Tuesday, July 23, 2024
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)

-

பாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.

அதேபோல “ஆரிய – பார்ப்பன சனாதன பிரம்ம சூத்திரத் தத்துவம்” மார்க்சிய – லெனினிய தத்துவத்துக்கு எதிரானது, உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்ணாசிரம, சாதீய அடிப்படையிலானது என்பதை சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்யகோடிகளும் ஒப்புக் கொண்டாலும் “அறிவார்ந்த சிந்தனைப் பணி”, “தத்துவ ஞானம்”, “பாரதீயத் தத்துவம்” என்று கூறி ஏற்றிப் போற்றுகின்றனர்.

Agnihotra
“ஆரிய – பார்ப்பன சனாதன பிரம்ம சூத்திரத் தத்துவம்” மார்க்சிய – லெனினிய தத்துவத்துக்கு எதிரானது

வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றின் சமூகப் பங்கு பற்றி அந்தப் போலி மார்க்சிஸ்டுகளே “நால்வருண முறையின், இந்திய அடிமை முறையின் தத்துவங்கள்தான் வேதங்களும் உபநிடதங்களும், பிராமண ஆதிக்கத்திலான சாதீய முறையின் தத்துவங்களும் இவைகள்தான்.” (மார்க்சிஸ்ட்”93, அக் பக்: 34) என்கின்றனர்.

“வேதங்களின் இறுதிப்பகுதி என்ற முறையில் பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என்று ஏராளமான புதிய தத்துவ விளக்கங்களை உருவாக்கியுள்ளனர். இந்த வளர்ச்சிப் போக்கில் வேத காலத்தின் – வேதமதத்தின் எளிமை மறைந்தது. பிராமண ஆதிக்கம் வலுவடைந்தது. இந்த புதிய தத்துவங்கள் எல்லாம் பிராமண ஆதிக்கத்தின் தத்துவ அடிப்படையாக அமைந்தது.”

“இக்காலத்தில் தான், பிரம்மம் தான் உண்மை உலகு மாயை என்று ஒரு உபநிடத விளக்கத்தை – பிரம்ம சூத்திரம் என்ற விளக்க உரையை பாதராயணன் (வேத வியாசர்) உருவாக்கினார். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பிற்காலத்தில் சங்கராச்சாரியார் தன்னுடைய பிரம்மசூத்திரத்தை எழுதினார். உபநிடத காலத்தில் தான் முன்பிறப்பு. மறுபிறப்பு, கருமபலன், தலையெழுத்து, நரகம், சொர்க்கம் போன்ற தத்துவங்கள் எல்லாம் பரப்பத் தொடங்கினார். உபநிடத காலத் தத்துவங்கள் இந்திய சமுதாயத்தில் ஒரு பின்னடைவை அல்லது தேக்க நிலையை உருவாக்கியது என்று கூறினால் மிகையாகாது.”

உபநிடத காலத்தைத் தொடர்ந்து, பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய லோகாயத, சார்வாக, ஆஜீவக, புத்த, சமண, தத்துவங்களின் வீழ்ச்சியும், சாதீய அமைப்பிலும், புராதன ஆச்சாரங்களிலும் வேரூன்றிய இந்து மதத்தின் முன்னேற்றமும் புதிய தத்துவ இயக்கத்திற்குப் பாதை திறந்து விட்டது; பழைய வைதீக ஆச்சாரங்களின் புனரமைப்பு என்ற முறையில்தான் இந்துமதம் வலுவடைந்தது; ஆனால், புதிய தத்துவ சிந்தனைகளின் புதுவடிவம் என்ற முறையில் மதத்தின் கையைப் பற்றிக் கொண்டுதான் தத்துவங்கள் முன்னேற வேண்டியிருந்தது. சங்கரன், இராமானுஜர், மத்வர் முதலிய புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் எல்லாம் உபநிடதத் தத்துவங்களையும் புராண வேதாந்தத்தையும் பகவத் கீதையையும் சனாதன தர்மங்களையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டுதான் தங்களின் தத்துவங்களுக்கு வடிவம் அளித்தனர் என்கின்றனர் போலி மார்க்சிஸ்டுகள்.

cartoon2
வர்க்க சார்பற்ற முறையில் பொதுநிலையில் நின்று மனித சிந்தனை, தத்துவார்த்த போக்கை ஆய்வு மதிப்பீடு செய்வதைப் போல பித்தலாட்டம் செய்கிறார் நம்பூதிரி.

