privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபகத்சிங் பார்வை

பகத்சிங் பார்வை

-

பகத்சிங் பார்வை ( செப்டம்பர் 28 – பகத்சிங் பிறந்தநாள் )

ங்கிருந்தோ.. ஒரு நறுமணம்..
மல்லிகையோ?
தோன்றிய காலந்தொட்டு
தொடர்ந்து பேசியதையே பேசும்
மல்லிகையின் வாசம்
இல்லை அது!

10-bhagat-singhமுல்லையோ?…
பிடிக்குள் அகப்பட்டு
நொடிக்குள் கட்டுப்படும்
அந்தத் தன்மையும்
இல்லை இது…

முடிந்த வரை போராடி
காற்றெதிர் வாதாடி
முகம் வாடிப் போகும்
செம்பருத்தி வாசமும்
இல்லை அது..

கண்கவர் சாமந்தியோ..
கர்வமுள்ள ரோஜாவோ
மண்கவர் வேப்பம் பூவோ
மலைச்சரிவின் வேங்கையோ
கொன்றையோ
குவளையோ…
இல்லை .. இல்லை…

bhagath-singh-widgetஎந்தப் பூவிலும் அது இல்லை…
மனித உணர்ச்சியை
சக மனிதனுக்காக
மலர் விக்கும் அது
மாவீரன் பகத்சிங்கின்
புன் சிரிப்பு!

புரட்சி ஒன்றே
நோக்கமென
மலர்ச்சி கொண்ட
அவன் மனதின் பூரிப்பு!

“தற்போதைய அரசாங்கத்தின் சட்டங்கள்
எமது மக்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது,
அறநெறியின் படி எமது மக்களைக் கட்டுப்படுத்தும்
அதிகாரம் அவற்றிற்கு கிடையாது…” என
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
அறிவித்த பகத்சிங் இன்று இருந்தால்
” ஆள அருகதையற்றுப் போனது அரசு கட்டமைப்பு
மக்கள் அதிகாரத்தை கையில் எடு!”
என எழும் மக்களின்
வேட்கை பார்த்து
களத்தில் கை கோர்ப்பான்!

bhagat-singh“மக்களிடமிருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத வரையிலும்
எந்த ஒரு தனிநபருக்கோ, அரசாங்கத்துகோ அதிகாரம் செலுத்த
எந்த உரிமையும் கிடையாது. நீதியை அடிப்படையாகக்
கொண்டோ அல்லது சட்டத்தின் அடிப்படையிலோ இந்த
அரசாங்கம் நிறுவப்பட்டதாக நாங்கள் அங்கிகரிக்காததால்,
அதன் மூலம் அமைக்கப்பட்ட இந்த நீதி மன்றத்தின்
நடவடிக்கைகளிலும் நாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை…
சட்டம் ஒழுங்கு என்பது மனிதர்களுக்குத்தானே ஒழிய, சட்டம்
ஒழுங்கிற்காக மனிதர்கள் கிடையது…” என்று
வெள்ளை நீதிமன்றத்தை
வெளுத்த பகத்சிங்
இன்று இருந்தால்

கொள்ளை நீதிமன்றத்திற்கெதிராக
போராடும் வழக்குரைஞர்களின்
நீதியின் குரலை நிலைநாட்ட
லாகூர் சதி வழக்கோடு
சென்னை சதி வழக்கையும்
சேர்த்தே தோலுரிப்பார்!

bhagat-singh-in-jail“ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பின் பலனை
அனுபவிக்கும் பிரிக்க முடியாத உரிமையைப் பெற்றுள்ளான்…
இந்த அடிப்படை உரிமையை, நீதியை பறிக்கும், மறுக்கம்
அரசாங்கத்தை அழித்தொழிப்பது அம்மக்களின் உரிமை, கடமையாகும்..”
என அறுதியிட்டு கூறிய
பகத்சிங் மட்டும்
இன்று இருந்தால்,

சித்ரவதைக்குள்ளான
வாழ்க்கை நிலையிலும்
முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகப்
போராடும்
சி.ஆர்.ஜ. பம்பு தொழிலாளர்களின்
விடாப்பிடியில்
விசையாய் கலப்பான்!

bhagat-singh-sukhdev-rajguruசக்கையாய் பிழியப்பட்டு
தூக்கி எறியப்படும்
ஐ.டி. தொழிலாளி கையில்
திரும்பி அடித்து
உரிமையை நிலைநாட்டும்
தெம்பாய் பகத்சிங் இருப்பான்!

“மதுவை விலக்க முடியாது
எதிர்ப்பவர்கள்
மது குடிப்போரை திருத்துங்கள்!” என்ற
நத்தம் விசுவநாதனின்
ஆல்கஹால் அடக்குமுறையை பார்த்திருந்தால்
சத்தம் எழுப்பிய குண்டை
பகத்சிங் பாராளுமன்றத்திலா வீசியிருப்பார்?

