privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஒரு வரிச் செய்திகள் – 21/01/2014

ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014

-

செய்தி: பாட்னா: ‘வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பீகாரில், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை எதிர்த்து, செருப்பு தைக்கும் தொழிலாளி அல்லது ரிக் ஷா தொழிலாளியை, ‘ஆம் ஆத்மி’ சார்பில் நிறுத்தி, வெற்றி பெறச் செய்வோம்’ என, அக்கட்சி தெரிவித்துள்ளது.

நீதி: ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்டு முதலமைச்சராவதற்கு இத்தகைய ‘தொழிலாளி’கள் கிடைக்கவில்லையா?

________

செய்தி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, டில்லி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று, தர்ணா போராட்டம் நடத்தினார். “என் கோரிக்கை, நிறைவேறும் வரை, தர்ணா போராட்டத்தை, கைவிடும் பேச்சுக்கே, இடம் இல்லை,” என, அவர் உறுதியாக அறிவித்தார்.

நீதி: தண்டகாரண்யா, காஷ்மீரில் ஆட்டம் போடும் இராணுவம், துணை இராணுவத்தின் மேல் நடவடிக்கை கூடாது என்றவர் இதே கேஜ்ரிவால்தான்.

_______

செய்தி: ஆம் ஆத்மி தர்ணா குறித்து நேற்று பேசுகையில், “‘டில்லியில் ஏன் தான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுபோட்டோம்’ என மக்கள் வருந்தும் வகையில் முதல்வர் கெஜ்ரிவால் வீதிவரை போராடுவதை பார்த்தால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது” என்றார் கிரண்பேடி.

நீதி: ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் அண்ணா ஹசாரே கோஷ்டிக்கு வயிறு எரியத்தானே செய்யும்?

________

செய்தி: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, நாடு முழுவதும், 300 நகரங்களில், 1,000 டீக்கடைக்காரர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இணையதளம் அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம், அவர், டீக்கடைக்காரர்களை சந்திக்க உள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை, கட்சியின் முன்னணித் தலைவர்கள், மேற்கொண்டு வருகின்றனர்.

நீதி: முதலாளிகள் சங்கத்தோடு நட்சத்திர விடுதிகளில் அளவளாவும் மோடி டீக்கடை வாலாக்களை வீடியோ கான்பரன்சில் சந்திக்கிறார். டாலருக்கு சிம்மாசனம், டீக்கு புறவாசல் !

_______

செய்தி: டில்லி மாநில முதல்வராக பதவியில் இருக்கும், அரவிந்த் கெஜ்ரிவால், வீதியில் இறங்கி, மத்திய அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு, இப்போது, கெஜ்ரிவால் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

நீதி: கேஜ்ரிவால் கூட ‘அம்மாவிடம்’தான் சுட்டதாக ஆர்ப்பரிப்பது அவாளின் தினமலர் என்பதறிக!

________

செய்தி: திருவனந்தபுரம்: கேரளாவில், பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள், ஒரே அணியில் இணைந்து செயல்படுவது, அங்கு, ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் பொலிட் பீரோவுக்கு, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ள ஒரு பிரிவினர் (பினரயி விஜயன் கோஷ்டி), மதவாத சக்திகளுடன் கூட்டணி வைத்து செயல்படுகின்றனர். இது போன்ற செயல்பாடுகளால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, கூறியுள்ளார்.

நீதி: போலி கம்யூனிசத்தில் புடம் போடப்பட்டவன் காவியிடம் மண்டியிடாமல் புரட்சிக்கா பொங்குவான்?

________

செய்தி: குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக, அடுத்த மாதம், 9-ம் தேதி, கேரளாவுக்கு வருகிறார். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த சில கிறிஸ்துவ அமைப்புகள், தங்கள் பிரதிநிதிகளை சந்திக்கும்படி, மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதி: மேலே பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கண்ணீர் விடுகிறார் – கர்த்தரே ஓநாயிடம் அடைக்கலம் தேடும் இந்த ஆடுகளை கைவிடாதிருங்கள் !

