Friday, January 22, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?

கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?

-

சாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள்.

அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி.

நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போருக்கு முரசு கொட்டினார். முரட்டுக் காளையில் துவங்கி கபாலி வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான். திரையரங்க டிக்கெட்டிலிருந்து அவர் வாங்கும் ஊதியம் வரை கருப்பே பிரதானம். இது ஊரறிந்த உண்மை என்றாலும் அம்பானியை உழைத்து முன்னேறியவராக நம்பும் உலகம் இவரையும் உழைத்து சம்பாதித்தவராக நம்புகிறது.

Vishal Raid
விசிடி கடையில் வீரம் காட்டும் விசால் சார் உங்க வருமான கணக்கையும் கொஞ்சம் காட்டுங்க

நடிகர் சங்கத் தலைவர் விஷால் இடையில் தானும் ஒரு ரவுடிதான் என்று காட்டுவதற்கு சிறு நகரங்களில் உள்ள சி.டி விற்கும் கடைகள், கேபிள் டி.வி அலுலகங்களுக்கு பவுன்சர்களுடன் படையெடுத்தார். தூங்கிக் கொண்டிருக்கும் ஊழியர்களை தட்டி எழுப்பி புதிய படம் எடு, யார் ஓனர் என்று அதிகார தோரணையுடன் மிரட்டுவார். பிறகு சி.டிக்களை அள்ளிக் கொண்டு செல்வார். அப்புறம் போலீசு வரும். தந்தியில் செய்தியும் வரும். இதெல்லாம் ஊழலுக்கு எதிரான போராட்டமாம். அதாவது திருட்டு வி.சி.டிக்கு எதிராக திரையுலகத்தை காப்பாற்ற போராடுகிறாராம்.

போகட்டும். நாமும் அதே போல விஷால், சூர்யா, ரஜினி, கமல் வீடுகளுக்கு சென்று வருமான வரி ரசீதை எடு, போன படத்துக்கு வாங்கிய தொகை எவ்வளவு, வங்கி புத்தகத்தை எடு, சொத்து பத்திரங்களை காட்டு என்று கேட்கலாம். அதை சரிபார்த்து போலீசுக்கும் போகலாம். அதற்கு நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் விஷால் ஏற்பாடு செய்ய வேண்டும். இது கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டம்.

கபாலிக்கு ரஜினி வாங்கியது எவ்வளவு என்று தாணுவுக்கு தெரியும். தாணுவோடு ஜாஸ் சினிமாஸ், சசிகலா இறுதியில் அப்பல்லோ இரண்டாம் தளத்தில் இருக்கும் கடவுளுக்கும் தெரியும். கடவுளுக்குத் தெரிந்த உண்மை மனிதர்களுக்கு எப்படி தெரியும்?

கபாலிக்கு முந்தைய படமான லிங்காவும் அப்படித்தான் கள்ளப் பண வழியில் வசூல் செய்ய முயன்றது. அதை எதிர்பார்த்து வினியோகஸ்தர்கள் 200 கோடி ரூபாய்க்கு வாங்கினாலும் படம் படுத்துவிட்டது. பிறகு அவர்கள் பிச்சை போராட்டம் நடத்த இருந்தது தனிக்கதை. அந்த லிங்கா திரைப்பட பாடல் விழாவில் இயக்குநர் அமீர், சேரன், வைரமுத்து போன்றோர் கலந்து கொண்டு முதுகு சொறிந்தனர்.

“காந்தியும் காமராஜரும் போல ரஜினி சார் இந்த நாட்டுக்கு நல்லது செய்யணும்” என்று இயக்குநர் சேரன் பேசினார். இதையே கொஞ்சம் விரிவுபடுத்தி அம்பேத்கரையும் சேர்த்தார்கள், கபாலி படத்தை கொண்டாடிய அறிஞர்கள். ஒரு வேளை கருப்பு – வெள்ளை இரண்டிலும் காந்தி படம் இருப்பதாலும், காமராஜர் போல இமேஜ் பார்க்காமல் நரை தாடியோடு வெளியே வருகிறார் என்பதாகவும் சேரனை நாம் புரிந்து கொள்ளலாம். எப்படியோ கருப்பில் வாங்கினாலும் காந்தி காந்திதானே?

இயக்குநர் அமீரோ அந்த விழாவில் ரஜினியை தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பேசினார். அம்மாவின் கோபத்தை கிளப்பிவிட்டு அண்ணனை ஒரு வழி செய்யலாம் என்று உள்குத்தோடு பேசினாரோ தெரியவில்லை.

