privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசீமானின் மம்மி பஜனை – சீசன் 2

சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

-

ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆசை வந்து பின்னர் கால நிலை காரணமாக சாத்தியமில்லை என்று பதுங்கினாலும், அம்மாவின் பக்கவாத்திய கோஷ்டிகள் ஆளாளுக்கு நம்மை குரூரமாக இசைத்து வதைப்பதை தொடர்ந்து செய்கிறார்கள். இது வழக்கமான பக்கவாத்திய குரூப் என்றாலும் தற்போது வெடிச் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. என்னதான் மோடியின் “பி” அணியாக இருந்தாலும் பிரதமர் பதவி மேல் மம்மிக்கும் ஆசை இருப்பதால் யாரை முதன்மையாக ஆதரிப்பது என்று பக்கவாத்திய கூட்டத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் மயிலை பார்த்தசாரதிகள் கூட சற்று குழம்பிப் போயிருக்கிறார்கள்.

சீமான்
அம்மாவின் அதர்மம் வீழும் போது தர்மத்தை வீழ்த்தி அதர்மத்தை மீண்டும் நிறுத்த சிங்கத் தமிழன் ஒருவன் புலிப்பாய்ச்சலில் எலிப் பாடலை பாடிக் கொண்டு வருகிறான்.

அதில் தினமலர், விகடன் ஆகியவை பா.ஜ.க ஆசியுடன் மோடிக்காக மம்மியை செல்லமாக கோபித்துக் கொள்ளும் அளவுக்கு ‘தைரியத்தை’ வரவழைத்திருக்கிறார்கள். ஜூவி திருமாவேலனுக்கு ஜெயாவின் ஈழ எதிர்ப்பு திடீரென ஞாபகம் வருகிறது. ஜெ வின் சாணக்கிய குரு துக்ளக் சோ கூட மோடி பிரதமர் ஆக முடியா விட்டால், ஜெவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார். இது தனக்கு வரவேண்டிய ஓட்டை பிரிக்கும் அபாயமாக ஜெவும் உணராமலில்லை. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை மனதில் கொண்டு ஜெயலலிதா மோடியை எதிர்த்து பேசவும் முடியாது. அப்படியானால் ஜெயாவுக்காக விசுவாசத்துடன் மோடியை செல்லமாக கோபித்துக் கொள்ள யாருமே இல்லையா?

ஏன் இல்லை?

இதோ அம்மாவின் அதர்மம் வீழும் போது தர்மத்தை வீழ்த்தி அதர்மத்தை மீண்டும் நிறுத்த சிங்கத் தமிழன் ஒருவன் புலிப்பாய்ச்சலில் எலிப் பாடலை பாடிக் கொண்டு வருகிறான்.

சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளை எதிர்த்தும் ஜெயலலிதாவை ஆதரித்தும் பிரச்சாரம் செய்வதென்று முடிவெடுத்து கிளம்பியிருக்கிறார் அண்ணன் செந்தமிழன் சீமான். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ஈழ விடுதலைக்கு புதுப்பாதை காட்டி கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மம்மியின் வெற்றிக்கு பாடுபட்டிருந்தாலும் இந்த தேர்தலில் கடந்த வாரம் வரை அமைதியாகவே இருந்து வந்தார். ஆனால் அது புயலுக்கு முந்தைய அமைதி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பண்ருட்டி வேல்முருகன் போன்றவர்களோடு லெட்டர் பேட் டம்மி கட்சிகளை எல்லாம் நேரில் வரவழைத்து சந்தித்த போதிலும், ஜெ.  பிரதமரானால் ஆதரிப்போம் என்று போகுமிடங்களிலெல்லாம் வலிய போய் பேட்டி கொடுத்த புறநானூற்று தமிழனுக்கு, மம்மியிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. “இதனால் மனமொடிந்து தேர்தலை புறக்கணித்து விட்டால் என்ன செய்வது, பிறகு கேப்டனின் காமெடி & ஆக்சன், வை.கோ சென்டிமென்ட், நடிகைகளின் கவர்ச்சி,  துணை நடிகர்களின் குத்தாட்டங்கள் போன்றவற்றோடு சீமானின் சவால் விட்டு ஆவேசம் காட்டும் சீன் படத்தில் இல்லை என்றால் நவரசங்களில் ஒன்று குறைந்து விடுமே” என்ற ரசிகர்களின் பரிதவிப்பை புரிந்து கொண்டு இறுதியாக சிங்கம் மன்னிக்கவும், புலி களமிறங்கி விட்டது.

