Friday, November 15, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பகத்சிங் நினைவு நாளில் புஜதொமு பொதுக்கூட்டம்

பகத்சிங் நினைவு நாளில் புஜதொமு பொதுக்கூட்டம்

-

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு நாளில் பொதுக்கூட்டம்

ndlf-meetநாள் : 23.3.2014
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : அம்பத்தூர் O.T பேருந்து நிலையம்

நிகழ்ச்சி நிரல்

தலைமை
தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு – தமிழ்நாடு

வரவேற்புரை
தோழர் மு. முகிலன், செயலாளர், பு.ஜ.தொ.மு – ஆவடி அம்பத்தூர் பகுதிக்குழு

உரையாற்றுவோர்

  • தோழர் சுப. தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு – தமிழ்நாடு
  • தோழர் சு. பரசுராமன், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு – கிருஷ்ணகிரி
  • தோழர் விளவை. இராமசாமி, மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – கோவை
  • தோழர் இரா. லோகநாதன், பு.ஜ.தொ.மு. – புதுச்சேரி
  • தோழர் நாகராஜன், மாவட்ட அமைப்பாளர், பு.ஜ.தொ.மு – சிவகங்கை
  • தோழர் சொ. செல்வகுமார், மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – திருவள்ளூர்
  • தோழர் ஆ.கா. சிவா, மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு – காஞ்சிபுரம்

நன்றியுரை
தோழர் ம. சரவணன்,
தலைவர் பு.ஜ.தொ.மு – ஆவடி – அம்பத்தூர் பகுதிக்குழு

ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

______________________________

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

தங்களது மூலதனப் பெருக்கத்துக்காக இலாபவெறியோடு தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள், இயற்கைச் செல்வங்களையும் சூறையாடுகின்றனர். இதனால் இயற்கையின் பேரழிவுக்கும், மனித குலத்தின் நாசத்துக்கும் முதலாளி வர்க்கம் காரணமாக இருக்கிறது.

எத்தனை கோடி மனிதர்களது பிணத்தின் மீது முதலாளித்துவம் கட்டப்பட்டதோ, அதைவிட பன்மடங்கு மரங்களையும், ஏனைய உயிர்களையும் அழித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு இல்லை என்றால் முதலாளித்துவத்தின் ஏற்றம் இல்லை. அதேபோல் இயற்கைச் செல்வங்களின் அழிவில்தான் முதலாளி வர்க்கத்தின் செல்வச் செழிப்பு கொட்டிக் கிடக்கிறது.

இரும்பைத் தேட மலைகளைக் குடைந்த முதலாளித்துவம், மலைகளைக் குடையவும், இரும்பை உருக்கவும் தொழிலாளி வர்க்கத்தை கடைந்து பிழிந்தது. நிலக்கரியைத் தோண்ட மண்ணைப் பிளந்த முதலாளி வர்க்கம் கரியோடு கரியாக தொழிலாளி வர்க்கத்தை எரித்துதான் போக்குவரத்தையும், மின்சாரத்தையும் உருவாக்கிக் கொண்டது. பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டிய முதலாளித்துவம் அதனது அடித்தளத்தில் தொழிலாளி வர்க்கத்தையும், அது பிளந்த மலைகளையும்தான் தூண்களாக நிறுத்திக் கொண்டுள்ளது. ஆலைகளுக்காக காடுகளையும், பலகோடி மரங்களையும் காவு கொடுத்த முதலாளி வர்க்கம், மழை வளத்தையும் பலியிட்டு விட்டது. இவர்களது பேராசையால் அள்ள அள்ளக் குறையாத மீன்வளம் வறண்டு போனதுடன், கடல் தாயும் சுனாமியாய் சீற்றம் கொண்டாள்.