பரவாயில்லை, அதே அமீர் தற்போது கருப்பு பண விவகாரத்தில் ரஜினியை கேள்வி கேட்டிருக்கிறார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசிய போது,

“இந்த நாட்டில் எத்தனை அக்கிரமங்கள் நடந்திருக்கும்போது, எதற்குமே வாய் திறக்காத ரஜினிகாந்த், ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் நீண்ட கால கள்ள நட்பு. புதிய இந்தியா பிறந்துவிட்டது எனச் சொல்கிறார்.

புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று சொல்கிறீர்களே, பழைய இந்தியாவில் ‘கபாலி’ என்ற ஒரு படம் வெளியானதே அதற்கு திரையரங்க டிக்கெட் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா? உங்களுடைய சம்பளம் என்ன? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன? அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என யாராவது காட்ட முடியுமா?

Director_and_FEFSI_President_Ameer
இயக்குநர் அமீர்

இப்படி இருக்கும்போது கறுப்புப் பணத்தின் அளவு என்பது என்ன இங்கே? எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? 150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது”

என்று பொங்கியிருக்கிறார்.

லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி ஏதும் தேதி தருவதாக ஏமாற்றினாரா தெரியவில்லை. இல்லை கபாலிக்கு முன்னர் ரஜினி கருப்பில் வாங்குவது தெரியாமல் இருந்தாரா ? அல்லது நீயே முழுத் திருடன் நீ போய் கருப்பு பண ஒழிப்பை ஆதரிக்கலாமா என்று கேட்டாரா?

எப்படியோ அவர் எந்த நோக்கில் கேட்டாலும் கேள்வியில் உண்மை இருக்கிறது. அதை பரபரப்புச் செய்திகளாக வெளியிட்ட ஊடகங்கள் யாவும் அதே கேள்வியை கேட்கவில்லை. மோடியின் அறிவிப்பு நாடகத்தை போற்றிய ஊடகங்கள், ரஜினி முதலான திரைமாந்தர்களின் கருப்புப் பணத்தை கேட்காதது அதிசயமல்ல. “ஊழலை ஒழிக்க வந்த மகாத்மா, பாகுபலி” என்று அட்டைப் படங்களில் போட்டுத் தாக்கும் குமுதம் இதழ் அதே பாகுபலியின் கருப்பு பக்கத்தையோ, கபாலியின் திருட்டுக் கணக்கையோ கண்டுகொள்ளாது.

ரஜினி நடிக்கும் எந்திரத்தின் இரண்டாம் பாகமான “2.0” படத்தின் “பர்ஸ்ட் லுக் விழா” மும்பையில் பிரம்மாண்டமாய் நடக்கிறதாம். இதை யூ டியூபி-லும், படத்தை தயாரிக்கும் லைக்கா கம்பெனியின் செயலி மூலம் நேரலையாகவும் பார்க்கலாமாம். நிகழ்ச்சியை பாலிவுட்டின் இயக்குநர்-தயாரிப்பாளர் கரண் ஜோகர் வழங்குகிறாராம். இதை தினமலர், தி இந்து, விகடன், தந்தி, தினமணி அனைத்தும் வெளியிட்டிருக்கின்றன. இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என அடைமொழியோடு சேர்த்து போடும் இந்த ஊடகங்கள் சூப்பர் ஸ்டார் என்றாலே கருப்புப் பணம்தான் என்பதை வெளியிடுவதில் என்ன தயக்கம்?

கபாலி என்ற அடித்தட்டு மக்களின் பெயரை பயன்படுத்தியதையும், அதை கபாலி எனும் சிவனின் பெயராக ரஜினி ஏற்றதையும் சாதனையாக அறிவித்த இயக்குநர் ரஞ்சித், கருப்புப் பணம் குறித்து என்ன சொல்வார்?

ஒருவேளை கருப்புப் பணம், வெள்ளைப் பணம் என்ற பெயர்கள் கருப்பாக இருக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும், இதே போன்று வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இருண்ட காலம் என்று பழிக்கிறார்கள் என்று புதிய தத்துவங்களை அள்ளி விடலாம். இதை ஏற்கனவே நியூஸ் 18 காலை நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்திருக்கிறார். அதாவது கள்ளப் பணம், கள்ள நோட்டு என்று பேசுவதை இதற்கு முன்பாகவே அவர் பயன்படுத்துகிறாராம். பொலிட்டகலி கரெக்ட் என்று வார்த்தைகளை பிடித்து தொங்கும் இவர்கள் பொருட் பிழை குறித்து அஞ்சுவதில்லை.

rajini-stills
முரட்டுக் காளையில் துவங்கி கபாலி வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான்.

