privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்இன்டெக்ரா நிர்வாகத்தை பணிய வைத்த தொழிலாளர்கள் !

இன்டெக்ரா நிர்வாகத்தை பணிய வைத்த தொழிலாளர்கள் !

-

பணிந்தது, இன்டெக்ரா நிர்வாகம்; வென்றது, தொழிலாளர் போராட்டம்!

ன்டெக்ரா தொழிலாளர்களது உள்ளிருப்பு போராட்டத்தைப் பற்றி விவரித்து,  உறுதிமிக்க தொழிலாளி வர்க்கத்தின் முன்பாக எந்த சக்தியும் வென்றதாக வரலாறு இல்லை என்று எழுதியிருந்தோம். அது உண்மைதான் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்து காட்டியுள்ளனர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இன்டெக்ரா கிளை தொழிலாளர்கள்.

இன்டெக்ரா உள்ளிருப்பு போராட்டம்
கோப்புப் படம்

5-ம் தேதி இரவு முதல் கேண்டீனை மூடி தொழிலாளர்களை பட்டினியில் தள்ளி வழிக்கு கொண்டுவந்து விடலாமென மனப்பால் குடித்துக் கொண்டிருந்தது நிர்வாகம். குடித்த மனப்பாலில் பல்லி விழுந்த கதையாக நடந்தன மூன்று சம்பவங்கள்.

  1. உணவு தரவில்லை என்பதால் தொடர்ந்து போராடி வரும் தொழிலாளர்கள் மயக்கமடைந்து வருகிறார்கள். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், சட்டவிரோதமாக நடந்து கொள்ளும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொழிற்சாலைகள் ஆய்வாளருக்கு சங்கத்தின் சார்பில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், அவர் வந்து ஆலையை ஆய்வு செய்தார். நிர்வாகத்தை சட்டவிரோத நடவடிக்கைகளை கைவிட அறிவுறுத்திய போதும் நிர்வாகம் ஏற்காததால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி நிர்வாகத்துக்கு காரணம் கோரும் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்புவதாக கூறிச்சென்றார்.
  2. 6-ம் தேதி மதிய உணவு ஏற்பாடு செய்வதில் காலதாமதமானதால் மாலை 4 மணியளவில், ஆலைவாயிலில் முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர் ,தொழிலாளர்கள். அப்போது அந்த வழியாக வேனில் சென்ற தோட்ட வேலை செய்யும் பெண் தொழிலாளிகள் சிலர் வேனை நிறுத்தி அருகில் வந்து “சாப்டீங்களா தம்பி? பாவம் புள்ளங்க… ரெண்டு நாளா சோறு தண்ணி இல்லாம போராடுதுங்க, இவனுங்க (அதிகாரிகள்) கொட்டி கொட்டி தின்னுறானுங்களே, பாவி மவனுங்க” என்று ஆலை நிர்வாகத்தை ஏசினார்கள். அதோடு நில்லாமல் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொடுத்து “நல்லா சாப்டுங்க… தம்பிங்களா, சாப்டுட்டு போராடுங்க” என்று வாயார வாழ்த்தி விட்டு போனார்கள். தொழிலாளர்கள் பட்டினியாக போராடிக்கொண்டிருக்கும் போது திருட்டுத்தனமாக உணவை உள்ளே கொண்டு சென்று வயிறு முட்டத் தின்று விட்டு சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த ஆலை நிர்வாகத்தின் தலையில் இடியாய் விழுந்தது, ஏனைய தொழிலாளர்களுடைய ஆதரவு.
  3. “சங்கத்தை அங்கீகரிக்க மாட்டேன், கொடி நடக்கூடாது, தோரணம் கட்டக் கூடாது, 100 மீட்டர் தாண்டி தான் நிற்க வேண்டும்” என்றெல்லாம் பாச்சா காட்டும் முதலாளிகளின் முகத்திலறைவதைப் போல ஆலைவாயிலில் கட்டப்பட்டிருந்தது பு.ஜ.தொ.மு கொடி. நூற்றுக்கணக்கான வாகனங்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கடந்து செல்லும் இடமாகவும் அமைந்திருந்ததினால், அனைவரும் செங்கொடியையும், போராட்டத்தையும் பார்த்து விசாரித்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர். வெளிநாட்டிலிருந்து வேறு ஒரு ஆலைக்கு சிறப்புப் பணிக்காக வந்திருந்த நேபாளத் தொழிலாளி ஒருவர் செங்கொடியைக் கண்டதும் தன்னெழுச்சியாக முஷ்டியை உயர்த்தி வீரவணக்கம் செய்தார். அதைக் கண்டதும் அங்கிருந்த தோழர்களுக்கும், மற்ற தொழிலாளிகளுக்கும் உற்சாகம் பெருக்கெடுத்தது. மேலும் உத்வேகம் பெற்றனர். அமந்திருந்த போலிசும் அதிர்ந்துதான் போனது.

எல்லா சம்பவங்களையும் ஆலை செக்யூரிட்டி மூலமாகவும், ஆலைவாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா வாயிலாகவும் அறிந்து கொண்ட நிர்வாகத்துக்கு ஆத்திரம் இன்னும் தலைக்கேறியது. இருந்தாலும் தற்போதிருக்கும் சூழலில் ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியுமா?

