திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 3
நொய்யல், நல்லாறு, அமராவதி, பாலாறு, சின்னாறு ஆகியவையே திருப்பூர் மாவட்ட எல்லைகளுக்குள் ஓடும் ஆறுகள்; இவையே திருப்பூரின் முக்கியமான நீராதாரங்கள். இதில் நொய்யலாறு திருப்பூர் நகர எல்லைகளுக்குள்ளாக ஓடுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகும் நொய்யல், கோவை நகரின் குறுக்காக ஓடி, அவினாசி தாலுக்காவைக் கடந்து திருப்பூருக்குள் நுழைந்து பின்னர் ஒரத்தபாளையம் அணையைக் கடந்து கரூரில் காவரியாற்றில் கலக்கின்றது.
சோழர்களின் காலத்தில் நொய்யலாற்றை மையமாக வைத்து சுமார் 32 தடுப்பணைகளும், குளங்களும், இணைப்புக் கால்வாய்களும் வெட்டி விரிவான நீர் மேலாண்மை ஏற்பாடுகள் செய்திருந்தனர். மங்கலம் தடுப்பணை, ஆண்டிபாளையம் குளம், பெரியபாளையம் குளம் போன்றவை முக்கியமான குளங்கள். திருப்பூர் நகர நிர்வாகம் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து சி.பி.ஐ கட்சியின் முன்னாள் உறுப்பினரும், தொட்டிபாளையம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான தோழர் மோகனிடம் பேசினோம்.
“திருப்பூரில் முன்பு இயற்கையான மழை பொழிவை நம்பி பல்வேறு குளம் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காவிரி கடைமடைப் பகுதிகளைப் போல் குளம் குட்டைகளுக்கு இடையே விரிவான இணைப்புக் கால்வாய் வலைப்பின்னல் இல்லையென்றாலும், பெய்யும் மழை சிறு சிறு குட்டைகளிலும், பின் அங்கிருந்து குளங்களுக்கும் பின்னர் நொய்யல் ஆற்றுக்கும் சென்ரு கலந்து விடுவதைப் போன்ற ஏற்பாடு இருந்தது” என்றார் தோழர் மோகன்.
முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன், அதாவது பின்னலாடை ஏற்றுமதி விறுவிறுப்பான தொழிலாக மாறும் முன் இங்கே விவசாயம் நடந்ததா?
“நடந்தது. கால்வாய் பாசனம் நடக்கவில்லை. ஆனால், இங்கே இருந்த நீர் மேலாண்மை ஏற்பாடுகளின் காரணமாக நிலத்தடி நீர் வளம் மிகுந்து இருந்தது. ஐம்பது அறுபது அடிகளிலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும். எனவே இங்கே கிணற்றுப் பாசன முறை நடைமுறையில் இருந்தது. புகையிலை, கரும்பு போன்ற பணப்பயிர்களும், நெல்லும் விளைந்தது” என்றார்.
திருப்பூர் இன்றைக்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பனியன் கம்பெனிகளே காரணம் என்று புரிந்து கொள்ளலாமா?
“அப்படிச் சொல்ல முடியாது. திருப்பூரின் நீராதாரங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் முதலைகளால் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் சீரழிக்கப்பட்டன. பல இடங்களில் விவசாயம் நடந்தபட்ட நிலத்துக்கு மத்தியிலேயே கூட ஒன்றிரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள குட்டைகள் இருக்கும். பின்னாடி ரியல் எஸ்டேட் காரர்கள் நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக்கிய போது மொத்தமாக குட்டைகளை மூடி விட்டனர். இது ஒருபக்கம் என்றால், புறம்போக்கு நிலங்களில் இருக்கும் பெரிய குளங்களையும் ஆக்கிரமித்தனர். இதையெல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டு விட்டது. அரசே போட்ட சாலைகளுக்காக கூட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன..” எனத் தொடர்ந்தார் தோழர் மோகன்.
ஒருபக்கம் திருப்பூரின் நீராதாரங்களும், நீர் வழித்தடங்களும் அரசின் ஆசீர்வாதத்தோடு நாசமாக்கப்பட்டன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பலநூறு அடிகளுக்கும் கீழ் இறங்கி பின் மறைந்தே போனது. சாயப்பட்டறைகள் பல லட்சம் செலவு செய்து அமைத்த ஆழ்துளைக் கிணறுகள் பூமிக்கடியில் நீரோட்டமில்லாத வெற்றுப் பகுதியில் முடிந்து வெறும் காற்றையே மேலே அனுப்பின. வேறு வழியில்லாமல் அதே ஆழ்துளாய்க் கிணற்றின் குழாய்களின் வழியே சாயக் கழிவுகளை பூமிக்குக் கீழ் அனுப்பி தங்கள் பங்குக்கு நிலத்தடி நீரை நஞ்சாக்கும் வேலையைச் சாயப்பட்டறைகள் செய்த போதும் அரசு முறைப்படுத்த முன்வரவில்லை.