துண்டு சீட்டில் ஒரு கோடி, 50 இலட்சம் என்று கருப்புப் பணத்தை வாங்கி உள்ளே சென்ற பச்சமுத்துவின் டி.வியில் வேலை பார்த்த ஜென்ராம் இப்போது நியூஸ் 18-ல் வேலை செய்கிறார். புதிய தலைமுறை எனும் லோக்கல் பெருச்சாளியின் டி.வியில் இருந்து ஆசிய அளவிலான டைனோசரின் டி.வியில் அமர்ந்து கொண்டு அவர் அம்பானிகளின் ஊழல், கருப்பு பணம் குறித்து வாயே திறக்க முடியாது. ஆகவே கருப்பு என்றால் மக்களை இழிவு படுத்துவது என்று வார்த்தைகளில் நல்லவராக போராடுகிறார். பாவம்,வாழ்த்துக்கள்!

கம்யூனிசம் மட்டுமல்ல விபச்சார பகுதி கூட சிவப்போடு அடையாளப்படுத்தப்படுகிறது. சாலை சந்திப்பு ஒழுங்கமைப்பில் கூட சிவப்பே அபாயத்திற்கும், வண்டிகள் நிற்பதற்கும் காட்டப்படுகிறது. இதனால் சிவப்பை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று நாம் வெட்டி ஆய்வில் இறங்கலாமா? உண்மையிலேயே கருப்பு பணம் என்பது அத்தகைய நிறவெறியில் இருந்து தோன்றியதாகவே இருக்கட்டும். முதலில் மோடி, அதானி, அம்பானிகளின் கருப்புப் பண கொள்ளையை ஒழித்து விட்டு பிறகு நாம் வார்த்தையை மாற்றலாம். மாறாக இதை மாபெரும் அறவியல் மீறலாக பேசுவது இறுதியில் கருப்புப் பண முதலாளிகளுக்கே ஆதாயமாக போகிறது.

கபாலி படத்திலும் அதுதான் நடந்தது. ஜெயா சசி கும்பலின் கொள்ளை மற்றும் பார்ப்பனியத்தின் பக்தனான ரஜினியை குறி வைத்து பேசுவதற்கு பதில் சாதி வெறியர்களுக்கு எதிரான அடையாளமாக அதுவும் பி.எம்.டபிள்யூ காரில் போகும் தாதாவாக ரஜினியை முன்னிறுத்தினார்கள். கபாலியை போராளி என்று போற்றுவதும், ரஜினியை ஒரு கருப்புப் பண நாயகன் என்று பேசாமல் அமைதி காப்பதும் வேறு வேறு அல்ல.

ரஜனியின் யோக்கியதையை விடுதலை சிறுத்தைகளின் கூட்டத்தில் கேள்வி கேட்டதன் மூலம் கபாலி படத்தில் சறுக்கி விழுந்த சிறுத்தைகளுக்கு கொஞ்சம் வெட்கம் வந்திருக்கலாம். எனினும் திருமாவளவனோ இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!

ரஜினி போன்று பாலிவுட் முதலைகள் பலரும் மோடியை ஆதரித்திருக்கின்றனர். அங்கும் இதே நிலைதான். சினிமாவில் கருப்பு பணத்தை நம்பி வாழ்பவர்கள்தான் சினிமா கதைகளில் ஊழலை எதிர்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் அதானி குழுமத்தால் முன்னிறுத்தப்படும் மோடியும் கருப்புப் பண ஒழிப்பை பேசுகிறார்.

நட்சத்திரங்களின் கருப்பு பக்கத்தை மறைக்கும் கயமைத்தனத்தை ஒழிக்கும் வரை கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியாது.

 1. ஊருக்கு இளிச்சவாயர்கள் ஹிந்துக்கள் மாதிரி சினிமாவில் இளிச்சவாயர் ரஜினி யார் வேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் ரஜினியை அவதூறாக பேசலாம் என்பது எழுதப்படாத சட்டம். ____________கபாலி படத்தில் ரஜினி ஒரு நடிகர் அவ்வுலவே, தயாரிப்பாளரும் டைரக்டரும் என்ன சொல்கிறார்களோ அது படி நடித்து கொடுப்பது தான் அவருடைய வேலை அதன் பிறகு தியேட்டரில் டிக்கெட் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை எல்லாம் எப்படி ரஜினி கட்டுப்படுத்த முடியும் அதை செய்ய வேண்டியது அரசு துரையின் கடமை.

  • ஊருக்கு இழைத்தவர்கள் இந்துக்கல்ல மனிகன்டரே…இந்துக்களில் இழைத்தவர்கள் தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத ஏழை எளிய உழைக்கும் மக்களே.

