராணுவப் படைகளும் நடத்தியிருக்கின்றன. கனிம வளமிக்க சட்டிஸ்கரில்,  கார்ப்பரேட் கொள்ளைக்காகப் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் உள்நாட்டுப் போரின் இன்னுமொரு இரத்த சாட்சியம்தான் சர்கேகுடாவில் நடந்துள்ள இப்படுகொலை.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________