privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !

விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !

-

நாத்து விட்டு 40 நாளு முடியப்போகுது இன்னும் சேரடிக்காம பொட்டு வச்சுருக்கேன். கேட்ட எடத்துல பணம் கெடைக்கல. நாத்து பூத்துரும் போலருக்கு எப்படி நட்டு கரையேற போறேன்னு தெரியல”

புலம்பிக் கொண்டிருந்த பூங்கோதையிடம் “ரெண்டே நாள்ல பணம் ஏற்பாடு செய்றேன் ஆனா வட்டி 4 பைசா கேப்பாங்க உன்னால் முடியுமா” என்றாள் தேவகி.

பலகார மாஸ்டரான தன் பையனுக்கு ஆடி(மாதம்) போனா வேலைக்கு ஆடர் வரும் கடனை திருப்பி தரலாம் என்ற தைரியத்தில் ஒத்துக் கொண்டார் பூங்கோதை.

தேவகிக்கு இதில் கொழுத்த லாபம் உண்டு. வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தன் நகைகளை நூற்றுக்கு 70 பைசா வட்டிக்கு அடகு வைத்து, 4 பைசா வட்டிக்கு 20,000 பணத்தை பூங்கோதைக்கு கொடுத்தாள் தேவகி. இந்த நிகழ்வு எங்கள் ஊர்பக்கம் நடக்கும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு ஒரு வகை மாதிரி.

வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைக்க அது ஒன்றும் வட்டிக்கடை சேட்டு அல்ல – அங்கே நகைக்கடன் விவசாயிகள் பயிர் வைப்பதற்கே தரப்படும், அதாவது விதிப்படி. ஆனால், எதார்த்தம் வேறு. விவசாய பயிர் கடன் செயல்படும் லட்சணத்திற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா? குறுகிய கால பயிர் கடனுக்கு வட்டியில்லா சிறப்பு மானிய திட்டம், நீண்டகால பயிர் கடனுக்கு மானியம் இல்லா குறைந்த வட்டி திட்டம் இதுபோன்ற திட்டங்களால் உரிய விவசாயிகளுக்கு பயனுள்ளதா? ஒரு ஏக்கருக்கு குறைவாக, அல்லது நிலமற்ற கூலி விவசாயிக்கு இதனால் என்ன பயன்?

இந்த கேள்விகளுக்கு பதிலாக சந்தேகத்துக்கு சாட்சியாக மேலே உள்ளதைப் போன்ற பல நிகழ்வுகளை சொல்ல முடியும். அரசின் விவசாயக் கடன் திட்டத்தை தாங்களே நேரடியாக பெற ஏழை, சிறு ,குறு, நடுத்தர விவசாயிகள் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது.kaviri-farmer

இந்த கடனை பெற குறைந்தது ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். பத்தாயிரம் முதல் 3 லட்சம் வரை 7 சதவித வட்டியில் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. 1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்குபவர் நிலத்தை அடமானமாக வைக்க வேண்டும். ஒரு லட்சத்துக்கு குறைவான தொகை என்றால் கடன் வாங்குவதற்கு ஈடாக நகை, நிலத்தின் சர்வே என்னுடன் கூடிய வி.எ.ஒ-விடம் சிட்டா அடங்கல் சான்றிதழ் பெற்று கொடுக்க வேண்டும்.

கிராமபுற வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வருடத்தில் சில மாதங்கள் மட்டும் சிறப்பு சலுகையாக பயிர் கடனுக்கு எட்டு மாத காலத்துக்கு வட்டி கிடையாது. எட்டாவது மாதம் முடிந்து ஒரு நாள் கூடுதலானாலும் எட்டு மாதத்துக்கும் சேர்ந்து வட்டி கட்ட வேண்டும். குறுகிய கால வட்டியில்லா பயிர் கடனானது நீண்ட நாள் கடனாக மாறி வட்டி விகிதம் அதிகரித்து விடும்.