   • இன்னும் எவ்வுளவு நாள் தான் தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத ஏழை மக்கள் என்று சொல்லி ஊரை ஏமாற்றி கொண்டு இருக்க போகிறீர்கள் என்று தெரியவில்லை. கிராமத்தில் எங்கள் வயலில் வேலை செய்பவரின் பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது (உங்கள் வார்த்தைகளில் சொல்வது என்றால் தலித் திருமணம்)… அவர் பெண்ணிற்கு சீர் வரிசையாக கட்டில் பீரோ பாத்திரங்கள் பைக் 30 பவுன் நகை என்று சிறப்பான முறையில் திருமணம் செய்து கொடுத்தார்… இன்று நீங்கள் சொல்லும் தலித்துகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேறி கொண்டு இருக்கிறார்கள்.

    இன்று இருப்பது ஏழை ஜாதி பணக்கார ஜாதி மட்டும் தான், பரம ஏழையாக இருக்கும் ஒரு பிராமணன் சந்திக்கும் பிரச்சனைகளை தான் ஏழை தலித்தும் சந்திக்கிறான். இன்று பணம் இருப்பவன் தான் பிராமணன் பணம் இல்லாதவன் எந்த ஜாதியாக இருந்தாலும் அவன் தலித் தான்.

  • மணிகண்டரே, கபாலி படத்துகாக ரஜினி வாங்கியதெல்லாமே cheque கா? டிக்கட் விற்பனயில் கொள்ளை அடித்தார்களே, அதை ஏன் ரஜினி கண்டிக்கவில்லை? அது மட்டும் தனி இந்தியாவா?

 2. அட்ரா சக்கை. அங்கதான் கருப்புப் பணத்தை கட்டுபடுத்த வக்கில்லாத மோடி அரசுக்கு வக்காலத்து வாங்கினீர்கள்.

  இங்கே என்னெவன்றால் அரசு தான் செய்யணும் என்று சொல்றீங்க.

  இங்கே யாரும் ரஜினி கருப்புப்பணத்தை கட்டுபடுத்த சொல்லவில்லை. ரஜினி வாங்கும் பல பத்து கோடி ரூபாய் நோட்டுகளில் ஒரு நோட்டுக் கூட கருப்பு இல்லையா. எல்லாமே அவர் உழைத்து சம்பாதித்ததா? அவருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தையும் சேர்த்து தான் தியேட்டர் முதலாளிகள் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியாதா?

  • தியேட்டர்கள் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய முடியாது அதை செய்வது அரசு, அந்த விலைக்கு விற்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை.

   முன்பு ஒரு படத்தை 100 நாள் ஓட்டி சம்பாதித்ததை இப்போது 3 நாளில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து தியேட்டர்கள் அதிக விலை வைத்து விற்கிறார்கள், மக்களும் ரஜினி படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க எவ்வுளவு பணம் கொடுக்கவும் ரெடியாக இருக்கிறார்கள்… இதை எப்படி ரஜினி தடுக்க முடியும் ? அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை ரஜினியை பார்த்து கேட்பதில் நியாயம் இல்லை.

   • முக்கியமான கேள்வி, ரஜினி சம்பாதித்த பல பத்து கோடிகளில் ஒரு நோட்டுக் கூட கருப்பு இல்லையா. எல்லாமே வெள்ளையா? இதற்கு நேரடியான பதில் தேவை?

    • வருமான வரித்துறையினரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

     • மோடி அரசின் கட்டுப்பாட்டில் தானே வருமான வரித்துறை உள்ளது மணிகண்டன்… ? மோடியின் அரசு வேடிக்கை பார்த்துகொண்டு தானே உள்ளது ஏன் ? இதுவும் PNOTE போன்ற ஏமாற்று வேலை தானா?

     • மணிகண்டன்.., தினம் தினம் ஏழை எளிய நடுத்தர மக்கள் வங்கியில் நின்று செத்துகிட்டு இருக்காங்க….! இந்த ரஜினி ,கமல் போன்ற கருப்பு பண நடிகர்கள் எப்பவாவது இந்த வரிசையில் நின்று நோட்டுகளை மாற்றி இருக்காங்களா? உங்க வீட்டில் யாராவது வங்கி வரிசையில் நின்னு மண்டையை போட்டால் தான் நீங்க அடங்குவிங்களா மணிகண்டன்?

     • மணிகண்டன்.., இதற்கு முந்தைய கட்டுரையில் pnote மூலமாக வெளிநாடுகளில் இருந்தது இந்தியாவில் முதலீடு செய்ய திவிரவாதிகளை, ஊழல் முதலைகளை ஆதரிக்கும் மோடியின் அரசுக்கு ஆதரவாக பேசினிங்க! இப்ப உள்நாட்டில் கருப்பு பணம் வைத்து உள்ளவர்களை தண்டிக்காத மோடிக்கு ஆதரவாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்… உள்ளும் வெளியும் கருப்பு பணம் மோடியின் அரசால் அனுமதிக்கப்படுகின்றது என்பதனை ஏற்கின்றீர்கள் தானே?