ஆக, வேத உபநிடத காலத்திலும் அதற்குப் பின்வரும் ஆரிய – பார்ப்பன சனாதனிகளால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் எல்லாம் வர்ண – சாதி ஒடுக்குமுறைக்கான ஆயுதங்களாகவும், சமுதாய முன்னேற்றத்துக்குத் தடைகளாகவும், பிற்போக்கானவைகளாகவும் இருந்தன என்கிற முடிவுக்குத்தான் மேற்கண்ட போலிமார்க்சிஸ்டுகளின் தொகுப்பில் இருந்து வரமுடியும். ஆனால் தமது ஆரிய – பார்ப்பனத் தன்மையின் காரணமாக அவற்றையே இவர்கள் தலைசிறந்த, தன்னிகரற்ற தத்துவ அறிவுச் சாதனைகள் என்று போற்றுகின்றனர்.

“உலகில் முதன் முதலாக தத்துவ சிந்தனை வளர்ச்சி அடைந்த மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவும் கிரேக்கமும் தான் அவைகளில் முதலில் இடம்பெறும் நாடுகள். இன்று உலகில் மிகவும் முன்னேறியுள்ள ஐரோப்பாவும் அமெரிக்காவும் மிகவும் பின்தங்கியிருந்த காலத்தில் தத்துவச் சிந்தனையில் ஈடுபடும் அளவிற்கு இந்தியநாடு வளர்ச்சியடைந்திருந்தது.” (“93 ஜீலை, மார்க்சிஸ்ட் பக்: 29) என்று பீற்றிக் கொள்கின்றனர்.

குறிப்பாக ஆதிசங்கரனின் தத்துவ வெற்றி, பிராமணர் மற்றும் மற்ற ஆதிக்க ஜாதிகளின் வெற்றி, இந்தியச் சமுதாயத்தின் மற்ற பகுதியின் தோல்வி என்பதை சங்கரன் நம்பூதிரி ஒப்புக் கொள்கிறார். “பிராமண மேலாதிக்கத்தின் கையில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் தோல்வி, கருத்து முதல்வாதத்திடம் பொருள்முதல் வாதம் அடைந்த தோல்வி ஆகியவை, இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. இது இறுதியில் தேச சுதந்திரத்தை இழப்பதற்கு இட்டுச் சென்றது” என்பதை நம்பூதிரி ஏற்கிறார். இருந்தாலும் இதற்குரிய தத்துவத்தை உருவாக்கிய ஆதிசங்கரனை கேரள மைந்தர், மாமுனிவர் என்று போற்றுகிறார்.

“சங்கரர் இந்தியாவின் (மேலும் உலகத்தின்) கருத்து முதல்வாத தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்தவர். அவருடைய அத்வைத வேதாந்தம், இந்திய மனித சமுதாய அறிவுக் களஞ்சியத்துக்கு அளித்த விலை மதிப்பற்ற அன்பளிப்பாகும்.” என்கிறார் நம்பூதிரி “ஆதிசங்கரனின் திறமை அசாதாரணமானது; அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். வேதங்கள், உபநிடதங்கள் அவர் காலத்தின் பல்வேறு தத்துவங்கள் ஆகிய அனைத்திலும் ஆழமான புலமைபெற்று எதிர்த்தரப்பு தத்துவ சிந்தனையாளர்களையெல்லாம் தோற்கடித்து இந்திய நாட்டின் சிந்தனைத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று நம்பூதிரியின் தமிழ்நாட்டுத் தத்துவத்தரகர் பரமேசுவரன் புகழ்கிறார்.

Shankaracharya
சங்கராச்சாரியார்

ஆதிசங்கரனின் தத்துவத்தை இவ்வளவு தூரம் தாங்கிப் பிடிப்பதற்கு ஏதோ மார்க்சிய – லெனினியத் தத்துவ அடிப்படையிருப்பதைப் போல இந்தியப் போலி மார்க்சிஸ்டுகளின் குரு சங்கரன் நம்பூதிரி வாதிடுகிறார். “இந்தியத் தத்துவத்தின் மிக உயர்ந்த வடிவமான சங்கரனின் தத்துவம் மார்க்சிய லெனினிய இயக்க இயல் பொருள் முதல்வாதத்துக்கு எதிரானது என்றாலும் எந்த ஒரு மார்க்சியவாதியும், அத்தத்தத்துவத்தின் பரிணாம வளர்ச்சி, இந்திய சிந்தனை வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டம் என்பதையும், அது இந்திய சமுதாய வளர்ச்சியோடு பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்தது என்பதையும் காணாமல் இருக்க முடியாது” என்கிற பொது அணுகுமுறையைப் பயன்படுத்தி பின்வரும் முடிவுக்கு வருகிறார் சங்கரன் நம்பூதிரி. அவர் கேரளாவில் பிறந்தாலும் இந்திய கருத்து முதல்வாதத்தின் நல்ல அம்சங்களை முன்னுக்கு எடுத்துச் சென்ற மிக உயர்ந்த அறிஞர் என்ற பெயரையும், புகழையும் பெற்றிருந்தார். அவருடைய வாழ்க்கையையும் எண்ணங்களையும், கேரளம் மட்டும் அல்லாது, முழுமையான இந்தியாவும் உருவாக்கியது – என்கிறார்.

