privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

-

நீதிபதிகள் நாடாளும் மன்னனும் அல்ல!
வழக்கறிஞர் அடங்கிப் போகும் அடிமைகளும் அல்ல!

ன்பார்ந்த வழக்கறிஞர்களே! பொதுமக்களே! வணக்கம்.

காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், உரிமையியல்-குற்றவியல் சட்ட திருத்தங்கள், காவல் துறை அராஜகங்கள் என மக்களை பாதிக்கக் கூடிய அனைப்பு பிரச்சனைகளுக்கும் வழக்கறிஞர்கள் களம் இறங்கிப் போராடியுள்ளோம். போராட்டங்கள் அனைத்தும் பல மாதங்கள் வருமானங்களை இழந்து, இளம் வழக்கறிஞர்கள் பட்டினி கிடந்து நடத்தப்பட்டவை. இப்போராட்டப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் சாதாரண மக்களை மிகவும் கடுமையாக பாதித்த ஹெல்மெட் பிரச்சனைக்கும் மதுரை வழக்கறிஞர் சங்கம் 40 நாட்கள் தொடர்ந்து போராடியது.

ஹெல்மெட் கட்டாயம்! டாஸ்மாக் அரசின் விருப்பமா?

hrpc40x30_oster_10-9-2015jpg_Page1கடந்த ஜூலை 1 முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்ய வேண்டும். உரிமம் இல்லையென்றால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டையும், பில்லையும் காண்பித்தால்தான் பறிமுதல் செய்யப்பட்டதைப் பெறமுடியும் எனக் கறாராக உத்தவிட்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் மீது வழக்குகள் போடப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் ஹெல்மெட் கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். விலையோ 1500, 2500 என எகிறியது. ஒரு குடும்பத்திற்கு ரூ 5,000 – ரூ 7,000 செலவானது. மக்கள் பணமின்றி, தரமான ஹெல்மெட் இன்றி பதறினர். இதை நீதிபதி கிருபாகரனிடம் சொன்னால், “யானை வாங்க காசிருக்கிறது, அங்குசம் வாங்க காசில்லையா?” என நக்கலடித்தார். சூழ்நிலையைப் பயன்படுத்தி காவல்துறை கல்லா கட்டியது.

தமிழகத்தில் சுமார் 1,70,00,000 இருசக்கர வாகனங்கள் உள்ளன. பின்னால் உட்கார்ந்து செல்வோர் அணி மொத்தம் 4 கோடி ஹெல்மெட் தேவை. சந்தையில் 10 கோடி ஹெல்மெட் இருந்தால்தான் மக்கள் தரமான ஹெல்மெட்டை வாங்க முடியும். விபத்திலிருந்து மக்களைக் காப்பதுதான் நீதிமன்றத்தின் நோக்கம் என்றால், முதலில் விபத்துகளுக்கு மூலகாரணமான மோசமான சாலைகளை சரிசெய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். ஆனால், இவையிரண்டும் அரசு அதிகாரிக், ஆளும் கட்சியினர், காண்டிராக்டர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவை. அவர்களைத் தொடக்கூட நீதிமன்றத்திற்கு தைரியம் இல்லை. ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்ட மந்திரிகளின் சொத்தைக் கூட பறிமுதல் செய்ய முடிவதில்லை. ஆனால், வாகன பறிமுதல், உரிமம் ரத்து என்று சாதாரண மக்களுக்கு எதிராக எந்த சட்டத்திற்கும் உட்படாத சர்வாதிகாரத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இது ஹெல்மெட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடியும், போலீசும் மக்களைக் கொள்ளையடிக்கவே வழிசெய்தது. எனவேதான், மதுரை வழக்கறிஞர் சங்கம் நீதிபதி கிருபாகரனின் இந்த மக்கள் விரோதத் தீர்ப்பை எதிர்த்துப் போராடியது.

