privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்

மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்

-

தூத்துக்குடியில் மீனவர் சங்கத் தலைவர் தலைவர் பார்த்திபனை விசைப்படகு முதலாளிகளின் கைக்கூலிகள் குத்திக்கொன்று விட்டனர்.

மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகளும் அதில் உழைக்கும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் நீரின்மேல் நிலையின்றி ஆடும் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கு என்ன காரணம்?

தோழர் பார்த்திபன்
குத்தி படுகொலை செய்யப்பட்ட தோழர் பார்த்திபன்

முதலாளிகளின் சுரண்டலை கொள்ளையை தட்டிக்கேட்டதுதான் காரணம். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலை நம்பி தொழில்செய்பவர்களான பரதவர்களில் முதலாளிகள் மட்டும் செழிப்பாக இருக்க, கடுமையாக உழைக்கும் தொழிலாளிகள் மட்டும் ஏன் முன்னேற முடியவில்லை என்று சிந்தித்து போராட்டத்தை வழிநடத்தியதால்தான்.

மீன்பிடிதொழிலாளர்களின் உழைப்பால் விசைப்படகு முதலாளிகள் எப்படி கொழுக்கிறர்கள்?

பிடித்துவரும் மீனை விற்று வரும் பணத்தில் அனைத்து செலவையும் கழித்துவிட்டு எஞ்சியதை முதலாளிக்கு 65%, தொழிலாளர்களுக்கு 35% என்று பிரித்துக்கொண்டுதான் கொழுத்தனர். இதை எதிர்த்து 61%-39% என்று பிரித்துக்கொள்ள நிர்பந்தித்து போராடி வென்றது தொழிற்சங்கம். இதற்கு முக்கிய பங்காற்றியவர் தோழர் பார்த்திபன்தான். அப்படி இருந்தும் மீன்பிடி தொழிலால் கோடிகளில் புரள்கிறார்கள் முதலாளிகள்.

தொழிலாளர்களுக்கு ஏன் முன்னேற்றம் வரவில்லை?

அவர்களின் உழைப்பை நயவஞ்சகமாக முதலாளிகள் திருடிக்கொள்வதால்தான். 10 தொழிலாளிகள் அதிகாலை 4.00 மணிக்கு படகில் ஏறி நள்ளிரவு 11.00 மணிக்கு திரும்பி மீன்களை விற்று முடிக்க நள்ளிரவு 1.00 கூட ஆகும். படகு கரைக்கு வரும் முன்னரே அடுத்த நாள் போகவேண்டிய 10 பேர் இரவு 9.00 மணிக்கே வந்து காத்திருப்பர். இரவு 1.00 மணிக்கு மேல் இரண்டு மணிநேரம் தூங்கி அடுத்தநாள் 4.00 மணிக்கு தொழிலுக்கு செல்வர்.

இவர்கள் ஒரு நாளுக்கு பேட்டாவாக ரூ 700 வீதம் 20 தொழிலாளிக்கு ரூ 14,000 செலவாக காட்டினால், முதலாளி கரையில் நின்று மேற்பார்வை மட்டும் பார்த்துவிட்டு தனக்கும் 20 பேரின் பேட்டாவான அதே 14,000-ஐ எடுத்துக் கொள்கிறார். இதுபோக டீசலுக்கு, ஐஸ்க்கு, உணவு செலவுக்கு என்று பிடித்துக்கொள்வார்கள். 1 லட்சத்துக்கு அதிகமாக ஏலம் போனால்தான் அடக்கச் செலவை ஈடுசெய்ய முடியும். அப்படி இல்லாமல் ஒருநாள் மீன்பாடு குறைந்து செலவை ஈடுகட்டாத போது அடுத்தநாள் மீன்பாடிலிருந்து வரும் தொகையில் பழைய நிலுவை பேட்டாவை பிடித்துக் கொள்கிறார்கள்.

படகை சொந்தமாக வைத்திருப்பதால்தான் முதலாளிக்கு நிகர வரவில் 61% ஒதுக்கப்படுகிறது. ஆனால் செலவுக் கணக்கில் எவ்வளவுக்கு மீன் ஏலம்போனதோ அதில் 6% வட்டக்காரர்களுக்கு என்று எடுத்துக்கொள்கிறான் முதலாளி. அதாவது ரூ 1 லட்சத்துக்கு மீன் விற்றிருந்தால் 6,000  ரூபாயை வட்டக்காரனுக்கு என்று எடுத்துக்கொள்கிறார்கள்.

யார் இந்த வட்டக்காரர்கள்?

