Friday, December 6, 2019
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தேவயானி வழக்கை அமெரிக்கா ரத்து செய்தது ஏன் ?

தேவயானி வழக்கை அமெரிக்கா ரத்து செய்தது ஏன் ?

-

தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை நியூயார்க் மாவட்ட நீதிபதி ஷீரா ஷெய்ன்ட்லின் தள்ளுபடி செய்திருக்கிறார். ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று தேவயானியையும் அவருக்கு ஆதரவாக பொங்கி எழுந்த இந்திய அரசையும் பார்த்து புலியாக உறுமிய அமெரிக்க நீதித்துறை இப்போது நரியாக வாபஸ் வாங்கியது ஏன்?

தவறான தகவல்களையும், மோசடி ஆவணங்களையும் கொடுத்து சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்ணுக்கு விசா பெற்று தன் வீட்டு வேலைகளை செய்வதற்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு நியூயார்க் இந்திய தூதரகத்தில் பணி புரிந்த தேவயானி கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். ‘இந்தியாவின் பிரதிநிதியான அவர் கைது செய்யப்பட்டது இந்திய தேசமே அவமதிக்கப்பட்டதற்கு இணையானது’ என்று சீன் போட்ட இந்திய அரசு சும்மா ஒரு பேருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்தது.

உத்தம் கோப்ரகடே
தேவயானியின் விடுதலைக்காக போராடும் அவரது தந்தை உத்தம் கோப்ரகடே

மறுபுறம், ‘கும்தலக்கடி கும்மாவா, அமெரிக்கான்னா சும்மாவா. எங்க ஊருக்கு வந்தா தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் புடிச்சி உள்ள போட்டுருவாங்க, சட்டம் தனது கடமையை உண்மையாகவே செய்யும். உங்க இந்தியாவப் போல இல்ல’ என்று கூறி அமெரிக்காவின் ‘சட்டப்படியான ஆட்சி’யைக் கொண்டாடினார்கள் அமெரிக்கவாழ் இந்திய அம்பிகள். இப்படி அமெரிக்க என்ஆர்ஐ-களும், இந்திய மேட்டுக்குடியும் தேசபக்தி, ஜனநாயகம் என்ற வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு போங்காட்டம் ஆடினார்கள்.

இதே அமெரிக்காவில் சென்ற ஆண்டு போலியான வருமான சான்றிதழ் கொடுத்து அமெரிக்க அரசின் இலவச மருத்துவ வசதியை மோசடியாக பெற்று 12 லட்சம் டாலர் வரை கையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் மீது கை வைக்க அமெரிக்க நீதித் துறை துணியவில்லை.

ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளும், ஐநா-வில் வீட்டோ அதிகாரமும் இருப்பதால், அந்நாட்டுடன் இந்த விஷயத்தில் மோதி விளையாட அமெரிக்காவுக்கு நேரமில்லை. இந்தியா போன்ற அமெரிக்க எஜமானர்களை விழுந்து தொழும் அடிமை நாடுகளிடம்தான் இது போன்று சில்லறை விவகாரங்களில் தனது சட்டங்களை பாய்ச்சி, சீண்டி, ரசிப்பது முடியும்.

மேலும், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மிட் ரோம்னி என்பவர் தேவயானியைப் போலவே தனது வீட்டில் வேலை செய்பவருக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அரசியல் கட்சி எதிராளியின் வண்டவாளங்களை தெருவில் இறக்கி விடும் அமெரிக்க ‘ஜனநாயக’த்தின் தேர்தல் மேலாண்மை உத்தியின் ஒரு பகுதியாக அந்த தகவல் கசிய விடப்பட்டது. ஆனால் மிட் ரோம்னி மீது அமெரிக்க நீதித்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கைது செய்யப்பட்ட தேவயானியும் சில மணி நேரங்களுக்குள் இந்திய அரசால் இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து கட்டப்பட்ட 2.5 லட்சம் டாலர் பிணையில் வெளியில் வந்து விட்டார்.