  • ரஜினி என்ன உழைக்காமலா சம்பாதிக்கிறார் ? அவரின் தொழில் நடிப்பு அதற்கு தனது கடினமான உழைப்பை கொடுக்கிறார், அவரின் உழைப்பிற்கு எவ்வுளவு சம்பளம் வேண்டும் என்பதை ரஜினி கேட்டு பெறுகிறார். அதை குறை சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை…

   • அய்யா, அவர் உழைத்து சம்மதித்தார இல்லை உக்கார்ந்து சம்மதித்தார இல்லை படுத்த படுக்கையா சம்பாதிச்சாரா என்ற கேள்வி நான் கேட்கவில்லை. அவர் எப்படியோ சம்பாதித்து விட்டு தொலையட்டும். அவர் சம்பாதித்ததில் ஒரு நோட்டு கூட கருப்பு இல்லையா? அவர் சம்பாதிக்கும் காசுக்கு முறையா வரி செலுத்தி இருக்காரா?

    இதுல இந்த ஆளு நடிகர்களுக்கு வரி விதிப்பதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில்(?) எல்லாம் கலந்து பேசி இருக்காரு. என்னனா, அதிகமா வரி விதிச்ச கருப்பு பணம் அதிகமாயிடும் அதே சமயத்தில் வரி ஏய்ப்பு செய்யறவங்களையும் கடுமையா தண்டிக்கணும் என்று. அதனால் ரஜினி மாதிரி ஈனப்பிறவிகள் கருப்பு பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்குறேன் என்று சொல்வதே அழுகுணி ஆட்டம் தான்.

    அதை உட்டுபுட்டு உழைக்கிராறு, யாருக்கும் உரிமையில்லை சுரைக்காய் இல்லை என்று வெற்று சவடால் அடிக்காதீர்கள்.

    • இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லாம் ரொம்ப பழமையானது, பழைய தமிழ் படங்களில் பணக்காரர்கள் என்றால் வில்லன்கள் போல சித்தரிப்பார்கள், அதுபோல் இருக்கிறது உங்களை போன்றவர்களின் கருத்து… ஏன் ரஜினி சரியாக வரிகளை கட்டி நேர்மையானவராக இருக்க மாட்டாரா ?

     எல்லா நடிகர்களும் மோசம் எல்லா கார்பொரேட் பணக்காரர்களும் மோசம் என்பது போன்ற உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை…

 3. அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட அதிகமாக விற்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று நியாயம் பேசும் நீங்கள் நாட்டினுள் கள்ளநோட்டையும் கருப்பு பணத்தையும் அரசு கண்காணித்து தடுக்க வேண்டும் ஏற்றுக் கொள்ள மறுப்பது முரணாக இருக்கிறது.

  அதே சமயத்தில் அரசு நிர்ணயித்த விலைக்கு டிக்கெட் விற்றால் ரஜினிக்கு பல பத்து கோடிகள் சம்பளம் தேறாது. கருப்பு பணத்தை தடுக்க முயன்றால் மோடியின் இந்துத்தவ கனவும் பலிக்காது. இதுதான் உண்மை. ஆனால் இது உமது மூளை பிதுங்கிய மண்டைக்கு உரைக்க மாட்டேன் என்கிறது என்ன செய்ய.

  ரூவா நோட்டுகளை தடை செய்து ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை கள்ள நோட்டுப் புழக்கத்தையும் கருப்பு பணத்தையும் தடுப்பதாக நீங்கள் கூறிக் கொண்டு இருப்பது எவ்வளவு கீழ்த்தரமான பொய் என்பது ஏழை எளிய மக்களுக்கு தெரிகிறது. ஆனால் பார்ப்பன, தரகு முதலாளித்துவ அடிவருடி ஊடகங்கள் உண்மையை மக்களுக்கு சொல்லாமல் ஏமாற்றுகின்றன.

  கருப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்க ரூவா நோட்டை தடை செய்ததை போல அதிக விலைக்கு விற்கும் தியேட்டர்களை ஏன் மூடவில்லை இந்த அரசு.

  தியேட்டர் முதலாளிகளிடமும், கருப்புப் பண தரகு முதலாளிகளிடமும் மண்டியிட்டுள்ள இந்த அரசு இதை செய்யாது. எனவே மோடியை ஆதரித்து சொந்த மக்களை காவு கொடுக்கும் உங்களை போன்ற தேச விரோதிகளை அம்பலபடுத்துவதே முக்கியமான வேலை.