சுமார் ரூ 85 லட்சம் வரை செலவிட்டு நவீன இரும்பு விசைப்படகை கடலில் இறக்கும் முதலாளிக்கு ரூ 40 லட்சம் வரை வட்டிக்கு – தினசரி விற்பனையில் 6% வசூலித்துக்கொள்ள – பணம் தருபவர்கள்தான் இந்த வட்டக்காரர்கள். உண்மையில் சுமார் 270 விசைப்படகுகளில் 200-ல் முதலாளியே வட்டக்காரனாகவும் – ஓனர் வட்டமாக – இருக்கிறார். ஒருவரே 6 விசைப்படகுகளை வைத்துள்ள நிலையிலும் அதில் பிடிக்கும் மீன்களை விற்றதிலும் 6% வட்டம் பிடிக்கப்படுகிறது. இதை கண்டித்தது தொழிற்சங்கம். மீன் ஏலத்தையே இந்த வட்டக்காரர்கள் – ஓனர் வட்டங்கள் – கட்டுப்படுத்தி அதிலும் காசு பார்க்கின்றனர்.

ஏலத்தில் என்ன பிரச்சினை?

சென்னையிலும், நாகையிலும், ராமேஸ்வரத்திலும், கொச்சியிலும் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கும் மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் ஏஜெண்டுகள் தூத்துக்குடியில் மட்டும் விலையை குறைத்தே எடுக்கிறார்கள். இங்கு ஏலம் எடுக்க ஏஜெண்டுகள் வட்டக்காரர்களிடம் சீட்டு – அட்டை – வாங்க வேண்டும். ஒரு படகுக்கு 3 அட்டை என்ற கணக்கில் வட்டக்காரர்கள் வியாபாரிக்கு தருகிறார்கள். வட்டக்காரர்களோ என்ன மதிப்புக்கு ஏலம்போனதே அதில் 2% கமிசனாக வசூலித்துக் கொள்கிறார்கள். எனவே அதற்கேற்ப ஏலத்தொகையை இங்கு மட்டும் குறைத்துக் கொள்கின்றன கம்பெனிகள். ஏலம் குறைவாக போனால் அது தொழிலாளர்களை பாதிக்கிறது. இந்த 2% வசூலை ரத்துசெய்யக்கோரி, அட்டை முறையை, வட்டக்காரர்களை – முதலாளிகளை எதிர்த்தன தொழிற்சங்கங்கள். பேச்சுவார்த்தை பல சுற்று நடந்தது.

பேச்சுவார்த்தையில் என்ன முடிவானது?

விசைப்படகு உரிமையாளர்கள், வட்டக்காரர்கள் மற்றும் தொழிற்சங்கம் கூடி பேச்சுவார்த்தை நடத்தி சில முடிவுகளுக்கு வந்தனர்.

  1. 2% கமிசன் எடுக்க தடை.
  2. 1 வட்டக்காரர் 1 படகுக்கு 1 அட்டை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இதை வட்டக்காரர்கள் எதிர்த்தனர். உரிமையாளர்களை தம் தரப்புக்கு மாற்றினர். ஒப்பந்தத்தை மீறி 1% கமிசன் எடுப்பதாக தட்டி வைத்தனர்.

தொழிற்சங்கங்கள் என்ன முடிவெடுத்தது?

சிறிய படகு தொழிலாளர் சங்கமும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கமும், முத்து நகர் விசைப்படகு தொழிலாளர் சங்கமும் 01-09-2015 அன்று இரவில் கூட்டுக்கூட்டம் போட்டனர். நாளை விசைப்படகை எடுத்துக்கொண்டு தொழிலுக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்தனர். நுழைவாயிலில் கயிற்றை கட்டி தடுப்பை ஏற்படுத்தினர்.

முதலாளிகள் என்ன செய்தனர்?

மறுபுறம் முத்துநகர் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கடலுக்கு செல்ல ஐஸ்களை படகில் ஏற்றினர். முடிவைமீறி சென்ற விசைப்படகை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தடுத்து, முதலில் வந்த சிட்டுக்குருவி படகை தாக்கி மீண்டும் திரும்ப வைத்தனர்.

இதை அவமானமாக எடுத்துக்கொண்டு பழிதீர்த்து விட்டனர் முதலாளிகள். சங்கத்திலிருந்து மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த தலைவர் பார்த்திபனை குத்திக்கொன்று விட்டனர். இன்று பார்த்திபனின் மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும் நிர்கதியாக நிற்கின்றனர்.

இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக மீனவர்கள் ஒன்று திரண்டனரா?

