privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வாக்களிப்பது கடமையா மடமையா – மக்கள் கருத்து

வாக்களிப்பது கடமையா மடமையா – மக்கள் கருத்து

-

நாட்டின் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி என ஊடகங்கள் அனைத்தும் திரும்பிய திசை முழுவதும், ‘உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள். வாக்களிக்க மறக்காதீர்கள்’ என்ற பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 65 ஆண்டுகளாக அந்த கடமையை தவறாமல் செய்துகொண்டிருக்கும் மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதையும், இந்த இத்துப்போன ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த கடைசித் துளி நம்பிக்கை எது என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பினோம்.

நாடாளுமன்றம்
‘’எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்? நாம எல்லாம் இண்டியன்ஸ். தேர்தல் வரும்போது ஓட்டுப் போடனுமில்ல..”

அதன் பொருட்டு மாபெரும் கடமையான வாக்களிப்பதையே உரையாடலின் மையமான இழையாகக் கொண்டு சிலரிடம் பேச பார்க்க முடிவு செய்தோம். ’’எதுக்காக ஓட்டுப் போடுறீங்க?” – இதுதான் நாங்கள் கேட்க விரும்பிய கேள்வி. மக்கள் தரும் பதிலை வைத்து அவர்களது கடமையின் மகத்துவம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி விவாதிக்க திட்டமிட்டோம்.

ஆனால் நாம் எதிர்பாராத வகையில் மக்களுடனான இந்த உரையாடல்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டன.

நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கான சரியான பேருந்தில் ஏற வேண்டும் என்றால், முதலில் நீங்கள் அமர்ந்திருக்கும் தவறான பேருந்தில் இருந்து இறங்க வேண்டும். அப்படி இறங்கியவர்களுக்கும், உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கும் நடந்த உரையாடல் தொகுப்பு கீழே…

___________

சென்னையில் இருக்கும் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்திற்கு நாங்கள் சென்றது ஒரு செவ்வாய்கிழமையின் மாலைப் பொழுதில். உள்ளே பஜனை சத்தம். வெளியே வாகன இரைச்சல். கோயிலின் வெளியே பக்கவாட்டு சிமெண்ட் கட்டையில் கொத்தாக ஏழெட்டு பார்ப்பனர்கள் வெற்றுடம்புடன் அமர்ந்திருந்தனர்.  சலசலவென்று பேச்சு சத்தம் ஒலித்தது. அவர்களுடன் பேசத் துவங்கிய முதல் வினாடியில் இருந்தே சுவாரஸ்யம் துவங்கி விட்டது.

‘’எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்? நாம எல்லாம் இண்டியன்ஸ். தேர்தல் வரும்போது ஓட்டுப் போடனுமில்ல..”

“அதான்… எதுக்காக?”

‘’அது ஒரு அடையாளம் சார். நாம இந்த நாட்டு பிரஜைங்குறக்கான ஐடெண்டிட்டி. ஓட்டுக்கூட போடாம எப்படி நாம இந்த நாட்டு குடிமகன்னு சொல்றது?”

இன்னொருவர் குறுக்கிட்டார். “நாம ஓட்டுப்போட்டு ஒருத்தரை தேர்ந்தெடுத்து அனுப்புனாதானே பார்லிமெண்ட் நடக்கும்? அப்பதானே அவா எல்லாம் அரசாங்க திட்டத்தை மக்களண்ட கொண்டு போக முடியும்?”

‘’ஓ.. அப்போ நீங்க ஓட்டுப் போட்டு தேர்வு செய்யுற எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் உங்க தொகுதிக்கு நல்லது பண்றாங்களா? திட்டங்களைக் கொண்டு வர்றாங்களா?”

‘’ம்க்கூம்… எவன் பண்றான்.. எல்லாம் பொறுக்கிப் பசங்களா இருக்கான். ஓட்டு வாங்கிட்டுப் போய் உட்கார்ந்துகிட்டு இந்தப் பக்கம் வர்றதே இல்லை. அதுக்காக நாம ஓட்டுப் போடாம இருக்க முடியாதில்லையோ? நம்ம கடமையை நாம செஞ்சுதானே ஆகனும்?”