மார்க்சிய லெனினிய இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரான கருத்துமுதல்வாதத் தத்துவத்தையே ஆதிசங்கரன் முன் வைத்தாலும் அதை இவ்வளவு தூரம் போற்றுவதற்கு நம்பூதிரி சொல்லும் காரணம் மிகப் பெரிய தத்துவ மோசடியாகும்.

கருத்துமுதல்வாதமும், பொருள்முதல்வாதமும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ஒன்றுக்கொன்று எதிரான, எதிர்மறைத் துருவங்கள் அல்ல என்கிறார். அவற்றுக்கிடையிலான உறவு பற்றி பின்வருமாறு விளக்குகிறார்: “இது நிஜ வாழ்க்கையிலும், மனித சிந்தனையிலும் உள்ள எதிர்மறைகளைப் போல், கருத்துமுதல்வாத, பொருள்மதல்வாத கருத்துப் போக்குகள், இயக்க மறுப்பு நிலையை விட (Metaphysics) இயக்க இயல்முறையோடு உறவுள்ளது என்பதைக் காணத்தவறுகிறது. கருத்துமுதல் வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய எதுவுமே ஒரே நிலையில் இருப்பது கிடையாது. எப்பொழுதும் அவை ஒன்றை ஒன்று நிராகரித்து முன்னேறுவது, புதிய, புதிய வடிவங்களில் அவைகளுக்கு இடையிலான போராட்டம் நடப்பது ஆகியவை, மனித சிந்தனையின் வளர்ச்சி விதியாகும். ஆகவே, பொருள் முதல்வாதம் என்ற வகையில் அது கருத்து முதல்வாதத்தைவிட உயர்ந்தது அல்லது கருத்து முதல்வாதம் எனற வகையில் அது பொருள் முதல்வாதத்தை விட தாழ்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை.” (89 அக், மார்க்சிஸ்ட் பக்1)

சங்கரன் நம்பூதிரியின் மேற்கண்ட விளக்கமே அவரது தத்துவப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி விடுகிறது. முதலில் அவரே கருத்து முதல்வாதமும் பொருள்முதல் வாதமும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஒன்றுக்கொன்று எதிரான, எதிர்மறைத் துருவங்கள் அல்ல என்கிறார். ஐந்தே வரிகளுக்குப் பிறகு, அவை எப்பொழுதும் ஒன்றை ஒன்று நிராகரித்து முன்னேறுவது புதிய, புதிய வடிவங்களில் அவைகளுக்கு இடையிலான போராட்டம் நடப்பது ஆகியவை மனித சிந்தனையின் வளர்ச்சி விதியாகும் என்கிறார், வேறொரு இடத்தில் மார்க்சிய-லெனினிய இயக்கஇயல் பொருள் முதல்வாதம் ஆதிசங்கரனின் தத்தவத்திற்கு எதிரானது என்கிறார்.

Aryans_settling_in_Indiaஉண்மையில், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு எதிரெதிரான அம்சங்களைக் கொண்ட முரண்பாட்டின் நிகழ்ச்சிப் போக்குத்தான் மனித சிந்தனையின் தத்துவ இயலின் வளர்ச்சி விதியாகும். இவை இரண்டும் எப்போதும் எந்த இடத்திலும் எதிர்மறைத் துருவங்கள் தாம். அவை சம நிலையிலோ, இணக்கமான உறவுடனோ ஒருபோதும் நிலவ முடியாது; இரண்டில் ஏதாவது ஒன்று ஆதிக்கநிலையில் இருக்கும்; சமனற்ற, எதிரெதிரான மாறுகின்ற மோதிக்கொள்ளும் நிலை இல்லை என்றால் மனித சிந்தனை, தத்தவ இயல் வளர்ச்சிப் போக்குக்கு அடிப்படையான முரண்பாடே இல்லாமல் போகும்.