‘தேவயானிக்கு தூதரக அதிகாரிகளுக்கான சட்ட பாதுகாப்பு இருப்பதால், அவர் மீது வழக்கு தொடர்ந்தது செல்லாது’ என்று அவரது தந்தை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உத்தம் கோப்ரகடேவும், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும், 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளும் ஓலமிட்டனர். “தூதரக துணை அலுவலராக இருந்த தேவயானிக்கு தூதரக பணி தொடர்பான நடவடிக்கைகளுக்குத்தான் சட்ட பாதுகாப்பு இருக்கிறதே தவிர, தூதர்களுக்கு இருப்பது போன்று அனைத்து குற்றவியல் சட்டங்களிலிருந்தும் விலக்கு அளிக்கும் முழுமையான பாதுகாப்பு இல்லை” என்று அமெரிக்க அரசுத் தரப்பு வாதிட்டது. இதே அமெரிக்க அரசு, 2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புகாரெஸ்ட் நகரில் குடித்து விட்டு கார் ஓட்டி அந்நாட்டு இசைக் கலைஞர் ஒருவரை கொன்ற அமெரிக்க தூதரக ஊழியர் வான் கோதம் என்ற கடற்படை வீரருக்கு தூதரக சட்ட விலக்கு செல்லுபடியாகும் என்று சாதித்து தானே ராணுவ விசாரணை நடத்தி தண்டனை கொடுத்தது.

மிட் ரோம்னி
தேவயானியைப் போலவே வீட்டுப் பணியாளருக்கு சட்டப்படி ஊதியம் கொடுக்காத மிட் ரோம்னி.

வெளிநாடு செல்லும் போது வீட்டு வேலை செய்ய ஆள் அழைத்துச் செல்ல தேவயானி பயன்படுத்திய இந்த ஏற்பாடு, (அதாவது, விசா பெறுவதற்காக ‘கூடுதல் சம்பளம், முறையான வேலை நேரம்’ என்று வரையறுத்த ஒப்பந்தத்தை சமர்ப்பிப்பது, நடைமுறையில் வாய்மொழி ஒப்பந்தப்படி குறைந்த சம்பளம் கொடுத்து அதிக நேரம் வேலை வாங்குவது), கடந்த 20 ஆண்டுகளாக இந்திய தூதரக அதிகாரிகளால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக அமெரிக்க அரசு இது வரை எந்த பிரச்சனையும் கிளப்பவில்லை.

இவ்வாறு, தனது வல்லாதிக்க நலன்களுக்கு ஏற்ப பிற நாடுகளுடன் பேரம் பேசுவதற்காக, மிரட்டவும், விட்டுக் கொடுக்கவும், சீண்டி விளையாடவும் அமெரிக்க மற்றும் பன்னாட்டு சட்டங்கள் அமெரிக்க அரசுக்கு பயன்படுகின்றன.

இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளைப் பொறுத்த வரை உலகில் எங்கு போனாலும் தமது வீட்டு வேலைகளை செய்ய இந்தியாவிலிருந்து ஒரு ‘அடிமை’யை அழைத்துப் போகும் தமது ‘அடிப்படை’ உரிமை பாதிக்கப்பட்டதாக பொருமிய அவர்கள், தேவயானிக்கு இன்று இந்த கதி என்றால், நாளைக்கே வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதரையே வீடு புகுந்து கைது செய்து விடுவார்கள் என்று கவலைப்பட்டனர். “வேலைக்காரிக்குக் குறைவான சம்பளம் கொடுத்தது பெருங்குற்றமா?” என திமிர்த்தனமாக கேள்வி எழுப்பினார்கள். தமது நலன்களுக்கு எதிரான இத்தகைய அமெரிக்க நடத்தையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சூளுரைத்தனர்.

இந்த மானஸ்தர்கள் இந்திய பிரதமர் முதல் கடைசி குடிமகன் வரை செல்போன், இணைய தொடர்புகளுக்குள் புகுந்து அமெரிக்க உளவுத் துறை ஒட்டுக் கேட்பது குறித்து வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது போபால் கொலைகாரன் ஆண்டர்சனையோ, யூனியன் கார்பைடையோ காப்பாற்றத்தான் துடித்தார்களே அன்றி தண்டிக்க அல்ல. இதுதான் இவர்களது தேசபக்தி காட்டும் அடிமைத்தனம்.

‘இந்திய-அமெரிக்க உறவுகளில் நெருக்கடி, இந்தியாவின் தன்மானப் பிரச்சனை’ என்று இந்திய ஆளும் வர்க்கம் துள்ளுவதை ரசித்துக் கொண்டிருந்தது அமெரிக்க அரசு.  ‘வல்லரசு இந்தியாவின் காயம்பட்ட இதயத்தை’ ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் தத்தமது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கிளம்பிப் போய் விட்டார்கள்.

