Tuesday, May 28, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்தாது மணல் கொள்ளை : பெரியாதாழையில் பொதுக் கூட்டம்

தாது மணல் கொள்ளை : பெரியாதாழையில் பொதுக் கூட்டம்

-

மீனவர்களின் வாழ்வுரிமையைச் சூறையாடும் தாதுமணல் கொள்ளையர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!

தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு!

என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் 29.12.1013 மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. 23- நவம்பரில் தூத்துக்குடியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தால் உந்தப்பட்ட பெரியதாழை ஊர்க்கமிட்டியினரும் மீனவர்களும் தமது ஊரிலும் இது போன்று பொதுக்கூட்டம் போட்டு மக்களுக்கு போராட்ட உணர்வூட்ட வேண்டும் என முடிவெடுத்தனர். ஊர்க்கமிட்டி தலைவர் கான்சியஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று ம.உ.பா. மையத்தினரின் பங்கேற்புடன் கூட்டம் நடத்தப்பட்டது.

மாலை பிரார்த்தனை முடிந்தபின் 7.00 மணியளவில் பெரியதாழை ஊர்க்கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் பெரிய பாதிரியார் துவக்கவுரையாற்ற, ம.க.இ.க.மைய கலைக்குழுவின் எழுச்சியூட்டும் பாடலுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, வாஞ்சிநாதனும் மற்றும் ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பனும் சிறப்புரையாற்றினர். வைகுண்டராஜனின் தம்பியான சுகுமாரால் இயக்கப்படும் பி.எம்.சி. எனும் மணல் ஆலையால் பாதிக்கப்பட்டு2005 லேயே போராட்டக்களத்துக்கு வந்துவிட்ட பெரியதாழை மக்களுக்கு அடுத்து எப்படி முன்னேறிச்செல்வது? ஆலையை நிரந்தரமாக மூடவைப்பதற்கு எத்தகைய போராட்டம் தேவை? போலீசை ஏவி தாக்குவதையும், பொய் வழக்கு போடுவதையும் எதிர்கொள்வது எப்படி? என்பதை விளக்கும் விதமாக பேச்சாளர்கள் விளக்கினர். தனியார்மயத்தை – மறுகாலனியாக்கத்தை முறியடிக்க உழைக்கும் வர்க்கமாக கரம் கோர்க்க வலியுறுத்தினர்.

அடுத்து நடந்த கலைநிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குழந்தைகளுடன் குடும்பமாக வந்திருந்த பொதுமக்கள் மார்கழிமாத கடும் பனியிலும், வாடைக் காற்றிலும் இரவு 10.30 வரை இருந்து நிகழ்ச்சியை கவனித்தனர். முடிவில் மெஸ்மன் நன்றியுரையாற்றினார்.

விவி.யின் சொந்த ஊருக்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தால் கைக்கூலிகள் கொதித்தனர். இரவில் சுவரொட்டியை மேய்ந்தனர். சில ஊர்களில் பொதுக்கூட்ட சுவரொட்டியை கிழித்த கைக்கூலிகளை ஊர் மக்களே விரட்டியடித்தனர். உடனே “நோட்டீச கொடுங்க, மீண்டும் ஒட்டுகிறோம், எவன் வந்தாலும் பாத்துடறோம்” என தகவலும் அனுப்பினர்.

தூத்துக்குடி பொதுக்கூட்ட குறுந்தகடு இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டு மேடைக்கு அருகில் விற்பனை செய்யப்பட்டது. சிலர் 5,10 என்று வாங்கி தன் நண்பர்களுக்கு தந்தனர். விவி யின் கோட்டையை பிளக்கப் போகும் ஆணிவேராக பெரியதாழை துளிர் விட்டுள்ளதை இந்த பொதுக்கூட்டம் நிரூபிப்பதாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி கிளை.

  1. தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராசன் கைது என முகநூலில் சில இடங்களில் பேசிகிறார்கள் தோழர், தங்களுக்கு ஏதாவது உறுதியான தகவல் கிடைத்துள்ளதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க