privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்பெரியாரையும், பிள்ளையாரையும் இணைத்த கோவை DYFI மாநாடு

பெரியாரையும், பிள்ளையாரையும் இணைத்த கோவை DYFI மாநாடு

-

கோவை டைஃபி மாநாடு
சே குவேரா, பகத்சிங்கிற்கு இணையாக…

ந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாடு, பொதுக்கூட்டம், இலட்சிய இளைஞர் பேரணி என கோவையில் ஏகத்துக்கும் விளம்பரம் செய்திருந்தார்கள். கடந்த ஞாயிறு 22-11-2015 அன்று மாலை துடியலூருக்கு சென்றிருந்தோம். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்ற வரிகளுடன் டீ ஷர்ட்டுகளும், சிவப்பு நட்சத்திர பனியன்களுமாய் மும்முரமாய் மேடையை அமைத்துக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் பிளக்ஸ் போர்டுகளை வைத்து நிரப்பியிருந்தார்கள். அனைத்திலும் பகுதி பொறுப்பாளர்களின் புகைப்படங்களை போட்டு நிரப்பியிருந்தார்கள்.

அதிலும் ஒரு பிளக்ஸில் பகத்சிங், சேகு வேரா புகைப்படங்களுக்கு நடுவில் ஒருவரின் புகைப்படம் பளிச்சிட்டது. யார் இந்த புரட்சியாளர், உலக அளவில் இவரது படம் பிரபலமாயிருக்கும் போது நமக்கு ஏன் தெரியவில்லை என்று குற்ற உணர்வு குடைந்தெடுத்தது.

பிறகுதான் நினைவுக்கு வந்தது. விநாயகர் சதுர்த்தியின் போது வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் வைத்து செங்கொடி இயக்கத்துக்குள் ஒரு புரட்சியை புதிய திருப்பத்தை படைத்தவர்கள் இதே கோவையை சேர்ந்த டைஃபியினரே. விரைவில் தல, இளைய தளபதி படங்களுக்கும் வாழ்த்துக்களை எதிர்பார்க்கலாம். வெறும் புரட்சியோடு ஸ்பெசல் புதுமையை கலந்தவர்களாயிற்றே!

அதற்கு ஆதராமாக அங்கு இசைக்கப்பட்ட பாடல்களை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் ம.க.இ.க வின் பாடல்களை மொத்தமாக காப்பியடித்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது யாரோ சினிமாக் கவிஞரை பிடித்து விட்டார்கள் போலும்.

“நடுங்குனா நாயும் கூட நம்மை மிரட்டும்.
துணிந்தால் கோழி கூட கழுகை விரட்டும்.
அடங்கிப் போனா சிங்கம் கூட அடுப்பில் கொதிக்கும்
திமிறினா ஆடு கூட காட்டை ஜெயிக்கும்“

என்பன போன்ற கருத்தாழமிக்க அரசியல் பொருட்செறிவுள்ள பாடல்களை கொண்டு ஏரியாவாசிகளை மிரட்டிக் கொண்டிருந்தனர். என்ன இருந்தாலும் ” சென்னையை தாண்டுனா காட்பாடி, காட்பாடியைத் தாண்டுனா டெட்பாடி” என்று ரஜினி பன்ஞ்ச் மண்ணில் வாழ்பவர்களாயிற்றே. அடுத்து இலட்சிய இளைஞர்கள் பேரணி துவங்கவிருக்கும் வடமதுரைக்கு சென்றோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போனவுடன் சந்தேகமாகிவிட்டது. அவசரப்பட்டு வந்துட்டாமோ ஒருத்தரையும் காணோமே என்று. பிறகு சிறிது சிறிதாக ஆட்கள் சேரத் துவங்கினர். ஜமாப் மேளம் அடிக்க தாழ்த்தப்பட்ட இளைஞர் குழு ஒன்றை கூட்டி வந்திருந்தனர். பொள்ளாச்சி, ஆனைமலை, அன்னூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் முழக்கமிட்டவாறே இணைந்தனர். அவர்கள் அடிக்கத் துவங்க குத்தாட்டத்துடன் துவங்கியது ‘இலட்சிய’ இளைஞர் பேரணி. வாயில் பான்பராக்கை போட்டு குதப்பி துப்பியவாறு நடனத்தை துவக்கிய ‘தோழர்’ நேரம் செல்ல செல்ல பரவச நிலைக்கு சென்ற சாமியார் போல இஷ்டப்படி குதிக்கத் துவங்கினார். முன்னாள் மூத்தவர்கள் சிலர் வந்து பேரணியை துவக்குமாறு கூறவே, அடுத்து உடனே பெரியார், அம்பேத்கர், அப்துல் கலாம், நேதாஜி என பல பதாகைகளை எடுத்துப் பிடித்து துவக்கினர்.

