privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது

ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது

-

“1,12,000 பேரை ஆட்குறைப்பு செய்யப் போவதில்லை. பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்பப் போகிறோம். அதுவும், 2014-ம் ஆண்டில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை விட குறைவான ஊழியர்கள்தான் 2015-ம் ஆண்டில் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் தனது ஊழியர்களில் 26% பேரை ஆட்குறைப்பு செய்யப் போகிறது என்ற செய்திக்கு மேற்சொன்னவாறு மறுப்பு தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
“பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்பப் போகிறோம்.”

ஐ.பி.எம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் 2012-ம் ஆண்டு இறுதியில் 4,34,246 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இறுதியில் 4,31,212 ஆக குறைந்திருக்கிறது. இவர்களில் 1.3 லட்சம் பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர். 2014-ம் ஆண்டில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேலை இழப்பு நடந்திருப்பதால் 2014-ம் ஆண்டு இறுதிக்கான புள்ளிவிபரத்தை இன்னும் வெளியிடவில்லை.

கடந்த 7 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் $45 கோடி முதல் $150 கோடி வரை (ரூ 27,000 கோடி முதல் ரூ 90,000 கோடி வரை) ‘ஊழியர் மறுசீரமைப்புக்கு’ செலவழித்திருப்பதாக முதலீட்டாளர்களுக்கான தனது அறிக்கைகளில் தகவல் வெளியிட்டிருக்கிறது, ஐ.பி.எம். 2014-ன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் $60 கோடி செலவில் ஆட்குறைப்பு நடத்தியிருக்கிறது. இது ஆண்டு முழுவதற்குமான $100 கோடி செலவிலான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி. 2013-ம் ஆண்டிலும் அதே அளவிலான ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவழிக்கிறோம் என்று முதலீட்டாளர்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு ஐ.பி.எம்முக்கு உள்ளது. ஆனால், எத்தனை ஊழியர்கள் வேலை இழக்கப் போகிறார்கள் என்ற விபரத்தை ஊழியர்களிடமோ, அரசிடமோ, பொதுவான சமூகத்திடமோ சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லை.

$100 கோடி மறுசீரமைப்பு செலவு என்றால் சுமார் 13,000 ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள். அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,500 ஊழியர்களிலிருந்து 21,500 ஊழியர்கள் வரை ஐ.பி.எம்மால் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். (மொத்தம் குறைந்தது 45,500 முதல் அதிக பட்சம் 1.5 லட்சம் ஊழியர்கள்). இந்தக் கணக்கின் படி 2015-ல் 8,000 பேருக்கு சீட்டு கிழிக்கத் திட்டமிட்டுள்ளது ஐ.பி.எம். சுமார் 5,000 பேர் இந்தியாவில் வேலை இழப்பார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தனிநபர் கணினி (personal computer) பிரிவை சீனாவின் லெனோவோவுக்கு விற்றதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு அதன் நிறுவன கணினி (server hardware) பிரிவையும் விற்றிருக்கிறது. வன்பொருள், மென்பொருள், பராமரிப்பு சேவை என்ற பிரிவுகளை கலைத்துப் போட்டு, புதிய துறைவாரியான பிரிவுகளாக, மேகக் கணிமை (cloud computing), பேரளவு தரவு மேலாண்மை (big data), பாதுகாப்பு (security) என மறுசீரமைத்து வருகிறது. அதற்காக, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது.

ஐ.பி.எம் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து எழுதி வரும் ராபர்ட் கிரிஞ்சிலி என்ற இணைய பத்திரிகையாளர் (வலைப்பதிவர்) மறுசீரமைப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக ஐ.பி.எம் தனது 4.3 லட்சம் ஊழியர்களில் 26% பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்திருக்கிறது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் எழுதினார். இது புராஜக்ட் குரோம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஐ.பி.எம் “பொதுவாக நாங்கள் வதந்திகளுக்கும், ஊகங்களுக்கும் பதில் சொல்வதில்லை. ஆனால், வதந்தி முட்டாள்தனமாக இருக்கும் போது அதை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது” என்று ஆரம்பித்து, “நாங்கள் 1,12,00 பேரை ஆட்குறைப்பு செய்கிறோம் என்பது சுத்தப் பொய். நாங்கள் பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்புகிறோம்” என்று விளக்கம் சொல்லியிருக்கிறது.

கிரிஞ்சிலியோ “10,000 பேரை ஆட்குறைப்பு என்ற பெயரிலும் இன்னும் பல ஆயிரம் ஊழியர்களை விருப்ப ஓய்வு, தானாக கடிதம் கொடுத்து விட்டு போவது என்ற முறையிலும் வீட்டுக்கு அனுப்பவிருக்கிறது ஐ.பி.எம்” என்கிறார். திறமை போதாது என்று காரணம் காட்டி வெளியேற்றுவதற்காக பல ஆண்டு வேலை செய்து வரும், திறமையான ஊழியர்கள் பலருக்கு குறைவான மதிப்பீடு கொடுக்கும்படி மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது, ஐ.பி.எம்

ஆனால், “4.3 லட்சம் பேரை வேலைக்கு வைத்திருக்கும் ஐ.பி.எம் தனது மொத்த ஊழியர்களில் 3% பேரைத்தான் வீட்டுக்கு அனுப்புகிறது”, “வேலை இழப்பு 1 லட்சம் பேருக்கு இல்லை, 10,000 பேருக்குத்தான்” என்பதுதான் பத்திரிகைகளில் விவாதமாகவும் எதிர் விவாதமாகவும் உள்ளது.

மேலும் உலகெங்கிலும் சென்ற ஆண்டு புதிதாக 45,000 புதிய ஊழியர்களை எடுத்ததாகவும், தற்போது 15,000 பேரை எடுப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் கூறுகிறது, ஐ.பி.எம். அதாவது, “10,000 பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவதை பற்றி கேள்வி கேட்கிறீர்களே, புதிதாக 15,000 பேரை எடுக்கப் போகிறோமே அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை எதிர்க்கிறீர்களா” என்று மடக்குகிறது.

இந்தச் செய்தியை டி.சி.எஸ் ஆட்குறைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்து அமல்படுத்தி வருகிறது என்ற செய்தியை மறுத்த அந்நிறுவனம், “25,000 பேர் எல்லாம் இல்லை, 2,500 பேரைத்தான் நீக்கியிருக்கிறோம்” என்றும் “விலகிச் செல்லும் ஊழியர்கள் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 1-2% தான்” என்றும் விளக்கியிருந்தது.

மேலும் “அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி புதிதாக நாங்கள் எடுக்கவிருக்கும் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகிறதே, அதை எதிர்க்கிறீர்களா” என்று மடக்கியது.

“workforce restructuring” அல்லது “reorganization” என பெயர் எதுவானாலும் ஐ.பி.எம் முதல் டி.சி.எஸ் வரை ஒரே கார்ப்பரேட் தர்மம்தான் செயல்படுகிறது.

அடுத்த காலாண்டில் என்ன லாபம், அது சென்ற ஆண்டில் அதே காலாண்டை விட அதிகமா, குறைவா, முந்தைய காலாண்டை விட அதிகரித்திருக்கிறதா குறைந்திருக்கிறதா, அது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு என்ன விளக்கம் சொல்வது என முதலாளிகளின் லாபத்துக்காக மட்டும்தான் கார்ப்பரேட்டுகளின் இயக்கமும் பொறுப்பும்.

வாடிக்கையாளருக்கு சிறப்பான சேவை, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்தை வளர்த்தல் என்றெல்லாம் பளபளப்பான கார்ப்பரேட் விளம்பரங்களிலும், அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களிலும் காட்டப்படும் பில்ட் அப் உண்மையில் பண முதலைகளுக்கு லாபம் கிடைக்கிறதா என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.

ஹிட்லரின் நாஜி ஜெர்மனி யூதர்களுக்கு எதிராக நடத்திய கூட்டுப் படுகொலை திட்டத்துக்கு தேவையான கணக்கிடும் கருவிகளை வழங்கிய போதும் முதலீட்டாளருக்கு லாபம் தர வேண்டும் என்ற ‘புனிதமான’ நோக்கம்தான் ஐ.பி.எம்முக்கு இருந்தது. தனது லாப வேட்டையின் விளைவாக கொன்று குவிக்கப்படும் மக்கள் எத்தனை பேர், வாழ்வாதாரங்களை இழக்கும் ஊழியர்கள் எத்தனை பேர் என்று எந்த கார்ப்பரேட்டும் கணக்கு பார்ப்பதில்லை.

ஜின்னி ரோமெட்டி
சதுரங்கத்தில் காய்களை வெட்டி எறிவது போல, லாபம் ஈட்டுவதற்காக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன கார்ப்பரேட்டுகள் – ஐ.பி.எம் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஜின்னி ரோமெட்டி

ஏதாவது செய்து முதலீட்டாளர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஐ.பி.எம் நிர்வாகம் சென்ற ஆண்டு $1500 கோடி (சுமார் ரூ 90,000 கோடி) செலவில் சந்தையிலிருந்து பங்குகளை வாங்கி முடக்கியிருகிறது. இதற்கான செலவு, புதிய தொழில்நுட்பங்களில் செய்த முதலீட்டை விட அதிகமானதாகும்.

சதுரங்கத்தில் காய்களை வெட்டி எறிவது போல, லாபம் ஈட்டுவதற்காக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன கார்ப்பரேட்டுகள். ஆண்டு தோறும் 2% முதல் 3% வரை ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது சகஜம்தான் என்று ஊழியர்களையும் மக்களையும் ஏற்றுக் கொள்ளச் சொல்கின்றன.

ஐ.பி.எம் இந்தியாவில் நிரந்தர ஊழியர்களை நீக்கி விட்டு அவர்களையே ஒப்பந்த ஊழியர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, புராஜக்ட் முடிந்தவுடன் சம்பளம் வருவது நின்று விடும். அடுத்த புராஜக்ட் கிடைத்தால் மீண்டும் சம்பளம் தொடங்கும். ஆள் நீக்கம், புதியவர்களை எடுப்பது, பயிற்சி அளிப்பது போன்ற தொல்லைகள் ஏதும் இன்றி பயன்படுத்தி தூக்கி எறிபவர்களாக (Use and Throw) ஊழியர்கள் வேண்டும் என்பது கார்ப்பரேட்டுகளின் தேவை.

நோக்கியா, ஃபாக்ஸ்கான், மாருதி, பஜாஜ் போன்ற உற்பத்தித் துறை நிறுவனங்கள் முதல் ஐ.பி.எம், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் வரையிலான ஐ.டி நிறுவனங்கள் வரை மூலதனமே கடவுள், பங்குச்சந்தையே அதை ஆராதிக்கும் கோயில் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள், முதலாளிகள். அதை மூடி மறைத்து, வேலை வாய்ப்பு, வளர்ச்சி, சமூகப் பொறுப்பு என்று மோசடி பிரச்சாரம் செய்கிறார்கள்.

மூலதனத்தின் பசிக்கு இரை போடும் வெப்ப இரத்த பிராணிகளாக ஊழியர்களை கருதும் இந்த முதலாளித்துவ நடைமுறையை முறியடிக்க ஊழியர்கள் தொழிற்சங்கங்களாக ஒன்று சேர்வதுதான் ஒரே தீர்வு.

இது தொடர்பான செய்திகள்