privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசசிகலா : குற்றம்தான் முதல்வர் பதவிக்கான தகுதி

சசிகலா : குற்றம்தான் முதல்வர் பதவிக்கான தகுதி

-

TALENT_P2மெரினா எழுச்சியால் தலை நிமிர்ந்த தமிழகத்தின் முகத்தில் சாணியால் அடிக்கப் பட்டதைப்  போன்றதொரு உணர்வு. எனினும் இது எதிர்பாராத அடி அல்ல. முதன்முறையாக வாங்கும் அடியும் அல்ல. மாண்புமிகு அம்மா ஏற்கனவே பலமுறை தமிழகத்தின் முகத்திலும், இந்த “மாபெரும்” ஜனநாயக அமைப்பின் முகத்திலும் காறி உமிழ்ந்து செருப்பால் அடித்திருக்கிறார்.

அறிவு ஜீவிகள் வலிக்காதது போல நடிக்கிறார்கள். அறிவில்லா ஜீவிகளான பாமர மக்களுக்கோ வலி பழகி விட்டது. அந்த தைரியத்தில்தான் சசிகலா முதல்வராகிறார்.

மெரினா எழுச்சி தோற்றுவித்திருக்கும் சொரணை மரத்துப் போவதற்கு முன்னால், தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.

சென்ற ஜனவரி – 2017 புதிய ஜனநாயகம் இதழில் “மாண்புமிகு மன்னார்குடி மாபியா”, என்ற தலைப்பிலும், “அ.தி.மு.க வை அழிக்காவிடில் தமிழகமே அழியும்” என்ற தலைப்பிலும் வெளிவந்த இரு கட்டுரைகளிலிருந்து சில பத்திகளை மட்டும் இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

எதிரிகளைப் பற்றி விளக்குவதன் நோக்கம் அவர்களை எதிர்த்துப் போராடுவதுதான்.

தேவைப்படுவது இன்னொரு மக்கள் எழுச்சி. அதனைத் தமிழகம் உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.

வினவு

ன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை (தற்போது முதல்வர் பதவியையும்) அதிகாரப் பூர்வமாக கைப்பற்றிவிட்டது

தனக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றுமாறு புரட்சித்தலைவர் தன்னிடம் ரகசியமாக சத்தியம் செய்து வாங்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்க வேண்டியிருப்பதாகவும் தனது வாரிசுரிமைக்கு ஆதாரம் காட்டி வாதாட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை அம்மாவுக்கு இருந்தது.

அத்தகைய நிலைமை சின்னம்மாவுக்கு இல்லை.  அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி அவர்தான் என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை.

_______

42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)
42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)

ம்மாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப ஒரு வார்தா புயல்தான் வரப்போகிறது” என்று வட இந்திய அரசியல் ஞானிகள் கூறிக்கொண்டிருக்க, சங்க பரிவாரத்தினரையே விஞ்சும் ராணுவக் கட்டுப்பாட்டை அதிமுகவினர் வெளிப்படுத்தினர். மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அந்த ஞானம் தோற்றுவித்ததுதான் இந்த அதிசயிக்கத்தக்க ஒற்றுமை!

______

“முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். “தகுதி” பற்றிய கேள்வியை ஜெயலலிதாவோடு நிறுத்திக் கொண்டாலோ, எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

எப்படிப் பார்த்தாலும் சசிகலா என்பவர் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கத்தின் தலைவி. நாளை மறுநாள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். இருப்பினும்,  நாளை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அவர் அமரும்போது, “மாண்புமிகு முதல்வர்” என்று என்று அவரை நாம் அழைக்காமலிருக்க முடியாது.

சசிகலாவை அவ்வாறு அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மன்னார்குடி மாஃபியாவையும் “மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு என்ன தெரியவேண்டுமோ அது சசிகலாவுக்குத் தெரியும். நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, மதுவிலக்கு, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் என்று ஒவ்வொரு துறை அமைச்சரின் அன்றாட வசூல் எவ்வளவு, அதில் தோட்டத்துக்கு சேர வேண்டிய தொகை எவ்வளவு என்பது சசிகலாவுக்குத் தெரியும். அதை வேவு பார்த்து சொல்வதற்கு உளவுத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்த தெரியும். ஏமாற்றுகின்ற அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பதவியைப் பறிப்பதற்கும் தெரியும்.

சாதிக்காரர்களை நியமித்து போலீசு துறையை கட்டுப்படுத்துவது எப்படி, மற்ற ஆதிக்க சாதி அமைச்சர்கள் அதிகாரிகளை கண்காணிப்பது எப்படி, சமாளிப்பது எப்படி, மற்ற கட்சிகளில் கைக்கூலிகளை உருவாக்குவது எப்படி என்பது உள்ளிட்ட நிர்வாகக் கலைகள் தெரியும்.  தேர்தல் கமிசன் அதிகாரிகள் முதல் நீதியரசர்கள் வரை அனைவரையும் விலைக்கு வாங்கும் வழிமுறைகள் தெரியும். ஒரு கிரிமினல் மஃபியாக் கும்பலின் தலைவிக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அத்தனையும் தெரியும்.

. “சசிகலாவைப் பற்றி அவருடைய எதிர்காலச் செயல்பாட்டை வைத்துத்தான் கருத்து கூற முடியும்” என்கிறார்கள் மாண்புமிகு எதிர்க்கட்சிகள். “கடந்த காலச் செயல்பாட்டை”க் காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன். சொத்துக் குவிப்பு வழக்கு முதல் சேகர் ரெட்டியின் மணற்கொள்ளை வரை அனைத்தும் கடந்த காலச் செயல்பாட்டில் விளைந்தவையே என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா என்ன?

முதல்வரின் தோழியாக இருந்தபோதே அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர், முதல்வராகிவிட்டால் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கும்போதே நமக்கு நெஞ்சு நடுங்குகிறது!

“சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார், அ.தி.மு.க வும் இருந்திருக்காது” என்று வெளிப்படையாக பொதுக்குழுவில் பேசினார் வளர்மதி. “விசுவாசமான கூட்டுக் குற்றவாளி” என்பதுதான், இன்று அம்மாவுக்கு அடுத்தபடி முதல்வராவதற்கு சசிகலா பெற்றிருக்கும் முதன்மையான தகுதி.

ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக.

உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது.

குற்றம்தான் முதல்வர் பதவிக்கான தகுதி.

  புதிய ஜனநாயகம் ஜனவரி – 2017