இல்லை. நாட்டுப்படகு வழக்கம்போல் தொழிலுக்கு சென்றது. தருவைக்குளம் மீனவர்களும் நாடார் – பரதவர் என்று பிளவுபடுத்தப்பட்டு விலகியே நின்றனர். கடலை நம்பி வாழும் பைபர் படகு மீனவர்களோ விசைப்படகை தமது போட்டியாளராக – எதிரியாக பார்ப்பதால் அதில் எழும் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. ஆற்றுக் கழிமுகங்களை, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் கரையோரங்களை விசமாக்கும் நச்சு ரசாயன ஆலைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவதில்லை. வேம்பாரும், வைப்பாரும், புன்னக்காயலும், பெரியதாழையும், தூத்துக்குடியும் ஒன்றுபட்டு போராடியதில்லை. கடலைக் காக்க, இயற்கையைக் காக்க, கனிமச்செல்வங்களை காக்க நடக்கும் போராட்டங்களில் குறிப்பாக ஒரே மதமாக இருந்தும், வழிநடத்துவதற்கு ஊருக்கு ஊர் பாதிரிமார்கள் இருந்தும் ஒன்றுபடவேயில்லை.

அரசு என்ன செய்தது?

ஆழ்கடலை அன்னிய மீன்பிடிக்கப்பல்களுக்கு தாரை வார்த்துவிட்டு இங்குள்ள படகுகளுக்கு இவ்வளவு தொலைவுதான் செல்ல வேண்டும், இவ்வளவுக்குதான் மீன் பிடிக்க வேண்டும், படகின் நீளம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், இத்தனை நாள் தடைக்காலம் என்றெல்லாம் ஆயிரம் கட்டுப்பாடுகளை போடுகிறது அரசு.

மீன்பிடி துறைமுகத்தில் வட்டக்காரர்களின் அடாவடி வசூலை தடுக்காமல் மீன்வளத்துறை இயக்குனர் வேடிக்கை பார்த்திருந்துள்ளார். காவல்துறையோ இவ்வளவு பதட்டமாக துறைமுகம் இருந்தும், முதலாளிகள் பேச்சுவார்த்தையை அப்பட்டமாக மீறிய நிலையிலும், தொழிலாளர்கள் கொந்தளித்து கல்லெறிந்த பின்னரும், எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் முதலாளிகளின் திட்டம் நிறைவேற மறைமுகமாக துணைபோயுள்ளனர். வட்டமும், அட்டையும், கமிசனும் என்னவாகப் போகிறது?

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
ஆலைச்சாவுகளைப் பொறுத்த வரையில் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சார்பாக RDO, இன்ஸ்பெக்டர் போன்றோரும், பாதிக்கப்பட்ட தொழிலாளி சார்பாக சங்கங்களும் அமைப்புகளும் சில ஆயிரம் அல்லது லட்சம் வாங்கித்தருகிறோம் என்று கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து விடுகின்றனர்

பொதுவாக தூத்துக்குடி என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முத்துக்குளிப்பும், வ.உ.சி. ஓட்டிய சுதேசிக் கப்பலும்தான். இன்று நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக தூத்துக்குடி வளர்ந்துள்ளதாக பெருமிதப்படுவோரும் உண்டு. இந்த வளர்ச்சி யாருக்கானது?

இன்று தூத்துக்குடியில் என்ன நடக்கிறது?

பாதுகாப்பின்றி வேலைவாங்கப்படுவதால் அனுதினமும் நடக்கும் விபத்துகளும், உயிரிழப்புகளும்தான் அன்றாட நிகழ்வுகளாகிறது. இந்நகரம் வட இந்தியத் தொழிலாளர்கள் உட்பட நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் இடமாக மாறிவிட்டிருப்பது மட்டுமல்ல; பலநேரங்களில் இவ்விபத்துகளும் படுகொலைகளும் சக தொழிலாளர்களால் சாதாரணமானதாக பார்க்கப்படுவதும், மரத்துப் போனவர்களாக மாற்றப்படுவதும் தொடர்கிறது.

தூத்துக்குடி முக்கிய தொழில் நகரமா?

ஆம். இங்கு பெயர்பெற்றிருப்பது ஸ்பிக், ஸ்டெர்லைட், VV மினரெல்ஸ் போன்ற உர, தாமிர, கனிம ஆலைகள் மட்டுமல்ல; KSPS, சகாயமாதா சால்ட் போன்ற உப்பளங்களைக் கொண்ட உப்பு நிறுவனங்களும்; DSF, நிலா சீ ஃபுட்ஸ் போன்ற மீன் ஏற்றுமதி நிறுவனங்களும், ரமேஷ் பிளவர்ஸ் போன்ற மலர் ஏற்றுமதி நிறுவனங்களும்; செயிண்ட் ஜான், ஹரி & கோ போன்ற ஷிப்பிங் கம்பெனிகளும்தான். இதையெலாம் விட முக்கியமானது தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள TTPS, IBPL, கோஸ்டல் எனர்ஜியான் போன்ற இயங்கும் பவர்பிளாண்டுகளும், புதிதாக கட்டி இயக்கப்பட்டு வரும் NTPL அனல்மின் நிலையமும்தான். மேலும் முத்துக்குளி இல்லாவிட்டாலும் சங்குகுளியும், மீன்பிடிப்பும் பெரும் அளவு நடக்கிறது.

பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது என்றகிறார்களே அது உண்மையா?

இல்லை. உண்மையில் அனைவரும் காண்ட்ராக்ட் முறையில் நவீனமாக ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். சிலர் உயிரையும் பறிகொடுக்கிறார்கள். கட்டுமானத்திலிருந்து உற்பத்திவரை அனைத்திலும் காண்ட்ராக்டுக்கு உள்காண்ட்ராக்ட் என்று பல்வேறு படிநிலைகளில் பிரிக்கப்படுகிறார்கள் தொழிலாளர்கள்.

IBR வெல்டரான சசி “எங்க IBBL கம்பெனியில நாங்க OEG காண்ட்ராக்ட்ல பல வருசமா வேலை செஞ்சோம். இப்ப பழைய ஆட்கள் யாரும் இல்லை. கம்பெனி மேனஜரே நல்ல ஆப்பர்சூனிட்டி வரும்போது கம்பெனிய மாத்தினாத்தான் நீங்க முன்னேற முடியும்னு பகிரங்கமா சொல்றான்” என்று பணி நிரந்திரக் கனவை விட்டுவிடும்படி நிர்ப்பந்திப்பதை தோலுரித்தார்.

தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் ஒரே வேலையில் ஈடுபட்டிருந்தாலும் தாம் யாருக்காக – யாரிடம் வேலைசெய்கிறோம் என்று புரியாமலேதான் ரூ 200-க்கும் குறைவான தினக் கூலிக்கு கடுமையாக உழைக்கிறார்கள். ஒரே வேலைக்கு ஒவ்வொரு காண்ட்ராக்டிலும் ஒவ்வொரு விதமான சம்பளம் தரப்படுகிறது. பல கோடிகளைப் போட்டு பிரம்மாண்ட எந்திரங்களைக் கொண்டு மின்நிலையத்தை அமைக்கும் நிறுவனம் ஏன் நேரடியாக உற்பத்தியில் இறங்குவதில்லை. அதிகார வர்க்கத்திற்கு தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு எடுத்து மின்னுற்பத்தி செய்யவைப்பது முடியாத ஒன்றா என்ன?

ஏன் ஆப்பரேசன் & மெயிண்டனென்ஸ் (O&M) என்ற முறை புகுத்தப்படுள்ளது?

ஆலைக்கும் தொழிலாளர்களுக்கும், அதாவது உண்மையான முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவை மூடிமறைத்து ஏமாற்றும் தந்திரமாகத்தான் O&M கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது துல்லியமாக திட்டமிட்ட உற்பத்தியை நடத்தி கிடைக்கும் உத்தரவாதமான லாபம் மட்டும் முதலாளிக்கு; இழப்புகளுக்கு பொறுப்பேற்காமல் இந்த லாபத்திற்கு அடிப்படையான உழைப்பு சக்தியை செலவிட்ட, உடல் உறுப்புகளை அல்லது உயிரையே இழக்கும் தொழிலாளிக்கோ பட்டை நாமம் போடுவது என்பதை செய்யவே O&M.

இன்று புதிதாக கட்டி இயங்கத் தொடங்கியுள்ள NTPL-ல் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 500 பேர். ஆனால் இவர்களை வேலைக்கு நியமித்துள்ள கண்ட்ராக்ட்காரர்களோ (L&T, ABB உள்ளிட்டு) 50 பேர். இந்த பிளாண்ட்டை இரவு பகலாக கடும் உழைப்பை செலுத்திக் கட்டிய ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்தம் முடிந்ததும் விரட்டப்பட்டு விட்டனர்.

1979-ல் உற்பத்தியை தொடங்கிய TTPS தொடர்ந்து 7 ஆண்டுகளாக உற்பத்தி இலக்கை சரியாக எட்டியதற்கான மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. ஒரு யூனிட் கரண்ட்டை ரூ 2.50-க்கு தந்து லாபத்தில் இயங்கிவரும் இப்பிளாண்ட்டிலும் காண்ட்ராக்ட் முறை திணிக்கப்பட்டுள்ளது. இங்கு 2,000 பேர் நிரந்தரத் தொழிலாளிகள் இருக்க ஒப்பந்தத் தொழிலாளிகளின் எண்ணிக்கையோ அதையும் தாண்டுகிறது. அதாவது படிப்படியாக தனியார்மயம் மூக்கை நுழைக்கின்றது.

