privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?

பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?

-

ரைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்த ஜெயலலிதா மீதான லஞ்ச வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பவானி சிங் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

கொள்ளைக் கூட்டத் தலைவி ஜெயலலிதா
1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது.

“வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதே நேரம் இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை” என்று அந்தத்  தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது. அந்த ஊழல் மலையின் சிறு துளிதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. பின்னர் 2001-ம் ஆண்டில் பாசிச ஜெயா மீண்டும் தமிழகத்தை ஆண்ட போது இந்த வழக்கில் எல்லா முறைகேடுகளும் நடந்தன. அப்போது தி.மு.க தலைவர் அன்பழகன் தொடுத்த வழக்கின் விளைவாகத்தான் இவ்வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது.

அதிலும் ஜெயா கும்பல் பல்வேறு இழுத்தடிப்புகளையும், மோசடிகளையும் செய்து “இதுதாண்டா நீதித்துறையின் இலட்சணம்” என்று கேலிக்கூத்தாக்கியது. இருப்பினும் வாய்தா ராணியையும் அவரது கூட்டாளிகளையும் குற்றவாளி என்று 2014, செப்டம்பர் 27-ம் தேதி  தீர்ப்பளித்து சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது, சிறப்பு நீதிமன்றம்.

ஜெயா உச்சநீதிமன்ற பிணை
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் முறைகேடான தீர்ப்பின் காரணமாக பிணை பெற்று வெளியே வந்தது, ஜெயா கும்பல்

சிறை சென்ற ஜெயா கும்பல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் முறைகேடான தீர்ப்பின் காரணமாக பிணை பெற்று வெளியே வந்தது. பிறகு உச்சநீதிமன்ற உத்திரவின்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜெயா கும்பலின் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில்தான் அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜரானார். பச்சையாகவும், வெளிப்படையாகவும் ஜெயா தரப்புக்கு ஆதரவாக அவர் வைத்த வாதங்களும், கேள்விகளும் காலாகாலத்திற்கு நீதித்துறையின் அருகதையை வெளிப்படுத்தும் சாட்சியமாக இருக்கும்.

ஜெயா மீதான ஊழல் வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட, அதே ஜெயா கட்டுப்படுத்தும் அரசின் உத்தரவுப்படி பவானிசிங் ஆஜரானது வெளிப்படையாக நடைபெற்றாலும் அது குறித்து இங்கே பெரிய அதிர்ச்சி ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மட்டும் இதை எதிர்த்து வழக்கு தொடர, அது உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட பிறகு அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. பவானி சிங் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, விழா ஒன்றில் பாசிச ஜெயாவை புரட்சித் தலைவி என்று அழைத்திருக்கிறார். நீதித்துறை அனைவருக்கும் சமமாக நடந்து கொள்வதில்லை என்பது பொதுவான உண்மையாக இருந்தாலும் ஜெயாவின் வழக்கில் அது பச்சையான திமிருடன் அறிவிக்கப்பட்டது.

பாசிஸ்ட் ஜெயா
ஜெயா கும்பல்தான் குற்றவாளி என்று வாதிட்டிருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் சேம் சைடு கோல் போடுகிறார் என்றால் அந்த வழக்கு எப்படி நடந்திருக்கும்?

பிறகு மூவர் அடங்கிய அமர்வில் பவானிசிங் நியமனம் செல்லாது என்று தற்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயதார்த்தம் செல்லாது என்று அறிவித்திருக்கும் நீதிமன்றம் திருமணத்தை மட்டும் அங்கீகரித்திருக்கிறது. ஜெயா கும்பல்தான் குற்றவாளி என்று வாதிட்டிருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் சேம் சைடு கோல் போடுகிறார் என்றால் அந்த வழக்கு எப்படி நடந்திருக்கும்?

அதாவது,  மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் மறு விசாரணை தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். பவானி சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்திருக்கும் வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது என்று தடுத்திருக்கின்றனர். கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை ஒரு நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், அதை கருத்தில் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

பவானி சிங்
ஊரறிய உலகறிய பேசி, வாதிட்டு, ஒரு வெளிப்படையான சதிகாரராக நடந்து கொண்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு என்ன தண்டனை?

