privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்துறையூர் வெடிமருந்து விபத்து - அரசு நடத்திய நரபலி ! நேரடி ரிப்போர்ட்

துறையூர் வெடிமருந்து விபத்து – அரசு நடத்திய நரபலி ! நேரடி ரிப்போர்ட்

-

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள T.முருங்கப்பட்டி மற்றும் சுற்றுவட்டார 5 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு 1-12-2016 காலைப் பொழுது கடும் அதிர்ச்சியாகவே விடிந்தது. இந்த ஊரில் இயங்கி வந்த வெற்றிவேல் வெடிமருந்து (VETRIVEL EXPLOSSIVE) ஆலையின் உற்பத்தி பிரிவு ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு வேலை செய்த 21 பேர் உடல் சிதறி இறந்தனர். இறந்தவர்களில் ஒருவரது உடல்கூட முழுமையாகக் கிடைக்கவில்லை.

சிதறிய சதைத்துண்டுகளை இரண்டாவது நாளாக 1 கி.மீ சுற்றளவில் பொறுக்கி எடுத்த வண்ணம் இருகின்றனர். இதனால் போஸ்ட்மார்ட்டம் செய்ய முடியாமல் மரபனு சோதனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது அரசு. இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினரின் ஒரு பாகத்தைக் கூட கண்டறிய முடியாத மக்கள் செய்வதறியாமல் திகைத்து இறுதியில் இறந்த இடத்தின் மண்ணை அள்ளிச்சென்று இறுதிச்சடங்கு செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

இறந்து போனவர்களின் எண்ணிக்கையைக்கூட கண்டறிய முடியாத நிலையில் 18, 19 என்று உறுதியின்றி அறிவிக்கப்படுகிறது. இன்னும் சிலரைக் காணவில்லையென உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உடல் கிடைக்காததால் மட்டுமல்ல வேலைக்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்ற பதிவேடு கூட ஆலை நிர்வாகத்திடம் இல்லை என்பதுதான் ஆலையின் இலட்சணம்.  இறந்தவர்களில் பெரும்பாலானோர் 30-40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதினர். குடும்பத் தலைவர்களை பறிகொடுத்துவிட்டு ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் நிற்கிறது.

PP posterதுறையூரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் பச்சமலை, கொல்லிமலை ஆகிய இரண்டு மலைகளுக்கு இடையில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது அந்த கிராமம். உயிர்காக்கும் மருத்துவமனைகளே இல்லாத கிராமத்தில் உயிருக்கு உலை வைக்கும் தனியார் வெடிமருந்து ஆலையை நடத்த அனுமதித்துள்ளன மத்திய – மாநில அரசுகள்.

1999-ல் சேலத்தில் உள்ள பார்க் ப்ளாசா ஹோட்டல் உரிமையாளர் விஜய கண்ணன் என்பவர்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அப்போது இது வெடிமருந்துகளை சேமித்து வைக்கும் குடோனாக மட்டும்தான் நிறுவப்பட்டது. பிறகு படிப்படியாக அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஜெலட்டின் குச்சிகள் தயாரிப்பதற்கான உரிமையை வாங்கி இன்று மைனிங் வேலைகளுக்கான வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக பரிணமித்துள்ளது.

இதில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இங்கு 150 கிலோ வெடிப்பொருள்தான் வைத்திருக்க அனுமதி, ஆனால் 2000 கிலோவுக்கு மேல் முறைகேடாக சேமிக்கப்படுகிறது என்கிறார்கள் தொழிலாளிகள். இங்கு சுமார் 750 தொழிலாளர்கள் 3 ஷிஃப்ட்டுகளாக வேலை செய்துள்ளனர். இதில் 18 பேர்தான் நிரந்தரம். மற்ற அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களே. வேலையில் சேர்க்கும் போதே இராஜினாமா கடிதத்திலும் சில வெள்ளைத் தாள்களிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் வேலைக்கு அமர்த்துகிறது நிர்வாகம்.

ஆலையில் தொழிலாளிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட எதுவுமே கிடையாது. ஏற்கனவே மூன்று முறை ஆசிட் கசிவினால் விபத்து ஏற்பட்டபோதும் வெளியில்தான் சிகிச்சை பெற்றுள்ளனர். ESI, PF போன்ற எந்த சலுகைகளும் இங்கு கிடையாது. விபத்து தடுப்பு பாதுகாப்பு வசதிகளும் கிடையாது. இருந்தும் 18 வருடங்களாக இந்நிறுவனம் இயங்கி வந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் ‘அதிரடிஆய்வு’-களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லுகிறார்கள் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்.

Rescue 2
எந்த விதிமுறையையும் மதிக்காத ஆலைநிர்வாகம்

எந்த விதிமுறையையும் மதிக்காத ஆலைநிர்வாகம் வெடி மருந்து கலந்த கழிவுநீரை சுத்திகரிக்காமலே அருகில் உள்ள ஓடையில் விட்டு வந்தனர். ஓடை நீரைக் குடித்த கால்நடைகள் சில இறந்துள்ளன. இது குறித்து போலிசில் புகார் கொடுக்க சென்றபோது “ஆட்டுக்கு 5000 காசு வாங்கிட்டு போங்க” ன்னு சொல்லி ஆலை நிர்வாகத்தின் அடியாளாக பேசியுள்ளனர் ‘சட்டத்தின் காவலர்கள்’. இந்த சம்பவத்திற்குப் பிறகு கழிவுநீரை வெளியில் தெரியாமல் ஆலைக்குள் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் விட்டுள்ளார் இந்த கொலைகார முதலாளி.