தம் வசம் வேறு என்ன வழி இருக்கிறது என்று மூளையைக் கசக்கிக் கொண்ட இந்திய அதிகார வர்க்கம் தமது ஒட்டுமொத்த எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு தேவயானிக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அவரை நியூயார்க்கில் உள்ள ஐநா சபையின் இந்திய பிரதிநிதி அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டது.

ஆனால், “புதிதாக வழங்கப்படும் ஐநா ஊழியருக்கான முழுமையான சட்ட பாதுகாப்பு முன் தேதியிட்டு செல்லுபடியாகாது, எனவே ஏற்கனவே செய்த குற்றங்களுக்காக வழக்கு தொடர்வதை தடுக்க முடியாது” என்ற அடிப்படையில், ஜனவரி 9-ம் தேதி விசா மோசடி முதலான குற்றங்களை தேவயானி மீது சுமத்தியது நியூயார்க் நீதித் துறை. இருப்பினும் குற்றவாளியின் மீது தன் பிடியை மேலும் இறுக்காமல் தேவயானியின் மனுவின் அடிப்படையில் அவரை அமெரிக்காவை விட்டு போக அனுமதித்தது அமெரிக்க நீதிமன்றம். அந்த மனு மீதான இறுதித் தீர்ப்புதான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

குற்றம் நடந்த நேரத்திலும், கைது செய்யப்பட்ட போதும் தேவயானிக்கு தூதரக பணிகள் தொடர்பான சட்டப் பாதுகாப்பு மட்டுமே இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டு அதைத் தள்ளுபடி செய்யக் கோரிய ஜனவரி 9-ம் தேதி ஐநா ஊழியராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு உள்ளது என்று நீதிபதி இப்போது தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வாறாக, இந்த விஷயத்தில் நோண்டியது போதும் என்று தான் கிளப்பிய புழுதியை அடங்க விட்டு அமைதியாகியிருக்கிறது அமெரிக்கா.

ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்கள்
தேவயானி போன்ற ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்களுக்கு அனைத்து வசதிகளும் எளிதாகவே கிடைத்து விடுகின்றன.

தேவயானியின் பிணை நிபந்தனைகளை ரத்து செய்து இந்திய அரசு கட்டியிருந்த பிணைத் தொகையையும் விடுவித்தது நீதிமன்றம். “தேவயானி மீது சாட்டப்படும் குற்றம் அவரது தூதரக பணி தொடர்பாக செய்யப்படவில்லை என்று நீதித்துறை கருதினால் புதிய குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யலாம்” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. குற்றவாளி பாதுகாப்பாக நாட்டை விட்டு பறந்து விட்ட நிலையில், இந்திய ஆளும் வர்க்கத்தின் முரண்டை பார்த்து விட்ட நிலையில், இந்த விவகாரத்தை அமெரிக்கா அப்படியே புதைத்து மூடி விடும் என்று எதிர்பார்க்கலாம். அல்லது தேவைப்படும் போது நீதிபதியின் இந்த ‘செய்யலாமை’ வைத்து வழக்கை உயிர்ப்பிக்கவும் செய்யலாம்.

ஜனவரி 9-ம் தேதி இந்தியாவுக்குத் திரும்பிய தேவயானி இந்திய வெளியுறவுத் துறையின் “வளர்ச்சி கூட்டிணைப்பு நிர்வாகத்தின் (Development Partnership Administraion)“ இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க் தூதரகத்தில் பதவி, அங்கு பிரச்சனை ஏற்பட்டதும் ஐநா ஊழியராக நியமனம், அதிலிருந்து திரும்பி வந்ததும் நிர்வாக பதவி என்று தேவயானி போன்ற ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்களுக்கு அனைத்து வசதிகளும் எளிதாகவே கிடைத்து விடுகின்றன.

அமெரிக்க நீதி மன்றத்தின் தீர்ப்பு தேவயானியின் குற்றம் குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும் அவரது தந்தை உத்தம் கோப்ரகடே தன் மகள் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய உதவிய இந்திய அரசு மற்றும் இந்தியர்களின் ஒத்துழைப்புக்கும், உதவிக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சங்கீதா ரிச்சர்ட் குடும்பத்தினரை பொய்யர்கள் என்று திட்டியிருக்கிறார்.

இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி சட்டங்கள் தற்செயலாக சாமானியர்களின் சார்பில் சில சமயம் இயங்குவது போல காண்பித்தாலும், ஆளும் வர்க்கங்கள் அவற்றை சீக்கிரமே மேன்மக்களுக்கு சாதகமாக சரி செய்து விடுவார்கள் என்பதை இது தெளிவாக்குகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை.  அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு சாமானிய இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு ஆதரவாகத்தான் அமெரிக்க, இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக, தேசப்பற்று என்ற பெயரில் ஆண்டைகளுக்காக கூக்குரலிட்டார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

சங்கீதா ரிச்சர்டை கொடுமைப்படுத்திய தேவயானியையும், அவரைப் போன்ற அதிகார வர்க்கத்தை விட்டுக்கொடுக்காத இந்திய அரசையும், இந்திய மக்களை ஒடுக்கியும், ஒடுக்குதலில் உதவும் இந்திய தரகர்களை உச்சி முகர்ந்தும் வரும் அமெரிக்க அரசையும் நாம்தான் தண்டிக்க வேண்டும், அம்பலப்படுத்த வேண்டும். இதன்றி சங்கீதா ரிச்சர்டுக்கோ இல்லை இந்திய மக்களுக்கோ நீதி கிடைத்து விடாது.

– அப்துல்

மேலும் படிக்க

 1. \\“தேவயானி மீது சாட்டப்படும் குற்றம் அவரது தூதரக பணி தொடர்பாக செய்யப்படவில்லை என்று நீதித்துறை கருதினால் புதிய குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யலாம்” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது//

  பத்து பாத்திரம் தேய்க்கிற வேலையை செய்ய ஒரு பணிப்பெண்ணை அமர்த்துவதற்கும் தூதரக பணிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்.ஒரு பள்ளிச்சிறுவன் கூட தொடர்பு ஏதுமில்லை என சொல்லிவிடுவானே.மெத்தப்படித்த கனவான்கள் மட்டும் யானையை தடவிப்பார்த்துதான் இன்னதென்று சொல்வார்களாம்.

 2. மாலைமலர்

  விசா மோசடி வழக்கு: தேவயானியை கைது செய்ய அமெரிக்கா உத்தரவு

  பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 1:14 AM IST

  நியூயார்க், மார்ச்.16-

  தேவயானி கோப்ரகடே மீது புதிதாக தொடரப்பட்ட விசா மோசடி வழக்கில், அவருக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்துள்ளது.

  அமெரிக்காவில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே (வயது 39), தனது பணிப்பெண்ணின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அளித்து மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த டிசம்பர் 12-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  அவரை அமெரிக்க போலீசார் கை விலங்கிட்டு, ஆடை அவிழ்த்து சோதனை செய்தது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும் தேவயானி மீது நியூயார்க் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவரை நாடு திரும்பும்படி அமெரிக்கா உத்தரவிட்டது.

  இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி தேவயானி இந்தியா திரும்பினார். பின்னர், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அவர் நியூயார்க் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிரா சென்ட்லின், தேவயானி மீதான வழக்கை தள்ளுபடி செய்து கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் ஆலோசகராக தேவயானி பணி நியமனம் செய்யப்பட்டு, அதை அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஜனவரி 8-ந்தேதி அங்கீகரித்து விட்டது. எனவே அவருக்கு தூதரக ரீதியிலான முழுமையான விலக்கு கிடைத்து விட்டதால், அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பில் கூறப்பட்டது.

  இது தேவயானி குடும்பத்தினர் மட்டுமின்றி மத்திய அரசுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கில் புதிய திருப்பமாக, தேவயானிக்கு எதிராக அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வக்கீல் பிரீத் பராரா நேற்று புதிதாக 21 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

  அதில், தேவயானி தனது பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் தவறான தகவல்களை அளித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், சொந்த ஆதாயத்துக்காக சட்ட விரோதமாக செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், தேவயானிக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இதன் மூலம், அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக, தேவயானி அங்கு சென்றால் கைதாகும் நிலை உருவாகி உள்ளது.

  அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவயானி மீதான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர் மீது மீண்டும் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நடவடிக்கை தேவையற்றது என மத்திய அரசு கூறியுள்ளது.

  அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாக கூறியுள்ள இந்திய அதிகாரிகள், இது இந்திய-அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க