privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இரண்டு தொழிலாளிகள் பலி - கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தாலிபான்கள்

இரண்டு தொழிலாளிகள் பலி – கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தாலிபான்கள்

-

கும்மிடிப்பூண்டி ‘சூர்யதேவ்’ ஆலை முதலாளியின் லாபவெறிக்கு 2 தொழிலாளர்கள் பலி, 3 பேர் படுகாயம் !

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ‘சூர்யதேவ்’ இரும்பு உருக்கு ஆலையில் கடந்த 24.12.2014 அன்று ரசாயன கழிவு அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேன் வெடித்து சிதறியதில்

  • அருகில் இருந்த தொழிலாளி ஒருவர் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்தார்.
  • இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • படுகாயமடைந்த இரண்டுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
  • மேலும் ஒருவர் தனது காது கேட்கும் திறனை இழந்துள்ளார். இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தொழிற்சாலை
கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தொழிற்சாலை

இவர்கள் அனைவருமே வடமாநிலத் தொழிலாளிகள். அதில் செவி திறன் இழந்தவர் உட்பட நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாதச் சம்பளம் வெறும் ரூ.6000/-க்கு குடும்பத்தோடு உழைக்க வந்தவர்கள் ’சூர்யதேவ்’ ஆலை முதலாளியின் லாபவெறிக்கு ஈவு-இரக்கமின்றி ‘படுகொலை’ செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். செல்லும் வழியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தபோது உதவி ஆய்வாளர் அலமேலு அவர்கள் “தகவல் தெரியும், அது ஒன்றுமில்லை கெமிக்கல் கொட்டிடிச்சி” என்றார். 5 தொழிலாளர்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்ட செய்தி சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் காவல் நிலையத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

மாலை 04.00 மணி

உடனே பத்திரிகையாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ‘சூர்யதேவ்’ இரும்பு உருக்கு ஆலைக்கு சென்றபோது அங்கு எந்த பதட்டமும் இல்லாத சூழ்நிலை தான் காணப்பட்டது; ஆலை வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. கேட்டில்  செக்யூரிடியிடம் விசாரித்தபோது எதுவும் தெரியாதவர்களைப்போல “ஒன்றும் இல்லை” என்றே கூறினர். ஆலைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மாலை 04.15 மணி

சிறிது நேரத்தில், பத்திரிகையாளர்களும் வந்துவிட்டனர். அவர்களும் ஆலைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களும் வலுக்கட்டாயமாக ஆலைக்குள் நுழைந்தோம்.

செல்லும் வழியில் ஆச்சரியம் என்னவென்றால் ஆலை எப்போதும்போல இயங்கிக்கொண்டிருக்கிறது. சற்றுநேரத்திற்கு முன்பு அவர்களது சக தொழிலாளர்கள் தங்கள் உயிரையும், உடல் உறுப்புகளையும் இழந்ததற்கான அறிகுறி இல்லாமல் (தென்படாமல்) நிர்வாகம், மற்ற தொழிலாளிகளை வேலைவாங்கிக்கொண்டிருந்தது. இப்படி மனித மாண்புகளைக் கூட மறக்கடித்து தனது இடைவிடாத லாபச் சுரண்டலை தொடர்ந்து கொண்டிருந்தது சூர்யதேவ்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் ஆலையின் மறுபுறம் கழிவுகளை கொட்டுவதற்காகவே பல ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மாலை 04.30 மணி

முகேஷ் அகர்வால்
கொலைகார சூர்யதேவ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அகர்வால்

விபத்து ஏற்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதற்குக் கூட இவ்வளவு நேரம் ஆகி விட்டது.

ஏதோ ‘இரண்டு உயிர்கள் போய் விட்டன, 2 பேர் படுகாயமடைந்து விட்டனர்’ என்று செத்த எலியை ஒதுக்கித் தள்ளுவது போல தள்ளி தடயங்களை மறைக்க முயற்சித்திருக்கிறது நிர்வாகம்.

விபத்து ஏற்பட்ட இடம் அடையாளம் தெறியாமல் மணலால் மூடப்பட்டிருந்தது. சற்று உற்று பார்த்தபின் தெரிந்தது, தொழிலாளிகளின் ரத்தமும், சதையும் மண்ணோடு மண்ணாக கலந்திருப்பது.

அருகே ஒரு ‘செல்போன்’ உருகிய நிலையில் சிதறி கிடந்தது. அங்கு வெடித்துச் சிதறிய ‘பிளாஸ்டிக் கேன்’ 200 மீட்டருக்கு அப்பால் துண்டு துண்டாக கிடந்தது.

விபத்து நடந்தபோது தொழிலாளிகள் எப்படி துடித்துபோய் இருப்பார்கள் என்று நினைத்து பார்த்தாலே மனம் கொதிக்கிறது; நவீன தொழில்நுட்பத்தில் இயங்குவதாக பீத்திக் கொள்ளும் சூர்யதேவுக்கு கற்கால மனித உணர்வு கூட இல்லை என்பதை நினைத்து பதறுகிறது.

மாலை 05.00 மணி

15 நிமிட ஆய்விற்கு பிறகு மீண்டும் நுழைவாயிலுக்கு வந்தபோது மணி 05:00, அப்போதுதான் பொன்னேரி ஆர்.டி.ஓ,  வட்டாட்சியர், மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் துறை ஆய்வாளர் சேகர் ஆகியோர் தொழிற்சாலைக்குள் ஆய்வு செய்ய நுழைகிறார்கள். பிணத்திலும் அரிசி பொறுக்கும் அதிகார வர்க்கம், தொழிலாளர்களின் கொலையையும் இன்னொரு சடங்காக கருதி முடிந்த வரை ஆதாயம் பார்த்து, முதலாளியை பாதுகாக்க வந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் அங்கே சாலையோரம் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்மணியையும் ஒரு வாலிபரையும் விசாரிக்க முயற்சித்தோம். நமது மொழி அவர்களுக்கு தெரியவில்லை. இந்தி தெரிந்த நபர் ஒருவர்மூலம் விசாரித்தோம். அவர்கள் கூறியது

“ நாங்கள் ஒரிசா மாநிலத்தை செர்ந்தவர்கள். விபத்தில் செத்தவர் பெயர் எம்.டி.அப்தாப். காயமடைந்தவர்கள்: அப்தாபின் தந்தை எம்.டி.மோலின் (இவர் 25.12.2014. தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்), சகோதரன் எம்.டி.அலாம், மற்றொருவர் எங்கள் பக்கத்து ஊரைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ். இப்போ நாங்க எங்கே போகணும், எப்படி போகணும் ஒண்ணும் புரியாம நிக்கிறோம்.” என்று தங்களுடைய சோகத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்தினர்.

இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தலையை தொங்க போட்டுக்கொண்டு சோகமாக ஒருவர் அந்த இடத்திற்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது தனது பெயர், எம்.டி. அபுதசாம் என்றும், விபத்து நடந்தபோது அங்கு இருந்ததாகவும், விபத்தின் அதிர்ச்சியால் தனது வலது பக்கம் காது செவிடாகிவிட்டது, யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார்.

“இது என்ன கொடுமை? மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கே என்ன செய்றிங்க?” என்று பதறினோம்.  நமது தோழர்கள் அவரை ‘சூர்யதேவ்’ ஆலை வாயில் முன்பு அழைத்துச் சென்று மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினோம். பலன் ஏதும் இல்லை. உடனே ’கேட்டை’(Gate) இழுத்து மூடினோம்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என்றோம்.

மாலை 05.45 மணி

ஆலைக்குள் ஆய்வு செய்துகொண்டிருந்த (ரேட் பேசிக்கொண்டிருந்த) ஆர்.டி.ஓ, மற்றும் காவல் துறை ஆய்வாளருக்கு தகவல் தெரிந்து, ஆய்வாளர் சேகர் மெயின் கேட்டிற்கு வந்தார்.

வந்ததுமே என்ன? ஏது? என்று விசாரிக்காமல் “லாரியை ஏன் மறிக்கிறீங்க? மரியாதயா எல்லோரும் ஓரமா விலகுங்க!” என்றார். தொழிலாளர் உயிரைப் பற்றி அக்கறை இல்லாத போலீசுக்கு முதலாளியின் லாப வெள்ளம் தடைப்படுகிறது என்றதும் பொத்துக் கொண்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர் இதுவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவில்லை என்று எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் ஆய்வாளர் சேகரின் காதில் விழவில்லை. அவர் கவனம் முழுவதும் லாரிகளை உடனே வெளியே அனுப்பவேண்டும் என்பதிலேயே இருந்தது.

“ஒரு தொழிலாளி தனது ஒரு காது செவிடாகி தவிக்கிறார், அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்” என்று உறுதியாக நின்றோம்.

ஆய்வாளர் சேகருக்கு வந்தது பார் கோவம்! “என்ன? சொல்றத கேட்கமாட்டீங்களா? அவ்வளவு அக்கறையா இருந்தா 108-க்கு போன் செஞ்சி அனுப்பவேண்டியதுதானே!” என்று சீறினார். தொழிலாளிக்கு 108 ஆம்புலன்ஸ், முதலாளிக்கு ஆய்வாளர் சேகரின் தனிப்பட்ட பாதந்தாங்கும் சேவை என்பதுதான் இந்திய அதிகார வர்க்கத்தின் நடைமுறை.

“அப்போ உங்களுக்கு இங்கே என்ன வேலை? நீங்க கிளம்புங்க நாங்க பாத்துக்கிறோம்” என்று எதிர்த்து நின்ற பிறகு, இதற்கு மேல் அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி நிர்வாகத்திடம் பேசி வாகன ஏற்பாடு செய்து செவி இழந்த தொழிலாளி எம்.டி.அபுதசாம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அதன் பிறகு, வேறு வழியில்லாமல் கவனக்குறைவால் நேர்ந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து ‘சூர்யதேவ்’ நிர்வாகத்தின் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆலை எப்போதும் போல இயங்கிக்கொண்டே இருக்கிறது.

தொழிலாளர் வாழ்க்கையை கழிப்பறை காகிதம் போல மதித்து, சட்டவிரோதமாக வேலைக்கு வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் உயிர் விடுவதை தனது மயிர் உதிர்ந்தது போல நடத்தியிருக்கிறது. சூர்யதேவ். இது போன்ற படுகொலைகள் தொடர்கதையாகி வருகிறது. முதலாளியின் லாப வெறிக்கு தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாக பலியிடப்படுகின்றனர்.

தொடரும் ஆலைச்சாவுகளை தடுக்க ஆலை வேறுபாடுகளை கடந்து தொழிலாளி வர்க்கமாய் அணிதிரண்டு, முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க களம் இறங்கவேண்டும். .

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்- 9444213318.

படங்கள், வீடியோ : இணையத்திலிருந்து