________

செய்தி: எங்கள் வீட்டில், அப்பா இருந்தார், சித்தப்பா இருந்தார். பாட்டி இருந்தார். இருந்தாலும், எங்கள் வீட்டின், ‘பாஸ்’ பாட்டி, இந்திரா தான். அவர் தான், முக்கிய முடிவுகளை எடுப்பார். பெண்களுக்கு, பிறருடைய பாதுகாப்பு தேவையில்லை. அவர்களுக்கு உரிமையும், அதை செயல்படுத்த இடமும் தான் வழங்க வேண்டும் – ராகுல் காந்தி

நீதி: பின்னே, ராகுல் காந்தி பிரதமரென்று சோனியா முடிவு செய்ய வேண்டுமென்றால் பெண்களுக்கு ‘உரிமை’ வேண்டுமல்லவா!

________

செய்தி: வி.வி.ஐ.பி.,களுக்கு, ஹெலிகாப்டர் சப்ளை செய்ய, பிரிட்டனின், ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ நிறுவனத்திடம் மேற்கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க, அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டோம். தீவிர ஆலோசனைக்கு பிறகே, முடிவு எடுக்கப்படும் – ஏ கே அந்தோணி, ராணுவ அமைச்சர்.

நீதி: வாங்கிய கமிஷனுக்கு நன்றி கெட்டவர்கள் இல்லை இந்த இந்திய அரசு என்பதை இதற்கு மேலும் நிரூபிக்க வேண்டுமா?

__________

செய்தி: மதுரை ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மலேசியா சென்றுள்ளது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

நீதி: ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து மலேசியாவிற்கு தென் தமிழக இளவரசர் விஜயம் செய்வதில் கூடவா ‘அரசியல்’ ?

________

செய்தி: மதுரை லோக்சபா தொகுதியில் ‘மார்க்சிஸ்ட் கட்சி’ தனித்து- போட்டி என்ற ‘போஸ்டர்’கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், ‘மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி’ தோழர்கள் சற்று ‘ஜெர்க்’ ஆகியுள்ளனர்.

செய்தி: அந்த போஸ்டர் நாங்கள் ஒட்டவில்லை என்று நல்லகண்ணுவும், இராமகிருஷணனும், தாபாவும் போயஸ் தெருவில் போஸ்டர் மேல் போஸ்டர் ஒட்டி அம்மாவின் அடிமைகள் அடிமைகள்தான் என்று நிரூபித்து வருகிறார்களாம்!

_________

செய்தி: ”தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக, எந்த பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை,” என, மணிசங்கர் அய்யர் எம்.பி., கூறினார்.

நீதி: கூட்டணி இருந்தாலே மயிலாடுதுறையில் முன்னேறுவது சிரமம் என்பதால் அய்யர் தினாவெட்டை விட்டு பணிவு காண்பிக்கிறாராம்.

__________

செய்தி: கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்தியதால், வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

நீதி: இனி கருணை மனுவை காலம் தாழ்த்த மாட்டார்கள், தாழ்த்தக் கூடாது என்பதே இந்த ‘கருணை’ உத்தரவின் அடிப்படை.

_________

செய்தி: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 700 முஸ்லிம்கள் போலி நகரில் உள்ள தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

நீதி: இதை வைத்து கர்த்தரா, அல்லவா யார் மேலானவர் என்று மதவாதிகள் சண்டை போடாமல் இருந்தால் சரி.

_________

செய்தி: தங்கள் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் உடை அணிவதாலும், கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாலும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்ற நகரங்களைவிட சென்னையில் குறைவாக உள்ளது.”  – தமிழக காவல் துறையின் மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான பாபுலால் கவுர் தெரிவித்த கருத்து.

நீதி: இதைப் படித்த தேவநாதன், ஜயேந்திரன், நித்தியானந்தா மூவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம்.

_________

செய்தி: நாடு முழுவதும் உள்ள 779 நகரங்களில் வாழும் 22.13 கோடி மக்கள் பயன்பெறும் தேசிய நகர்ப் புற சுகாதார திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

நீதி: இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதலாளிகள் – நிறுவனங்களின் கோடிகள் எவ்வளவு அமைச்சர் அவர்களே?

_________

செய்தி: பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு தேவையான கரும்பு சர்க்கரை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைவதால், தரம் குறைவான சர்க்கரை அனுப்பப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நீதி: பாரத மாதாவே பன்னாட்டு நிறுவன வியாபாரிகளின் கையில் போய்விட்ட பிறகு பஞ்சாமிர்தம் போவதில் என்ன தப்பு முருகா?