Monday, January 27, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க டாஸ்மாக்கை காப்பாற்ற மீண்டும் தேசத்துரோக வழக்கு

டாஸ்மாக்கை காப்பாற்ற மீண்டும் தேசத்துரோக வழக்கு

-

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

நெ.5/9, எஃப்.எம் பிளாசா, 3-வது, பேக்கர் தெரு, பாரிமுனை, சென்னை-01.

 _________________________________________________________________

                   பத்திரிக்கைச் செய்தி                                                                                                              31.03.2016

டந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் திருச்சியில் டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தினோம். அதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர். காளியப்பன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், டாஸ்மாக் பணியாளர் சங்க செயலாளர் தோழர். தனசேகரன், உதவும் கைகள் அமைப்பின் ஆனந்தியம்மாள், நாகர் கோவிலைச் சேர்ந்த வாள்வீச்சு வீரர் டேவிட் ராஜா ஆகியோர் மீது 124A (தேசத்துரோகம்), 504, 505 – 1B இ.த.ச ஆகிய பிரிவுகளின் கீழ், சுமார் ஒன்றரை மாதத்திற்குப் பின், 26.03.2016 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி, ஐந்தாம் வகுப்பு மாணவி காவ்யாஸ்ரீ ஆகிய சிறுமிகளையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் சட்ட மீறல் மட்டுமல்ல, மாபெரும் மனித உரிமை மீறலுமாகும்.

மூடு டாஸ்மாக் மாநாட்டில் பேசியவர்கள்
மூடு டாஸ்மாக் மாநாட்டில் பேசியவர்கள்

மூடு டாஸ்மாக்கை எனப்பாடிய கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. அவரை போலீசுக்காவலில் விசாரிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதற்கு எதிரான மேல்முறையீட்டையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லி ஜே.என்.யு மாணவர் கண்ணையா குமார் மீதும் அவருக்கு ஆதரவாகப் பேசிய ராகுல்காந்தி, யெச்சூரி, கேஜ்ரிவால் ஆகியோர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராடும் மக்களுக்கு எதிராக போலீசு இத்தகைய கடும் சட்டப்பிரிவுகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. தேசத்துரோக சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக்கை மூடு என்று பேசியதற்காக, எங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல் பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும். இதனால் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். இதுபோன்ற பொய்வழக்கு, சிறை, என்ற அசுறுத்தல்கள் மூலம் , டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.

தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத செயல்களை கண்டிக்கிறோம்.

தேர்தல் ஆணையம் சாதாரண மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. கல்யாண வீட்டில் மைக்செட் போடுவதற்கு கூட என்னைக் கேட்டுத்தான் போட வேண்டும் என்கிறது பறக்கும் படை. தேர்தலோடு தொடர்பில்லாத டாஸ்மாக் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தடுப்பதும் சுவர் எழுத்தை அழிப்பதும் விதிமீறல் வழக்கு போடுவேன் என்று மிரட்டுவதும் சிறு வியாபாரிகள் சாதாராண நடுத்தர மக்களை குற்றவாளிகள் போல கண்காணிப்பது. பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை எல்லாம் நேர்மையாக தேர்தல் நடத்தப்பட போவதுபோல காட்டும் நாடகமே.

மாற்றுக்கருத்தை பேச அனுமதிப்பதும், ஒருவரின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிப்பதும் தான் ஜனநாயகம். ஆனால் தேர்தலுக்கு தொடர்பில்லாத பிரச்சாரங்களைக்கூட தேர்தல் அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இந்தப் புகாரை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லக்கானி பரிசிலிக்கவே மறுக்கிறார். இது ’ஜனநாயகத் தேர்தல்’ நடத்துவதாகக் கூறும் தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரப் போக்காகும்.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நேர்காணல்
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நேர்காணல்

தன்மீது யாரும் புகார் கூறாத போதே தனது காரை பரிசோதனைக்கு உட்படுத்தும் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, சிறுதாவூர் பங்களாவில் பெரும் பணத்துடன் கண்டெய்னர் லாரிகள் நிற்கின்றன என்று புகார்கள் எழுந்த பின்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஓட்டுக்கட்சிகளின் வார்டு மெம்பர் முதல் மந்திரி வரை உள்ளவர்களின் ஊழல் பணம் எந்த இடத்தில் எந்த பினாமியிடம் உள்ளது என்பது தெரிந்தும் பறக்கும் படை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரிடம் 30000 கோடி வரை போயஸ் தோட்டத்தாய் ‘விசாரிக்கப்பட்டு’ எழுதி வாங்கப்படுவதாக நாடு முழுவதும் செய்திகள் வந்த போதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஜெயலலிதா அரசின் மாவட்டச் செயலாளர்கள் போல செயல்பட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போதும் மாவட்ட ஆட்சியர்களாக , தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் நாணயத்தின் இருபக்கங்கள் என்பது ஊரறிந்த உண்மை. தேர்தலுக்கு முன்புவரை லஞ்ச ஊழலில் திளைத்த அதிகாரிகள்தான் இன்றைய தேர்தல் அதிகாரிகள் என்பதை மக்களை முட்டாள்களாக கருதுவதாகும்.