ஜெயலலிதா ஆதரவு
ஜெயலலிதாவை ஆதரிப்பது என்ற பிறவிப் பெருங்கடன்.

ஜெயலலிதாவை ஆதரிப்பது என்ற தங்கள் பிறவிப் பெருங்கடனை செய்வதற்கு பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள் அண்ணனின் தம்பிமார்கள். வாரே வாவ், “நாம் தமிழர்” கட்சியில் பொதுக்குழு ஒன்று இருக்கிறது என்பதைத் தவிர இந்த செய்தியில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. ஏனெனில் அதில் என்ன முடிவு செய்வார்கள் என்பதை எதிர் வீட்டில் பால்வாடிக்கு போகும் ரமேஷிடம் கேட்டால் கூட சொல்லுவான்.

வழமை போல ஜெயலலிதாவை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததை விட, அதற்கு சந்தர்ப்பவாதம் எனும் ஏ கே 47 துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டே சீமான் கூறும் காரணங்கள்தான் ‘கிலி’ ஏற்படுத்துகின்றன. நேற்று வரை “மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற மகத்தான தலைவன், குஜராத் மக்களுக்கு உண்மையாக உழைக்கின்ற தலைவன்“ என்றும்,கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இன்னும் ஒருபடி மேலே போய் மோடி “குஜராத்தின் கடனை எல்லாம் அடைத்து உலகவங்கிகளில் குஜராத்தின் பெயரில் 1500 கோடி ரூபாயை டெபாசிட் செய்திருப்பதாகவும், குஜராத்தை உலகத்தின் இரண்டாவது மாநிலமாக மாற்றி இருப்பதாகவும் (முதல் மாநிலம் அம்மாவின் தமிழ்நாடா, இல்லை மாவீரன் பிரபாகரனின் ஈழமா, சீமான் அவர்களே?)” தமிழக தெருக்களிலும், வாரமிருமுறை பத்திரிகைகளிலும் இதுவரை சுப்ரபாதம் போல பூஜித்து வந்தார் சீமான். அல்லது சீமான் பச்சைத் தமிழர் என்பதால் சூலமங்கலம் சிஸ்டர்ஸ் கீச்சும் சஷ்டி கவசம் என்பதாகவும் சொல்லலாம்.

அப்பேற்பட்ட மோடி ரசிகர், மோடியை இஸ்லாமியர்களை கொன்ற கொலைகாரன் என்றும் ராஜபக்சேவுக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை என்றெல்லாம் தற்போது கண்டுபிடித்திருக்கிறார். இதில் எதைக் கண்டுபிடித்தார், எதை கண்டு விட்டார், எதை கண்டு ஒளித்தார், எதை கண்டு ஓடினார் என்பதெல்லாம் இரகசியங்கள்.

இருப்பினும் சீமான் தன் நிலைப்பாட்டை ஏன் இன்று மாற்றி பேசுகிறார் என்பதை ஏதோ கொஞ்சம் பரீசீலிக்க வேண்டி இருக்கிறது.  சீமானின் பார்வையில் நேற்று வரை மக்களை நேசிக்கும் மகத்தான தலைவனாக இருந்த மோடி இன்று இனப்படு கொலையாளனாக சுருங்கிப் போக காரணம் என்ன? ஒரு வேளை சீமான் கோமாவிலிருந்து நேற்றுதான் முழித்துக்கொண்டாரா, இல்லை ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் மோடியை திரைகிழித்தபிறகு சீமானின் அறிவுக்கண் திறந்து விட்டதா? எது எப்படியோ முன்பு தமிழக மக்களுக்கு கூறிய இந்தக் கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை. இல்லை புரட்சித் தமிழனுக்கு மட்டுமல்ல, மண்டியிடாத தமிழனுக்கும் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புதானா, தெரியவில்லை.