அயோத்தியா மண்டபம்
அயோத்தியா மண்டபம்

‘’கடமையா..? சிலபேர் ஓட்டுப்போடுறது உரிமைன்னு சொல்றாங்களே… ”

‘’அது என்னமோ ஒரு மை… அதைவிடுங்க. ஓட்டுப் போடாம வீட்டுலயே உட்கார்ந்துண்டால் சாக்கடை சரியில்லை… ரோடு சரியில்லைன்னு புலம்புனா சரியாயிடுமோ என்ன?”

“ஓட்டுப்போட்டா மட்டும் எப்படி சரியாகும்?”

’’நாம தேர்ந்தெடுக்குற மக்கள் பிரதிநிதிகள்தான் அரசு திட்டங்களைக் கொண்டு வாரா”

‘’அதான் மக்கள் பிரதிநிதிகள் பொறுக்கிகளா இருக்காங்கன்னு நீங்களே சொல்றீங்களே… ஒருத்தர்விடாம எல்லா எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் ஊழல்வாதிகளா இருக்காங்க. இதுல நீங்க ஓட்டுப்போட்டு எப்படி நல்லது நடக்கும்?”

‘’நல்லவங்களா தேர்ந்தெடுக்கனும் சார்..”

”யார் நல்லவன்னு எந்த அடிப்படையில் முடிவு செய்வீங்க?”

இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான் என்று நினைத்துவிட்டார் போல. கொஞ்ச நேரம் சிந்தித்தார். பிறகு சிரித்தார். அவரது உள்மனதை உணர்ந்து கொணடதைப் போல அருகில் இருந்தவர் பேசினார்.

”அது கஷ்டம்தாங்க. யார் வேட்பாளர்னு இன்னைய வரைக்கும் தெரியலை. இனிமேதான் வேட்பாளரையே அறிவிப்பாங்க. அதுக்குப் பிறகு ஒவ்வொருத்தரையா ஆராய்ச்சி செஞ்சு யார் நல்லவங்கன்னு கண்டுபிடிச்சு ஓட்டுப்போட முடியுமா? எல்லாரும் நான் நல்லவன்னுதான் சொல்லிக்கிறான். அதை எல்லாம் ஒவ்வொண்ணா செக் பண்ணறது நடக்குற காரியமா?”

”ஒருவேளை முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிச்சுட்டா, நல்ல வேட்பாளர் யாருன்னு கண்டுபிடிச்சிட முடியுமா? ஒரு கட்சியில யார் நல்லவன்னு பார்த்தா சீட் குடுக்குறாங்க? கிடையாது. சாதிக்காரன், பணக்காரனுக்குதான் சீட். அப்புறம் எப்படி நல்லவனை கண்டுபிடிச்சு ஓட்டுப் போடுறது?”

’’நீங்க சொல்றது உண்மைதான். எரியுற கொள்ளியில எந்த கொள்ளியை நல்ல கொள்ளின்னு சொல்றது?”

”சரி.. இவ்வளவு தூரம் பதில் சொல்றீங்க. எதுக்காக ஓட்டுப் போடுறீங்கன்னு இப்பவாச்சும் சொல்லுங்களேன்..”

“தெரியலை சார்!”

**********

சற்றுத் தள்ளி ஒரு பெரியவர் சம்மணிமிட்டு அமர்ந்திருந்தார். ”அவர்தான் மூத்தவர் அவர்கிட்டப் போய் கேளுங்க…” என்றார்கள். அவரிடம் சென்றோம்.

”நான் இதுவரைக்கும் ஏழெட்டு தடவை ஓட்டுப் போட்டிருக்கேன். இந்த தடவையும் போடுவேன்” என்றார்.

‘’உங்களைப் பார்த்தா எப்படியும் 80 வயசு இருக்கும் போலருக்கு. ஆனால் ஏழெட்டுத் தடவைதான் ஓட்டுப் போட்டிருக்குறதா சொல்றீங்களே..”

‘’அது என்னன்னா… ஓட்டுப் போடப் போகும்போது ஆட்டோவுல கூட்டிட்டுப் போறாங்க. திரும்பி வரும்போது அழைச்சுக்கிட்டு வர்றது இல்லை… அப்படியே விட்டுறாங்க. பூத் எங்கேயோ ரெண்டு, மூணு கிலோமீட்டர் தள்ளி இருக்கும். அங்கேருந்து வேகு,வேகுன்னு நடந்து வரணும். அதனால சில தேர்தல்ல விட்டுப்போச்சு, தப்பா எடுத்துக்காதேள்..”