இதற்கு பதில் பாதுகாப்பாக உற்பத்தியை செய்யலாமே?

செய்யலாம்தான். ஆனால் அதற்கான கருவிகளுக்கும், கடைபிடிப்பதற்க்கும் பணம் செலவாகுமே! பாதுகாப்பை முன்வைத்தால் உற்பத்தி அளவும் – அதாவது லாபமும் குறையுமே! அதைவிட மலிவான உத்திதான் O&M மூலம் உள்..உள் காண்ட்ராக்ட்டுகளை புகுத்தியிருப்பது. இம்முறையில் யாராவது அடிபட்டாலோ உயிரை விட்டாலே காண்ட்ராக்ட் காரர்களே கட்டப்பஞ்சாயத்து பேசி பிரச்சினையை அதிக செலவின்றி முடித்துவிடும்போது எந்த முதலாளி பாதுகாப்பான உற்பத்தி முறையை விரும்புவான்? நம் உடல் உறுப்புகளும், உயிரும் எவ்வளவு மதிப்பற்றதாக கீழானதாக மாற்றப்பட்டுள்ளது!

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
கடந்த ஆகஸ்ட் 2015ல் படுகொலையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி.

அரசு – பொதுத்துறை நிறுவனங்களாவது பாதுகாப்பு விதிகளை மதிக்கிறதா?

ஆம். அதாவது எந்திரங்களை எப்படி சேதமாக்காமல் இயக்குவது என்று அதிஉயர் பாதுகாப்பை நடைமுறைப் படுத்துகிறார்கள். அதனால்தான் கொதிகலன்கள் வெடிப்பதில்லை. எந்திரங்கள் உடைபடுவதில்லை. ஒவ்வொரு நிறுவனத்திலும் முறையாக வார, மாத, காலாண்டு பராமரிப்புகளை சரியாக செய்கிறார்கள்தான்.

பவர்பிளாண்ட்டை – எந்திரங்களை பராமரிக்க என்றே அதிகாரிகளின் பெரும் பட்டாளத்தை நியமிக்கிறது அரசு. உதாரணத்திற்கு 1010 MW திறனுள்ள தூத்துக்குடி தெர்மல் பவர் ஸ்டேசனில் (TTPS) ல் மட்டும் 1 தலைமைப்பொறியாளர் (சம்பளம் – ரூ 2 லட்சம்), 7 மேற்பார்வை பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 1 3/4 லட்சம்), 25 செயற்பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 1 1/2 லட்சம்), 50 உதவி செயற்பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 80,000.00 – 1 லட்சம்), 130 உதவிப் பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 25,000.00 – 60,000.00) என்று பெரும் கூட்டம் இயங்குகிறது.

இந்த அதிகாரிகள் மனித உயிர்களை மதிக்கிறார்களா?

எங்கே மதிக்கிறது? இனி யாருக்கும் நிரந்திர வேலை தரத்தேவையில்லை என்று உற்பத்தியில் ஒப்பந்த, உள் ஒப்பந்த முறையை புகுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் முன்னோடிகளாக இருப்பவர்கள்தானே இந்த அதிகார வர்க்கத்தினர்! இவர்களா பாதுகாப்பு விதிகளை மதிப்பார்கள்? ரோட்டில் வண்டியில் அடிபட்ட நாயை அணுகுவதற்க்கும் ஆலையில் விபத்தில் சிக்கிய தொழிலாளியை அணுகுவதற்க்கும் இந்த அதிகார வர்க்கத்தினரிடம் பெரிய வேறுபாடு கிடையாது. இதனால் எல்லாம் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் கிடையாதே!

பாதுகாப்பு விதிமீறல்களால் யாருக்கு – என்ன பாதிப்பு?

ஸ்டெர்லைட்டிலும், IBPL, கோஸ்டல் எனர்ஜியான், டாக்கில் மட்டுமல்ல TTPS, NTPL ஆகிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலேயே படுகொலைகள் தொடர் நிகழ்வுகளாகி உள்ளன.

TTPS-ல் கார்த்திக் என்ற இளம் தொழிலாளியை, “மேலே ஏறி வெல்டிங் செய்” என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் மின்னிணைப்பை தந்து அதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகொலையானார். தவறான மின் சுற்று வந்தால் தானாகவே இணைப்பை துண்டிக்கும் கருவியை (டிரிப் ஸ்விட்ச்சை) பொருத்தாமல் தமிழ்நாடு மின்சார வாரியமே விதியை மீறியதன் விளைவே இப்படுகொலை.