இவ்விரு தத்துவப் போக்குகளுக்கு இடையிலான முரண்பாடு மோதலுக்கு அப்பால் ஒரு பொதுநிலை, நடுநிலையில் நின்று யாருமே மதிப்பீடு ஆய்வு செய்வது முடியாது. குறிப்பாக மார்க்சிய – லெனினியவாதிகளுக்கு இது சாத்தியமே இல்லை. ஏனெனில் இரண்டு போக்குகளில், பொருள் முதல்வாதம் பாட்டாளி வர்க்க சார்புடையது; கருத்து முதல்வாதம் அதற்கு எதிரான வர்க்கங்களின் சார்புடையது. ஆனால் வர்க்க சார்பற்ற முறையில் பொதுநிலையில் நின்று மனித சிந்தனை, தத்துவார்த்த போக்கை ஆய்வு மதிப்பீடு செய்வதைப் போல பித்தலாட்டம் செய்கிறார் நம்பூதிரி. வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையிலான முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான முரண்பாட்டில் எப்படி நடுநிலை கிடையாதோ, “ஒரு வர்க்கமின்றி மற்ற வர்க்கம் கிடையாது, இரண்டும் சேர்த்து நடத்தும் வர்க்கப் போராட்டத்தில் தான் சமுதாய வளர்ச்சிப் போக்கு நிகழ்கிறது” என்று கூறி அவ்வர்க்கங்களுக்குத் தூரத்தில் நின்று மதிப்பீடு – ஆய்வு செய்ய முடியாதோ அதே போன்றதுதான் இதுவும்.

“கருத்து முதல்வாத, பொருள் முதல்வாத, கருத்துப்போக்குகள், இயக்க மறுப்பு நிலையைவிட இயக்க இயல்முறையோடு உறவுள்ளது” என்கிற வாதம் நம்பூதிரியின் இன்னொரு தத்துவப் பித்தலாட்டம். இந்த வாதத்தின் பொருள் என்னவென்றால், கருத்து முதல்வாதம் என்றாலே இயக்க இயல் முறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதனால் இயக்க மறுப்பு நிலையை விடவும், (இயக்க மறுப்புநிலை பொருள் முதல்வாதத்தை விடவும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) இயக்க இயல்முறை உறவுகளை கருத்து முதல்வாதத்தை தனக்கு சமநிலை உடையதாக நெருக்கமானதாக பொருள்முதல்வாதம் மதிக்கிறது” என்கிறார். கருத்து முதல்வாதமெல்லாம் இயக்க இயல் அடிப்படையிலானது என்பதே தவறானது; இயக்க இயல் அடிப்படையிலான கருத்துமுதல்வாதமோ, இயக்க மறுப்புநிலைவாத பொருள்முதல்வாதமோ, இரண்டுமே தவறானதாம்; ஒன்றைவிட ஒன்று மேலானது, பின்னதைவிட முன்னது தனக்கு நெருக்கமானது என்று மார்க்சிய – லெனினியப் பொருள் முதல்வாதம் எப்போதுமே கருதியது கிடையாது.

கருத்து முதல்வாதம் முட்டாள்தனமானது என்று இயக்கமறுப்பு பொருள் முதல்வாதம் கருதியது; ஆனால் கருத்து முதல்வாதம் ஒரு ஒருதலைப்பட்சமாக, மிகைப்படுத்தப்பட்ட, பொருளில் இருந்தும் இயற்கையில் இருந்தும் பிரித்து அறிவின் ஒரு பகுதியை, ஒரு அம்சத்தை, அதன் பன்முகங்களின் ஒன்றை முழுமையான கருத்தாகவும் தெய்வீகமானதாகவும் ஆக்குகிறது என்று இயக்க இயல் பொருள் முதல்வாதம் கருதுகிறது. மத மூடநம்பிக்கையான கருத்து முதல்வாதத் தத்துவம் எல்லையில்லாத சிக்கல் நிறைந்த அறிவின் சாயலில் ஒன்றின் மூலமாக, மதமூடநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் பகுதியாக உள்ளது – இந்த லெனினுடைய வரையறுப்பைக் காட்டி, மனித சிந்தனையில் கருத்து முதல்வாதத்தின் பங்கை மார்க்ஸ், எங்கெல்சைப் போலவே லெனினும் மதித்தார் என்கிறார் நம்பூதிரி.

