privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதிருச்சி பீமநகரில் டாஸ்மாக் கடையை மூடிய போராளிப் பெண்கள் !

திருச்சி பீமநகரில் டாஸ்மாக் கடையை மூடிய போராளிப் பெண்கள் !

-

குடியிருப்பு பகுதி நடுவே உள்ள டாஸ்மார்க்-கடை

திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பீமநகர். இப்பகுதியில் 13 வருடங்களாக டாஸ்மாக்கடை செயல்பட்டுவருகிறது. இதனால், அப்பகுதியே டாஸ்மாக் பார் போல குடிமகன்கள் ஆங்காங்கே குடிப்பது, பெண்களை ஆபாசமாக திட்டுவது, செயின்பறிப்பில் ஈடுபடுவது, குடிகார கணவனால் தொல்லை என நாள்தோறும் அப்பகுதியில் உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் நிம்மதியிழந்து தவித்தனர்.

அப்பகுதியில் முசுலீம்கள் அதிகம் வசிப்பதால் தமுமுக சார்பிலும் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும் பலமுறை மனுகொடுத்தும் பயனில்லை. போராட்டம் நடக்கும் போது வரும் அதிகாரிகள் மற்றும் போலீசாருடனான சமரச பேச்சுவார்த்தையினால் மக்கள் கலைந்து செல்வது, மீண்டும் அரசு கடையை நடத்துவது என்ற நிலை இருந்தது. இச்சூழலில் குடிவெறியில் அப்பகுதி இளைஞர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத அளவு கொடூரமாக கொலை செய்து இரயில்வே தண்டவாளத்தில் வீசிய சம்பவம் மக்களைப் போராடத் தூண்டியது.

கடையை மூடிய மகிழ்ச்சியில் மக்கள்

அப்பகுதியின் பிரச்சினையை கேள்விப்பட்டு மக்கள் அதிகாரம் அங்கே பிரச்சாரம் செய்தது.  மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு மக்கள் அதிகாரத்தின் தலைமையில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. 29.06.2017 அன்று காலையில் பறையிசைத்து போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. டாஸ்மாக் கடை முன்பாக குவிந்த பெண்கள் முள்ளை வெட்டி அடைத்தனர். கடையை குப்பைத் தொட்டியாக்கினர். சம்பவத்தையறிந்த காவல் ஆய்வாளர் பெரியசாமி நேரில் வந்து, போராட்டம் அனுமதி வாங்கிட்டு தான் பண்ணனும். கலைஞ்சு போங்க என்றார். பலமுறை மனுகொடுத்தும் கடையை மூடாதது ஏன் என மக்கள் ஆவேசமாக கேள்வியெழுப்பினர். மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பின்வாங்கினார் ஆய்வாளர் பெரியசாமி.

மக்களின் விருப்பத்திற்கேற்ப மக்கள் அதிகாரத் தோழர் டாஸ்மாக்கடை பெயர்ப் பலகையை அகற்றினார். இதை பார்த்து மெர்சல் ஆன இன்ஸ்.பெரியசாமி பாய்ந்து வந்து தோழர்களுடன் மல்லுக்கட்டி தன் டாஸ்மாக் பாசத்தை வெளிப்படுத்தி மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டார்.

தோழர்களை மட்டும் கைது செய்துவிட்டு பெண்களையும், பொதுமக்களையும் கலைத்துவிடலாமென்ற முயற்சி, மக்களும் போலீசுடன் மல்லுக்கட்டியதால் முறியடிக்கப்பட்டது. நிலை விபரிதமாகும் என்றெண்ணி போலிசார் பின்வாங்கினர். தோழர்களின் பாடல்களும், பேச்சும் மக்களை உணர்வூட்டி மேலும் உறுதியடைய வைத்தது. இதற்கிடையில் அதிகாரிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். டாஸ்மாக் கடையை மூட தனக்கு அதிகாரம் இல்லை என தாசில்தார் கூற, அங்கிருந்த ம.உ.பா.மை தோழர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமாயின் அதை தவிர்க்கும் வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு முழு அதிகாரம் உண்டு என சட்டத்தை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்ததும் தாசில்தாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

அதன் பின் வந்த டாஸ்மாக் மேலாளர் பாத்திமா சகாயராஜ், இந்தக் கடைப் புதிதாக திறக்கப்பட்ட கடை அல்ல. 13 வருடங்களாக செயல்பட்ட கடை. இதை மூட எனக்கு அதிகாரம் கிடையாது என தன் தரப்பு ‘நியாய’த்தை விளக்கினார். அதனை ஏற்க மறுத்த பெண்கள், உங்களுக்கு அதிகாரம் இல்லன்னா அதிகாரம் உள்ளவங்கள வரச்சொல்லுங்க. கடைய உடனடியா மூடலன்னா டாஸ்மாக் கடையை கொளுத்திருவோம், இதனால எங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல என எச்சரித்தனர். இன்னும் சில பெண்கள், குடிகார கணவர்கள், பிள்ளைகளால் ஏற்படும் நரக வேதனையை, நிம்மதியிழந்து தவிப்பதை ரத்தமும், சதையுமாக விளக்கினர். மக்கள் அதிகார திருச்சிப் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் கடந்த மாதம் சிறுகனூர், பெருவளப்பூர் பகுதிகளில் 10 வருடத்திற்கு மேல் செயல்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி மூடியதைச் சுட்டிக்காட்டினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

