privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கயானையை பானைக்குள் அடைக்க முடியுமா?

யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?

-

( ஜெயா – சசி கும்பலின் வெளிப்படையான கொள்ளையை ஏன் தண்டிக்க முடியவில்லை? தண்டிக்க வேண்டிய நீதித்துறைதான் இக்கும்பலை தப்புவிக்க எல்லா வகைகளிலும் உதவுகிறது. 96-ம் ஆண்டிலிருந்தே இதுதான் வரலாறு! 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய ஜனநாயகத்தில் வெளியான தலையங்கம்)

ஜெயலலிதா – சசிகலா குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு ஆறு மாதங்களாகி விட்டன. லஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளால் தமிழ் நாட்டையே சூறையாடி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அந்தக் கும்பலை சிறையிலடைத்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தைத்தான் சட்டசபை தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து வந்த மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளும் பிரதிபலித்து உள்ளன. இப்படிச் சொல்லித்தான் கருணாநிதி, மூப்பனார், சிதம்பரம் வகையறாக்கள் ஆட்சியுரிமை கோரிப் பெற்றார்கள்.

ஜெயா - சசி
“லஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளால் தமிழ் நாட்டையே சூறையாடி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அந்தக் கும்பலை சிறையிலடைத்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்”

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள், மக்களின் அந்த ஆணையை நிறைவேற்றுவதில் எந்த அளவு அக்கறையும், முனைப்பும் காட்டியுள்ளார்கள் என்பதைப் பரிசீலிப்பதற்கு கடந்த ஆறு மாத கால அவகாசமே போதுமானது. ஜெ.ஜெ. டி.வி ஒப்பந்தம், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்தது, வெளிநாட்டில் வாழும் இந்தியர் பெயரால் ஹவாலா பணம் கடத்தி வந்து உள்நாட்டில் சொத்துக்கள் வாங்கியது ஆகிய அந்நிய செலாவணி மோசடி வழக்குகளுக்காக சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன், பாஸ்கரன் மூவரும் ”காபிபோசா” சட்டத்தின்கீழ் மத்திய அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஜெயாவும், சசியும் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தலா 3 லட்சம் டாலர்கள் வெளிநாட்டில் இருந்து அன்பளிப்பு வாங்கிய வழக்கில், ஆரம்ப கால தயக்கத்துக்கு பிறகு சி.பி.ஐ விசாரணையைத் துவக்கி உள்ளது.

ஜெயா — சசி கும்பலின் ஊழல் முறைகேடுகளை விசாரித்து, நேரடியாகவே வழக்குகள் தொடுப்பதற்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்தது. அது இந்திரகுமாரி, செல்வகணபதி, செங்கோட்டையன், மதுசூதனன், கு.ப. கிருஷ்ணன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கைது செய்து வழக்கும் போட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள், ஓரிரு எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் வீடுகள் சோதனையிடப்பட்டு சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஜெயாவும் அவரது அரசியல் குரு சோவும் வாதிடுவதைப் போல, ஜெயாவுக்குத் தெரியாமல் யாரோ சேர்த்த சொத்துக்கள் அல்ல. எல்லாம் ஜெயா – சசியின் பங்காளிகள், பினாமிகளுடையவை தான். விசாரணை – கைதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், சாட்சிகள், தடயங்களை அழிப்பதற்காகவும் ஜெயாவின் முன்னாள் வளர்ப்புப் பிராணி சுதாகரன், சசிகலாவின் கணவர் நடராஜன் போன்ற நெருங்கிய உறவினர்கள் அலைந்து திரிகின்றனர்.

எனினும் ஜெயா – சசி கும்பல் மீதான விசாரணைகளும், வழக்குகளும் நடக்கும் விதத்தையும் வேகத்தையும், சட்டத்திலும் நீதித்துறையிலும் உள்ள ஓட்டையையும் சிக்கலையும் பார்க்கும்போது, ஜெயா – சசி கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் தண்டனைக்குள்ளாகும் என்று நம்புவதற்கான வாய்ப்பில்லை. முதலாவதாக, ஜெயா – சசி கும்பலுக்கு எதிரான நடவடிக்கையை முனைப்போடு நடத்துவதற்கான தார்மீக பலமும் உரிமையும் மத்திய, மாநில ஆட்சியாளர்களிடம் கிடையாது. குறிப்பாக லஞ்ச – ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல் குற்றவாளிகளைக் கொண்டும், வெளியிலிருந்து அத்தகைய நபர்களின் ஆதரவாலும் தான் மத்திய ஆட்சி நடக்கிறது. அதன் கீழ் நீதித்துறையும், சி.பி.ஐ.-ம் வழக்குகளை விசாரித்து வரும் யோக்கியதை கண்டு நாடே சிரிக்கிறது.