இந்த நடைமுறை சாதாரண நிலமற்ற விவசாயிகளுக்கு பொருந்துமா? நிலம் உள்ளவர்களுக்கு கூட சொன்ன தேதியில் கடனை திருப்பி செலுத்த இயலுமா? வட்டி, கூட்டுவட்டி என்று மாறும் கடனை கொடுக்க முடியுமா?

பெரும்பாலான விவசாயிகளிடம் சொந்த நிலம் இருப்பது இல்லை. குத்தகைக்கோ அடகுக்கோதான் விவசாயம் செய்கிறார்கள். இவர்களால் இந்த சலுகைக் கடனைப் பெற முடிவதில்லை. ஒரு ஏக்கருக்கு குறைவான சொந்த நிலம் உள்ள சாதாரண சிறு விவசாயிடம் ஈட்டுத் தொகையாக கொடுப்பதற்கு நகையும் இருப்பதில்லை.

ஒரு ஏக்கருக்கு தரப்படும் கடன் தொகையின் அளவு நடவு செலவுக்கே போதாது. நடவுக்குப் பின், களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து வகையறாக்கள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீராக செலவு செய்த பின் அறுவடைக் கூலி, சுமைக்கூலி என்று தொடர்ந்து வரும் செலவுகளைச் சமாளிக்க வெளியில் 4, 5 வட்டிக்கு கடன் வாங்கினால் தான் சமாளிக்க முடியும். அறுவடை முடிந்ததும் எந்த கடனை அடைப்பது? காத்திருக்கும் குடும்ப செயவுக்கு என்ன செய்வது? கேள்வி மட்டும் தான் மிச்சம்.

வட்டி இல்லா சலுகையில் கொடுக்கும் விவசாயக் கடனில் முழுதும் பயனடைவது நிலத்தின் அளவு அதிகமாக உள்ள பணக்கார விவசாயிகளும், இதைப் பயன்படுத்திக் கொண்டு விவசாயத்திற்கு தொடர்பில்லாத வட்டி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் தான்.

farmers-plantingமானியம் இல்லாத குறைந்த வட்டியிலான நீண்ட நாள் கடனின் சிறப்பு பயனையும் இவர்களே அடைகிறார்கள். அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தான் டிராக்டர், குபேட்டா, கதிர் அறுக்கும் இயந்திரம், நடவு நடும் இயந்திரம், ஆழ்துளைக் கிணறு அமைப்பது போன்றவற்றுக்காக கடன் பெறத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி என்ற நிலை வந்தால் இவர்கள் காட்டில் தான் மழை. அந்த வகையில் முந்தைய காங்கிரசு அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்த போது இவர்களே பெருமளவிற்குப் பயனடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் கூறும் போது “நானும் ஒரு விவசாயிதான். உண்மையிலேயே விவசாயத்துக்குன்னு வாங்கறவங்க கடனை திரும்பி செலுத்த சிரம படறாங்க. பல தடவை அறிவிப்பு நோட்டீஸ் விட்டு எச்சரிக்கை செய்தாலும் கடனை புதுப்பித்து மாற்றுவார்களே தவிர உடனடியாக அடைக்க முன்வர மாட்டாங்க. காரணம் விவசாயம் மட்டும் செய்து லாபம் ஈட்ட முடியாது. விவசாயம் அல்லாத ஏதோ ஒரு வகையில் (நகர்ப்புறத்து, வெளிநாட்டு வேலைகள்) வருமானம் வரும் விவசாய குடும்பத்தால மட்டும் தான் கடனை கால தாமதம் இல்லாமல் அடைக்க முடிகிறது.” என்றார்.

பானுமதி என்கிற அம்மாள், தனது மருமகனிடம் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தும் அவரால் பத்து ரூபாய் கூட மிச்சம் பிடிக்க முடியவில்லை என்று வருந்தியுள்ளார். பின் எப்படியாவது பணத்தைக் கட்டி வெளிநாடு அனுப்பிவிட்டால் ஐய்ந்தாறு வருடத்தில் ஏதாவது கையில கொஞ்சம் பணத்தை பாக்கலாம் என்ற நம்பிக்கையில் மருமகனை வெளிநாடு நினைத்தார். அதற்கு பணம்? மகளுக்கு போட்ட நகைகளை பயிர் கடனில் அடகு வைத்தே பணம் புரட்டியிருக்கிறார்.

இதில் காசு வாங்கிய ஏஜெண்டு ஏமாற்றாமல் இருப்பாரா, சென்ற நாட்டில் சொன்ன கூலி கொடுப்பார்களா, அங்கே உழைத்து உடல் உருகிப் போன பின் ஆரோக்கியத்தோடு திரும்ப முடியுமா என்பதெல்லாம் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விசயங்கள்.

இன்னொரு பக்கம் மகளிர் சுய உதவிக் குழு என்கிற பெயரில் அரசே முன்வந்து மக்களில் ஒரு பகுதியினரை பிழைப்புவாதிகளாக்கி விட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு ஊரில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து இயக்கும் தொண்டு நிறுவன உரிமையாளர் ஒருவர். ஒரு மாவட்டம் முழுவதும் பெரும்பாளான ஊர்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை இயக்கி வருகிறார். இதில் கிடைத்த அறிமுகத்தால் அவருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் வட்டியில்லா பயிர் கடனை பெறுவதற்காக அந்த ஊர் அரசியல் கட்சிக்காரரின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த ஊர் நிலத்தின் சர்வே கணக்கு படியே பயிர் கடனாக ரூபாய் 1,75,000 கடனாக வாங்கியுள்ளார்.

ஒரு ஊரிலேயே இவ்வளவு தொகையை வாங்க முடியும் என்றால் ஒரு மாவட்டம் முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுவை பயன்படுத்தி எவ்வளவு கொள்ளையடிக்க முடியும்.

ஒரு கிராம பஞ்சாயத்துக்கு எத்தனை ஏக்கர் நிலத்துக்கு பயிர் கடன் தரவேண்டும் என்று வரைமுறை வைத்துத்தான் விவசாய பயிர் கடன் ஒதுக்கப்படுகிறது. பயிர் poverty-farmerகடனை பெறுவதற்கு வைத்துள்ள விதிமுறைகளை பயன் படுத்தி சாதாரண உழைக்கும் வறிய விவசாயிகள் கடன் பெற முடிவதில்லை. பஞ்சாயத்து வாரியாக ஒதுக்கப்படும் பயிர் கடன் கொடுத்து முடிந்ததாக அரசுக்கு கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா? யார் பயனடைந்தார்கள்? என்பதெல்லாம் அரசைப் பொறுத்தவரை தேவையற்ற விசயம்.

விவசாயத்துக்கு கொடுக்கப்படும் பயிர் கடனில் இத்தனை பிரச்சினை என்றால் பயிர் சேதம் என்று ஒதுக்கப்படும் நிவாரணம் அதற்கு மேல். அதுவாவது பாதிக்கப் பட்டவர்களுக்கு போய் சேருகிறதா என்றால் அங்கேயும் பல பிரச்சினைகள்.

வி.ஏ.ஒ கண்காணிப்பு இல்லாமல் நிவாரண தொகை கொடுக்க மாட்டார்கள். வாய்க்கும் வயித்துக்கும் எப்போதும் இழுபறியாக இருக்கும் நிலையில் உள்ள ஒரு விவசாயி வாய்தா கட்டுவது பெரும் பாடு. எப்படியாவது கழுத்தில் துண்டைப் போட்டு பிடுங்க கடங்காரனைப் போல காத்திருக்கும் வி.ஏ.ஒ-வுக்கு வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் வழிவகுத்து கொடுத்துவிடும். காத்திருந்த கழுகைப் போல் அலுவலகத்தில் வைத்து கொடுத்த கையோடு பிடுங்கிக் கொள்வார்கள். வாய்தா தொகை கட்ட ஒத்துக் கொண்டால் தான் நிலம் பாதிப்புக்கு உட்பட்டது என்று எழுதி நிவாரண தொகை கிடைக்க ஏற்பாடு செய்வார்கள். நிவாரண தொகையைப் பொறுத்த வரை அதிகாரி வைத்தது தான் சட்டம்.