‘’அது இருக்கட்டும். இத்தனை தேர்தல்ல ஓட்டுப்போட்டிருக்கீங்களே… எதுனா நல்லது நடந்திருக்கா?”

”என்னாத்த நடந்துச்சு… பூரா இலவசமா கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி வெச்சிருக்கா. காலையிலேயே எழுந்திரிச்சு மக்கள் எல்லாரும் அம்மா மெஸ்சுல ஒரு ரூபாய் இட்லி வாங்க நிக்கிறா.. இப்படி இருந்தா நாடு எப்படி உருப்படும்?”

“அது இருக்கட்டும். ஒவ்வொரு தேர்தல்ல ஓட்டுப் போடும்போதும் ஏதாவது ஒரு நம்பிக்கையிலதானே ஓட்டுப் போட்டிருப்பீங்க. இத்தனை வருஷ அனுபவத்துல சொல்லுங்க… உங்களோட நம்பிக்கை நிறைவேறி இருக்கா?”

“நாம நினைக்கிறது எல்லாம் நடக்கனும்னா நாமதான் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகனும். எதையோ நினைச்சு ஓட்டுப் போடுறோம். அதெல்லாம் நடக்கும்னு சொல்ல முடியுமா?”

“பின்ன ஓட்டுப் போடுறதால என்ன பிரயோஜனம்னு நினைக்கிறீங்க?”

“இந்தா ரோடு போட்டிருக்கான். லைட் போட்டிருக்கான். எல்லாரும் செல்போன் வெச்சிருக்கா. கொஞ்சம், முன்னபின்ன இருந்தாலும் நாடு முன்னேறியிருக்கிறது நிஜமில்லையோ என்ன?..”

“இந்த முன்னேற்றத்துக்கு தேர்தல்தான் காரணம்னு சொல்ல வர்றீங்களா?”

‘’ஆமா..”

‘’ஆனா இந்த தெருவிளக்கு போடுறது மாநகராட்சி வேலை. ரோடு போடுறது, குப்பை அள்ளுறதும் அவங்க வேலைதான். அதுக்குத் தனியா உள்ளாட்சித் தேர்தல்ல நாம ஓட்டுப் போடுறோம். அப்போ எம்.பி.க்கும், எம்.எல்.ஏ.வுக்கும் என்ன வேலை?”

“அவங்களும் ரோடு போட மாட்டாங்களா..? ஒருவேளை, மேம்பாலம் கட்டுவாளா இருக்கும். அதுலதான் கமிஷன் அதிகமாம்..”

“அப்போ எல்லாரும் கமிஷன் வாங்குறாங்கன்னு உங்களுக்குத் தெரியுது. தெரிஞ்சேதான் ஓட்டுப் போடுறீங்க.. இல்லையா?”

தேர்தல் பாதை திருடர் பாதை
தேர்தல் பாதை திருடர் பாதை

‘’ஆமா.. அதுக்கு நாம என்னப்பா பண்ண முடியும். நாம சாதாரண குடிமக்கள். நம்மண்ட என்ன அதிகாரம் இருக்கு?”

‘’இது மக்களாட்சி… இதுல மக்கள்தான் மன்னர்கள்னு சொல்றாங்களே..”

“எவன் சொன்னது.. சும்மா அடிச்சு விடுவானுங்க… மன்னராவது மயிராவது”

“நீங்க இப்படி சொல்றீங்க… ஆனா டி.வி., ரேடியோவைத் திறந்தா, ‘உங்ககிட்ட இருக்குறது விலைமதிப்பு இல்லாத ஓட்டு.. மறக்காமல் போட்டிருங்கன்னுல்ல சொல்றாங்க..?”

”அவன் சொல்லுவான்.. அவனுக்கென்ன”

“அப்போ நீங்க போடுற ஓட்டுக்கு ஒண்ணும் மதிப்பு இல்லேன்னு சொல்றீங்களா?”

“ஏன் இல்லை… போன எம்.எல்.ஏ. எலெக்‌ஷன்ல 500 ரூபாய் தந்தான். இப்போ ஆயிரம் ரூபாய்ன்னு சொல்லிக்கிறாளே..”

”இதுதான் அந்த மதிப்பா.. ஆக இந்நாட்டு மன்னர்களோட விலை 500 ரூபாய். நீங்களே பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டை விற்கிறீங்க.. நீங்க எப்படி அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல முடியும்?”

