Thursday, April 15, 2021
முகப்பு உலகம் ஈழம் இலங்கை: எதிர்ப்பவன் நீதிபதியென்றாலும் தூக்கிவிடு !

இலங்கை: எதிர்ப்பவன் நீதிபதியென்றாலும் தூக்கிவிடு !

-

ஷிரானி பண்டாரநாயகே
ராஜபக்சேவுடன் ஷிரானி பண்டாராநாயகே.

தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகேவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை நாடாளுமன்றம் ஆரம்பித்திருக்கிறது. ஷிரானி பண்டாரநாயகே தனது வரம்புகளை மீறி செயல்படுவதாக நாடாளுமன்றமும் அரசாங்கமும் ஏற்கனவே கருவிக் கொண்டிருந்தன.

இதற்கு முன்பு வழக்கறிஞராகவோ நீதிபதியாகவோ பணியாற்றிய அனுபவம் இல்லாத ஷிராணி பண்டாரநாயகவை ராஜபக்ச அரசு 2011ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமித்தது. அவரது தலைமையின் கீழ் பல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

சமீபத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான இலங்கை ரூபாய் சுமார் 8,000 கோடியை  அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைச்சகம் நேரடியாக செலவிடுவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இது மாகாண அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதாக உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ‘மசோதா சட்டமாக்கப்படுவதற்கு அனைத்து 9 மாகாண மன்றங்களும் ஒப்புதல் கொடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார். ஆனால் வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை இல்லாத நிலையில் அதை சரிக்கட்ட வடக்கு மாகாண ஆளுனரிடம் மசோதாவுக்கு ஒப்புதல் வாங்கி விட்டதாக நாடகமாடியது ராஜபக்ச அரசு. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ‘மசோதா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது.

‘இந்த மசோதா குறித்த பிரச்சனைதான் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ராஜபக்சே சர்வாதிகார அரசு இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொஞ்ச நஞச அதிகாரத்தையும் பறிக்க முயல்கிறது. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை வழிநடத்திய இந்திய அரசாங்கமோ ‘இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் படி தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி உரிமைகள் வழங்கப்படும்’ என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

தனக்கு எதிராக எழும் எந்த ஒரு குரலையும் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜபக்ச அரசு தலைமை நீதிபதிக்கு எதிராக ‘முறையற்ற நடத்தை, சொத்துக் குவிப்பு, சொத்து விபரங்களை வெளியிடாதது’ உள்ளிட்ட 14 குற்றங்களை சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை அமைப்பார். அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். நாடாளுமன்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். ஷிரானி பண்டாரநாயகே உள்ளிட்ட நீதிபதிகளும், அதிகார வர்க்கமும்தான் ராஜபக்சேவின் சர்வாதிகாரத்திற்கு தூபம் போட்டு வந்தனர். ஆனால் அதிலும் கூட சிறு முனகல் வந்தாலும் ராஜபக்சே கும்பல் சகித்துக்கொள்ளாது என்பதுதான் தற்போதைய நிலவரம்.

இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் அதிபரான ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையை மொத்தமாக விலை பேசுவதற்கான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ் சிறுபான்மையினரின் வாழ்வுரிமையை அழித்து ஒழித்தது மட்டுமில்லாமல் அனைத்து இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளையும் கொடூரமாக ஒடுக்கும் ராஜபக்சே அரசை இந்தியாவோ, உலக நாடுகளோ தடுத்து நிறுத்தப் போவதில்லை. இலங்கை உழைக்கும் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து ராஜபக்ஷேவை வீழ்த்தும் வரை அங்கே பாசிசம் தொடரும்.

படிக்க:

  1. //தனக்கு எதிராக எழும் எந்த ஒரு குரலையும் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜபக்ச அரசு தலைமை நீதிபதிக்கு எதிராக ‘முறையற்ற நடத்தை, சொத்துக் குவிப்பு, சொத்து விபரங்களை வெளியிடாதது’ உள்ளிட்ட 14 குற்றங்களை சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை அமைப்பார். அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். நாடாளுமன்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். ஷிரானி பண்டாரநாயகே உள்ளிட்ட நீதிபதிகளும், அதிகார வர்க்கமும்தான் ராஜபக்சேவின் சர்வாதிகாரத்திற்கு தூபம் போட்டு வந்தனர். ஆனால் அதிலும் கூட சிறு முனகல் வந்தாலும் ராஜபக்சே கும்பல் சகித்துக்கொள்ளாது என்பதுதான் தற்போதைய நிலவரம்.
    // Very Good.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க