டாஸ்மாக் கடை வருமானத்தை இழக்க விரும்பாத அரசு அதிகாரிகள் “ஒரு மாதத்திற்குள் மூடிவிடுகிறோம்”, “இப்போது நிரந்தரமாக பாரை மூடிக்கொள்கிறோம். 15 நாளில் டாஸ்மாக் கடையை மூடிக்கொள்கிறோம்” என அடுத்தடுத்து மக்களிடம் கோரிக்கை வைத்தனர். அங்கிருந்த மக்கள் அதிகார தோழர்கள் தெருவே டாஸ்மாக் பார் தான். பார்-ஐ மட்டும் மூடி எதுக்கு? கடைய மூடுங்க எனக் கூறியதை மக்கள் ஆமோதித்து கடைய மூடுங்க என்றனர். தன்னுடைய வித்தை பலிக்காது என்ற சூழலில், உயரதிகாரிகளுடன் பேசி அமைதிப்பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.

அமைதிப் பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் மேலாளர் பழைய கடைகளை மூடுவதற்கு எங்களுக்கு அதிகாரம் கிடையாது புதிதாக இடம் மாற்றம் செய்த கடைகளை மட்டுமே மூட முடியும் என்றார். இதற்கு பதிலளித்த தோழர்கள், சிறுகனூர், பெருவளப்பூர் போன்ற பகுதிகளில் பல வருடங்களாக இயங்கிவந்த கடைகள் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு பின் மூடப்பட்டதை சுட்டிக்காட்டி, சட்டம் இடத்திற்கு இடம் மாறுபடுமா எனக் கேட்டவுடன் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

அதிகாரிகள் கடையை மூடத்தயாராக இல்லாமல் புதிய கடை திறக்கும் வரை கடையை நடத்த 4 வாரம் பின் 2 வாரம் என அவகாசம் கேட்டனர். இதனை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கொதித்துப்போன ஒரு பெண் நீங்க இப்படியே பேசிக்கிட்டிருந்தீங்கனா, ஃபோன் போட்டு அங்க கடைய கொளுத்த சொல்லிருவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மக்களை அமைதிப்படுத்தும் வகையில், AC ஸ்ரீனிவாச பெருமாள் கஞ்சா, குடிபோதைல அங்க க்ரைம் நிறைய நடக்குது. எங்களாலயும் தடுக்க முடியல, எங்களுக்கே பாதுகாப்பு இல்ல. அதனால, இந்த கடைய மூடுறது நல்லது தான். ஆனா, உடனே மூட முடியாது என காவல்துறையின் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், அதிகாரிகளுக்கு சாதகமாகவே பேசினார். இதற்கு பதிலளித்த தோழர்கள், உங்களுக்கே பாதுகாப்பில்லன்னா மக்கள் மட்டும் எப்படி பாதுகாப்பா வாழ முடியும் என கேள்வி எழுப்பி, பாதுகாப்பு வேணும்னா கடையை மூடுறது தான் ஒரே வழி என்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கடையை மூடும் கோரிக்கையில் மக்களும் உறுதியாக இருந்ததால், 2 நாள் தற்காலிகமாக மூடுவதாகவும் உரிய மேலதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று நிரந்தரமாக மூடுவதற்கு ஏற்பாடு செய்வதாக முடிவுசெய்யப்பட்டது. டாஸ்மாக் வருமானத்தை மட்டும் உங்க பாதுகாப்பில் எடுத்து கொடுத்துருங்க என்றனர். அதன்படி, அதிகாரிகள் வந்து பணத்தை எடுத்துச் சென்ற பின்னர் கடை மூடப்பட்டது. அனுமதி பெறாத பார், காலை 6 மணி முதல் விடிய விடிய விற்பனை என மாதத்திற்கு 1 லட்சம் வரை மாமூல் பெற்று வந்ததாக கூறப்படும் காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி, கடை மூடப்பட்டதை அப்பாவி போல பறிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார். அதை அங்கிருந்த பெண்கள் கிண்டல் செய்து ரசித்தனர். சனியனை ஒழித்துவிட்டோம் என்ற நிம்மதியுடன் பெண்கள் கலைந்து சென்றனர்.

தகவல்:

மக்கள் அதிகாரம் – திருச்சி,
தொடர்புக்கு: 94454 75157