சீமான் - ஜெயலலிதா
பிரதமர் பதவிக்கு அம்மா என்ற தலைப்பில் சீமான்.

தான் மோடியை ஆதரித்து பேசியது, பத்திரிகைகளிலும், யூடியூபிலும் பதிவாகி இருக்கும்போது, அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இன்று இப்படி மாற்றி பேசுகிறோமே என்பது குறித்து சீமான் கவலைப்படவில்லை. அது போன மாசம் இது இந்த மாசம் என்பதை தவிர வேறு விளக்கம் இருப்பது போலவும் தெரியவில்லை. வீழ்ந்துவிடாத வீரம் இருப்பதாலேயே சீமானுக்குள் ஒரு காய்ந்து போன கைப்புள்ளை இல்லாமல் இல்லை.

உண்மை என்னவெனில் பொதுவாக பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு ஒரு பண்பு இருக்கிறது. அதாவது அவர்களுக்கு கொடுக்கப்படும் தலைப்புகளை அவர்கள் நியாயப்படுத்தி வாதிட வேண்டும். எதிர் எதிர் தலைப்பு கொடுத்தாலும் இரண்டையும் இருவேறு சந்தர்ப்பங்களில் நியாயப்படுத்தி நிரூபிப்பது தான் அவர்களது பேச்சு திறமையாக பார்க்கப்படுகிறது. மற்றபடி ஒரு விசயம் சரியானது என்பதால் அதை தான் ஆதரிப்பேன் என்றெல்லாம் பிழைக்கத் தெரியாமல் சொல்வதில்லை. இப்பேற்பட்ட வாதிடும் திறம் தமிழ் புலவர் வரலாற்றில் மாபெரும் அறமாக வாழையடி வாழையாக நீடிப்பதால் அண்ணன் சீமான் இதை வரித்துக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்தவாறே வார்த்தைகளில் சம்மர் சால்ட் போடுவது இயல்பானதே.

அப்படி சீமானுக்கு தற்போது கொடுப்பட்டிருக்கும் தலைப்பு “பிரதமர் பதவியில் அம்மா” என்பதால், தனது அணியை நியாயப்படுத்தி பேசுவதற்காகவும், எதிர் அணியை எதிர்க்கவும் அவர் காரணங்களை தேடுகிறார். அதனால்தான் நேற்றுவரை ஆதரித்து வந்த கருத்தை பட்டி மன்ற பாணியில் மாற்றிக் கொள்கிறார். “போன முறை ஜெயாவும் பிரதமர் போட்டியில் இல்லை மோடியும் இல்லை, இப்பொழுது  இருக்கிறார்கள். அதனால் கடந்த காலங்களில் மோடியை ஏன் ஆதரித்தீர்கள், இப்பொழுது ஏன் எதிர்க்கிறீர்கள்” என்ற கேள்வியே நியாயமில்லை என்று சீமானின் முறுக்கிய கையை முகமது அலியின் நாக் அவுட் குத்து கை போல நம்பும் தம்பிமார்கள் விளக்கமளிக்கக் கூடும். அண்ணனே அண்ணாந்து பார்த்து காலத்தை ஓட்டும் போது தம்பிகள் நாக் அவுட்டுக்கும், வித் அவுட்டுக்கும் வேறுபாடு அறியாத அப்ரண்டிசுகள் என்பது பெரிய குற்றமல்ல.

சரி கடைசியாக சரியான நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டாரே பிறகு என்னய்யா பிரச்சனை, ஏதோ எழுதிய பாட்டுக்கு எதாவது போட்டு குடுத்து அனுப்ப வேண்டியதுதானே என்ற தருமியின் கேள்வி எழலாம். இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்கும் அதே நேரத்தில் அடுத்த பட்டிமன்றத்திலும் இதே தலைப்பு கொடுப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை அல்லவா? எனவே இப்போது பேசுவது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது தான் அதற்கான எதிர் கேள்வி. இதை செந்நிறக் கண்களுடன் சீமானே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சீமான்
“ஜெயலலிதா வெற்றி பெற்று பா.ஜ,க வுடன் கூட்டணி சேரவாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டிருப்பதாகவும், அப்படி நடந்தால் ஜெயாவை எதிர்ப்போம்”

நாம் தமிழரின் பொதுக்குழுவில் பேசிய சீமான், மோடி மேல் தற்போது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் நாளை அவர் மேல் நம்பிக்கை வந்தால் அடுத்த தேர்தலில் அவரை ஆதரித்துவிட்டு போகலாம், அதில் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்றும் தன் பட்டிமன்ற தர்பார் அறத்தை விட்டுக் கொடுக்காமல் சகஜமாக பேசுகிறார். மேலும் ஜெயலலிதா வெற்றி பெற்று பா.ஜ,க வுடன் கூட்டணி சேரவாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டிருப்பதாகவும், அப்படி நடந்தால் ஜெயாவை எதிர்ப்போம் என்றும் கூறுகிறார். இப்படி முன் கூட்டியே தெரிந்து கொண்டு பின்தேதியிட்ட தவறுக்காக முன் தேதியிட்ட ஆதரிப்பு ஏன் என்றால், வாழ்வை விடவா நாளும் கோளும் கொள்கையும் முக்கியம் என்று தேதிகளின் சதுரங்க ஆட்டத்தை நியாயப்படுத்தி முழங்குகிறார் சீமான்.

முக்கியமாக தமிழரின் எதிர்கால அரசியலுக்காக(?) அதிமுகவை ஆதரிப்பதாகவும் கூறுகிறார். யார் அந்த தமிழர்கள்? அவர்களது எதிர்கால அரசியல் என்ன? அதற்காக ஏன் இன்று அம்மா திமுகவை ஆதரிக்க வேண்டும்? இது கையறு நிலையா, கொள்கையறு கொலையா, சுள்ளென்ற வெயிலின் வினையா ஒரு எழவும் புரியவில்லை. உங்களுக்கு?

இருப்பினும் கேள்விகளை கறாராக கேட்காமல் இருக்கும் பட்சத்தில் சீமான் ஏனோ தானோவென்று கூறிய முத்துக்களை எடுத்து கோர்த்து ஒரு சில பதில்களை கட்டிக் கொள்ளலாம். அது உங்களது சாமர்த்தியத்தை பொறுத்தது. ஜெயலலிதாவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு சீமான் பதிலளிக்காமல் இல்லை. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, வி.சி, பா.ம.க, ம.தி.மு.க, ம.ம.க உள்ளிட்டவை தமிழின ஆதரவு கட்சிகள் தான் என்றாலும் தவறான கூட்டணியில் இருப்பதால் அவர்களை ஆதரிக்க முடியாது. அதே சமயத்தில் அவர்களை எதிர்ப்பதில்லை. அடுத்து தனியாக நிற்கும் கம்யூனிஸ்டு கட்சிகள் இந்தியாவை பொறுத்தவரை நல்லவர்கள், நேச சக்திகள் தான் என்றாலும் அவர்கள் தோற்றுப் போக கூடியவர்கள் என்பதால் ஆதரிக்க முடியாது. இறுதியில் வெற்றி பெறும் வலுவுள்ள கட்சியாக அதிமுக இருப்பதால் அவர்களை வைத்துதான் தாங்கள் எதிரிகளாக கொண்டுள்ள கட்சிகளை வீழ்த்த முடியும், ஆகவே அதிமுக-வை ஆதரிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணை சுழட்டுதே………

திமுக அணி, பா.ஜ.க அணி இரண்டும் தமிழின எதிர்ப்பு கூட்டணி. அதனால் தமிழின ஆதரவு அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்பதே இவரது வாதம். அதை நேரடியாக கூறினால் தொண்டையில் நோய்த் தொற்று பற்றிக் கொள்ளும், எனவே  இப்படி உலகம் சுற்றி வந்து குல்பி ஐஸ் போல பேசுகிறார். சரி அவர் கூற்றுப்படியே எடுத்துக் கொள்வோம். திமுகவும் பாஜகவும் அயோக்கியர்கள் எனில் அவர்களுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளும் அயோக்கியர்களாகத்தானே இருக்க முடியும். பிறகு என்ன, ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்று நடனமாட வேண்டும்? எப்போதும் எந்த நேரத்திலும் சந்தர்ப்பவாத நிலைப்பாடு ஒன்று கம்பீரமாக தன்னை முன்வைக்க முடியாது.