“சரி… அப்போ இனிமேல் பணம் குடுக்காதே.. நானா தேடிப்போய் கேட்குறேன்? அவனா வர்றான், அவனா கொடுக்குறான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”

“எப்படிப் பார்த்தாலும் நீங்க பணம் வாங்குறது தப்புதானே”

”அதான் சொல்லிட்டேனேப்பா… இனிமே வேண்டாம். நீ நல்லவனா இருந்து ஒழுங்கா நல்லது பண்ணு. அதை செய்ய முடியலைன்னுதானே மக்களுக்கு லஞ்சம் தர்ற… நீ கொடுக்காதே… நானும் வாங்கலை..”

”சரி விடுங்க… உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ஓட்டுப் போட்டு என்னத்த கண்டீங்க.. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..”

“என்னத்த  சொல்லச் சொல்ற… ஓட்டுப் போடுறது எல்லாம் எதையும் எதிர்பார்க்காம செய்யுறது. பிள்ளைங்களை பெத்து வளர்க்குறோம். எதுக்கு? வயசான காலத்துல நம்மளை வெச்சு காப்பாத்துவாங்ககுற நம்பிக்கைதான். அப்படி இல்லாம விரட்டி விடவும் செய்யுறாங்க. அதுக்காக பிள்ளை பெத்துக்காம, பெத்த பிள்ளையை வளர்க்காம இருக்குறமா… அதுபோலதான்..”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று குழப்பமாக இருந்தது. வாக்களிப்பதையும், குழந்தை பெறுவதையும் ஒப்பிடுகிறார். இரண்டும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்ய வேண்டியது என்கிறார். ஓர் ஆத்ம திருப்தி போல அவர் அதை வர்ணித்தாலும், இத்தனை காலமாக வாக்களித்திருப்பதன் வாயிலாக அப்படி எந்த ஆத்ம திருப்தியையும் அவர் பெற்றிருக்கவில்லை என்பதை, அவரது பேச்சின் மூலமே உணர முடிகிறது. அவரால் எதற்கு வாக்களிக்கிறேன் என்பதை துல்லியமாக விவரிக்க முடியவில்லை அல்லது அத்தகைய துல்லியமான பதிலை பெறக்கூடிய கேள்வியை நாங்கள் கேட்க வில்லையோ?

இப்போது அவரது பேச்சை அசைபோடும்போது, வாக்களிப்பது அவருக்கு ஓர் ஆசுவாசமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஓர் அரசியல்வாதி மீது, அரசியல் கட்சியின் மீது இருக்கும் கோபத்தை தணித்துக்கொள்வதற்கு அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக தேர்தலை கருதுகிறார். ஒரு பொம்மையின் மீது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கத்தியால் குத்துவதால் அவர் தன்னைத்தானே வீரன் என்று கருதிக்கொள்கிறார். அந்த வகையில் இந்த பொம்மை ஜனநாயகத்தின் அட்டக்கத்தி வீரர்களாக இருக்கிறார்கள், வாக்காளர் பெருங்குடி மக்கள்!

’ஓட்டு போடுறது ஜனநாயகக் கடமை சார்’ என்று ஆரம்பித்தவர்கள் ஐந்தாவது நிமிடத்தில், ‘ஓட்டுப் போடுறதால பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைங்க..’ என்றார்கள். வாக்களிக்காமல் இருப்பது தேசவிரோத செயல் என்று துவங்கியவர்கள், நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்பவர்கள் தேசவிரோதிகளாக இருப்பதை அவர்களின் சொந்த சொற்களில் வெளிப்படுத்தினார்கள்.

மொத்தத்தில் தேர்தல் குறித்தும், இந்த ஜனநாயகம் குறித்தும் மக்களின் மனதில் எஞ்சியிருக்கும் சித்திரம் என்பது, ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் மீது கொண்ட பரிதாபத்தைப் போன்றுள்ளது. எனினும், ‘வேற என்ன சார் பண்ண முடியும்?’ என்ற ஒற்றைக் கேள்வியில் முட்டிமோதி தலைகவிழ்ந்துகொள்கிறார்கள் மக்கள். வேறு என்ன செய்வது என்பதை சிந்திக்கத்தான் வேண்டும். அதற்கு முன்பு, செய்து கொண்டிருப்பது தவறு என்று தெரிந்தபிறகு அதை நிறுத்துவது முக்கியம் அல்லவா?

–    வினவு செய்தியாளர்கள்.