இதற்கிடையே என்பதுகளில் இருந்தே திருப்பூர் நகரத்திற்குள் இடம்பெயர் தொழிலாளிகள் வந்து குவியத் துவங்கினர். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ற நகர அபிவிருத்தி திட்டங்களையும் அரசு புறக்கணித்ததோடு, முறையான கழிவு நீர் வடிவால் வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. திருப்பூர் நகரின் மொத்த கழிவுகளும் நொய்யலில் கலந்து இன்றைய நிலையில் நொய்யல் ஒரு சாக்கடை ஆறாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது.
நாங்கள் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் குலோத்துங்கனைக் காண நொய்யல் ஆற்றின் கரையோரமாகவே பயணித்துச் சென்றோம். நல்லாத்தம்பாளையத்தைக் கடந்த போது அங்கிருந்த மிகப் பெரிய குளம் ஒன்று படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்கூடாகவே காண முடிந்தது, சில பத்தாண்டுகளுக்கு முன் மிகப் பெரிதாக இருந்த நல்லாத்தம்பாளையம் குளத்தில் இப்போது சில பத்து சதுர அடிகளுக்கு சாக்கடைச் சகதி மட்டுமே தேங்கி நிற்கிறது.
நல்லாத்தம்பாளைய குளத்திற்கு சுற்றுவட்டாரத்திலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்கள் அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தன. தேங்கி நின்ற சாக்கடைச் சகதியினுள் மீனைத் தேடி எங்கிருந்தோ வந்த நாரைக் கூட்டம் ஒன்று வந்திருந்தது. அந்த நாரைகள் விடாமுயற்சியோடு தமது அலகால் கிளறிக் கிளறி மீனைத் தேடி ஏமாந்து கொண்டிருந்த காட்சி நமது இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதை தெளிவுபடுத்தியது.
நால்லாத்தம்பாளைய குளத்தை ஒட்டிச் சென்ற தார் சாலைக்கு மறுபுறம் இன்னொரு சிறிய குட்டை ஒன்று இருந்தது; அதனுள் கரும்பச்சை நிறத்தில் தேங்கி நின்ற இடுப்பளவு தண்ணீருக்குள் சிறுவர்கள் சிலர் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இதுவும் சாக்கடைச் சகதிகளால் நிரம்பி விடும்.
திரூப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும் மூன்று கட்ட குடிநீர் திட்டங்கள் குறித்து தோழர் மோகனிடம் கேட்டோம்
“முதல் மற்றும் இரண்டாம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக மேட்டுப்பாளையம் பில்லூர் அனையில் இருந்து நீர் எடுக்கப்படுகின்றது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் அதிகபட்சம் 60 எம்.எல்.டி (1 எம்.எல்.டி = ஒரு கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும். ஆனால், தற்போது இவ்விரண்டு திட்டங்களின் மூலமும் சுமார் 25 எம்.எல்.டி தண்ணீர் தான் திருப்பூர் மாநகராட்சி பெற்றுக் கொண்டுள்ளது. புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிகபட்சம் 185 எம்.எல்.டி தண்ணீர் எடுக்க முடியும்; என்றாலும், வறட்சியின் காரணமாக சராசரியாக நூறு எம்.எல்.டி தண்ணீருக்கும் குறைவாகவே கிடைத்து வருகின்றது. கடந்த மாதங்களில் அதுவும் கூட இல்லாமல் சுத்தமாக வறண்டு விட்டது”
மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை எல் & டி தண்ணீர் என்று மக்கள் அழைக்கின்றார்களே?
“புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தில் அரசுக்கு பத்து சதவீத பங்குகள் உள்ளது – மற்றபடி அதில் தணியார் முதலீட்டார்களின் பங்குகள் தான் அதிகம். புதிய பொருளாதார கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின், திருப்பூரின் குடிநீர் வழங்கலை முழுக்க தனியாருக்கு அளித்த விட வேண்டும் என்று முடிவெடுத்து 1995-ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்துக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. குடிநீர் திட்டத்தை அமல்படுத்தும் வேலையை செய்தது எல் & டி நிறுவனம் – ஆனால், தற்போது அதன் பராமரிப்பு முழுவதும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்திடம் தான் உள்ளது. மக்கள் ஒரு பழக்கத்தின் காரணமாக எல் & டி தண்ணீர் என்று சொல்வார்கள்” என்றார்.