சீமான் - வைகோ
தமிழார்வலர் வைகோ தவறான கூட்டணியில் – சீமான்.

மதிமுக, விசி, பாமக போன்ற தமிழார்வலக் கட்சிகள் தவறான கூட்டணியில் இருப்பதால் ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டு தவறான (பாஜக) கூட்டணிக்குத்தான் செல்வார் என்று தாங்களே தொலை நோக்கோடு கருதும் ஜெயாவுக்கு ஓட்டு போட சொல்கிறார் சீமான். கொள்கை என்னவென்று கேட்டாலும் பிரச்சினை, கூட்டணி என்ன, ஆதரவு ஏன், அக்கப்போர் எதனால் என்று மடக்கினாலும் பிரச்சினை. இந்த நிலை நீடித்தால் சீமானை விமரிசிப்பது மிகவும் கடினமென்ற நிலை தோன்றிவிடும்.

கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள்தானாம், ஆனால் தோற்று போவர்கள் என்பதால் ஆதரிக்கவில்லையாம். தோற்கும் குதிரையில் பந்தயம் கட்ட  தயாரில்லை என்பதில் என்ன கொள்கை வெங்காயம் இருக்கிறது? இதையே ஈழத்திற்கு விரித்தால் ராஜபக்சேவின் பலத்திற்காக பிரபாகரனையல்லவா அண்ணன் சீமான் தூக்கி எறிந்திருக்க வேண்டும்? இவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதற்கான அளவுகோல் நல்லவர்களா என்பதை வைத்தல்ல, வெற்றி பெறுபவர்கள் என்பதை வைத்துதான். இதையெல்லாம் கூச்சப்பட்டுக் குப்புறப்படுத்துக் கொண்டே பேசப்படும் தத்துவ மொழிகளாக இல்லாமல் வெளியே பகிரங்கமாக வீரத்துடன் ஒலிப்பது முக்கியம். அந்த வீரத்தில் விவேகம் இல்லை விவேக்கின் நகைச்சுவை மட்டும் தானே  இருக்கிறது என்று கேட்டால் நீங்கள் சிரிப்பதில் டியூப்லைட்டோடு போட்டி போடக்கூடியவர்கள்.

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சமாக பாரி வேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியை தமிழின ஆதரவு கட்சியாக சீமானும் தம்பிகளும் தேர்ந்த ஆய்வறிஞர்கள் போல வரையறுத்திருக்கிறார்களாம். தமிழகத்தில் மாணவர்களை சுரண்டி கொழுத்திருக்கும் பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் குழுமம் இலங்கையிலும் கடைவிரிக்க முயற்சித்து வந்தது கல் தோன்றா மண் தோன்றா அந்தக் கால வரலாறு அல்ல. அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் இலங்கை வரையிலும் தன் தொழிலை விரித்து, அதை பாதுகாப்பதற்காக கட்சி தொடங்கி, பீகார் மாநில தேர்தலில் கூட போட்டியிடும் பச்சமுத்துவை தமிழின ஆதரவாளராக சீமான் முடிவு செய்யும் போது, வைகுண்டராசனை ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக கொண்டாடக் கூடாது?

ஒருவேளை அன்று கடாரம், கலிங்கம், ஈழம் என்று நாடுகளை வென்று செல்வங்களை கொள்ளை கொண்டு வந்து கோவில் கட்டிய பழந்தமிழ்வேந்தர்களின் பராக்கிரமத்தை, இன்று இந்தியா, இலங்கை உள்ளிட்ட பலநாட்டு பெற்றோர்களை சுரண்டி செல்வத்தை கொள்ளை கொண்டு வரும் பாரிவேந்தரின் உருவத்தில் சீமான் தரிசிக்கிறார் போலும். பாரிவேந்தரும், வைகுண்டராசனும் தட்சணை வைப்பதிலும், வைத்து விட்டு புலிகளை பூனைக்குட்டிகள் போல நக்கவைப்பதிலும் வல்லவர்கள். அப்பேற்பட்ட பச்சமுத்து அறியாத்தனமாக தவறான கூட்டணியில் இருக்கிறார் என்று அறிஞர் சீமான் செப்பும் போது சிப்பை அடக்க முடியவில்லை, அதுதான் பிரச்சனை.