ஃபயர்பாக் மற்றும் ஹெகல்
ஃபாயர்பாக் மற்றும் ஹெகல்

இங்கே கருத்துமுதல்வாதம் பற்றிய இயக்க மறுப்புநிலை மற்றும் இயக்க இயல்நிலை எடுக்கும் பொருள் முதல்வாதிகளின் மாறுப்பட்ட, கண்ணோட்டங்களைத் தான் லெனின் விளக்குகிறார். இது எப்படி மனித சிந்தனையில் கருத்து முதல்வாதத்தின் பங்கை மதிப்பதாகும்? இதை வைத்து ஃபயர்பாகின் இயக்க மறுப்பு நிலை பொருள் முதல்வாதத்தை விட ஹெகலின் இயக்க இயல் கருத்து முதல்வாதம் மனித சிந்தனையின் வளர்ச்சியில் மேலான பங்கு வகிப்பதாக மார்க்சிய லெனினிய ஆசான்கள் மதிக்கின்றனர் என்று நம்பூதிரி புளுகுகிறார். ஹெகலின் கருத்து முதல்வாதத்தை நிராகரித்து இயக்க இயல் அணுகு முறையையும், ஃபாயர்பாகின் இயக்க மறுப்புநிலையை நிராகரித்து பொருள் முதல்வாதத்தையும் எடுத்து செழுமைப்படுத்தி இயக்க இயல் பொருள் முதல்வாதத் தத்துவத்தை உருவாக்கினார் என்பதுதான் உண்மை. ஆனால் ஹெகலின் கருத்து முதல்வாதத்தைப் போலவே ஃபாயர்பாகின் பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்து வந்ததுதான் இயக்க இயல் பொருள்முதல்வாதம் என்று பச்சையாகப் புளுகுகிறார் நம்பூதிரி (மேற் படி பக் 2).

அதே சமயம் ஆதிசங்கரனின் தத்துவத்தை இவ்வளவு தூரம் ஏற்றிப் போற்றும் நம்பூதிரி, அது ஹெகலியத் தத்துவத்தைப் போல இயக்க இயல் அடிப்படையிலானது என்று எங்கேயும் கூறவோ, நிரூபிக்கவோ முயலவில்லை. ஆகவே அதில் மதிக்கத்தக்க அம்சம் எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை, ஆனால், சங்கரனின் தத்துவம் இன்றைய காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்புடையதல்ல; அதையும் இந்து மறுமலர்ச்சியாளர்களையும், வேத உபநிடத உணர்வுகளுக்கு எதிராகவும் போராடுவதன் அவசியத்தை ஒருபுறம் குறிப்பிட்டாலும், அடுத்த மறுபுறம் பின் வருமாறு எழுதுகிறார் நம்பூதிரி.

“எனினும், இதைச் செய்யும்போது மார்க்சிய லெனினிஸ்டுகளாகிய நாம், எப்பொழுதும் கருத்து முதல்வாதக் குழுக்களின் பிரதிநிதியாக விளங்கிய சங்கரர் மற்றும் கருத்து முதல்வாத பிரிவினரின் கோட்பாடுகள் அனைத்தையும் மறுக்கும் போக்கினைப் பின்பற்றக்கூடாது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல மார்க்சிய அறிஞர்கள் இந்தத் தவறை செய்திருக்கிறார்கள்” என்கிறார் நம்பூதிரி

இதைத் தொடர்ந்து ஒரு சோவியத் திருத்தல்வாதியின் பின்வரும் கூற்றை தனக்கு ஆதரவு வாதமாக வைக்கிறார். “சில மார்க்சிய அறிஞர்கள் அடிக்கடி பொருள் முதல்வாதத்துடன், பிராமண எதிர்ப்பு மனோபாவம், அல்லது ’விடுதலை’ (ஆன்மா) தத்துவத்தை நிராகரிப்பது போன்ற பொருள் முதல்வாதம் இல்லாத தத்துவங்களை இணைத்துப் பார்க்கிறார்கள். லோகாயத தத்துவம் ஒரு தலைப்பட்சமாக மேல்மட்டத்திற்கு தள்ளப்பட்டு அதே நேரத்தில் வேதாந்த தத்துவம் ஏழாவதாகவும், கடைசியாகவும் வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்கிறார்.