இலட்சிய இளைஞர்கள் மிக மெதுவாக நடந்து ஒரு வழியாக பொதுக்கூட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வரும் முன்னரே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் லட்சியப் பயணம் என ஆர்கெஸ்ட்ரா பாணியில் ஒருவர் மேடையில் அறிவித்துக் கொண்டிருந்தார். 260 நாற்காலிகளில் எப்படி ஆயிரம் பேர் உட்கார்வது என நாம் யோசித்துக் கொண்டிருந்த போது பொதுக்கூட்டம் துவங்கியது. புதிய நிர்வாகிகளை மேடைக்கு அழைத்து அமர வைத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தலைமையுரை சிறப்புரை என அனைத்து உரைகளிலும் டைஃபி யின் சாதனைகளாக சொல்வதை இரண்டே வரிகளில் சுருக்கிக் கூறுவதனால்

“நாங்கள் மதுவுக்கெதிராக 4000 கிலோமீட்டர் நடைப்பயணம் போனோம்.”

“அதிக முறை ரத்த தானம் செய்ததற்காக கலெக்டர் கையால் பரிசு வாங்கியுள்ளோம்”

“மக்களுக்காக போராடுகிறோம்.”

வரும் பேச்சாளர்கள் அனைவரும் நடப்பு அரசியலை பேசுவது, ஜெயலலிதாவை மோடியை ஊறுகாய் போல விமர்சிப்பது பிறகு மேற்கூறிய வார்த்தைகளை கூறுவது என்றே இருந்தது. துண்டறிக்கையிலும் கூட இவற்றையே அச்சிட்டுருந்தார்கள்.

அவர்கள் தொண்டை நரம்பு புடைக்க கோஷம் எழுப்பிய “எல்லோருக்கும் வேலை வேண்டும்” “கல்வி வேண்டும்” என்பதற்காக என்ன போராட்டம் எப்படி செய்தார்கள் என்று சொல்லவில்லை. அதற்குள் வருஷமும் முடிந்து மாநாடும் நடத்தி அடுத்த ரவுண்டுக்கு ஆட்களை தயார் செய்தும் ஆயிற்று.

பெரியார்
விநாயகர் சதுர்த்திக்கும் பிளக்ஸ் வைப்பது, பெரியார் புகைப்படத்தையும் பிடித்துக் கொள்வது.

கூட்டம் துவங்கிய ஒரு மணி நேரத்துக்குள் மழை வேறு துவங்க, அனைவரும் அருகிலிருந்த பேக்கரிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். நடக்கவிருந்ததாக துண்டறிக்கையில் போட்டிருந்த கலை நிகழ்ச்சி எதுவும் இன்றி அவசர அவசரமாக முடித்து விட்டனர். இருந்த 150 பேரில் பெரும்பகுதி காலியாயிற்று. காங்கிரஸை, மோடியை விமர்சித்தவர்கள் காங்கிரசுடன் சி‌.பி‌.எம் கூட்டணி வைத்தது பற்றி அறிந்திருக்கவில்லை போலும். விநாயகர் சதுர்த்திக்கும் பிளக்ஸ் வைப்பது, பெரியார் புகைப்படத்தையும் பிடித்துக் கொள்வது, அவ்வப்போது விவேகானந்தரையும் தொட்டுக் கொள்வது. என்னதான் சார் உங்க கொள்கை என மக்கள் கேட்காத குறை. மாட்டுக்கறி பிரியாணியையும், அக்கார அடிசலையும் கலந்து கட்டி அடித்தால் வரும் குழப்பமே அங்கே தலை விரித்தாடியது.

ரூ.80,000 செலவு செய்து இந்த மாநாடு போட்டு என்ன பிரயோசனம் என்று தெரியவில்லை. பொதுக்கூட்டத்தில் நம் அருகே அமர்ந்திருந்த டைஃபியின் முன்னாள் உறுப்பினரான ஒரு பெரியவர் இளம் நிர்வாகி ஒருவரிடம் கூறிக் கொண்டிருந்தார். “நமக்கு முதலில் ஸ்தாபன பலம் வேண்டும். அப்பதான் ஏதாவது பிரச்சினைன்னா நிக்க முடியும். அடுத்து பொருளாதார பலம் வேண்டும் அது இல்லாட்டி எதுவும் முடியாது” என்று. இத்துணை வருடங்களாக இருக்கும் அந்த பெரியவருக்கு இவையிரண்டையும் தாண்டி அரசியல் பலம் தேவை என்பது தெரியவில்லை.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை