privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககதிராமங்கலம் போராட்டத்தில் போலீசு அட்டூழியங்கள் !

கதிராமங்கலம் போராட்டத்தில் போலீசு அட்டூழியங்கள் !

-

மிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தை முழுக்க தரிசாக்கும் வண்ணம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மட்டுமல்ல முழு தமிழக மக்களுமே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கனவே அமைத்திருந்த எண்ணெய்க் குழாயின் மோசமான தரத்தின் காரணமாக கடந்த 30.06.2017 அன்று கதிராமங்கலம் வனதுர்கை கோவில் பகுதியில் ஐந்தாறு இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, எண்ணெய் வெளியேறியுள்ளது. வெளியேறிய எண்ணெய் அங்குள்ள வயல்வெளிப்பகுதியில் படர்ந்து வயல்வெளியை நாசபடுத்தியதோடு, அங்கிருக்கும் குடிநீர் கிண்றுகளுக்கும் பரவி, அங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் வரை முழுமையாக எண்ணெய் பரவியுள்ளது.

வயலில் பரவியுள்ள எண்ணெய் ( படம் நன்றி : விகடன் )

இதனால் அச்சமடைந்த கதிராமங்கலம் மக்கள், தங்களது எதிர்ப்பைப் பதிவுச் செய்ய சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராடிய மக்களை உடனடியாகக் கலைந்து போகச் சொல்லி மிரட்டியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் வரும் வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என மக்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் தாசில்தாரையும், அப்பகுதி துணைக் கலெக்டரையும் விட்டு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது அரசு.

இதில் தீர்வு ஏற்படாததால், ஆத்திரமடைந்த போலீசு மக்கள் ஏற்படுத்தி வைத்திருந்த சாலைத் தடுப்புகளில் தீ வைத்து, அதனையே காரணம் காட்டி மக்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத் தொடங்கியது.

அதோடு, போராட்டக் குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்கள், 10 பேரைக் கைது செய்து பொய்வழக்கு ஜோடித்து சிறையில் அடைத்தது. இத்தாக்குதலுக்குப் பிறகு கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் போலீசுப் படையை குவித்தது அரசு. கதிராமங்கலம் மக்கள், போலீசு குவிக்கப்பட்டதைக் கண்டித்து 4 நாட்களும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

கதிராமங்கலத்தில் போராட்டம் நடைபெற்ற நாளிலும் அதனைத் தொடர்ந்த 4 நாட்களும் நடைபெற்ற போலீசின் வெறியாட்டமும் அராஜகமும் குறித்து அப்பகுதி மக்கள் விலாவரியாக விவரிக்கின்றனர். முதல் நாள் போராட்டத்தில் பங்கேற்று போலீசு கும்பலால், கால் முறிக்கபட்ட குணசுந்தரி பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், போராட்டம் நடந்த 4 நாட்களுக்கும் கதிராமங்கலத்தில் கேபிள் தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்து விட்டனர், என்றும் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்கவிடாமல் தடுத்தனர் என்றும், மஃப்டியில் ஊர் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த போலீசு, காலையில் வெளிக்குப் போகும் பெண்களையும், ஆண்களையும் ஆபாசமாகத் திட்டி, ‘இங்கு எதற்காக வந்தாய்?’ எனக் கேட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் முதல் நாள் நடந்த தடியடியின் போது, பெண்களை ஆபாசமாகவும், இழிவாகவும், ‘உங்களுக்கெல்லாம் போராட்டம் கேட்குதாடீ?’ என ஒருமையிலும் பேசியதாகத் தெரிவித்தார். போலீசு துரத்துகையில் ஓடிய குணசுந்தரியை இழுத்து தள்ளிவிட்டு அவரது கால்களிலேயே குண்டாந்தடியைக் கொண்டு அடித்து அவரது கால்களை முறித்திருக்கிறது போலீசு. அன்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது.

குறிப்பாக போராடிய பெண்களைக் குறிவைத்து தாக்கிய போலீசு, கைது செய்யப்பட்ட பெண்களை நள்ளிரவு வரை ஜீப்பில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றி பின்னர், வெகு தொலைவில் உள்ள ஒரு பகுதியில் இறக்கி விட்டுச் சென்றிருக்கிறது.

கைது செய்யப்பட்ட 10 முன்னணியாளர்களுக்கும், பிணை வழங்கக் கோரி 04.07.2017 அன்று தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் போராட்டக் குழு சார்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை எடுத்து விசாரித்த நீதிபதி, போராட்டத்தால் அரசுக்கு சுமார் மூன்று இலட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகவும், காயம் அடைந்த அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி, குறிப்பாக கதிராமங்கலத்தில் மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பாத சூழலில் 10 பேருக்கும் பிணை வழங்க முடியாது என்று கூறி பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கதிராமங்கலம் மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடுந்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வி எழுப்பினர். அது குறித்து பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் வன்முறையில் ஈடுபட்டு, போலீசார் மீது கல்வீசித் தாக்கியதாகவும், இதில் ஒரு போலீசு அதிகாரியும், இரண்டு காவலர்களும் காயமடைந்த்தாகவும், போலீசு ஜீப் ஒன்று கல்வீச்சில் சேதமடைந்ததாகவும், அதனால், இலேசான தடியடி நடத்தி மக்களைப் போலீசார் களைத்தனர் என்றும் வெட்கமே இல்லாமல் பொய்யுரைத்துள்ளார். மத்திய அரசின் எடுபிடிப் பழனிச்சாமிகளிடம் வேறென்ன பதிலை நாம் எதிர்பார்க்க முடியும்?

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க