இந்த ஆசிரியர், “வேதாந்தம் அன்றும் இன்றும் இந்தியத் தத்துவங்களிலேயே செல்வாக்கு படைத்தது, மேலும் சங்கரர், இந்திய தத்துவத்தில், ஏறக்குறைய மேற்கு ஐரோப்பிய தத்துவங்களில் பிளாட்டோவின் தத்துவம் பெற்றிருக்கும் இடத்தை, பெற்றிருக்கிறார்” என்று கூறுகிறார். (அக்’89 மார்க்சிஸ்ட் பக்: 12-13)

இப்படிப் போலிகளினால் போற்றப்படும் ஆதிசங்கரனின் அத்வைதமோ, பிற பிரம்ம சூத்திர ஆன்ம தத்துவங்களோ உலகிலேயே தனிச் சிறப்பானவையா என்றால் எதுவும் கிடையாது. போலி மார்க்சிஸ்டுகளே ஒப்புக் கொண்டுள்ளவாறு ஆதி சங்கரனின் அத்வைத தத்துவம் என்பது ஆரிய-பார்ப்பன சனாதன அமைப்பை உருவாக்கிக் காத்துக் கொள்வதற்காக வேதங்கள், உபநிடதங்கள் பிராமணங்கள், ஆரணியங்கள், இதிகாச-புராணங்கள், இறுதியாக வேதாந்தங்கள் ஆகியவற்றின் மூலத் தத்துவமான பிரம்ம சூத்திரத்தின் புதிய விளக்கம் தான். இவற்றுக்கெதிராக லோகாயதம், சார்வாகம், ஆஜீவகம், பெளத்தம், சமணம் ஆகிய பொருள் முதல்வாதம் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு மதங்களின் தாக்குதலால் சனாதன வருணாசிரம, சாதிய அமைப்பு ஆட்டங்கண்டபோது அதற்கு முட்டுக் கொடுத்துப் புத்துயிர் ஊட்டுவதற்காக பல்வேறு தத்துவப் பித்தலாட்டங்கள், அரசியல் சூழ்ச்சி மோசடிகள், அராஜக – அடாவடிகள், ஆளுவோரின் துணையுடன் கூடிய அக்கிரமங்கள், அடக்குமுறைகள் மூலமாக நிறுவப்பட்டதுதான் சங்கரனின் அத்வைதத் தத்துவம். இவற்றையெல்லாம் மிக விரிவாகவும், ஆழமாகவும், ஆதாரத்துடனும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஆகவே, போலி மார்க்சிஸ்டுகள் வாதிடுவதைப் போல ஆதிசங்கரன் தனது அசாதாரணத் திறமையினாலோ, அறிவு ஆழத்தினாலோ, வெற்றி ஈட்டிடவில்லை. ஆதிசங்கரனின் அத்வைத தத்துவம் என்பது அறிவுத் தெளிவு பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் தடுத்து மனித உடற்கூறுகளுக்கும் புலனுணர்ச்சிக்கும் – சிந்தனைக்கும் இடையிலான இயக்க இயல் உறவை பற்றிய அறியாமையை ஆதாயமாகக் கொண்டு, அதை மேலும் சூட்சுமப்படுத்தி தமது சனாதன சுயநலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதுதான்.

இதைப் பின்வருமாறு எங்கெல்சு விளக்குகிறார்:
marxandengels..எல்லாத் தத்துவ ஞானத்துக்கும் – குறிப்பாக நவீன காலத்திய தத்தவ ஞானத்துக்கும் – அடிப்படையான மாபெரும் பிரச்சனை, சிந்தனைக்கும் வாழ்நிலைக்கு முள்ள உறவு பற்றிய பிரச்சனையாகும். மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களுடைய உடலின் கட்டுமானத்தைப் பற்றி ஒன்றும் அறியாதிருந்த போது, கனவுகளுக்குக் காரணம் விளங்காத போது, தமது சிந்தனையும், புலனுணர்ச்சியும் தமது உடலின் நடவடிக்கைகள் அல்லவென்றும், உடம்பில் தங்கியிருந்து சாவுக்குப் பின் வெளியேறிவிடுகிற ஒரு தனிவேறான ஆன்மாவின் நடவடிக்கைகளே என்றும் நம்பத் தொடங்கியபோது இந்த ஆன்மாவுக்கும் வெளியுலகத்துக்கும் இடையேயுள்ள உறவு பற்றி சிந்தித்துப் பார்க்கும் கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

சாவுக்குப் பின் உடலை விட்டு வெளியேறி, ஆன்மா தொடர்ந்து வாழ்கிறதென்றால், அதற்கென்று ஒரு தனி வேறான சாவைப் புனைவதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை. இவ்வழியே தான் அதன் சாகாநிலை பற்றிய கருத்து உதித்தது. இக்கருத்து அந்த வளர்ச்சிக் கட்டத்தில் ஓர் ஆறுதலாக நிச்சயமாகத் தோன்றவில்லை. எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்று அமைந்த ஒரு தலை விதியாகவும், அடிக்கடி (கிரேக்கர்கள் கருதியதுபோல்) நேருறுதியான துரதிர்ஷ்டமாகவும் அது தோன்றியது.