06-speech-5-bhagat-singh“சுற்றுச்சுழலை மாற்றுவதில் நாம் பெருமளவிற்கு
துணை புரிந்துள்ளோம்! நாம் நமது காலத்தினுடைய
தேவையின் விளைவுகள்..!” என
புரட்சி நடவடிக்கைகளுக்கு
பொருள் சொன்ன பகத்சிங்,
டாஸ்மாக் கடையை
அடித்து நொறுக்கிய
ஆசாத்துகளை பார்த்திருந்தால்
கல்லாய் இறுகியிருப்பான்
அவர்கள் கைகளில்…
மக்களுக்கான பார்வைகளாய்
இளகியிருப்பான்
அவர்கள் கண்களில்!

” தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படும் உண்மையான
தொழிலாளிகளே விழித்தெழுங்கள்! அதிகாரவர்க்கத்திடம்
ஜாக்கிரதையாக இருங்கள், அது உங்களுக்கு ஒருநாளும்
உதவி செய்யாது! இந்த சுதந்தரமற்ற வறுமை நிலைக்கு
மூலகாரணமே இந்த அதிகார வர்க்கமும், முதலாளித்துவமே!
அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்…”
என்று எச்சரித்த
பகத்சிங் இன்று இருந்தால்,
தீயிலிடப்பட்ட சேச சமுத்திரமே
திரும்பவும்
சாதியமைப்பை கட்டிக்காக்கும்
அரசிடமே மனு எதற்கு?
அதிகாரத்தை கையில் எடுத்து
ஆளும் வர்க்க `மனுவை’ நொறுக்கு!
” நிலவும் சமுக அமைப்புக்கு எதிராக
புரட்சி செய்யுங்கள்”! என
விடுதலையின் திசைவழிக்கு
அமைப்பாக்குவார்!

`அனைத்து மொழிகளுக்கும்
தாய் சமஸ்கிருதம்
சமஸ்கிருத வாரம்’ என்று
அனைவரின் தலையிலும் கட்டுவதை
பார்த்தால்,
“அனைத்து சமஸ்கிருத இலக்கியங்களும்
இந்து சமுதாயத்தை புத்தாக்கம் செய்வதில்
தோல்வியடைந்து விட்டன…” என்று
பகத்சிங்
தனது பழையசெருப்பை
கழட்டியிருப்பார்!

பகத்சிங் இன்றிருந்தால்,
” எனக்கும் வாழ்வில் அனுபவிக்க ஆசை உண்டு.
ஆனால் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும்
துறந்துவிடவும் முடியும், அதுதான் உண்மையான தியாகம்!”
என்பதை
சுகதேவுடன் மட்டுமா பகிர்ந்திருப்பார்,
சுயநலச் சிறைகளில்
அடைபட தடுமாறும்
அனைவரிடம் பேசியிருப்பார்.

அக்குவேறு
ஆணிவேராய்
சமூகநிலைமைகளை
அலசிஆராய்ந்துவிட்டு
அதை மாற்றுவதற்கான
நடைமுறைகளுக்கு
சமூகம் தன்னை
கோருவதற்கு மட்டும்
` இக்கு’ வைத்து விட்டு
நகரும் மனங்களுக்கு,
“அனைத்து புரட்சிகர விசயங்கள் குறித்தும்
எவ்வித தங்கு தடையுமின்றி
வாய்நிறையவே பேசுகிறோம். ஆனால் நடை முறையில்
எடுத்த எடுப்பிலேயே அஞ்சி நடுங்கத்தொடங்கி விடுகிறோம்.
இந்தப் போக்கை விட்டொழிக்க வேண்டும்!”
என்று பகத்சிங் சொல்வது
படிக்க மட்டுமா?
பரிசீலிக்க வேண்டாமா?

சிந்திப்பது என் வேலை
செய்வது அவன் வேலை – என்று
பந்தயம் கட்டும்
அறிஞர்களைப் பார்த்தால்
பகத்சிங்
மீண்டும் சொல்லலாம்,
“புரட்சியின் பொறுப்புகளை அடுத்தவர் தோள் மீது
சுமத்துவது முற்றிலும் நேர்மையற்றது!”. என்று!

இருபத்தி நான்கே வயதில்
சிந்தனை, நடைமுறை
இரண்டுக்கும் சாட்சியாய்
வாழ்ந்து காட்டி
கம்யூனிசமே
மனிதகுல விடுதலை என
வழி காட்டி
கழுத்தை நெருக்கும்
தூக்குக் கயிறு
சமீபிக்கும் தருணத்திலும்
“எங்கள் மகத்தான இலட்சியங்களை ஒப்பிடுகையில்
நாங்கள் செய்த எந்த தியாகமும் பெரிதல்ல… புரட்சியின்
வருகைக்காக காத்திருக்கிறோம் !”
என்ற பகத்சிங்கின் பார்வை
நம்மீது விழுகிறது
என்ன செய்யப் போகிறோம்?

– துரை.சண்முகம்

( இரட்டை மேற்கோளிட்டவைகள் தோழர் பகத்சிங்கின் கருத்துக்கள் )