privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் - படங்கள்

மோடியை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் – படங்கள்

-

1. புதுச்சேரி

பார்ப்பன பயங்கரவாதி, குஜராத் முஸ்லீம் இனப் படுகொலை குற்றவாளி, கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டாளி நரேந்திர மோடி தமிழகம் வருவதை கண்டித்து புதுவை பு.ஜ.தொ.மு கண்டன ஆர்ப்பாட்டம்!

திட்டமிட்ட தேதியில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலிசிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம், ஆனால் போலிஸ் அனுமதி மறுத்தது. போலிஸ் அனுமதி மறுத்தாலும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்து, ஆர்ப்பாட்டத்துக்கு தயார் செய்தோம்.

மோடியின் மாநாட்டிற்கு வரவேற்று எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டதோ அங்கெல்லாம் பக்கத்திலே நமது கண்டன ஆர்ப்பாட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டது.

இதை நின்று படித்த சிலர், “மோடி வந்தால் நல்லது நடக்கும் என நினைத்து இருந்தேன், ஆனால் அந்த சுவரொட்டி பக்கத்திலே அவர் குற்றவாளி என்று ஒட்டுகிறிர்களே, அது எந்த பத்திரிக்கையிலும் வரவில்லையே எப்படி?” என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு, “அவர் குற்றவாளி என்பது பல பத்திரிக்கையில் வெளி வந்துள்ளது. நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். இன்னொரு பக்கம் பத்திரிக்கைகள் அனைத்தும் முதலாளிகளின் உடைமையாக உள்ளது, அவர்கள் மோடி வந்தால் நாடு செழிக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் ஒரு பக்கம் உண்மையை மறைத்துதான் எழுதுவார்கள்” என்று விளக்கம் கொடுத்தோம்.

திட்டமிட்ட படி 27.09.2013 மாலை 3 மணிக்கு சுதேசி மில் எதிரில் புதுவை மாநில பு.ஜ.தொ.மு துணை செயலாளர் தோழர் அனந்தகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. போலிஸ் வந்து, “அனுமதி மறுத்தும் எப்படி நடத்துகிறீர்கள்?” என்று மிரட்டி பார்த்தது. நாம், “ஆமாம் செய்கிறோம், கைது செய்து கொள்ளுங்கள்” என்று சொன்னவுடன் போலிஸ் பின்வாங்கி, “சரி நடத்திக்கொள்ளுங்கள்” என்று பாதுகாப்புக்கு நின்றது.

கண்டன உரை நிகழ்த்திய மாநில அலுவலக செயலாளர் தோழர் லோகநாதன் “மோடி பார்ப்பன பயங்கரவாதி, 2000 முஸ்லீம் மக்களை கொண்ற குற்றவாளி, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனையே பெரிதாக கருதக் கூடியவன், இவன் வந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பில்லை” என்று மோடி பிரதமாராக வந்தால் இந்தியா செழிக்கும் என்ற மாயையை கிழித்தெரியும் வகையில் பேசினார்.

இப்பிரச்சாரம் மக்கள் மத்தியில் பரவலாக சென்றது. ஆர்ப்பட்டத்தை கவனித்த பொது மக்களின் கருத்து;

காங்கிரசைவிட பா.ஜ.க வந்தால் நல்லது என நினைத்தேன். நீங்கள் பேசியது பா.ஜ.க மீதும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மாநிலத்திற்கு காங்கிரசு வந்தால் சரி, பா.ஜ.க வரக்கூடாது. மத்தியில் யார் வந்தாலும் நமக்கு பிரச்சனையில்லை.

எல்லாம் திருட்டு பசங்க, நீங்கள் சொல்வதுதான் சரி, இவனுங்கல விரட்டியடிக்கனும்.

மோடி குஜராத்தை நல்லாதான் பார்த்துக்கொள்கிறார். ஒரு தடவை நாட்டை அவரிடம் ஒப்படைத்து பார்ப்போம். இது தேவையற்ற ஆர்ப்பாட்டம்.

மோடி வரக்கூடாது, மோடி வந்தால் தமிழ்நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்துவிடும், இவர்கள் அனைவரும் திருடர்கள்.

நான் சி.பி.ஐ கட்சியில் செயல்படுகிறேன். மோடி நல்லவர் அவர் வந்தால் நல்லது நடக்கும் என நினைத்திருந்தேன். நீங்கள் சொல்வதை பார்த்தால் அது உண்மையா? என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

மோடியின் முகத்திரையை கிழித்துவிட்டீர்கள் அவன் மக்கள் மத்தியில் நல்லவன் போல் நடிக்கிறான்.

பல புள்ளிவிபரங்களுடன் மோடியை அம்பலப்படுத்தினீர்கள், சரியான விசியம்

மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் அங்குபோய் ஆர்ப்பட்டம் நடத்தலாமே ஏன் புதுவையில் நடத்துகிறீர்கள்? இங்கு நடத்தினால் அவருக்கு எப்படி தெரியும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்வதற்கு திராவிட கட்சிகள்தான் காரணம், முதலில் அவர்களை அம்பலப்படுத்த வேண்டும்

உங்களது முழக்கங்கள் நன்றாக இருந்தது. மோடியை பற்றி உண்மையை சொன்னீர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :
பு.ஜ.தொ.மு, புதுச்சேரி.

2. விழுப்புரம்

செப்டம்பர் 26-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி திருச்சிக்கு வருவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். முதலில் அனுமதி அளித்த காவல்துறை மறுநாள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியை திரும்பப் பெற்றது.