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு
படம் : ஓவியர் முகிலன்

இரண்டாவதாக, யாரையும் விலை கொடுத்து வாங்கும் பணபலமிக்க ஜெயா – சசி கும்பலுக்கு ஐக்கிய முன்னணி, காங்கிரசு, பாரதிய ஜனதா ஆகிய மூன்று தரப்பிடமும், விஜய் மல்லையா, உடையார், அய்யங்கார், செட்டியார் குடும்பங்கள் போன்ற தரகு முதலாளிகளிடமும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் முதல் மத்திய உளவுத்துறை, வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு வரையும், நீதித்துறையிலும் கூட செல்வாக்கு உள்ளது. மூன்றாவதாக, சட்டத்திலும் நீதித்துறையிலும் உள்ள ஓட்டைகள், சிக்கல்கள், முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டிலேயே அதிக ஊதியம் பெறும் பிரபல வழக்கறிஞர்களை வைத்து வழக்குகளை இழுத்தடித்து முடக்கி விடுவதில் ஜெயா – சசி கும்பல் வெற்றி பெற்று வருகிறது. நான்காவதாக, ஏற்கெனவே ஆதிக்கம் வகித்து வந்த கவர்ச்சிவாத, பிழைப்புவாத, பொறுக்கி அரசியல், ஜெயா – சசி குடும்ப ஆட்சிக் காலத்தில் முழுவதும் கிரிமினல் மயமாகி விட்டது. மாநகரில் இருந்து கிராம மட்டம் வரை பரவி விரவியுள்ள கிரிமினல் வலைப் பின்னலின் ஆதரவு ஜெயா – சசி குடும்பத்திற்கு இருக்கிறது.

வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் சதிகாரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சதி விவரங்கள் அனைத்தும் கிட்டியபோதும் சாட்சியங்களைக் கலைத்து, பகைமையாக மாற்றுவதிலும், குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதிலும் கிரிமினல் கும்பல் வெற்றி பெற்று விட்டது. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வழக்கிலும், சந்திரலேகா மீது திராவகம் வீசிய வழக்கிலும் கூட இதே மாதிரி நிலைமை தான் நீடிக்கிறது. சசிகலா – நடராஜன் குடும்பத்தினர் பதுக்கி வைத்திருந்த அரிசி, நெல் மூட்டைகளைக் கையும் களவுமாக கைப்பற்றிய வழக்கில் கூட, நீதிபதியை சரிக்கட்டி தப்பி விட்டனர். தற்பொழுது நடைபெற்று வரும் விசாரணை – சோதனைகள் பற்றி ஜெயா – சசி கும்பலுக்கு முன்கூட்டியே தகவல் தெரியும்படி செய்து, முக்கிய ஆவணங்களையும், பொன் – பொருட்களையும் பதுக்கி வைத்துக் கொள்வதற்கு போதிய அவகாசமளிக்கப்படுகிறது.

ஜெயா - சசி கும்பல்
ஜெயா – சசி குடும்பத்தினர் மீது எடுக்கப்படும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எல்லாம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அது உருகி கண்களை மறைக்கும் போது பிடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது

ஜெயா – சசி குடும்பத்தினர் மீது எடுக்கப்படும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எல்லாம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அது உருகி கண்களை மறைக்கும் போது பிடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது. குறைவான மதிப்பைக் காட்டி சொத்துக்கள் வாங்கியது, ரிசர்வ் வங்கி அனுமதியின்றி அந்திய செலாவணி பரிமாற்றங்கள் செய்தது, பத்திரப் பதிவு முறைகேடுகள் போன்ற வழக்குகள் தாம் விசாரித்து நடத்தப்படுகின்றன. முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச – ஊழல் வழக்குகள் நடக்கின்றன. ஆனால் பொதுச் சொத்தை சூறையாடிய கிரிமினல் குற்றத்துக்காக, நேரடியாக வழக்குத் தொடுத்து தண்டிப்பதற்கான முயற்சியும் இல்லை; சட்டத்தில் அதற்கான இடமுமில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்களை சட்டம், வழக்கு, விசாரணை என்கிற வழக்கமான வழிகளில் போய் தண்டிக்கும் முயற்சி என்பது பானைக்குள் யானையை அடக்க முயற்சிப்பது தான். இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல; இப்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் மேல் மட்டத்திலுள்ள ஒரு சில நபர்கள் மீது தான். இந்த நச்சு மரம் அனைத்து மட்டங்களிலும் பல கிளைகளாகப் பிரிந்து, விழுது – வேர் விட்டு வளர்ந்திருக்கிறது. கருணாநிதி, மூப்பனார், சிதம்பரம் போன்ற ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தமது அரசியல் ஆதாயம் வேண்டி பிரச்சாரம் செய்வதற்கு மேல், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள். ஓட்டுக் கட்சித் தலைவர்களுக்குள் இது ஒரு மரபு; எழுதப்படாத ஒப்பந்தமாகி விட்டது. உலகறிந்த, இவ்வளவு தூரம் அம்பலப்பட்டுப் போன குற்றவாளிகளைக் கூட தண்டிக்க முடியாத இந்தச் சட்டமும், நீதித் துறையும் இருந்து என்ன பயன்?..

.. மற்ற பிற கிரிமினல் குற்றவாளிகளுக்குத் தரப்படும் வாய்ப்புகள் அனைத்தையும் மறுத்து விட்டு, நேரடியாகவே சொத்துக்களைப் பறிமுதல் செய்து, கடுஞ்சிறைத் தண்டனைக்குள்ளாக்கும் வகையில் அரசியல் கிரிமினல் குற்றவாளிகளுக்கெதிரான மக்கள் இயக்கம் தேவை.
__________________________________________
தலையங்கம்,
புதிய ஜனநாயகம், நவம்பர் 01 – டிசம்பர் 15, 1996
___________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க