ஆன்மா ஒன்று இருக்கிறதாக ஒப்புக் கொண்டு விட்டால், பிறகு உடல் மாண்டபின் இந்த ஆன்மா எங்கே போய் ஒளிந்து கொள்கிறது என்று தமக்குத் தாமே விளக்கிக் கொள்ள முடியாமல் இருந்த, எங்கும் நிலவிய அறியாமை தான் தனிநபர் வகைப்பட்ட அமரநிலை பற்றி சலிப்பூட்டும் எண்ணப் போக்குக்குப் பொதுவான வழியில் கொண்டு சென்றதே ஒழிய, மன ஆறுதலுக்கான மத விருப்பம் அல்ல. இதே போன்ற முறையிலேதான் இயற்கைச் சக்திகளை உருவகப்படுத்துவதின் மூலமாக முதன் முதலாக கடவுளர்கள் தோன்றினர். சமயங்கள் மேன்மேலும் வளர்ச்சி பெற்றதையொட்டி இக்கடவுளர்கள் மேன்மேலும் உலகியலுக்கு அப்பாற்பட்ட வடிவம் எடுத்துக் கொண்டு, மனிதரின் அறிவு வளர்ச்சிப் போக்கில் இயற்கையாக நடந்து வரும் சூட்சுமப்படுத்தும் ஒரு நிகழ்வுப் போக்கின் மூலமாக – வடிகட்டி இறக்கு நிகழ்வுப் போக்கு மூலமாக என்றுகூட அனேகமாக நான் சொல்லக்கூடும் – இறுதியில் ஏறத்தாழ வரம்பிட்ட மூர்த்தியுடைய, ஒருவருக்கொருவர் வரம்பிட்டுக் கொள்கிற பல கடவுளர்களிடையேயிருந்து ஒன்றே கடவுள் என்று சொல்லும் சமயங்களின் தனியொரு கடவுள் பற்றிய கருத்து மனிதர்களின் மனத்திலே உதித்தது.. (லுத்விக் ஃபாயர்பாகும் மூலச் சிறப்புள்ள ஜெர்மன் தத்துவ ஞானத்தின் முடிவும் – பக் 28, 29), (மார்க்சிஸ்ட் 94 ஜூன் பக். 58-59).

Debiprasad
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

இதைக் கூட சங்கரன் சுயமான மூல அறிவைக் கொண்டு செய்யவில்லை. அப்போது உருவாகியிருந்த கிறித்தவ, இசுலாமியர்களின் ஒரிறை என்ற தத்துவ நம்பிக்கையைத் திருடிக் கொண்டார். வருண-சாதி அமைப்பினால் வெறுப்புற்று ஆரிய – பார்ப்பன சனாதனத்தை எதிர்த்துப் போராடிய சக்திகளை இழுப்பதற்காக, காளி, மாரி, துர்க்கை முதல் பெரியபாளையத்தம்மன், துலுக்காணத்தம்மன் உட்பட எல்லாம் சக்தியின் வடிவம் என்றும் அவதாரக் கதைகளைப் புனைந்தும், ஒன்றே கடவுள் – அது பிரம்மம் என்றும் மாயாவாத அத்வைத – ஆன்மா பற்றிய கோட்பாட்டை முன்னிறுத்தியும் தத்துவ மோசடி செய்தார்; அதை நிலை நாட்டுவதற்கும் அனைத்து அதர்ம வழிகளையும் பின்பற்றினார்.

ஆரிய-பார்ப்பன சனாதன பிரம்ம சூத்திரத் தத்துவத்தை எதிர்த்துப் போராடி, நிலைகுலையச் செய்த சார்வாகம், ஆஜிவகம், பெளத்தம், சமணம் போன்ற தத்துவங்களையெல்லாம் அடக்குமுறை, அராஜகம், அக்கிரம வழிகளிலோ அல்லது எதிராளிகளின் தத்துவக் கோட்பாடுகளைத் திரித்தும், ஊடுருவிச் சிதைத்தும், மக்களை ஈர்த்த அவற்றின் முக்கிய அம்சங்களைத் திருடியும் இந்து மதம் தன்னைக் காத்துக் கொண்டது. இந்திய தத்துவ வரலாறு என்பதே இப்படி முரண்பட்ட, எதிரெதிரான இரண்டு வருண – சாதீய – வர்க்கப் பிரிவுகளுக்கிடையிலான போராட்டங்கள் நிறைந்ததுதான். இந்த உண்மையையும் ஒப்புக் கொண்டு திரித்துச் சொல்லுகிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள். அவை ஆதி முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் மாயாவாதத் தத்துவம் இல்லை; தெய்வீக சக்தியுடையதெனக் கருதப்பட்ட இயற்கை வழிபாடுதான் இருக்கிறது; அதில் நால் வருண சாதியப் பாகுபாடு கிடையாது; அதன் இறுதியில் யாராலேயோ “புருஷ சூக்தம்” என்கிற நால்வருண விளக்கம் புகுத்தப்பட்டு விட்டது. அந்த வேதமும், வால்மீகி இராமாயணமும் மத நூல்களல்ல; மிகச்சிறந்த இலக்கியங்கள்தாம் என்கின்றனர் போலி மார்க்சிஸ்டுகள்.

