privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக் விற்பனை இலக்கு ! மழையில் மக்களை பாதுகாக்க வக்கில்லை !

டாஸ்மாக் விற்பனை இலக்கு ! மழையில் மக்களை பாதுகாக்க வக்கில்லை !

-

cuddalore 3மழை வெள்ளத்திலிருந்து தமிழகத்தில் 60 பேர் பலி! வீடு, துணி-மணிகள், ஆடு-மாடுகளை இழந்து பரிதவிக்கும் மக்கள் மீது தடியடி!

  • ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு, குடி கெடுக்கும் டாஸ்மாக்கின் தீபாவளி விற்பனையை ரூ.401 கோடிக்கு உயர்த்தியது ஜெயா அரசு!
  • இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வக்கற்று, ஆளத் தகுதியிழந்து நிற்கிறது அரசு கட்டமைப்பு! நிவாரணம் கோரும் மக்களை அடித்து நசுக்குகிறது!
  • புனர்வாழ்வு, மராமத்துப் பணிகளையும் மக்கள் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் செய்து முடிப்போம்!

cuddalore-flood-relief-ppஅன்புடையீர்!

தமிழகத்தில் பெய்த கனமழையால் எல்லா மாவட்டங்களும் பெரும் வெள்ளப் பெருக்கில் தத்தளிக்கின்றன. குறிப்பாக, கடலூர், சென்னை, திருவள்ளூர், தருமபுரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே 60-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலி வாங்கியுள்ளன. மேலும், பலர் காணவில்லை என்ற துயரம் நீடிக்கிறது. 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமடைந்துள்ளன. முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்டு இலட்சக்கணக்கானோருக்கு உணவு, மருத்துவம், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் சொல்லொண்ணா துயரத்தில் வாடி வருகின்றனர்.
எங்கும் வெள்ளம் வடிந்தபாடில்லை. சாலைகள் உடைந்து ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கால்நடைகள் உணவு இன்றி இறக்கும் அபாய நிலைமையில் உள்ளன.

சுமார் 1.62 லட்சம் ஏக்கரில் விளைந்த பயிர்கள் கடலூர் மாவட்டத்தில் மட்டும் அழிந்துள்ளது. இதேபோல பிற மாவட்டங்களில் விளைந்த நெற்பயிர்கள் அழிந்துள்ளன. வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற பல பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால், விவசாயிகள் நடைபிணமாக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதிப்பினால் துண்டிக்கப்பட்ட பல கிராமங்களில் மின்சாரமும் இல்லாமல் இருண்ட மயான பூமிகள் போல் காட்சியளிக்கின்றன. பல கிராமங்களில் தொற்று நோய் பரவிவருகிறது.
வெள்ளத்தால் பாதித்த எந்த மக்களுக்கும் உடனடியாக நிவாரணங்கள்சென்று சேரவில்லை. நான்கு நாட்களாக உணவு இன்றி தவிக்கும் மக்கள், அதிகாரிகள் வந்து பார்க்காததால் வெகுண்டெழுந்த மக்கள்  சாலை மறியலில் இறங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. அம்மக்களை, போலீசைக் கொண்டு தடியடி நடத்தி விரட்டி வருகிறது ஜெயா அரசு. பெண்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என பார்க்காமல் மிருகத்தனமாக தாக்கி வருகிறது.

ஏற்கனவே தானே புயல் தாக்கிய இந்த மாவட்டத்தில், அதன் சுவடுகள் மறைவதற்கு முன்பாக மீண்டும் வந்த, இந்த கனமழை மேலும் மக்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், நிவாரணம் வழங்குவதாக கூறி நாடகமாடி வருகிறது ஜெயா அரசு. போர்க்கால அடிப்படையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை.

அதேசமயம், கொடநாட்டில் உல்லாசமாக ஓய்வெடுக்கும் ஒய்யார இராணி ஜெயாவோ, அடுத்து யார் மீது வழக்கு தொடுக்கலாம் என சிந்தித்து செயல்படுகிறார். பிணத்திலும் பிரபலம் தேடும் வக்கிரம் பிடித்தவராக உள்ளார். கண் துடைப்புக்கு மேற்கொள்ளும் சில அற்ப விசயங்களையும் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறார். சொத்து குவிப்பது எப்படி, அதிகாரிகளை இடமாற்றம் செய்து அடுத்தத் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என சதித்தனமாக சிந்தித்து செயல்பட்டு வருகிறார்.