இதனைமீறி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முழக்கமிட்டபடி ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழர். ஏழுமலை கண்டன உரையாற்றுவதாக இருந்தது. ஆனால் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்.மோகன்ராஜ் , தலைமை உரையின் போதே தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
விழுப்புரம்

3. திருச்சியில் கைது நடவடிக்கைகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

tiruchi

student poster

4. மதுரை

26_9_13 அன்று மாலை 5.30 மணிக்கு ,மதுரையின் இதயப்பகுதியான பெரியார் நிலையம் அருகே போலீசு தடையை மீறி தோழர்கள் திரண்டனர் . விண்ணதிரும் முழக்கங்களுடன் வந்த தோழர்களையும் போலீசு சுற்றி வளைத்து கைது செய்தது. இளம் தோழர்கள் கூட உற்சாகத்துடன் முழக்கமிட்டபடி கைதாகினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
செய்தியாளர்
புதிய ஜனநாயகம்.

5. கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் தடையை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட வடிவிலான தெருமுனைப் பிரச்சாரம்

கொலைகார மோடியின் தமிழக வருகையை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஐனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக பல்வேறு வகைகளில் போராட்டங்களை நடத்தப்பட்டுவருகின்றன.

26.09.2013 வியாழக் கிழமை அன்று தமிழகம் தழுவிய அளவில் குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி! டாடா- அம்பானிகளின் எடுபிடி! இந்துமதவெறி பாசிஸ்ட்! இந்தியாவின் ராஜபட்சே! மோடியே தமிழகத்தில் இருந்து வெளியேறு! என்ற முழக்கத்தின்கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரியில் மாலை 4 மணியளவில் மேற்கண்ட முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்த கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. அனுமதியை மறுத்ததோடு மட்டுமின்றி கண்ணில் விளக்கெண்ணை ஊத்திகிட்டு செயல்படுவதுபோல பரபரப்பாக ரோந்து பணியில் மூழ்கியிருந்தனர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர். இதனால் தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடத்தும்பொருட்டு தோழர்களை ஒருங்கிணைக்க முடியாத அளவுக்கு 144 விதிக்கப்பட்டிருந்தது.

ஆதலால், இறுதியில் தெருமுனைப் பிரச்சாரம் என்றவகையில் கிருஷ்ணகிரி பழையப் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பழையப்பேட்டை அருகில் திரளான மக்கள்திரள்முன் நடத்தப்பட்டது. அதில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த மூத்த தோழர், தோழர் ஆம்பள்ளி முனிராஜ் தலைமைத் தாங்கி குஜராத்தின் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு போலித்தனமான கோயபல்சு பிரச்சாரம் செய்யப்படுவதையும், முதலாளிகளின் எடுபிடி உழைக்கும் மக்களின் எதிரி என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்தி பேசினார்.

தெருமுனைப்பிரச்சாரம் முடிந்த பிறகு அருகில் இருந்த ஆட்டோ நிறுத்தம், கடைவீதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நமது துண்டுப் பிரசுரத்தை வைத்துக்கொண்டு மோடி ஒரு பயங்கரவாதி, மோசமான கிரிமினல் என்று அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து விவாதம் செய்தபடியே நமது பிரச்சாரத்திற்கு ஆதரவு தந்தார்.

இதனைக் கண்டு அரண்டுபோன காவல்துறையினர், “இங்கெல்லாம் இவ்வாறு பிரச்சாரம் செய்யக் கூடாது” என்று நம்மிடம் குறுக்கிட்டபோது, “குற்றவாளி மோடிக்கெல்லாம் அனுமதி தரப்படும் நாட்டில் நாங்கள் எங்கள் கருத்தைப் பேசுவதற்குக் கூட அனுமதியில்லையா? இதைதான் நாங்கள் போலிஜனநாயகம் என்று சொல்கிறோம்” என்று பதில் கொடுத்து பேசியபோது ஆட்டோ ஓட்டுனர்கள் சூழ்ந்து நின்று கவனித்து ஆதரவு கரம் நீட்டினர்.

நூற்றுக்கணக்கான மக்கள்முன் நடத்தப்பட்ட இந்த தெருமுனைப்பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது.

தெருமுனைப் பிரச்சாரத்தில் முழங்கிய முழக்கங்கள்:

விவசாயிகள் விடுதலை முன்னணி- வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- வாழ்க!
புதிய ஜனநாயகப் புரட்சி- ஓங்குக!

திரும்பிப் போ! திரும்பிப் போ!
நரேந்திரமோடியே திரும்பிப் போ!
3000 முசுலீம்களை படுகொலை செய்த
பாஸிஸ்டே திரும்பிப் போ!

திரும்பிப்போ! திரும்பிப்போ!
டாடா- அம்பானிகளின் எடுபிடியே
இந்துமதவெறி பாசிஸ்டே
இந்தியாவின் ராஜபக்சேவே
திரும்பிப்போ! திரும்பிப்போ!

முதலிடம், முதலிடம்
உலகத்திலேயே முதலிடம்
ஏழைப் பெண்களின் கருப்பையை
வெள்ளையருக்கு வாடகைக்கு விடும்
மானங்கெட்ட மோடியின் செயல்
உலகத்திலேயே முதலிடம்!

இந்திய மண்ணை அந்நியனுக்கு விற்கும்
குஜராத்துதான் முதலிடம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
இந்துமதவெறி பாசிஸ்டுகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள்.