நாம்தமிழர்
நாம்தமிழர் அறிவார்ந்தவர்களின் கூட்டம்.

மற்றபடி பச்சமுத்துவின் கல்விக் கொள்ளையெல்லாம் வடக்கத்தியானை வென்றெடுத்த தமிழனது வீரமாக சீமானுக்குள் இறங்கியிருக்கலாம். டாஸ்மாக் போதையை விட ‘தமிழ்’ போதையின் மயக்கம் சொல்லிலும், சொதப்புவதிலும் சாதனை படைக்கக் கூடியது. புதிய தலைமுறை தொலைக்காட்சி, எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் என வேந்தரின் பாதையில் தான் தமிழன் தொலைக்காட்சி, தமிழன் சுயநிதி பொறியியல் கல்லூரி என்று அண்ணனின் தம்பிகளும் பயணிக்கிறார்கள், அந்த வகையில் சீமானது தம்பிகளுக்கு பாரிவேந்தர்தான் பலவகைகளில் இலட்சிய புருஷர்.

இந்த லட்சிய பயணத்தில் நிற்காமல் செல்லும் போதே, நாம் தமிழர் கட்சியின் கல்வி கொள்கை முதலிய கொள்கைகளை அறிவார்ந்த பெருமக்களை கொண்டு வகுக்கப் போவதாக அண்ணன் பொதுக்குழுவில் பெருமை பொங்க அறிவித்தார். ஏற்கனவே அப்படி சிக்கன் 65 போல தயாரிக்கப்பட்ட நாம் தமிழரின் கொள்கை முகநூலில் சூடாக டன் கணக்கில் ஆர்டர் செய்யப்பட்டு ருசிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க. கல்வி கொள்கையும் அது போல வேணு பிரியாணியின் ஒரு நாள் விற்பனையை முறியடிக்கும் வேகத்தில் முகநூலில் தின்று தீர்க்கப்படும் என்று நம்புவோமாக.

முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு காரணம் ‘ரா’ தான் என்றும், 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான உடன், 73-ம் ஆண்டின் இறுதியிலேயே இறந்துபோய் விட்ட பெரியார் சக்கர நாற்காலியில் வந்து எம்.ஜி.ஆருக்கு பாராட்டு கூட்டம் நடத்தினார் என்றும், காசிஆனந்தன் டபுள்ஸ் ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் பாலுமகேந்திரா சிங்களர் மீது கையெறி குண்டுகளை வீசியபடி வருவார் என்று ஆசிய நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கும் கோபால் பல்பொடியை விஞ்சிய வண்ணம், உலகமெங்கும் நாம் தமிழர் சீமானின் உளறல்கள் கிராக்கியின்றி உடனுக்குடன் கிடைத்து வருகிறது.

அப்படி ஆக்ஸ்போர்டு, ஹார்வேடு போன்ற வெள்ளையர்களின் வரலாற்று ஆய்வுகளை ஒன்றுமில்லையென ஆக்கி வரும் வண்ணம் பல்வேறு அரிய தகவல்களை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு சீமான் வழங்கிவரும் பின்னணியில் இந்த அறிவார்ந்த பெருமக்கள் யார், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஆவல் தோன்றாமல் இல்லை. இத்தகைய அறிவு வதவதவென்று தத்துவங்களையும், தரிசனங்களையும், தவிப்புகளையும், தேடல்களையும் பெற்றுத் தள்ளுவதற்கு எந்த ஊரில் உள்ள சிட்டுக்குருவி லேகியத்தை பயன்படுத்துகிறது என்பது மட்டும் தெரிந்தால் முழு தமிழகமும், தமிழ் மக்களும் அண்ணன் கட்சி அறிஞர்கள் போல மாறுவது உறுதி.

சீமான்
2016-ல் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக அமர ஐடியா

நாம் தமிழரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் ஜெயாவை ஆதரிக்கும் இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசியிருக்கிறார் சீமான். 2016-ல் ஆட்சியை பிடித்து அவர் முதலமைச்சராக அமர, அண்ணனுக்கு ‘அறிவார்ந்த பெருமக்கள்’ கொடுத்திருக்கும் ஐடியாவாகவும் இது இருக்கக்கூடும்.