சிறிது நேரத்துக்குப் பிறகு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. நிர்வாகம் தொழிலாளர் ஆணையரை நேரடியாக சந்தித்து பேசியுள்ளதாகவும், போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும், கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் பேசிக்கொள்ளலாம் என்றும் உதவி ஆணையர் கூறினார்.

“நிர்வாகம் கோரியிருப்பது ஏற்கத்தக்கது தான். ஆனால் நிர்வாகம் அதை அப்படியே எழுதித் தருவதாக வாக்குறுதி கொடுப்பதாகக் கூறினால் தொழிலாளர்களிடம் நிர்வாகம் கூறியதை விளக்கி ஒப்புதல் பெற்ற பின்பு வருகிறோம்” என நமது தரப்பில் கூறப்பட்டது.

நிர்வாகத்திடம் பேசிவிட்டு வருவதாக கூறினார் தொ.உ.ஆணையர். நாமும் தொழிலாளர்களிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறினோம்.

தொழிலாளர்களிடம் நிலைமையை விளக்கிய போது, “நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக தருவதாக இருந்தால் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடலாம்” என்று கூறினர்.

நமது நிபந்தனைகளின் அடிப்படையில் மாலை 6.20 மணிக்கு பேச்சுவார்த்தை துவங்கியது. தொழிலாளிகள் சார்பில் புஜதொமு இன்டெக்ரா கிளைச் செயலாளர் தோழர் தாமோதரன், பொருளாளர் தோழர் சதீஷ் ஆகியோரும், நிர்வாகத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குநரும் தொ.உ.ஆணையர் (பொறுப்பு) முன்னிலையில் கையொப்பமிட்டனர்.

தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதென்றும், உள்ளிருப்புப் போராட்டத்துக்கு முந்தைய நிலைமையே நீடிக்க வேண்டுமெனவும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். நிலுவையிலுள்ள கோரிக்கைகளை எதிர்வரும் 20-ம் தேதி பேசுவதென முடிவு செய்யப்பட்டது.

தொ.உ.ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆலைவாயிலுக்கு வந்தடைந்த போது இரவு 8 மணியை தொட்டிருந்தது. இரண்டு நாட்களாக போதிய உணவும், உறக்கமும் இல்லாமல் இருந்த போதிலும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் குழுமி இருந்தனர், தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டத்தின் காரணமாக நாம் தற்காலிக வெற்றியடைந்ததை அறிவித்தும், தொழிற்சங்க அமைப்புகளையே அனுமதிக்காத திருப்பெரும்புதூர் வட்டார தொழிற்பேட்டைப் பகுதியில் தொழிற்சங்கத்தின் தலைமையில் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருப்பது நம்பிக்கையை ஊட்டியிருப்பதாகவும், இதற்கு காரணமான இண்டெக்ரா தொழிலாளர்களை வாழ்த்துவதாகவும் பேசினார் பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொருளாளர் விஜயகுமார்.

அன்றிரவே உற்பத்தியை தொடங்க வேண்டுமென நிர்வாகம் கேட்டுக்கொண்டதை தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி அவர்களும் சம்மதம் தெரிவித்ததன் பேரில் 7-ம் தேதி இரவு 9 மணி முதல் உள்ளிருப்புப் போராட்டம் கைவிடப்பட்டு தொழிலாளிகள் பணிக்குத் திரும்பினர்.

இதே தொ.உ.ஆணையர் அலுவலகத்தில் தென்கொரிய நிறுவனமான GSH-ல் தொழிலாளர்கள் தொழிற்தாவா எழுப்பியிருந்தனர். தாவா நிலுவையில் இருக்கும் போதே தொழிலாளிகளை பணியிலிருந்து பணி இடைநிறுத்தம் செய்தும் பணிநீக்கம் செய்தும் தொழிலாளர் துறையை அவமதித்து வருகிறது GSH நிர்வாகம்.

இன்டெக்ரா ஆலைக்கு அருகிலேயே உள்ள மற்றொரு கொரிய கம்பெனியான ”டே சங்” -ல் போனசுக்காக போராடிய தொழிலாளர்களை ரவுடிகளை வைத்து அடித்து போராட்டத்தை ஒடுக்கியுள்ளது ஆலை நிர்வாகம். அடக்குமுறைகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுகளையே தன் கழிப்பறை காகிதமாக பயன்படுத்தி வரும் முதலாளிகள் தொழிலாளிகளின் போராட்டங்களை ஒடுக்குவதிலேயே குறியாய் இருந்து வருகின்றனர். அவை அத்தனையையும் மீறி தொழிலாளர்கள் நடத்துகின்ற உறுதிமிக்க போராட்டத்தினாலேயே நிர்வாகத்தை பணியவைக்கமுடிகிறது.

இன்டெக்ராவின் நிர்வாக இயக்குநர் சொக்கலிங்கம், தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து நடக்கும் சொக்கத்தங்கமா? தற்போது பின்வாங்கி தொழிலாளர்களை மிதிக்க நினைத்து அழியப்போகும் வெற்று பிம்பமா என காலம் தான் பதில் சொல்லும்.

முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டி, ஒரு உன்னதமான சமுதாயத்தை நோக்கிச் செல்லும் வகையில் வீரியமிக்க போராட்டங்களை நடத்த தொழிலாளி வர்க்கத்தை பயிற்றுவித்து வருகிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் உங்களை இணைத்துக் கொள்வீர். தொழிலாளி வர்க்க விடுதலைக்காக போராடுவீர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டக் குழு