இவை அனைத்திற்கும் என்ன பொருள்? பவானி சிங்கை முறைகேடாக நியமித்து வழக்கை குழி தோண்டி புதைக்க முயன்ற தமிழக அரசு, அதை ஆணையிட்டு நடத்தும் ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா அவரது அடிமைகள் ஓ.பி.எஸ் முதலான அற்பங்கள் அனைவருக்கும் என்ன தண்டனை?

சாட்சியங்களை கலைப்பார் என்று பிணை மறுக்கும் நீதிமன்றம், இங்கே நீதிமன்றத்தையே கலைக்கும் வல்லமை கொண்ட ஜெயாவை சுதந்திரமாக போயஸ் தோட்டத்தில் குந்த வைத்து பா.ஜ.க மோடி அரசுடன் ஒப்பந்தம் போட்டு இவ்வழக்கை சீர்குலைக்க முயல்வதற்கு ஆசீர்வாதம் அளித்திருப்பதற்கு என்ன பொருள்?

அரசு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வது சகஜம் என்றாலும் இங்கே ஊரறிய உலகறிய பேசி, வாதிட்டு, ஒரு வெளிப்படையான சதிகாரராக நடந்து கொண்ட பவானி சிங்கிற்கு என்ன தண்டனை? அவருக்கு இவ்வழக்கின் மூலம் அளிக்கப்பட்ட தமிழக மக்களின் பல இலட்ச ரூபாயை பறிக்காமல் விட்டு வைத்திருப்பது என்ன நீதி?

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு
வழக்கை குழி தோண்டி புதைக்க முயன்ற தமிழக அரசு, அதை ஆணையிட்டு நடத்தும் ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா அவரது அடிமைகள் ஓ.பி.எஸ் முதலான அற்பங்கள்.

மேலாக, பலான பவானி சிங் நியமனமே செல்லாது என்று அறிவித்துவிட்டு அவரது வாதத்தை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு அளியுங்கள் என்றால் என்ன பொருள்? இவையெல்லாம் என்ன முறைகள், முன்னுதாரணங்களின் கீழ் வரும்? ஒரு நாளில் கர்நாடக அரசும் தி.மு.க தரப்பும் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் என்ன பொருள்? இது என்ன பரபரப்பு செய்திகளை காட்டும் தொலைக்காட்சியா?

இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே! ஊடகங்கள் அனைத்தும் ஓரிரு விதிவிலக்கு தவிர இந்த வழக்கை ஒரு தொழில் நுட்ப சிக்கலாகவே பேசுகின்றன. உண்மையில் ஜெயா கும்பல் நடத்தியிருக்கும் சதி, அதற்குத் துணை போன அரசு, நீதி அமைப்புகள் குறித்து இங்கே யாரும் வாதங்களை வைக்கவில்லை. இது ஜெயா மீதான பயத்தினால் அல்ல, ஆளும் வர்க்கம் திவாலாகி வருவதை விட்டுக் கொடுக்காத எச்சரிக்கையினால் வருவது.

இனி நீதிபதி குமாரசாமி, ஜெயா கும்பலை குற்றவாளி என்று அறிவித்தாலும் இன்னும் அதை அமல்படுத்த முடியாத அளவுக்கு ஏகப்பட்ட ஓட்டைகளையும், வாய்ப்புகளையும் இவ்வழக்கில் கொண்டு வந்து விட்டார்கள். மேலாக, கிரிமினல் பிரதமர் மோடி இருக்கும் போது, அவரது ஆசி பெற்ற உச்சநீதிமன்றம் இருக்கும் வரையிலும் பார்ப்பன பாசித்தின் இளைய பங்காளியான ஜெயலலிதாவை காப்பாற்றுவதையே ஆளும் வர்க்கம் செய்யும்.

ஊழல் வழக்கில் ஜெயா கும்பலை நாம்தான் தண்டிக்க வேண்டும். அந்த கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்கள் சொத்துக்களாக அறிவிக்க வேண்டும். இந்தப் போராட்டங்கள் வீச்சாக நடைபெற்றால் மட்டுமே நீதித்துறையிலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.