privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஒபாமா அடிமை மோடி - புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு

ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு

-

மோடியின் ஆட்சி! நாட்டிற்கே பேரழிவு!

ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம்.

ந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்வது, இந்நூற்றாண்டின் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்று பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் பரபரப்பு செய்தி  வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம்.ஒபாமாவின் இந்திய வருகையில், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விசயமே இல்லை, உண்மையில் ஒபாமாவின் வருகை, தனது கார்ப்பரேட் நலனுக்கு ஏற்றவாறு மோடியின் ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மோப்பம் பிடித்து உறுதி செய்வதற்குத் தான் என்பதை மக்களுக்கு விளக்கும் விதமாகவும், “மோடியின் ஆட்சி, கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி, இந்து மத பயங்கரவாத ஆட்சி, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் விரோதமான ஆட்சி, இந்த ஆட்சி நாட்டிற்கே பேரழிவு” என்பதை விளக்கும் விதமாகவும், குடியரசு தினம் அன்று (26.01.2015) புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு பகுதியின் தோழர்களின் அணிவகுப்பில் ஆர்ப்பாட்டப் பகுதியே சிவப்பானது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர், தோழர். சரவணன் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் தோழர். விளவை ராமசாமி மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர். முகுந்தன் மற்றும் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர்.

puducheri-ndlf-against-obama-modi-04

ஆர்ப்பாட்டத்தில் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி சிந்திக்கும் விதமாக தங்களது பாடல்களின் மூலம் மோடியின் ‘அருமை – பெருமை’களையும், மோடியின் கார்ப்பரேட் மாமாத்தனத்தையும் எள்ளி நகையாடினர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள்.

puducheri-ndlf-against-obama-modi-02

நமது நாட்டில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள், வாழ வழியில்லாமல் தவிக்கும் போது, நமது நாட்டை மோப்பம் பிடிக்க வந்த ஒபாமாவின் மனைவிக்குப் பனாரஸ் பட்டுப் புடவை பிடிக்கும் என்பதை அறிந்து, ஒரு சேலை லட்ச ரூபாய் என 100 சேலைகள் தயார் செய்து கொடுத்து தனது அடிமைத் தனத்தை நிரூபித்துள்ளார்.

யூனியன் கார்பைடு என்பது விசவாயு தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் என தெரிந்தே அந்நிறுவனத்தை இரசாயன தொழிற்சாலை என்ற பெயரில் போபாலில் அனுமதித்தது இந்திய அரசு. 1984-ம் ஆண்டு அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கிரிமினல் கவனக்குறைவால் ஒரே இரவில், 20,000 இந்திய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று வரை அந்த விசவாயுவின் தாக்கத்தினால், பற்பல நோய்களுடனும், அங்கப் பிறழ்வுகளுடனும் குழந்தைகள் பிறக்கின்றனர். இதுவரை அம்மக்களுக்கு எந்த நிவாரணமும் அந்நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. அப்படிப்பட்ட கொலைகார நிறுவனத்தின் முதலாளி ஆண்டர்சனைக் காப்பாற்றிய அமெரிக்க அரசின் ஜனாதிபதியை இந்தியாவிற்குள் அனுமதிப்பது வெட்கக் கேடு.

puducheri-ndlf-against-obama-modi-08

இப்படிப்பட்ட சாவுகள் மீண்டும் நிகழ்ந்தால், அதற்கு நிவாரணத்தை யார் தருவது என்ற பிரச்சினையால் கடந்த 8 ஆண்டுகளாக முடிவுக்கு வராத அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அணு உலைகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் விபத்துக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கமே பொறுப்பு என்பதை உறுதி செய்ய நேரில் வந்தவர் தான் ஒபாமா. அதாவது தனது கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகத் தான் ஒபாமா இந்தியா வந்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒபாமா வருவதை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும். இன்று ஏதோ ஒரு மூலையில், புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் ஒபாமா வருவதைத் தடுக்க முடியாது. ஆனால், இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களை உணர்வு ரீதியாக மாற்றுவதன் மூலம் மீண்டும் வருவதைத் தடுக்க முடியும்.