தண்ணீரை ஒரு சந்தைப் பொருளாக மாற்றி விலை வைத்து விற்பது என்பது இன்றைக்கும் கூட கேட்பதற்கே ஆத்திரமூட்டுவதாக உள்ளது. ஆனால், இருபது வருடங்களுக்கு முன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது மக்களிடையே எந்த எதிர்ப்பும் எழவில்லை. இவ்வாறு எதிர்ப்புகள் இன்றி தனியார்மய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரசு தரப்பில் சில ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தனர்.
முதலாவதாக, மாநகராட்சி சார்பாக முதல் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அதற்கான அடிக்கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை. பில்லூரில் இருந்து ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்ட வழித்தடத்திலேயே இன்னும் அகலமான குழாய்கள் அமைத்திருந்தால், மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கே தேவையில்லாமல் போயிருக்கும். இரண்டாவதாக, பவானியில் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உபரியாக செல்லும் நீரைத் திருப்பி திருப்பூரின் குளம் குட்டைகளை நிறைத்து இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க வகை செய்யும் அவனாசி அத்திக்கடவு திட்டமும் பல பத்தாண்டுகளாக வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக திருப்பூர் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையிலேயே வைக்கப்பட்டிருந்தது. எப்படியாவது தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மக்களையும் தொழில் நிறுவனங்களையும் ஒரு சூழலுக்குள் நெட்டித் தள்ளி விட்ட பின் தான் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்படுகிறது. அந்த சூழலில் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மக்கள் வரப்பிரசாதமாகவே பார்த்துள்ளனர்.
காவிரியும் பவானியும் இணையும் ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கள் பகுதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர் உறிஞ்சு மையம் ஒன்றை அமைத்துள்ளது புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம். தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து நின்று போன நிலையில் பவானியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் பல்லாயிரம் அடி ஆழத்திலிருந்து உறிஞ்சப்படும் சொற்ப நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருமையான நிறத்திலேயே வருகின்றது. இந்தாண்டு மழை பொழிவும் இல்லாமல், காவிரிநீரும் இல்லாமல் போனால், திருப்பூர் தாகத்தால் மரணிக்கும் நிலை தான் ஏற்படும்.
வினவு செய்தியாளர்கள் மக்களைச் சந்தித்த போது பலரும் இந்த தண்ணீர் பஞ்சத்துக்கு வானத்தையே நோக்கியே விரல் சுட்டினர். “மழையில்லை, கர்நாடகா காரன் தண்ணி விடலை…” என்றே மக்களில் பலரும் விரக்தியாக பேசினர். ஆனால், திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கையையோ ‘கடவுளையோ’ கர்நாடகாவையோ முழுவதுமாக பழி சொல்வதற்கில்லை. திருப்பூரின் தொண்டைக் குழியைத் தாகத்தில் தவிக்க விட்ட குற்றவாளி அரசு தான்.
நகர விரிவாக்கத்தை கண்டு கொள்ளாமல் ரியல் எஸ்டேட் முதலைகளின் சூறையாடலுக்கு வழி விட்டது, இயற்கையான நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதை அனுமதித்தது, நிலத்தடி நீரைச் செறிவூட்ட, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்தது, திருப்பூரின் ஆறுகளும் கால்வாய்களும் சாக்கடைகளானதை தடுக்கத் தவறியது, இன்றும் அவை சாக்கடைகளாகவே ஓடிக் கொண்டிருப்பதைத் தடுக்காமல் அனுமதிப்பது, பனியன் தொழிலுக்காக இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுவதை முறைப்படுத்த தவறியது என அரசின் குற்றப்பட்டியல் மிக நீண்டது.
நீர் மேலாண்மை, நகர்புற மேம்பாடு என ஒரு சிவில் சமூகத்தில் அரசும் அதன் உறுப்புகளும் செய்திருக்க வேண்டிய மிகக் குறைந்தபட்சமான அரசாளுகை தொடர்பான கடமைகளைக் கூட நிறைவேற்றாததுடன், சூழல் சீர்கேட்டுக்கும், தண்ணீர் பஞ்சத்துக்கும் திருப்பூரைத் தள்ளிவிட்டது அரசும் அதன் இயந்திரங்களும் தான்.
தற்போது நிலைமை மிகத் தீவிரமான திசையில் செல்லத் துவங்கிய பின், நடந்து வரும் மக்கள் போராட்டங்களின் இலக்காக தற்காலிக தீர்வுகளே உள்ளன; இந்நிலை மாறி, அரசு கட்டமைப்பின் தோல்வியையும் அது எதிர்நிலை சக்தியாக மாறி தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்திய குற்றவாளியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அரசே தங்களது எதிரியாக இருப்பதை மக்கள் உணர்ந்து போராட்டங்களை அந்த திசையில் செலுத்தினால் தான் திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்.
முற்றும்
– நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளார்கள்
arumai tholar, ennum athigamana saithigal ullathu.
Excellent ground report article by vinavu. You should have gathered information about how to rectify this and posted in this article.