நிவாரணம் வருகிறதென்று தெரிந்தாலே ஊருக்குள் பெரும் புள்ளிகள் தங்கள் குள்ளநரித்தனத்தை காட்டத் துவங்கி விடுவர். இடிந்து கிடக்கும் கோயிலைக் கட்ட, இடியாத கோயிலுக்கு கும்பாபிசேகம் செய்யவென்று ஏதாவது வகையில் காசு பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். நிவாரண தொகை பட்டுவாடா செய்யப்படும் நாளன்று, “தலக்கட்டுக்கு இவ்வளவு வரின்னு சொல்லியும் நாளு வருசமா யாரும் குடுக்க மாட்டேங்கறிங்க. இப்படி வசுலுச்சாதான் ஆச்சு” என்று வி.ஏ.ஒ. நாற்காலிக்கு அருகிலேயே இவர்களும் நாற்காலி போட்டு உட்கார்ந்து கவனமாக வசூலித்து விடுவார்கள்.

தாசில்தார், ஆர்.ஐ.இ., வி.ஏ.ஓ., உள்ளூர் கட்சிக்காரர்கள் தவிற கோயிலுக்கும் வேறு நிவாரண தொகை பாய வேண்டும். இப்படி எல்லோர் வாயிலும் விழுந்தது போக மீதி வந்து சேர்வதைக் கொண்டு கோயில் படியில் காத்திருக்கும் பிச்சைக்காரன் திருவோட்டில் போடத் தான் காணும்.

அதிகார முறைகேடுகள் ஒரு பக்கம் இருக்க, கட்சிக்காரர்களின் செல்வாக்கும் இதில் பெரும் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது. விவசாய கூட்டுறவு சுசைட்டிகளில் ஏதும் தெரியாத அல்லது தன் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஆட்களை தலைவராகவும், பொறுப்பாளராகவும், செயலாளராகவும் வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்டம் போடுவது ஊருக்கு ஊர் நடக்கிறது.

விவசாயத்தை மேலிருந்து அழிப்பதற்கு பன்னாட்டுக் கம்பெனிகளோடு ஒப்பந்தம், உலக வர்த்தக கழகத்தோடு ஒப்பந்தம் என்று தீவிரமாக வேலை செய்யும் அரசு, அதைக் கீழிருந்து அழிக்க தனது அதிகாரிகள், அரசியல்வாதிகள் படையை பயன்படுத்திக் கொள்கிறது. முதலாளிகளுக்கு கடன் கொடுக்கும் போது கேப்பாரின்றி அள்ளிக் கொடுக்கும் அரசு, விவசாயி விசயத்தில் ஆயிரத்தெட்டு வழிமுறை சிக்கலை வைத்துள்ளது.

இந்த சூழலை சமாளித்து வாழ முடியாத ஏழை விவசாயிகள் இருக்கும் கொஞ்ச நிலங்களையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு நகரத்தில் வந்து விழும் விவசாயிகள் கட்டிட கூலி வேலை, சர்வர் வேலை என சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு வேலைக்குச் செல்கிறார்கள். இருக்கும் மிச்ச சொச்ச நிலத்தையும் ரியல் எஸ்டேட் கும்பல் வளைத்துப் போடுகிறது.

மக்களின் பசியைப் போக்க நிலதைப் பார்த்து குனிந்து நிற்கும் ஏழை விவசாயிகள், தமக்கு தீங்கிழைக்கும் இந்த அரசின் அநீதிக்கு எதிராக நிமிர்ந்து நின்று போராடும் போது தான் இந்த நிலை மாறும். அதுவரை விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் எந்தந் தொகையும் எந்த விவசாயிக்கும் போய்ச் சேராது!

– சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க