 4. மணிகண்டன் அவர்களே ! சிறிது தெளிவாக கேட் கின்றேன். ரஜினி வாங்கிய சம்பளம் அனைத்திற்கும் (கபாலி படத்திற்கு) வருமான வரி கட்டினாரா ? அல்லது கணக்கில் காட்டாத பணத்தை (பாதியளவு) சம்பளமாக வாங்கினாரா ? இதுதான் கருப்பு பணம். அதன் சக்க்ரவர்த்தி ரஜினி.

  • பெருமுதலாளிகளிடம் எந்த அளவுக்குக் கருப்புப் பணம் இருக்கிறதோ அந்த அளவுக்கு சினிமாத் துறையிலும் இருக்கிறது. நட்சத்திரம் என்ற செயல்முறையே கருப்புப் பண அடிப்படையில் வந்ததுதான். எல்லா நட்சத்திரங்களிடமும் கருப்புப் பணம் உண்டு. ஏனெனில் அவர்கள் வாங்குவதே வெள்ளை பாதி, கருப்பில் மீதி என்றுதான். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் எல்லா வுட்டுகளும் கருப்புப் பணத்தால் நிரம்பி வழிபவை தான். உண்மையில் பார்த்தால் மோடி இங்கிருந்துதான் கருப்புப் பண வேட்டையைத் தொடங்கியிருக்க வேண்டும். இதெல்லாம் தெரியாத அப்பாவிகளுக்கு நம் அனுதாபங்கள்.

 5. //ரஜனியின் யோக்கியதையை விடுதலை சிறுத்தைகளின் கூட்டத்தில் கேள்வி கேட்டதன் மூலம் கபாலி படத்தில் சறுக்கி விழுந்த சிறுத்தைகளுக்கு கொஞ்சம் வெட்கம் வந்திருக்கலாம். எனினும் திருமாவளவனோ இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!//

  THIRUMA knows before hand from PONNAR 20 days back

 6. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமா துறைக்கு வந்த நாள் முதல் தனது அனைத்து வருமானங்களுக்கும் முறையான வருமான வரி செலுத்தி சான்றிதழ் பெற்று வருகிறார் என்பதை வருமான வரித்துறையே அறிவித்துள்ளது. (திரு அமீர் அவர்களின் பொறாமை நன்கு வெளிப்படுகிறது,. தேறி மதுரை ஏரியாவை வாங்கி வெளியிட்டது அமீர் தான். அதில் எவ்வளவு காசு வெள்ளை ? எவ்வளவு காசு கருப்பு என்று கணக்கு சொல்ல முடியுமா ???)

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமா துறைக்கு வந்த நாள் முதல் தனது அனைத்து வருமானங்களுக்கும் முறையான வருமான வரி செலுத்தி சான்றிதழ் பெற்று வருகிறார் என்பதை வருமான வரித்துறையே அறிவித்துள்ளது.

   -IT department said he is paying tax for what he is showing as income.. ! Example, i can get a pay of Rs 500 but will show only rs 100 to IT depart and will pay tax for it.. as far as IT dept is concerned, i have a clean record.. but actually i am hiding 400 rs as black

   same way, actors get 3 crore in cheque and 2 crore in cash (black) . they will pay tax for 3 cr and not for that 2 cr. that is the black money..

   hope you are clear now

   • நீங்கள் சொல்வது ஆதாரம் இல்லாத கற்பனை குற்றசாட்டுகள் நீங்கள் சொல்வதற்க்கு ஆதாரம் வேண்டும்

    • கருப்புப் பணம் வாங்குபவன் ஆதாரம் வைத்துக்கொண்டோ, எவ்வளவு என்று வெளியிட்டுவிட்டோவா வாங்குவான்? அரசாங்க அதிகாரிகளே செக் கொடுத்தால் வாங்குவதில்லை. பள்ளிக்கூடங்களில் செக் கொடுத்தால் வாங்குவதில்லை. எல்லாம் நோட்டுகளாகத்தான் எண்ணிக் கொடுக்க வேண்டும். அப்படி யிருக்க, ரஜனிகாந்த் முதல் எந்த நடிகனுக்கும் நீங்கள் கேட்கும் ஆதாரத்தைத் தரமுடியுமா? கொள்ளை அடிப்பவனும் கொலைசெய்பவனும் ஆதாரம் வைத்துக்கொண்டா செய்கிறார்கள்? என்ன மாதிரி கேள்வி இது? இதையெல்லாம் கண்டுபிடிக்கத்தான் சிபிசிஐடி, சிபிஐ, போலீஸ் முதலிய எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் யாருடைய அடிவருடிகள்? நடப்பைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ள, அல்லது யூகிக்க முடியவேண்டும். அது இல்லாதவர்களுக்கு என்ன சொல்வது-

     • கோவில்களில் அனுமதிக்கப்படும் கருப்பு பணத்தை ஒழிக்க உண்டியல்களை தடை செய்ய வேண்டும்,பான் கார்டுடன் point of sale(POS) பரிவர்த்தனை இயந்திரங்கள் மட்டுமே பக்தர்களின் கணிக்கைகளுக்கு அனுமதிக்கவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்தால் அது வெற்றிபெறும் தானே அய்யா ?