ntpl
என்.டி.பி.எல்

NTPL-ல் சிம்னியில் தொங்கியபடி பெயிண்ட் அடிக்கவைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மேலிருந்து விழுந்து உடல் சிதறியுள்ளனர். இக்கொடுமைக்கு பயந்து குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக வேலையை விட்டு சென்றும் உள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் ஆகஸ்ட்டில் 100 அடி உயரத்துக்கு மேல் கோல் பங்க்கர் பைப்லைனில் வேலை செய்ய அதிகாரிகள் இளம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஏவியுள்ளனர். அதில் மூன்று பேர் நெருப்பால் தாக்கப்பட்டு தோல் கருகிய நிலையில் மயங்கி கீழே விழும்போது கீழுள்ள பைப்களில் மோதி ஆனந்த்தும் முத்துக்குமாரும் உயிரை விட மரிய எக்ஸிலின் ஜெகன் தீவிரசிகிச்சையில் சேர்க்கப்பட்டார். 25 வயதேயான முத்துக்குமாரின் மனைவியோ வயிற்றில் கருவை சுமந்தபடி தன் வாழ்வே பறிபோனதாக கதறுகிறார்.

பொதுத்துறை கட்டுமானத்தின் போது இறந்தும் கூட இதற்க்கு பொறுப்பேற்கவோ இழப்பீடு தரவோ அரசு தயாரில்லை. இரங்கல் தெரிவிக்கவோ, குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக்கூட அதிகாரிகள் வருவதில்லை. காண்ட்ராக்ட் முதலாளிகளின் ஏஜெண்ட்டுகள்தான் RDO, இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் பேரம் பேசி முடிக்கின்றனர். இப்படுகொலைக்கு இதுவரை எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
தொழிலாளர்களின்உடலை வாங்க மறுத்து போரடும் மக்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும்தான் ஆபத்தா?

இல்லை. தூத்துக்குடியில் இருக்கும் அனைவருக்குமே ஆபத்துதான். மணலிலிருந்து எவ்வளவு தாதுவை வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ள VV டைட்டானியமும் (கில்பெர்ன் கெமிக்கல்ஸ்), இறக்குமதியாகும் தாமிரத்தாதுவிலிருந்த எவ்வளவு தாதுவை வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ள ஸ்டெர்லைட்டும், நிலக்கரியை வ.உ.சி. துறைமுகம் வழியாக கொண்டுவந்து எரித்து எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் மின்சாரத்தை விற்க பவர்பிளாண்ட்களும் தாராள அனுமதியை பெற்றுள்ளன. இதுதான் தாராளமயம்.

நள்ளிரவில் வெளியேற்றும் வாயுக்களால் புறவழிச்சாலையில் வாகனத்தில்கூட செல்லமுடியவில்லை. “மூச்சு முட்டுகிறது; நெஞ்சு அடைக்கிறது” என்று லாரி ஓட்டுனர்கள் எச்சரிக்கை மணி அடித்தார்கள். இன்றோ மதுரை மீனாட்சி மிசனில் புற்றுநோய்க்கு சிகிச்சைபெறுபவர்களை “ என்ன, தூத்துக்குடியா?” என்று இயல்பாக கேட்கும் அளவு நிலைமை மோசமாகி விட்டுள்ளது. சென்னையில் அப்பல்லோவில் சிகிச்சை தரும் சிறந்த தோல் சிகிச்சை நிபுணர் தன்னிடம் தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த ஒருவரிடம் “நீங்க அலர்ஜின்னு இனி எந்த டிரீட்மென்ட் எடுத்தும் பலனில்ல. தூத்துக்குடி வேண்டாம். பேசாம ஊர மாத்திடுங்க. தமிழ்நாட்டுல கும்மிடிப்பூண்டிக்கு அடுத்தபடியா தூத்துக்குடிதான் வாழத்தகுதியில்லாத ஊர்” என்று அக்கறையுடன் சொல்லியுள்ளார். உப்பளங்களில் குவிக்கும் உப்பின்மீது சாம்பல் படிந்து கருப்பாகி விடுவதாகவும் இனி மேலும் புதிதாக அனல்மின் நிலையங்களை கட்டக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளும் இப்படி எதிர்த்துள்ளனர்.

காற்று மட்டும்தான் கெட்டுப்போனதா?

இல்லை! நீரும்தான் மாசுபட்டுப்போனது. “10 அடியில் நல்ல தண்ணீர் இருந்தது. தெருவே அதைத்தான் குடிச்சுது. இப்ப 40 அடியில் எண்ணை கலந்தாப்பலதா தண்ணீ கிடைக்கிது. அதை கக்கூஸ்க்கு மட்டும்தான் ஊத்தறோம்” என்றார் காமராஜ் நகரிலுள்ள ராமர். ஸ்டெர்லைட்டுக்கு கிழக்கு பகுதியில் நிலத்தடி நீர் பயனடுத்த தகுதியற்றதாகி விட்டது.