தொழில்மயமாக்கம் என்கிற பெயரில் முதலாளி வர்க்கம் ஏற்படுத்திய பேரழிவுகள் இன்னும் பல தலைமுறைக்கு பிடித்தாட்டப் போகிறது. பொருளாதாரச் சுரண்டலை விட பலமடங்கு கொடூரமான விளைவுகளை சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் ஏற்படுத்தி வருகின்றன. உணவுப் பஞ்சம், குடிநீர்ப் பஞ்சம், பட்டினிச் சாவுகள், அடுத்தடுத்து வறட்சி – பெருமழை, கொள்ளை நோய்கள், கிரிமினல் குற்றங்கள், சமூக சீர்கேடுகள் அனைத்துக்கும் முதலாளித்துவமே காரணம்.

நவீன விவசாயம் என்கிற பெயரில் இரசாயன உரங்களைக் கொட்டி மண்ணை நஞ்சாக்கியது, முதலாளி வர்க்கம். பின்னர், பணப்பயிர் உற்பத்தியைத் திணித்து விவசாயியை போண்டியாக்கி விவசாயத்தை விட்டே விரட்டி வருகிறது. தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம் என்றெல்லாம் கதைவிட்டு விளைநிலங்களை வீட்டு மனைகளாக்கியது. ஒரு வருடம் பெருவெள்ளமும், அடுத்த வருடம் பருவமழை பொய்த்ததால் வறட்சியும் வந்து எஞ்சிய விவசாயிகளை படுகுழிக்குத் தள்ளிவிட்டது. உணவு உற்பத்தியை நாசப்படுத்திய முதலாளித்துவம், இயற்கைக்கு மாறான உணவுப் பழக்கத்தையும், டப்பா உணவையும் திணித்து மனிதகுலத்தை நோயாளியாக்கி விட்டது. தங்களது நாட்டு விவசாய நிலங்களை நாசமாக்கிவிட்டு ஆப்பிரிக்க நாட்டில் நிலங்களை வாங்கிக் குவித்து விவசாயம் செய்கின்றன, பன்னாட்டு வேளாண் கார்ப்பரேட் நிறுவனங்களும், சவூதி அரேபியா, சீனா போன்ற நாடுகளும். கார், டிவி போல உணவுப் பொருளும் உலகம் சுற்றத் தொடங்கி விட்டது.

ஆலைகள் கக்குகின்ற புகைகள், பிரம்மாண்ட ஏ.சி எந்திரங்கள் துப்புகின்ற நச்சுவாயுக்கள், இடைவிடாது ஓடும் வாகனங்கள் உமிழ்கின்ற கரிப்புகை இவையனைத்தும் முழு வான்மண்டலத்தையே விசமாக்கி விட்டது. சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்கியதுடன் இந்த பூமியைக் காத்து வந்த ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கி விட்டது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்துள்ளது. சுனாமிகளைக் கொண்டுவந்த புண்ணியவான்கள் முதலாளிகளே! கடந்த சூன் மாதத்தில் இமயத்தில் பெருமழை பெய்து, ‘இமயத்து சுனாமி’யை ஏற்படுத்தி, பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டதற்கும் முதலாளிகளே காரணம்.

ரகரகமான புற்றுநோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் பிரச்சனைகள், விதவிதமான தோல் நோய்கள், பன்றி – பறவை காய்ச்சல்கள், சுவாச நோய்கள் ஆகிய அனைத்தும் சுற்றுச் சூழல் நாசமானதால் வந்தவைதான். இதன் காரணகர்த்தாக்களே முதலாளிகள்தான். இந்த பேரழிவுகளை பணமாக்குவர்களும் முதலாளிகள்தான். இது மட்டுமின்றி, இதன் தொடர்ச்சியாய் நடக்கின்ற விலைவாசி உயர்விலும் லாபம் குவிப்பவர்கள் முதலாளிகள்தான். உழைக்கும் மக்களோ தனியாரிடம் மருத்துவம் பார்த்தே கடனாளியாகி செத்து மடிகின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். 11 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவ செலவுக்காக 4 கோடி பேர் கடனாளியாகின்றனர். இந்த கடனிலும் லாபம் பார்ப்பது, முதலாளிகள்தான்.