நிலத்தடி நீர் முழுவதும் விசமாக மாறி புற்றுநோயும், தொழுநோயும் ஏற்பட்டதால் கேன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதாக குமுறுகின்றனர் இந்த குக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள். சுத்திகரிக்கப் படாத கழிவு நீரால் பயிர்கள் பாதிப்படைவது போதாதென்று தண்ணரில் கலந்து விட்ட ஆசிட் – ஐ பிரித்தெடுப்பதற்காக  இரவு நேரத்தில் ஆவியாக்குவதால் அது பனி மூட்டம்போல் கவிழ்ந்து பயிர்களை கருக்கி விடுவதாக கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

தொடர்ந்த பாதிப்புகள் காரணமாக 2013 முதல் ஆலையை மூடக்கோரி தாசில்தார், கலெக்டர் போன்ற அரசு அதிகாரிகளிடமும் பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட அத்தனை துறை அலுவலகங்களுக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் உயரிய லட்சியத்தோடு ஆலையை பாதுகாப்பதற்காக அத்தனை துறை அதிகாரிகளும் கண்ணும் கருத்துமாக செயல் பட்டார்கள் போலும்! விவசாயம் மற்றும் குடிநீர் பதிப்பை முன்னிறுத்தி போராடி வந்த மக்கள், ஆலை வெடித்துச் சிதறிய பின்னர்தான் அதன் அழிவு வேலையை முழுமையாக உணர்ந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

உயிரைக் கொடுத்தேனும் ஆலையை விரட்டுவோம் என போர்க்கோலம் பூண்டுள்ளனர் பகுதி மக்கள். ஆலை வெடித்துச் சிதறிய பின் வந்த மாவட்ட ஆட்சியரையும் அமைச்சர் வெல்லமண்டி நடராசனையும் முற்றுகையிட்டு கார்களை கல்லால் அடித்து விரட்டியுள்ளனர். 3 நாட்களாக போக்குவரத்தை முடக்கியுள்ளனர். ஆலைக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். எந்த கட்சிகளையும் நம்ப மறுக்கின்றனர். கொட்டும் மழையிலும் துளியும் பின்வாங்காமல் நின்று போராடுகிறார்கள். “இந்த கம்பெனிய மூடசொல்லி நூறு தடவைக்கு மேல புகார் கொடுத்தும் அதிகாரிங்க கண்டுக்கல.

Victims list
அரசால் நரபலி தரப்பட்டவர்களின் பட்டியல்

“இன்னைக்கி இத்தன பேரு செத்ததுக்கு அப்புறமா எதுக்கு வந்தீங்க, கருமாதி பண்றதுக்கா?” என்று எஸ்.பி-யின் முகத்தில் காறி உமிழ்ந்து காக்கி மிடுக்கை தள்ளாட வைத்தனர் போராடும் பெண்கள். ஒவ்வொரு முறை இந்த ஆலைக்கெதிராக நாங்கள் மனு கொடுக்கும் போதும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனடியாக முடப்படும் என்று மக்களிடம் நாடகமாடி விட்டு கம்பெனிக்காரனிடம் ஆதாயமடைந்ததாக அம்பலப்படுத்துகிறார்கள் பொதுமக்கள்.

இடிந்து விழுந்த மவுலிவாக்கம் கட்டிடம்,  சென்னை பெருமழை – வெள்ளம், அதிகரித்து வரும் இரயில் – சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் என ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்கள் கொத்துக்கொத்தாக காவு வாங்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் உணர்த்துவது அழுகிநாறும் அரசமைப்பின் தோல்வியையே! இத்தகைய பேரிழப்புகள் இத்துடன் நிற்கப்போவதுமில்லை. தோற்றுப்போய் – மக்களுக்கெதிராக மாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெரியாமல் இனியும் சகித்துக்கொண்டு வாழப்போகிறோமா? நியாயப்படுத்த முடியாதபடி  சிக்கிக்கொண்டபின் அந்த ஆலை முதலாளியை மட்டும் குற்றவாளியாக சித்தரித்து கபட நாடகம் ஆடுகிறது அதிகார வர்க்கம்.

ஆண்டுக்கணக்கில் நடக்கப்போகும் நீதி மன்ற இழுத்தடிப்பில் மக்கள் கோபம் தணிந்து மறந்தே விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை ஆட்சியாளர்களுக்கு! இதை முறியடிக்க வேண்டுமானால் ஆலை முதலாளியை மட்டுமல்ல தோற்றுப் போன இந்த அரசுக் கட்டமைப்பையும் அதிகார வர்க்கத்தையும் கூண்டிலேற்ற வேண்டும்.

மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றும் மாற்று அமைப்பு முறைக்காக போராட வேண்டும். அது மட்டுமே இன்று கோரமாக கொல்லப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை மட்டுமல்ல, இனி எப்போதும் இப்படியொரு பாதிப்பு வராதவாறு மக்களைப் பாதுகாக்கவும் செய்யும். இந்த பிரச்சாரத்துடன்  மக்களை அமைப்பாகத் திரட்ட முயன்று வருகிறது மக்கள் அதிகாரம்.

எச்சரிக்கை: அதிர்ச்சியூட்டும் படங்கள் – பலவீனமானவர்கள் தவிர்க்கவும்.

செய்தி: மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு : 9445475157

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க