    • மணிகண்டன் உங்களுக்கு பதில் சொல்லக்கூட தெரியவில்லை! எப்படி பதில் சொல்லிஇருக்னும் என்றால் …… : “ஒருவேளை ரஜினியிடம் கருப்பு பணம் இருந்தது என்றால் அந்த பணம் மோடியின் செல்லா நோட்டு திட்டம் மூலம் வீண் ஆகியிருக்கும் அல்லலவா? ” என்று நீங்கள் கேள்வி எழுப்பவேண்டும்… இதுவரையில் நான் வினவில் கண்ட எதிர் விவாதகாரர்களிலேயே படு மொக்கை நீங்கள் மட்டும் தான் மணிகண்டன்… விவாத திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் மணி

  • என்னாச்சு தமிழ்வாணன், என்னாச்சு ரியஸ் அஹம்மது, நீங்க ரசினி ரசிகரா இருந்து என்ன பிரயோஜனம்? பாருங்க 2.0 படம் டெக்னாலஜியில மிரட்டுதுன்னு நம்பிட்டு நீங்க இன்னும் பழசாவே இருக்கீங்க! ஐ.பி நம்பர ஒண்ணா வச்சுட்டு பேர மாத்தி என்ன இலாபம் சார்? ஆனா மத்த நடிகருங்கதான் கருப்பு, உங்காளு மட்டும் வெள்ளைன்னு சொல்ற உங்கள வெள்ளேந்தித்தனம் பாவமா இருக்கு! 😥

 7. போன வருடம் விசை வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்து சுமார் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது மறந்து விட்டதா ??? விசை, அசித்து மற்றும் சொம்பு போன்ற ஆட்கள் கணக்கில் வராத பணத்தை கருப்பு பணமாக பதுக்கி வைப்பதால் தான் ஏழைகள் ஏழைகளாக இருந்து கஷ்டப்படுகிரார்கள். அப்புறம், சென்ற ஆண்டு டிசம்பர் ௧ மற்றும் 2 தேதிகளில் சென்னையை புரட்டி போட்ட மழை சமயத்தில் நீ நடுத்தெருவில் நின்ற அந்த ஏழைகளுக்கு என்ன செய்தாய் ???

 8. இந்த சங்கர் ரஜினி வகையரா சிவாஜி என்ற கருப்பு பண ஒழிப்பு படம் எடுத்தார்கள்.அதுல கருப்பு பணம் வச்சு இருக்குற மாதிரி அரசியல்வாதி,தொழில் அதிபர்களை எல்லாம் காட்டி விட்டு ஒரு சினிமா தயாரிப்பாளரோ,நடிகரோ,இயக்குநரோ கருப்பு பணம் வச்சு இருக்குற மாதிரி காட்டல. அப்படி காட்னா சினிமா உலக வண்டவாளம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயம்.

  ரஜினி யோக்கியனா இருந்தால் வெள்ளையாதான் சம்பளம் வாங்கிறேன் என்று பேட்டி கொடுக்கட்டும்.

 9. இந்த ______ பத்திரிகை வியாபாரம் ஆக ரஜினி வேனும் . குமுதம் மற்றும் விகடன் பத்திரிகைகல் லிங்கா ஸ்பெஷல் நு போட்டே 4 வாரம் ஓட்டுனங்க. இப்பவும் ரஜினி பேர் போட்டல்தான் அவங்க பொழைப்பு நடத்தவேண்டிருக்கு .இப்பவும் மக்கள் ரஜினி பற்றி என்ன போட்டுருக்கான்கனு பார்க்கதான் காசு கொடுத்து வாங்குறாங்க .இப்படி எப்படி பார்த்தாலும் ரஜினி ய வச்சுதாணே பொழப்பு நடத்துறாங்க _______ .நன்றி கேட்ட ஜென்மங்கள் .

 10. Block money deducted at source!!

  நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரியை முற்றிலும் நீக்கக் கோரி தமிழ் திரையுலகினர் சென்னையில் உண்ணா விரதம் இருந்தனர்.

  அன்று வரி கட்டுவதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததோடு, சேவை வரியை ரத்து செய்யாவிட்டால் திரையுலகில் கருப்புப் பணம் அதிகரிக்கும் என்று ரஜனியும், விக்ரமும் பச்சையாகவே மிரட்டல் விட்டனர்.