திடீர் திடீரென வனவிலங்குகள் மனிதக் குடியிருப்பில் புகுந்து மனிதர்களை கொல்லுகின்றன. விளைபயிர்களை நாசமாக்குகின்றன. இதற்கு என்ன காரணம்? நாம் சிறுவயதில் பார்த்து ரசித்த சிட்டுக் குருவியும், மைனாவும் ஏனைய பல நூறு சிற்றுயிரினங்களும் காணாமல் போய்விட்டனவே! இதற்கு யார் காரணம்? காடு அழிப்பினால் வனவிலங்குகள், மனிதர்களது எதிரியானதற்கும், பல சிற்றினங்கள் அழிந்து போனதற்கும் முதலாளித்துவம்தான் காரணம்.

இந்த பேரழிவு கும்பலோ தங்களது திறமையால்தான் லாபம் கொட்டுவதாக பித்தலாட்டம் செய்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை அற்ப கூலி கொடுத்தும், வேலை நிரந்தரம் மறுத்தும் சுரண்டுகின்ற இந்த படுபாவிகள், ஆண்டொன்றுக்கு பல கோடிகளை சம்பளமாக திருடிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, சன் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் என்கிற பெயரில் கலாநிதி மாறனும், அவரது மனைவியும் ஆண்டொன்றுக்கு தலா 56.2 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டனர். ஜிண்டால் குழுமத்தின் தலைமை நிர்வாகிக்கு ரூ 54.98 கோடிகளும், பிர்லா குழுமத்தின் குமாரமங்கலம் பிர்லாவுக்கு ரூ 40.62 கோடிகளும் வருடாந்திர ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஏனைய செலவுகளும், ஊக்கத் தொகையும் தனியே தரப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புச் சக்தியில் உருவாக்கிய மதிப்பில் அற்ப பங்கை மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும்தான் 90% தொகையை சுருட்டிகின்றனர். உற்பத்தியின் எல்லா பிரிவுகளையும் அவுட்சோர்சிங் என்கிற வடிவத்தில் வெளியாட்களுக்குப் பிரித்துக் கொடுத்தும், நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டியும் லாபத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்கின்றனர்.

நமது பூமிக்கே பாரமாக இருக்கின்ற முதலாளிகளுக்கு இந்த அரசுதான் வரிச்சலுகைகள், மானியங்கள், வட்டியில்லாக் கடன்கள் போன்ற எண்ணற்ற பொருளாதார உதவிகளோடு, போலீசு மூலம் முதலாளிகளுக்கு அடியாள் வேலையும் பார்க்கிறது. உளவு காமிராக்கள், உளவுத்துறை போலீசு, வாடகைக்கு குடியிருப்போர் போலீசில் கட்டாயமாக பதிவு செய்வது, ஆதார் அடையாள அட்டை போன்ற வழிகளில் ஆளும் வர்க்கத்துக்கு அடியாள் வேலை செய்கிறது, அரசு. ஏனென்றால் இது முதலாளிகளுக்கான அரசு! நம்மை ஒடுக்குவதற்கான அரசு.

தொழிலாளி வர்க்கமோ நிரந்தர தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி – பயிற்சித் தொழிலாளி என்று பிளவுபட்டுள்ளது. அவுட்-சோர்சிங் என்கிற நவீன கொத்தடிமை முறையில், தான் யாருக்காக உழைக்கிறோம் என்பதை அறியாமலேயே எந்திரம்போல உழைக்கிறான், தொழிலாளி. வெந்த சோற்றைத் தின்றுவிட்டு, விதி வந்தால் சாவதா தொழிலாளி வர்க்கத்தின் பெருமை? நம்முடைய எதிரிதான் இந்த புவிப்பரப்புக்கே எதிரி என்பதை உணர்வோம். இயற்கைக்கும், மனித குலத்துக்கும் நாசம் விளைவிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள். அதற்கு ஓரணியாய், ஓர் அமைப்பாய் திரள்வோம்!

தொடர்புக்கு:
அ. முகுந்தன்,
110, 2-வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 24
போன் நம்பர்: 9444834519

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

  1. எல்லோரும் சமம் என்ற நிலை விரைவில் ஏற்பட,இயலாமையால் வாழ்த்தை மட்டும் பகிரும் பாபுபகத்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க