இந்தியாவின் கடற்கரையெங்கும் 50 கி.மீ.-க்கு ஒரு அணு உலை என்ற எண்ணிக்கையில் நிறுவப்படவிருக்கும் அணு உலைக்காக, அந்த அணு உலைகள் அமைக்கப் போகும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை உறுதிப் படுத்தும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தான் ஒபாமாவின் இந்திய வருகை. ஒபாமாவின் வருகையால், இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும், நாட்டிற்குமே பேரழிவு. இந்தப் பேரழிவைப் பற்றிக் கவலைப் படாமல், கார்ப்பரேட் சேவையே தனது கொள்கை என பகிரங்கமாக அறிவித்துள்ளார் கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடி.

puducheri-ndlf-against-obama-modi-09‘அணுசக்தி ஒப்பந்தம், பொருளாதார ஒப்பந்தங்கள், தொழிலாளர் சட்ட திருத்தம் என அரசு புதிதாக எதைச் செயல் செய்தாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பது தான் வேலை’ என இப்பிரச்சாரத்தின் போது சில படித்த அறிவு ஜீவிகள் அங்கலாய்த்தனர். கம்யூனிஸ்டுகள், இயங்கியல் ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திப்பவர்கள். அறிவியல் பூர்வமான அணுகுமுறை தூக்கிப் பிடிப்பவர்கள். மோடி சொல்லும் வளர்ச்சி யாருக்கானது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, பரந்துபட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவதாக வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், மக்களை அரைப் பட்டினியில் வைத்து விட்டு கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு நாட்டை திறந்து விடுகிறார் மோடி; இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மோடியின் இந்திய வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, டில்லி நகரையே அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி ஒபாமாவின் பாதுகாப்பை உறுதி செய்தனர். ஒபாமா என்ற ஒரு மனிதரைப் பாதுகாக்க வக்கற்றவர்கள் என இந்திய பாதுகாப்பை ஏளனம் செய்துள்ளது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை. சாதாரண மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடும் போது, பாய்ந்து குதறும் காவல்துறை, இப்போது கைகட்டி வாய்பொத்தி நின்று, அடிமை போல சலாம் போடுகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த ஆறுமாதங்களில், கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதற்காகவே, நில அபகரிப்பு சட்ட திருத்தம், தொழிலாளர் சட்ட திருத்தம், கார்ப்பரேட் மசோதா என எல்லாவற்றையும் பெயரளவு நாடாளுமன்ற விவாதத்தைக் கூட பொறுக்க முடியாமல் அவசர சட்டங்களாக அமல் படுத்தி வருகிறார். ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் இந்திய நகரங்களை மேம்படுத்துவதாக சொல்லிக் கொண்டு நகரங்களில் வாழும் குடிசை மக்களை வெளியேற்றப் போகிறது மோடி அரசு. இதற்காக மக்கள் வரிப்பணத்தில் முதல் தவணையாக 7000 கோடியை அமெரிக்க முதலாளிகளுக்கு தூக்கிக் கொடுத்துள்ளது மோடி அரசு.

puducheri-ndlf-against-obama-modi-22இந்திய மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ‘நல்ல’ நோக்கத்தில் “ஜன் தன் யோஜனா” திட்டத்தை மோடி கொண்டு வரவில்லை. இத்திட்டத்தின் மூலம், அம்மக்களின் மானியங்களை, கார்ப்பரேட்டுகள் நேரடியாக பிடுங்கிக் கொள்ளும் வகையில் தான் இத்திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு துவங்கிய ஏழைகள், அந்த வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்த அவர்களது சேமிப்பான ரூ. 6000/- கோடி ரூபாயை, இன்னொரு கையால் அதானி என்ற தரகு முதலாளிக்கு தூக்கிக் கொடுத்துள்ளார் மோடி. அந்தப் பணத்தை வைத்து ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கங்களை வாங்கி தனது சொத்தைப் பெருக்கியுள்ளார் அதானி. இவ்வாறு பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் மக்கள் பணத்தை நோகாமல் கொள்ளை அடிக்க வழிவகை செய்து, தான் கார்ப்பரேட்டுக்களின் அடிமை என்பதை தனது ஒவ்வொரு செயல்களின் மூலமும் நிரூபித்து வருகிறார் மோடி.