வேத உபநிடத, வேதாந்த பிராமண, ஆரண்ய, புராண – இதிகாசங்களில் உள்ள கருத்து முதல்வாதம் தோன்றியபோதே, அதற்கு எதிரான லோகாயதம், சார்வாகம், சாங்கியம் வைசேடிகம், ஆஜீவகம் போன்ற பொருள் முதல்வாதமும் தோன்றி விட்டது; இவை வேதங்களிலும், உபநிடதங்களிலும் வேதாந்தங்களிலும் அடங்கியுள்ளன; அதாவது அவற்றின் ஒரு பகுதியாக உள்ளன. வேத உபநிடத கால ரிஷிகளே, ஆரிய – பிராமண முனிவர்களே பொருள் முதல்வாதத்தையும் உருவாக்கி வளர்த்தனர் என்று பச்சையாகப் புளுகுகின்றனர். (93 ஜூலை மார்க்சிஸ்ட் பக் 35-40, 93 டிச, மார்க்சிஸ்ட் பக் 31-33)

ஆனால், “லோகாயத – சார்வாகர்கள்” முதலிய பொருள் முதல்வாதத் தத்துவவாதிகளும், அவர்களது சிந்தனைகள் அடங்கிய நூல்களும் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த அரசு அதிகாரத்தினால் முற்றாக அழிக்கப்பட்டன, ஆதிசங்கரன் போன்ற தத்துவவாதிகள், வேத உபநிடதங்கள் போன்ற நூல்கள் தமது சனாதனவாதங்களை நியாயப்படுத்துவதற்காக எதிர்த்தரப்பு என்ற முறையில் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களில் இருந்துதான் அடக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட பொருள் முதல்வாத சிந்தனை பற்றிய ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதேபோல ஆரிய பார்ப்பன சனாதனத் தத்துவம் தோன்றுவதற்கு முன்பே இங்கு நிலவிய புராதனப் பொருள் முதல்வாதத் தத்துவமும் ஆரியப் படையெடுப்பினாலும் அழிக்கப்பட்டன என்று தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா நிரூபித்துள்ளார். “பண்டைய இந்தியாவின் பொருள் முதல்வாதத்துக்கு ஆதரவாக” “இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பதும் மறைந்து போனதும் என்ன?” “இந்தியப் பொருள் முதல்வாதம் பற்றிய மேலும் சில ஆய்வுகள்” “பண்டைய இந்தியாவில் மருத்துவ அறிவியல்” “பண்டைய இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு” “ஒவ்வொரு மனிதனுக்குமான பூவுலகத் தத்துவம்” ஆகிய தொடர்ச்சியான ஆய்வு நூல்கள் மூலம் லோகாயதர்கள் – சாருவாகர்கள் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை ஒழித்து கட்டுவதற்கு சங்கரன் முதலிய ஆரிய பார்ப்பன சனாதனங்கள் செய்த இழிசெயல்கள், சூழ்ச்சிகளை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அம்பலபடுத்தியுள்ளார்.

ஆனால், இத்தகைய ஆய்வாளர்களின் பெயர்களையும், மேற்கோள்களையும் உச்சாடனம் செய்து கொண்டே, ஆதி சங்கரன் முன்பு செய்ததைப் போல பல்வேறு திரிபுகள், சூழ்ச்சிகள் மூலம் இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள் சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும். நேரடியான, அப்பட்டமான எதிரிகளைவிட, மூடிமறைக்கப்பட்ட கபட வேடதாரிகளான இவர்கள்தாம் லெனின் சொன்னதைப் போல மிகவும் அபாயகரமானவர்கள் அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டியவர்கள்.

  • முற்றும்.

புதிய கலாச்சாரம், பிப். மார்ச், 1995.

மேலும் படிக்க :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க