இவ்வாறு, மக்களுக்காக 6,000 மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் முன்நின்ற மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு தர்மராஜ், செயலர் திரு ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து சிறையில் அடைத்து, வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்வதாக மிரட்டுகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற அவமதிப்பு ஒரு சார்பானதா?

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருந்ததற்காக பல்லாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் உள்ளன. ஏற்கனவே, இதை நீதிமன்றத்தில் சொல்லி வேதனைப்பட்டார் கிருபாகரன். அரசியல் கட்சித் தலைவர்கள், சாதித் தலைவர்கள் விழாக்களுக்கு செல்லக் கூடாதென உத்தரவிட்டார். அவரது உத்தரவு எள்ளளவும் மதிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கிருபாகரன் எடுக்க வேண்டியதுதானே?

கடந்த அறுபது வருடங்காள நீதிமன்ற உத்தரவை மீறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது அரசு. எத்தனை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது? ஏன், நீதிபதி குன்கா தீர்ப்பிற்கு எதிராக தமிழகம் வன்முறை களமாக்கப்பட்டதே? அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்று விட்டார்களா? பிரசார்ந்த பூன் மீதான அவமதிப்பு வழக்கு இன்றுவரை தூங்கக் காரணம், நீதிபதிகளுக்கு எதிராக அவர் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதனால்தானே? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து உட்பட, அலகாபாத், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் ஊழல் பேர்வழிகள் என்று சொன்ன உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ மீது நடவடிக்கை எடுக்க நீதித்துறை துணிவுள்ளதா?

தீர்ப்பை விமர்சிக்கக் கூடாதா?

காவிரி, முல்லைப்பெரியாறு, அணு உலை, மீத்தேன், கல்விக் கொள்ளை, கார்ப்பரேட் கொள்ளை என நீதிமன்றங்கள் பல்வேறு பிரச்சனைகளில் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. தில், காவேரி, முல்லைப்பெரியாறு தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக, கேரள அரசுகள் மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது? கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஆனால், கூடங்குளம் மக்களுக்கு எதிரான தீர்ப்பு மட்டும் கடுமையாக அமலாக்கப்படும்.

மக்களைப் பாதிக்கும் தீர்ப்புகளை ஜனநாயக நாட்டில் எல்லோரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். 10% வரை ஊழல் செய்து பணம் சேர்க்கலாம், தவறில்லை என்ற தீர்ப்பை விமர்சிக்காமல் இருக்க முடியுமா? கருத்துரிமை, விமர்சன உரிமை என்பது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அங்கங்கள். யாரும் கேள்வி கேட்க முடியாத அதிகாரம், ஊழல்-முறைகேடுகளைத்தான் உருவாக்கும்.

நீதிபதிகள் தேர்வு – மாபெரும் மோசடி

கீழமை நீதிமன்றத்தில் தேர்வாவது பரீட்சை மூலம் நடக்கிறது. சிலர் படித்தும், பலர் செல்வாக்கிலும் வருகிறார்கள். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வு முழுக்க கள்ளத்தனமாகவே நடக்கிறது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் 75% பேர் வாரிசு, அரசியல்-சாதி, செல்வாக்கு, பணம், லாபியிங் செய்து வந்தவர்கள்தான். இப்படி பதவிக்கு வந்தவர்கள் இன்று எல்லா முறைகேடுகளிலும் ஈடுபடுகிறார்கள். இதை எவராவது மறுக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களின் தீர்ப்புகள் எப்படி இருக்கும்? இதில் முதற்கட்டமாகவே சில நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எழுத்துபூர்வமாகவே தாக்கல் செய்யப்படும்.

பெட்டி வாங்குவது மட்டுமல்ல ஊழல். ஓய்வு பெற்ற பிறகு அரசு சன்மானங்களைப் பெறுவதற்காகவே அரசின் முறைகேடுகளை ஆதரித்து தீர்ப்பு வழங்குகிறார்கள் நீதிபதிகள். இவையும் ஊழல்தான். அணு உலைக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்த நீதிபதி ஜோதிமணிக்கு பசுமைத் தீர்ப்பாப் பதவி, ஊழல் நீதிபதி சொக்கலிங்கத்துக்கு பசுமை தீர்ப்பாயம். சிங்காரவேலுக்கு தனியார் பள்ளி கட்டண கமிட்டி. இதில் சிங்காரவேலு வசூல் செய்யாத தனியார் பள்ளிகளே இல்லை. பதவிக்காலம் முடிந்ததும் வைகுண்டராஜனின் டி.விக்கு வேலைக்குச் செல்லும் நீதிபதி வெங்கட்ராமன் தனது பணிக்காலத்தில் எப்படி யோக்கியமாய் இருந்திருப்பார்? இதுதவிர உயர்நீதிமன்ற ஊழியர்கள் நியமனம் முழுக்க நீதிபதிகளின் உறவினர்கள், சாதிக்காரர்களுக்கே வழங்கப்படுகிறது. இதில் சட்டமோ, விதிமுறையோ என்றுமே பின்பற்றப்பட்டதில்லை. ஆனால், இந்த யோக்கியர்கள் சொல்கிறார்கள் மக்கள் சட்டத்தை கடைப்பிடிக்காவிட்டார் சிறை என்று.

அனைத்துக் கொள்ளையின் பங்காளிகளாக… நி(நீ)தி அரசர்கள்!

தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்து வரும் கனிம வளக் கொள்ளைக்கு விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் முதலில் அனைத்துக் கொள்ளைகளையும் விசாரிக்கச் சொன்ன தலைமை நீதிபதி கவுல், அடுத்து கிரானைட்டை மட்டும் விசாரிக்கச் சொல்லி உத்தரவை மாற்றுகிறார். காரணம் ஆற்று மணல், தாதுமணல் மாபியாக்கள் ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள். இடைத்தேர்தல் மோசடிகள், அரசுப் பணத்தில் ஆளும் கட்சி விளம்பரங்கள், புதிய தலைமைச் செயலகம் மூடப்பட்டது உள்ளிட்ட வழக்குகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றுக் கொள்ளும் வகையில்தான் தலைமை நீதிபதி தனது பணிகளைச் செய்து வருகிறார். ஊழல் நீதிபதிகள் குறித்து ஆதாரத்துடன் புகார் சொன்னாலும், உண்மைதான் என்ற ஏற்றுக் கொண்டு நான் என்ன செய்ய முடியும் என்கிறார். ஆனால், ஆட்சியாளர்கள் சொன்னபடி ஊழல் நீதிபதிகளுக்கு பசையான துறைகளை ஒதுக்கி ஊழலுக்குத் துணைபோகிறார். பசையான கனிமவளத்துறைக்கு நீதிபதிகளுக்குள் அடிதடியே நடக்கிறது. கூடுதலாக தனது சாதி நீதிபதிகள் ஆலோசனைப்படிதான் நடக்கிறார். இக்கூட்டணியை உள்ளிருந்து வழிநடத்துகிறார் நீதிபதி இராமசுப்பிரமணியன்.

நீதிபதிகள் குற்றம் செய்தாலும் கேட்கக் கூடாதாம்! ஜெயிலாம்!

சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை என்பதாகச் சொல்லப்பட்ட இந்திய நீதித்துறை இன்று லஞ்சம்-ஊழல் மலிந்ததாக மாறி அரசு-போலீசுடன் இணைந்து மக்களை ஒடுக்கும் அமைப்பாக மாறிவிட்டது. அம்பானி, டாடா, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள், நோக்கியா, கோகோ கோலா, ஸ்டெர்லைட் முதலான கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊழல் அரசியல்வாதிகள், அரசு-காவல்துறை உயரதிகாரிகள், நடிகர் சல்மான்கான் போன்ற பணக்கார கிரிமினல்களுக்கு சேவை செய்வதே தங்களின் பணி என்று அறிவிக்காத குறையாய் செயல்படுகின்றன நீதிமன்றங்கள். இதுதவிர, மாஜிஸ்திரேட், முன்சீப் முதல் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தனிப்பட்ட முறையில் லஞ்சம்-ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்துக்கள் சேர்ப்பது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, அரசுக்கு சாதகமாக உத்தரவுகள் வழங்கி பணி ஓய்வுக்குப் பின் பதவிகள் பெறுவது என பல்வேறு சமூக விரோத-குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அதிகாரிகள், அரசியல்வாதிகள் போல நீதிபதிகளும் லஞ்சம்-ஊழலில் ஈடுபடுவது அனைவரும் அறிந்ததே. அரசியல்வாதிகளுக்கு விசாரணையாவது உண்டு. ஆனால், நீதிபதிகள் செய்யும் குற்றங்களைத் தண்டிக்க சட்டமே இல்லை என்பதுடன், குற்றங்களை வெளியில் சொன்னால் சொன்னவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.! ஆக, நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதை, காமக் களியாட்டங்கள், பாலியல் சுரண்டல்களில் திளைப்பதை, ஆளும் கட்சி, அரசு-போலீசுக்கு சாதகமாக உத்தரவுகள் வழங்குவதை நீங்கள் நேரடியாகப் பார்த்தாலும், உரிய ஆதாரங்கள் இருந்தாலும் நீங்கள் அதை இரகசியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் சொன்னனால் உங்களுக்கு ஜெயில்தான். இதனால்தான் நீதிபதிகளின் குற்றங்களை ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு மாறாக நீதிபதிகளுக்கு வழங்கப்படும் இந்த அதிகாரங்கள் சாரத்தில் சர்வாதிகாரம் தவிர வேறென்ன?

ஊழல் நீதிபதிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

கடந்த 65 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் மிகவும் கேவலமாக நடந்து, குற்றம் நிரூபணமாகிய கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நிலை என்ன? என்றாவது ஒரு நீதிபதி மீது லஞ்சம்-ஊழல் குற்றத்திற்கு வழக்கு, விசாரணை நடந்ததுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் யோக்கியர்களா?

மக்களுக்கு எதிராக தயங்காமல் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு சட்ட பாதுகாப்பு எதற்கு? குற்றவாளி என்று தெரிந்தாலும் பாராளுமன்றம் மூலம் மட்டுமே நீதிபதிகளை நீக்க முடியும். ஊழல் பாராளுமன்றம் மூலம் இது சாத்தியமா?

அரசியல்வாதிகளாவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களுக்கு கூழைகும்பிடு போட வேண்டும். நீதிபதிகள்-அதிகாரிகளுக்கு அதவும் இல்லை. நீதிபதிகள் மக்களுக்கு பொறுப்புடையவர்களாக ஆக்கப்பட வேண்டும். நீதிபதிகள் தங்களின் குற்றங்களுக்கு தண்டிக்கப்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்குத்தான் வழக்கறிஞர் போராட்டம்.

எனவே வழக்கறிஞர் பேரணியில் அனைத்து மக்களும் பங்கேற்பீர்!  பேரணி முடிவில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்படும்.

பாராளுமன்றமே, உச்சநீதிமன்றமே!

  • சென்னை உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைத்திடு!
  • அவமதிப்பு வழக்கு, சிறை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!
  • நீதிபதிகள் குற்றங்களைத் தண்டிக்க உரிய சட்டம் வரும்வரை போராடுவோம்!

“நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்”

நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணி – ஆர்ப்பாட்டம்

நாள் : 10-09-2015 வியாழன் காலை 10.00 மணி

பேரணி துவங்கும் இடம் : மாவட்ட நீதிமன்றம், மதுரை
ஆர்ப்பாட்டம் : காந்தி சிலை, உயர்நீதிமன்றம், மதுரை.

700 madurai

தகவல்

அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு

ஊழல் நீதிபதிகள் மீதான புகார் தெரிவிக்க
மதுரை வழக்கறிஞர்கள் சங்கம்
தொலைபேசி எண் : 0452- 2537120