மக்களின் குடி கெடுக்கும் டாஸ்மாக்கின் தீபாவளி விற்பனையை உயர்த்த ஒரு மாதம் முன்னதாகவே திட்டமிட்டு ரூ.401 கோடியை கொள்ளையடித்துள்ளது ஜெயா அரசு. ஆனால், இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனாலேயே தமிழகத்தில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரையில் உள்ள ஏரி உடைந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. கடலூர் மாவட்டமே பிணக்காடாக நீர் வடிவதற்கே வாய்ப்பின்றி உள்ளது.

தனியார்மயம் தாராளமயம் என்ற நாசகர கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், அரசு மக்களின் நலவாழ்வை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிட்டது. காசு இருப்பவன் மட்டுமே வாழ வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. அடிப்படை மராமத்துப் பணிகள் உள்ளிட்ட எல்லா மக்கள் சேவைகளையும் நிறுத்திக் கொண்டுவிட்டது. அன்னிய செலவாணி என்ற பணக்கார நாடுகளின் பிச்சைக்காசுக்காக எல்லா துறைகளையும் சேவைத்துறைகளாக்கி மக்களை சுரண்டுகிறது.
இந்த வகையில் மக்களை ஆளத் தகுதியிழந்து விட்டது. அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதன் மூலம் மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகவும் இந்த அரசு மாறிவிட்டது. குறைந்த பட்ச நிவாரணம், மராமத்துப் பணிகளைக் கூட இனி இந்த அரசிடம் கேட்டுப் பெற முடியாது என்பது இந்த கனமழையும் மக்கள் மீதான தடியடிகளும் நமக்கு உணர்த்துகின்றன.

cuddalore-flood-relief-pp-posterஅடிமையாக மட்டுமே வாழத்தக்கவர்கள் மக்கள் என்று இந்த அரசும் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கங்களும் கொக்கரிக்கின்றன. மற்றொருபுறம், இந்த மழை வெள்ளத்திற்கு பின்னால், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற கனம வளக்கொள்ளைகளும் சுற்றுச்சூழல் சீரழிப்புகளும் உள்ளன. இவற்றையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது.

ஆகையால், இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்கவும் அடிப்படை மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், புனர்வாழ்வு அளிக்கவும் ஒரே தீர்வுதான் உள்ளது. மக்களே இவற்றை நிர்வகிக்கும் வகையிலான கமிட்டிகளை அமைத்து, மக்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கி, நாமே நாட்டையும் வீட்டையும் நிர்வகிப்பதுதான். அந்த திசையில் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மக்கள் அதிகாரம்
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகள்
தொடர்புக்கு: 81485 73417 – 80152 69381

பென்னாகரத்தில் பேருந்து பிரச்சாரம்

மழை வெள்ளத்திற்கு தமிழகத்தில் 60 பேர் பலி! வீடு, துணி-மணிகள், ஆடு, மாடுகளை இழந்து பரிதவிக்கும் மக்கள் மீது தடியடி!

floods-govt-apathy-pennagaram-propaganda-1என்ற தலைப்பில் 13-11-2015 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை பத்திரிகை செய்தியை காண்பித்து பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளிலும், மக்கள் கூடியிருக்கும் இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

“கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையில்லாமலும் தவிக்கின்றனர். அங்கு முன்கூட்டியே எந்த மராமத்து பணிகளையும் செய்யவில்லை. கடலூரில் போராடிய பொதுமக்களை டி.எஸ்.பி சுந்தரவடிவேல் தலைமையிலான போலீஸ் கண்மூடித்தனமாக அடித்து மண்டையை பிளக்கிறது.

டாஸ்மாக் விற்பனைக்கு முன்கூட்டியே திட்டம் போட்டு இலாபம் ஈட்டும் இந்த அரசு குளம், ஏரிகளை தூர்வாரிவிட்டதாகக் கூறி 600 கோடி செலவு செய்ததாக சட்டமன்றத்திலேயே கூறியது எப்பேர்ப்பட்ட பொய்.

டாஸ்மாக்கை மூடு என்று பாடல் பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவனை தேசத் துரோக வழக்கில் கைது செய்துள்ளது. இனியும் இந்த அரசை நம்பி பலனில்லை. ஆகவே, ஆளும் அருகதை இழந்த இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கி எறிய மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து போராட வேண்டும்” என்று கூறி தோழர்கள் பிரசுரம் கொடுத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் ]