மறுபுறம், சமஸ்கிருத வாரம், தாய்மதம் திரும்புதல் (கர் வாபஸி), கோட்சேவுக்கு கோயில், ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று பேசுவது இவற்றை விவாதப் பொருளாக்கி மதவெறியைத் தூண்டுவதன் மூலம் தனது கார்ப்பரேட் சேவையை தங்கு தடையின்றி நடத்தி வருகிறது மோடி தலைமையிலான இந்து மதவெறிக் கும்பல்.

puducheri-ndlf-against-obama-modi-01மோடியின் இந்த கார்ப்பரேட் பாசிசத்தையும், காவிப் பாசிசத்தையும் எதிர்க்க வக்கற்றவர்களாக அனைத்து ஓட்டுக் கட்சிகளும் மாறிவிட்டனர். ஏனெனில், எல்லாக் கட்சிகளுக்கும் இது தான் கொள்கையாக உள்ளது.

இந்தக் கார்ப்பரேட் பயங்கரவாதத்திலிருந்தும், காவி பயங்கரவாததிலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டுமெனில், புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

என்று தங்களது கண்டனவுரையை தோழர்கள் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்த போது ஆங்காங்கே நின்றிருந்த மக்களின் கருத்துக்கள்:

  • எதுக்கு அவனை (ஒபாமாவை) அழைக்கணும்? அவன் நமது ராணுவ ரகசியத்த தெரிஞ்சுக்க வர்றான்.
  • மோடி நல்லவன்னு நெனச்சு ஓட்டுப் போட்டது. ஏன் இப்படி நாட்டையே விக்கிறான்? கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவது நல்லது தான்.
  • இங்க பேசுறது ஒபாமாவுக்கு கேக்கவா போகுது? இருந்தாலும் கம்யூனிஸ்டு நல்லாப் பண்றாங்க. நல்லாப் பேசுறாங்க.
  • கம்யூனிஸ்டு அடிக்கடி கூட்டம் போடுவாங்க. இப்போ கொஞ்சம் அதிகமாத் தான் இருக்காங்க.
  • ஒபாமா வந்தத எதிர்த்துப் பேசுறாங்க. ஒபாமா வர்றது இவங்களுக்குப் தப்பா தெரியுது. வரவைக்கிறவங்களுக்கு சரியா தெரியுது.
  • நம் நாட்டுல காரே இல்லாத மாதிரி, வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஏன்? இவங்க நல்லாப் பேசுறாங்க. ஒபாமாவ எதிர்க்குறாங்க.
  • வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு தர்றாங்க. நம்ம நாட்டு மக்கள் சாவுறாங்க. கவனிக்க மாட்றாங்க. இவனுங்கள சுடணுங்க.
  • நம்ம குடியரசு தினத்துக்கு இவன அழைச்சி நடத்தக் கூடாது. அவன் சீனாவ கிளப்பி விடுகிறான். நமக்கு எதிரியே அவன் தான்.
  • இவங்க நல்லாப் பேசுறாங்க. ஆனா, மோடி, ஒபாமாவ ஒருமையில் பேசுறது பிடிக்கல. மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டவங்கள இப்படிப் பேசக் கூடாது.
  • சரியாத் தான் பேசுறாங்க. மக்கள் காது கொடுத்துக் கேட்டத்தாங்க. அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. இங்க பேசுறதால, அவனுக்கு (ஒபாமாவுக்கு) என்னங்க. நல்ல பாதுகாப்பாத்தான் போறான்.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க