என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை பயன்படுத்த போகிறாராம் அண்ணன். வழக்கமாக ஆண்டைகள்தான் அடியாட்களை ஏவுவார்கள். ஆனால் ஒரு அடிமையே ஆண்டையை அதாவது அம்மாவை கையாள் போல பயன்படுத்துகிறார் என்றால் அதை விவேகமென்று பார்க்காமல் தப்பி ஓடும் மான் கராத்தே மாஸ்டர் போல பார்ப்பது பாரிய பிழை.

வேறு கட்சிகளை என்ன செய்வதாக உத்தேசம் என்றால், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணனை எதிரியாக கருதினாலும் இது போன்ற அல்லு சில்லு கட்சிகளை அவர் எதிரியாக கருதவில்லையாம். அதன் பின்னர் இந்த மே மாதம் முதல் ஒரு ஆண்டுக்கு புலிப்பாய்ச்சல் என்ற வேலைத்திட்டத்தை வைத்து ஒரு ஆண்டு வேலை செய்யவிருக்கிறாராம். பின்னர் 2016 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு முதல்வராக போகிறாராம். பின்னர் பிரதமர், அடுத்து அமெரிக்க ஜனாதிபதி, அப்பால் ஐநா செயலர், பிறகு பிரபஞ்ச பொறுப்பாளர், அண்டத்தின் ஆண்டவர் என ஏணிகளில் ஏறி மண் முதல் விண் வரை பல்வேறு பதவிகளை பிடிக்க அண்ணன் அட்டகாசமான திட்டங்களை வைத்திருக்கிறார். இந்த மெயின் திட்டத்தில் தம்பிகள் பலரும் துணைத்திட்டங்களை அதாவது வார்டு, எம் எல் ஏ, எம்பி, ஐநாவில் கொடி ஏற்றும் வேலை என்று வைத்திருக்கிறார்கள். ஆகவே அண்ணனும், தம்பிகளும் ஒருவரை ஒருவர் இந்த கனவுத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது சாத்தியமில்லை. அதையும் மீறி எழுப்ப வேண்டும் என்ற கருணை உங்களை தொந்தரவு செய்தால் இன்செப்ஷன் படக்கதை போல கனவுக்குள் ஊடுருவித்தான் மீட்க முடியும்.

யாராவது அண்ணனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டால் தேவலை.

இடிந்தகரை போராட்டத் தலைமைக்கு தான் பல மணி நேரம் அரசியல் பாடம் எடுத்ததாக கூறிக்கொள்ளும் அண்ணனுக்கு அரசியல் பாடம் எடுத்த மாமேதை யார், அல்வாக்கே அல்வா கொடுத்த ஆயிரம் வாலா – அறிவுவாலா யார் என்று தெரியாமல் மண்டையே வெடித்துவிடும் போல இருக்கிறது.

திராவிட இயக்கம், திமுக, போலிக் கம்யூனிஸ்டுகள் போன்றவர்களெல்லாம் பல்லாண்டுகளாக ஓடிப் பெற்ற சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், கவர்ச்சி அரசியல், சவடால் பேச்சு, இன்ன பிற அணியலங்காரங்களை, அண்ணன் மட்டும் தோன்றிய ஓரிரு ஆண்டுகளில் ஒளி வேகத்தில் பெற்று விட்டார் என்பது மலைக்க வைக்கிறது. தேர்தல் அரசியலும், தமிழினவாதமும் போட்டி போட்டுக் கொண்டு நாம் தமிழர் பார்ட்டியை பஞ்சராக்கி வருகிறது.  காற்றுப் போன இந்த பலூனை கோபுரத்தில் கட்ட நினைக்கும் தம்பிகள் பின்னொரு நாளில் அவர்களது முயற்சி எள்ளி நகையாடப்படும் என்பதறிந்து மனம் திருந்தி வந்தால் ஆறுதலும், தேறுதலும், விடுதலையும் சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். முடிவு செய்யுங்கள்!

–    ரவி