கம்பெனிகள் பெருகிவிட்ட 10 ஆண்டுகளில் அதே வேகத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக புலம்புகின்றனர் பொதுமக்கள். “நான் வெவரம் தெரிஞ்சதுலிருந்து எப்பவும் கடலில் குளிப்பேன். ஆனா இப்ப மீன் பிடிக்கறப்ப, படகை ஹார்பர்ல வச்சு வேலை செய்யறப்ப தண்ணில எறங்கறோம். அப்ப ஒடம்பெல்லாம் அரிக்குது. எங்க பசங்க கடல்ல வெளயாடறதேயில்லை. கொஞ்ச நேரம் உள்ள நிக்கற நமக்கே ஒத்துக்கல்லியே, அப்ப கடல்லயே கெடக்கற மீன் மட்டும் இங்க இருக்குமா?” என்றார் 50 வயதை நெருங்கும் மீனவர்.

ஆறுமுகனேரி, சாகுபுரத்தில் உள்ள தாரங்தாரா கெமிக்கல் ஒர்க்க்ஸ் (DCW) வெளியேற்றும் அமிலக்கழிவுகள் நேரடியாக கடலில் பாய்ச்சப்படுகிறது. இதனால் புன்னக்காயல் வட்டார கடலோரங்களில் கடல்வாழ் உயிரினச் சமநிலை கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. இதை எதிர்க்கும் மீனவர்களை ஒடுக்க ஆய்தம் தாங்கிய குண்டர் படையின் ரோந்துகள் இங்கே சகஜமான ஒன்று.

நிலத்தில் என்ன நடக்கிறது?

மகாராஷ்டிர மக்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஜெயலலிதாவால் 1994-ல் நம் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டது. 428 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்து அடிக்கல் நாட்டியவரும் அம்மாதான்.

லண்டன் வாழ் இந்திய மார்வாடி அனில் சந்தீப் அகர்வாலுக்கு நம்மீது என்ன அக்கரை? நமக்கு வேலை தரவா இக்கம்பெனியை தொடங்கினான்? கொள்ளை லாபத்துக்காக தாமிரம், கந்தக அமிலத்தை போன்றவற்றை உற்பத்திசெய்துவிட்டு பல லட்சம் கிலோ ஆர்சனிக்கழிவுகளையும், கதிர்வீச்சுத்தன்மையுடைய பாஸ்போ ஜிப்சத்தையும் நிலத்தில் கொட்டுகிறான்.

கந்தக டை ஆக்சைடு வாயுக்கசிவால் பசுமைத் தீர்ப்பாயத்தால் தடைசெய்யப்பட்ட ஸ்டெர்லைட்டின் பெயர்தான் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உட்பட நகரெங்கும் பிரம்மாண்டமாக உள்ளது.

தாமிர உருக்காலையின் கழிவுகள் ரயில்வே பிளாட்பாரத்தில் (மேலூர்) ட்ராக்கின் அருகில் கொட்டப்பட்டு சமன்செய்யப்பட்டுள்ளது. இது பயணிகளின் காலையும் பதம்பார்த்துள்ளது. தாமிரக் கழிவுகள் ஊரைச்சுற்றிலும் கொட்டப்படுவது மட்டுமல்ல, கம்பெனிக்குள்ளும் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டின் திரவுக்கழிவுகளை கடலில் விட மீனவர்கள் எதிர்த்ததால் அவை பூமிக்குள் செலுத்தப்படுகின்றன. ஐ.நா.வால் பாதுகாக்க வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தின் அருகில் இயங்கும் ஆலையின் இக்கழிவுகள் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

ஆலையில் நடக்கும் விபத்துகளில் நம்மை கொல்வது மட்டுமில்லாமல் நம் குடும்பத்தையும் நோயாளியாக்கிவிட்டு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் ஏற்பாடும் செய்கிறது ஸ்டெர்லைட். கணவனை காண்ட்ராக்ட்டில் அற்பக் கூலிக்கு பிழியும் இதே கம்பெனிதான் ஆயிரக்கணக்கில் பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அவர்களையும் கடன் வலையில் வீழ்த்துகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பருவ மழையை விரட்டி விவசாயத்தை அழித்துவரும் அதே வேளையில் விவசாயக்கூலிகளின் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் தந்து கிராமப்புறங்களில் தமது கார்ப்பரேட் பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறது.

தமது கம்பெனியில் கசிந்த வாயுவால் அனைத்து மரங்களும் இலைகளை உதிர்த்து மொட்டையாக நின்ற கொடூரத்தை லயன்ஸ் டவுன் மீனவ பெண்கள் விவரிக்க, ஸ்டெர்லைட்டோ நகரைச்சுற்றிலும் பூங்காக்களின் பராமரிப்பை செய்ய அனுமதிக்கிறார் மாநகராட்சி ஆணையாளர். அவ்வளவு ஏன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தையே ஸ்டெர்லைட்தான் பராமரிக்கிறது.