  வருமான வரி கட்டாதவர்களுக்கு கடுமையான சட்டம் போட்டு தண்டிக்கலாமே, அதற்கு எதற்கு சேவை வரி என்று கேட்டார் ரஜினி. அதாவது நாங்கள் சேவை வரி கட்டமாட்டோம் (வருமானத்தை குறைத்துக் காண்பித்து வருமான வரியும் கட்டமாட்டோம்) ‘கடுமையான’ சட்டம் கொண்டுவந்து ‘தண்டித்துக்’ கொள்ளுங்களேன் என்றார்.

  சினிமா பிரபலங்களின் சேவையை பெற்றுக் கொண்டு அதன் மூலம் அவர்களுக்கு சேவை வரி விதிக்க காரணமாக இருப்பவர்கள் யார்? சினிமா பிரபலங்களுக்கு வருமானத்தைக் கொடுத்து அதன் மூலம் அவர்களிடம் கருப்புப் பணம் சேர்வதற்கு யார் காரணம்? மக்கள் தான்.

  இப்போது மோடி ‘கடுமையான’ நடவடிக்கை எடுத்து விட்டார், மக்கள் மீது.
  TDS – Tax deducted at Source கேள்விப்பட்டிருப்பீர்கள். இது Block money deducted at source!!

  அப்புறம் என்ன?

  மக்களை கசக்கி பிழியும் சேவை வரியை ரத்து செய்யவோ, குரல் குடுக்கவோ துப்பில்லாமல் அப்பட்டமான சுயநலத்தோடு தங்களுடைய வருமானத்தை காப்பாற்றிக் கொள்ளமட்டும் குரல் கொடுத்த தமிழ் சினிமா பிரபலங்கள் இன்று ‘பொதுநல நோக்கில்’ மோடியின் பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள்.

  ஜெய் ஹோ! ச்சைய் மோடி ஹோ!

 11. உங்கள் ஏரியாவில் ஒரு டீக்கடை. நீங்கள் வழக்கமாக அங்கு தான் டீ குடிப்பீர்கள் ஓசி தினத்தந்தியை மேய்ந்து கொண்டே.. ஒரு பக்கத்தைத் திருப்புவதற்குள் ஓராயிரம் வியாக்கியானம், அரசியல் பன்ச்சுகள், மேதாவி டயலாக்குகள், நாட்டைத் திருத்தும் ஐடியாக்கள், “இந்த மாதிரி ஆளுங்கள மிலிட்டரிய விட்டு சுடணும் சார்”, “அரசியல்வாதியாலத் தான் சார் நாடே கெட்டுப்போகுது”, “ஊழல் பண்ணுறவன ஒடனே பிடிச்சி தூக்குல போடணும் சார்” போன்ற அனல் பறக்கும் வசனங்களை எல்லாம் அந்த ஆறிப்போன டீயை உறிந்து கொண்டே பேசுவீர்கள்.. உங்கள் பேச்சை வாய் பிளந்து கேட்கவும் அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது..

  http://www.sivakasikaran.com/2014/12/blog-post.html

  எம்ஜிஆர் காலத்திலேயே சினிமா என்னும் பொழுது போக்கு அம்சத்தை மக்களின் அன்றாட வாழ்விலும் அரசியலிலும் இரண்டறக் கலந்து விட்டதில் இந்த மீடியாவிற்குத் தான் பெரும்பங்கு இருக்கிறது.. இன்று வரை மக்களுக்குத் தேவையான செய்தியைக் கொடுக்காமல், நடிகைகளின் சதைகளையும், நடிகர்களின் கிசுகிசுக்களையும் நம்பி, மஞ்சள் பத்திரிகை போன்று டிஷ்யூ பேப்பருக்குக் கூட பயன்படாத, டைம் பாஸ் செய்வதற்காகப் பத்திரிகையை நடத்தும் யாருக்கும் ரஜினியைக் கேட்க அருகதை கிடையாது.. ரஜினியைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் மீடியா, முதலில் தன்னை அங்கு நிறுத்திக்கொண்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.. ஒவ்வொரு வாரமும் சினிமா ஸ்பெசல், ரஜினி ஸ்பெசல், என்று போட்டு தங்களில் சர்குலேசனைக் கூட்டி கல்லா கட்டுவதில் குறியாக இருக்கும் மீடியாக்கள், கொஞ்சமாவது மக்களுக்குத் தேவையான செய்தியை இனிமேலாவது கொடுக்கட்டும்..

 12. சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அரசியல் நாகரிகம் பண்பாடு அறிந்தவர்கள்.
  எதிரியே இருந்தாலும் அவர்கள் இறந்தால் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது தான் தமிழர் பண்பாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க