தமிழத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடிநோயாளிகளை வைத்துக்கொண்டு, டாஸ்மாக் கடையை மூடாமல் நேர்மையான தேர்தலை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் சொல்வது மிகப்பெரிய மோசடியாகும்.

மக்கள் அதிகாரம் என்றைக்கும் இந்த அமைப்பு முறையிலான தேர்தலில் பங்கேற்காது. காரணம், இது தேர்தல் அமைப்பு முறையே தோற்றுப்போனது. இது உண்மையான ஜனநாயமும் இல்லை. அரசுக் கட்டமைப்பு முழுவதும் அதற்கு விதிக்கப்பட்ட கொள்கைகளை, விதிமுறைகளை கடைபிடிக்காது அவற்றை மீறுகிறது. மக்களுக்கு வேண்டாத சுமையாகிப்போனதுடன் எதிர்நிலை சக்தியாக மாறி நிற்கிறது. ஆற்று மணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, தனியார்கல்விக் கொள்ளை, சுற்றுச்சூழல் கேடு, என அனைத்தும் இந்த அரசு அதிகார கட்டமைப்பில் சட்டத்தை, விதிமுறைகளை மீறியே நடத்தப்படுகின்றன. நீதிமன்றமும் இவற்றை தடுக்காது இத்தகைய குற்றவாளிகளை பாதுகாக்கிறது. பாதிக்கப்படும் மக்கள் போராடினால் போலீசு பொய் வழக்குப் போட்டு அடக்குமுறை செலுத்துகிறது. நீதிமன்றம் போலீசின் இத்தகைய அடக்குமுறைகளை கண்டிக்காது போலீசோடு உடன்படுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராக மாறியுள்ள இந்த அரசுக் கட்டமைப்பை அகற்றும் போராட்டத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரத்தின் கொள்கை நிலைபாடு. இந்த அரசுக் கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கையும் மதிப்பும் இழந்துவிட்டார்கள். யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என அதை தங்கள் மொழியில் பேசுகிறார்கள். தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

தோழமையுடன்
சி.ராஜு, வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இங்கே யாரிடமும் ஜனநாயகம் இல்லை எல்ல இடத்திலும் சர்வதிகாரி சர்வாதிகரிக்லள் ஆட்ச்சிதான் நடக்கின்றது .
    ஒரு அமைப்பு நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமானதாக இருக்காது அதை வழி நடத்தும் தலைவர்கள் நேர்மையாகவும்,ஜனநாயக முறையிலும் நடந்துக்கொள்ள வேண்டும் …

  2. பதிவர் சவுக்கு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
    /தனது மக்கள் விரோத கொள்கைகளை ஜெயலலிதா ஒரு காலமும் நிறுத்தமாட்டார் என்பதற்கான பெரும் அறிகுறி, மதுவிலக்குக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பேச்சாளர்கள் மீது 26 மார்ச் 2016 அன்று தமிழக காவல்துறை பதிவு செய்திருக்கும் தேச விரோத வழக்கு. “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்காக ராஜு, காளியப்பன், டேவிட் ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன் மற்றும் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.
    மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக ஒரு பாடலைப் பாடிய குறறத்துக்காக பாடகன் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த இதே அதிமுக அரசுதான் தற்போதைய கைதுகளையும் அரங்கேற்றியுள்ளது. மதுவிலக்குக்கு எதிராக ஒரே ஒரு குரல் கூட எழுந்து விடக்கூடாது என்பதில் அதிமுக அரசு எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. தேர்தல் நேரமானாலும், மக்களிடையே மதுவிலக்கு கோரிக்கைக்கு எவ்வளவு பெரிய ஆதரவு இருந்தாலும், மதுவால் அரசு கஜானாவுக்கும், தனிப்பட்ட வசூலுக்கும் எவ்விதத்திலும் குறை நேர்ந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே ஜெயலலிதா அரசு கவனமாக இருக்கிறது./

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க