நாம் எதை முக்கியமாக பார்க்க வேண்டும்?

தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள். அதாவது தொழிலாளிகளுக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள். அதாவது தமது சொந்த பரதவ குல மக்களுக்கு எதிராகவே முதலாளிகள் என்று வர்க்கமாக ஒன்றிணைகிறார்கள்.

பவர் பிளாண்ட் தொடங்கி நடத்திவரும் IBPL ரெட்டி, கோஸ்டல் எனெர்ஜியானின் முஸ்லீம் முதலாளி, VV மினரல்ஸ் நாடார் வைகுண்டராஜன், நிலா சீ புட்ஸின் கிறிஸ்தவ முதலாளி, அரசு பவர்பிளாண்ட்களை இயக்கும் தலைமைப்பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் நமக்கு எதிராக – தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஒரே அணிவரிசையில் நிற்கிறார்கள். இவர்கள் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து நம்மைச் சுரண்டவே ஒன்றிணைகிறார்கள்.

பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டின் உற்பத்தியை தடை செய்தால் உச்சநீதிமன்றமோ ஆசீர்வதித்து ஆலையை திறக்க அனுமதிக்கிறது. தாதுமணல் கொள்ளையனான வைகுண்டராஜனுக்கு மத்திய அரசால் சிறந்த ஏற்றுமதியாளர் விருது தரப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா இரண்டில் எது ஆண்டாலும் நம்மை ஒடுக்கும் சட்டங்களை மட்டும் தவறாமல் போட்டுவருகிறது. மாநிலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என யார் ஆட்சி நடந்தாலும் நம்மீதான அடக்குமுறை மட்டும் குறைவதே இல்லை. இவர்களுடன் கூட்டணி சேரும் ஓட்டுப்பொறுக்கி கட்சியினர் நாம் தொடர்ந்து கொல்லப்படும்போது திரும்பியே பார்ப்பதில்லை. ஏனெனில் இக்கட்சியினரும், இவர்களின் தொழிற்சங்கத் தலைமையும் முதலளிகளின் பணப்பெட்டிக்குமுன் மகுடிக்கு ஆடும் பாம்பாகி விட்டவர்கள்தான். நம் நாடு மறுகாலனியாகி வருவதை மறைத்து நாடகமாடவே தேர்தல்களும் நடத்தப்படுகிறது.

உழைக்கும் மக்கள் எதை செய்யவேண்டும்?

தூத்துக்குடி பகுதி ஆலைச்சாவுகளைப் பொறுத்த வரையில் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சார்பாக RDO, இன்ஸ்பெக்டர் போன்றோரும், பாதிக்கப்பட்ட தொழிலாளி சார்பாக சங்கங்களும் அமைப்புகளும் சில ஆயிரம் அல்லது லட்சம் வாங்கித்தருகிறோம் என்று கட்டப்பஞ்சாயத்து பேசி மொத்தத்தையும் முடித்து விடுகின்றனர். உயிர்போகக் காரணமான ஆலையின் அதிகாரிகளையும், பாதுகாக்கத்தவறிய அரசின் தொழிலாளர் ஆய்வாளரையும், தொடர்ந்து படுகொலை நடந்தாலும் திரும்பியே பார்க்காத மாவட்ட ஆட்சியரையும் குற்றத்துக்கு பொறுப்பாக்காத இந்த சமரசம் எப்படி படுகொலைகளை (விபத்துகளை) தடுக்கும்? மொத்தத்தில் இந்த கட்டமைப்பு நம்மை காக்க வக்கற்றது என்பதைத்தான் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளது.

நம்மை ஒடுகிவரும், சுரண்டி வரும் முதலாளிகளுக்கு எதிராக, இந்த சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக, நம்மை ஆளத்தகுதி இழந்துவிட்டுள்ள இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கமாக அணி திரள வேண்டும். ஒடுக்கப்படும் அனைத்து பிரிவினருடனும் சாதி, மத, மொழி, இன வேறுபடுகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும். தொழில் ரீதியாக உள்ள பல்வேறு வேற்றுமைகளை புறந்தள்ளி அமைப்பாக வேண்டும். நாட்டையே சீரழிக்கும் முதலாளிகளிடம் இனியும் கெஞ்சிக்கொண்டிரமல் நம் வியர்வையால் வளர்த்த ஆலையின்மீதான நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். நாமே ஆலையின் உரிமையை கைப்பற்றுவோம்.

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி