privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஓசூரில் போலி சுதந்திரத்தை திரை கிழித்து பிரச்சாரம் !

ஓசூரில் போலி சுதந்திரத்தை திரை கிழித்து பிரச்சாரம் !

-

சூரில் போலி சுதந்திரம் இதற்கேன் கொண்டாட்டம் ? என்ற முழக்கத்தின்கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக இரண்டு நாட்கள் ஆலைவாயில் பிரச்சாரம், தொழிற்பேட்டை பிரச்சாரம் என  மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக 13.08.2013 அன்று மாலை 5 மணிக்கு ஓசூர் தர்கா பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடந்தேறியது.

தெருமுனை பிரச்சாரம்
தர்கா பேருந்து நிறுத்தத்தில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சின்னசாமி, “இந்த நாடு மத சார்பின்மை நாடு என்று சொல்கிறார்கள் ஆனால், சாதி-மத கலவரங்கள் நடக்காத நகரங்களில்லை” என்றும், “தனியார் மயத்தால் வெங்காய விலையை குறைக்க முடியாத கட்சிகள்தான் சுதந்திரம், சுதந்திரம் என பேசி மக்களை மயக்கத்தில் ஆழ்த்த முயற்சித்து தோல்வியடைந்து வருகின்றனர்” என்றும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன், “பிரிட்டிஷ் காலத்தில் போராடி பெற்ற உரிமைகளைக் கூட இந்த “சுதந்திர’ நாட்டில் பெற முடியாமல் போராட வேண்டியுள்ளது. அப்படி போராடினாலும் உரிமைகள் கிடைப்பதில்லை. குண்டாந்தடியும், சிறையும்தான் கிடைக்கிறது. எனவே இங்கே உழைக்கும் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. மாறாக தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும், டாஸ்மாக் விற்று நாட்டு மக்களின் சிந்தனையை சீரழிக்கும் அரசுக்கும்தான் சுதந்திரம்” என பேசினார்.

இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. சங்கர் நன்றியுரையாற்றினார்.

15.8.13 அன்று ஓசூர் பாகலூர் பகுதியில் அறைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. சங்கர் சிறப்புரையாற்றினார். “நமது நாட்டில் நிலவுவது போலி சுதந்திரம் ! நமக்கு சுதந்திரம் இல்லை!” என்பதை பல்வேறு விவரங்களிலிருந்து விளக்கினார்.

முழக்கங்கள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க !
காமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கம் – வாழ்க !
புதிய ஜனநாயக புரட்சி –ஓங்குக !

போலி சுதந்திரம்! போலி சுதந்திரம் !
ஆகஸ்ட் 15 போலி சுதந்திரம்.!
டாடா, பிர்லா, அம்பானிக்கு,
நாட்டை சுரண்ட முழு சுதந்திரம்!

ஓட்டுப் போடும் மக்களுக்கு
குண்டாந்தடி, விலைவாசி உயர்வு!

பொதுத் துறைகள் தனியாருக்கு
சிறுதொழில்கள் சுடுகாட்டுக்கு
விவசாயிக்கும், தொழிலாளர்களுக்கும்
மன்மோகன் போடறான் வாய்ப்பூட்டு!

தொழிலாளர்களுக்கு கன்பார்ம் இல்லை
எல்லாமே கான்டிராக்ட்!
சங்கம் வைக்க உரிமையில்லை!
தட்டி கேட்டால் டிஸ்.மிஸ்சு!
சுதந்திரமெல்லாம் வெறும் போக்கசு!

டாஸ் மாக்குக்கு சுதந்திரம்!
தண்ணி அடிக்க சுதந்திரம் !
குத்தாட்டம் போட டி.விக்கு சுதந்திரம்!
ஆபாசம், சீரழிவு என
எல்லாத்துக்குமே சுதந்திரம்!

உழைக்கும் மக்களை பிளவு படுத்தும்
இவையெல்லாம் சுதந்திரமல்ல! அடிமைத்தனம்!

அதிகாரமெல்லாம் முதலாளிக்கு
முதலாளித்துவ சர்வாதிகாரத்தை மோதி வீழ்த்த ஒன்றிணைவோம்!

உழைக்கும் மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க
புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம்!

நக்சல் பாரி தலைமையிலே
ஒன்றிணைவோம்! ஒன்றிணைவோம்!

பிரச்சாரத்தின்போது விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை :

போலி சுதந்திரம் இதற்கேன் கொண்டாட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சுவரொட்டி
சுவரொட்டி

வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியோடு நம் நாடு சுதந்திரம் அடைந்து 66 வருடங்கள் முடிந்து விட்டதென ஊரெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

உலக ரவுடியான அமெரிக்கா, எல்லா நாடுகளையும் வேவு பார்க்கிறது. அதில் இந்தியா 5 -ம் இடத்தில் இருக்கிறது என்பதும், இந்தியத் தூதரகத்தையே நொடிக்கு நொடி உளவு பார்க்கிறது என்பதும் ஊரே நாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற தோரணையில் சூடு சொரணையேயில்லாமல் அமெரிக்காவிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது இந்திய அரசு. இப்படி கேடுகெட்ட வகையில் மண்டியிட்டுக் கிடக்கும் – அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்திய நாட்டிற்கு சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா?

இந்த நாடே சுதந்திரமாக இல்லாதபோது, நாட்டு மக்கள் மட்டும் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்? எனவேதான் சொல்கிறோம் , நாம் பெற்றது சுதந்திரமல்ல, போலி சுதந்திரமென்று. உண்மை நிலைமை இப்படி இருக்கும் போது, இதற்கென்ன சுதந்திர தினக் கொண்டாட்டம்?

இந்த நாட்டு மக்களாகிய நமக்கு சுதந்திரம் இல்லையென்றால், வேறு யாருக்குத்தான் சுதந்திரம் இருக்கிறது என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த நாட்டின் வளங்களையும், மக்களின் உழைப்பையும் கொள்ளையடித்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் மட்டும்தான் சுதந்திரம். எப்படியென்று கேட்கிறீர்களா?

நோக்கியாவுக்கு ஆண்டுதோறும் ரூ 600 கோடிக்கு மேல் தமிழக அரசு சலுகை தருகிறது. 3,000 கோடி ரூபாயை வரிஏய்ப்பு செய்துவிட்டதாக செய்தி வந்தது, அதோடு சரி, அதையும் சத்தமில்லாமல் அமுக்கிவிட்டார்கள். வோடஃபோன் நிறுவனம் 12,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகச் சொன்னார்கள் . மேலும், 20 க்கும் மேற்பட்ட மலைகளை விழுங்கி, 25,000 ஏக்கர் நிலத்தையும் ஏப்பம் விட்ட கிரானைட் திருடன் பி. ஆர். பியை ராஜமரியாதையோடு ஜெயிலுக்குக் கூட்டி போனார்கள், இப்போது புரிகிறதா? யாருக்கு சுதந்திரமென்று!

நமக்கு புழுத்த அரிசி போடக் கூட கோடிக்கணக்கில் செலவாகிறதென மானியத்தை வெட்டுகிறார்கள். ஆனால் பன்னாட்டு உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கோ மக்கள் வரிப்பணத்தை ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு கூறு போட்டு விற்கிறார்கள்.

போதாக்குறைக்கு, இந்திய ராணுவத்திற்கான ஆயுதத் தளவாட உற்பத்தியையே தனியாருக்குத் திறந்து விட்டு விட்டு, பாதுகாப்பு, சுதந்திரமெனக் கூச்சல் போடுகிறார்கள். இதோடு, சுதந்திரம், இறையாண்மை, சுயசார்பு என்பவையெல்லாம் காலாவதியாகி விட்ட கொள்கைகள் என்றும், காலத்துக்கு ஒவ்வாத பழமைவாதம் என்றும் ஏகாதிபத்திய அடிமைத்தனம் மட்டுமே முன்னேற்றத்துக்கு வழி என்றும் ஆளும்வர்க்கமும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ஒரே குரலில் ஓயாமல் ஒலிக்கவும் செய்கின்றன.

எல்லாம் சரிதான், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு? என நீங்கள் கேட்கிறீர்கள். நமது நாட்டையும், மக்களையும் அந்நியனுக்கு அடிமைப்படுத்துவதை தீவிரப்படுத்தி வரும் தனியார்மயம் -தாராளமயம்- உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையையும், அதை நடைமுறைப்படுத்தி மக்களைக் கொள்ளும் அரசையும் தூக்கியெறிய வேண்டும். ஆனால், இந்த போலி சுதந்திரம் மூலமோ – பாராளுமன்றம் மூலமோ இது நடக்காது, புரட்சி ஒன்றுதான் வழி.

வாருங்கள்… நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதை – அடிமையாக்கப்படுவதை முறியடிப்போம். நக்சல்பாரிகள் பாதையில் அணிதிரள்வோம். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம். உழைக்கும் மக்களுக்கான உண்மையான சுதந்திரத்தைப் படைத்திடுவோம்.

கவர்னர் ஜெனரல் மன்மோகன் தலைமையில் மறுகாலனியாகிறது நாடு!
வளர்ச்சி, வல்லரசு சுதந்திரம் என்பதெல்லாம் பிராடு!
உண்மையான சுதந்திரம், சுயசார்பு, ஜனநாயகத்துக்காகப் போராடுவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.
தொடர்புக்கு : செல் – 9788011784, ஒசூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க