பத்தாம் ஆண்டில் வினவு !

33
23

உழைக்கும் மக்களின் இணையக் குரலை ஆதரியுங்கள்!

வினவு தளம் துவங்கி ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன. பத்தாமாண்டு துவக்கத்தில் அடியெடுத்து வைக்கிறோம். தற்போது வினவு இணைய தளத்தை சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் சுமார் 1,30,000 பேர்கள் பின் தொடர்கிறார்கள்.

இன்று வரை 6,875 பதிவுகளை வெளியிட்டிருக்கிறோம். அதற்கு 1,17,574 மறுமொழிகள் வந்திருக்கின்றன. வினவு யூ டியூப்பில் இது வரை மொத்தம் 72 இலட்சம் பார்வைகளும், 20,479,874 நிமிட பார்வைகளும் எட்டப்பட்டிருக்கின்றன. வீடியோ பார்க்கும் சராசரி நேரம் இரண்டரை நிமிடமாகும்.

ஃபேஸ்புக்கில் கடந்த இருவடங்களாக வீடியோக்களை வெளியிடுகிறோம். அவற்றின் பார்வைகளும் சமீக காலத்தில் அதிகரித்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் பதிவுகளும் பரவலாக பார்க்கப்படுவதோடு பகிரவும் படுகின்றன.

இருப்பினும் இன்றைய இணைய வளர்ச்சியில் இந்த எண்ணிக்கை சொல்லும்படியான எண்ணிக்கை இல்லை என்பதையும் சேர்த்தே தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆண்டு வழமையான வேலைகளோடு நேரலை செய்திப் பதிவுகளும் கடந்த இரண்டு மாதமாக குறுஞ்செய்திப் பதிவுகளையும் ஆரம்பத்திருக்கிறோம். செய்ய வேண்டிய பணிகள் ஏராளமிருக்கின்றன. ஒரு மாதம் வெளியிடப்படும் பதிவுகளோடு வெளியிட நினைத்தும், பாதியில் எழுதி நிறுத்தப்பட்டவையும் ஏராளமிருக்கின்றன.

தொழில்முறை செய்தி ஊடகமாக நடத்தும் விருப்பம் இருந்தாலும் அதன் அடிப்படை தேவைகள், வசதிகளை இன்னும் செய்ய முடியாமல் இருக்கிறோம்.

ஆகவே இந்த பத்தாமாண்டின் துவக்கமாய் சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை. ஆனாலும் பயணம் தொடர்கிறது. இது சோர்வில் வெளிப்படும் வார்த்தை அல்ல. துவளாமல் எத்தடை வந்தாலும்  உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் வினவு வெளிவந்தே தீரும் என்பதன் மறுபக்கம்.

இதுநாள் வரை வினவு எனும் நமது மக்கள் ஊடகத்தை நடத்துவதற்குரிய நன்கொடை குறித்து நாங்கள் பெரிதும் கவலைப்படவில்லை. அதற்குரிய விசேடமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஒரு சில நண்பர்கள் மட்டும் தொடர்ந்து நன்கொடைகளை கிரமமாக அனுப்பித் தருகிறார்கள். அவை எமது செலவில் ஒரு சிறிய பங்கை எடுத்துக் கொண்டாலும் இத்தனை ஆண்டுகளில் எமக்கென நிரந்தரமான நன்கொடைகளோ, கிரமமான ஆதரவோ இல்லை.

இதற்கு எல்லாரையும் விமரிசிப்பது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் மக்கள்தான். நன்கொடை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றாலும் நீங்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும். இலாப நோக்கம், விளம்பரம் அற்ற ஒரு மக்கள் ஊடகம் இன்னும் பெரிதாக வளரவேண்டுமென்றால் அது உங்கள் கையில்தான் உள்ளது.

அச்சுப்பத்திரிகளின் தேக்கமும், பத்திரிகையாளர்களின் வேலையிழப்பும் மேலை நாடுகளில் பெரும் பிரச்சினையாக மாறிவிட்டன. காத்திரமான பத்திரிகைத்துறை அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் ஊடகங்கள் அங்கே அருகி வருகின்றன.

இணையம் வந்த பிறகு அனைத்து ஊடகங்களும் இணையத்தில் முதன்மை இடத்தை வைத்து செயல்படுகின்றன. கார்டியன் போன்ற பத்திரிகைகள் கூட வாசகர்களின் சந்தாக்களை வைத்து நடத்தப்படுகின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச பொருளாதார வசதியோடும், விளம்பரம் இன்றியும் ஒரு மக்கள் ஊடகத்தை நடத்துவது சவாலானது என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள்.

இந்த ஆண்டிலிருந்து வினவுக்கு நீங்கள் நன்கொடை அனுப்பும் முகமாக சந்தா வசதிகளை துவக்கியிருக்கிறோம். இதன் பொருள் இனிமேல் வினவு காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டியிருக்கும் என்பதல்ல. எப்போதும் வினவு அனைத்து மக்களுக்கும் இலவசமாகவே கிடைக்கும்.

எனினும் சந்தா கட்டுபவர்களுக்கு வாரந்தார குறுஞ்செய்தி மின் புத்தகம், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மின் புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் ஆகியன அனுப்பப்படும். இவைகளை தனிக் தனிக் கட்டுரைகளாக இலவசமாக அனைவரும் படிக்க முடியும்.

ஆகவே இந்த சந்தா முறை என்பது நன்கொடைக்கான ஒரு மாற்று வடிவம் என்றும் சொல்லலாம். தற்போது இணைய பண பரிவர்த்தனை வளர்ந்த பிறகு அதற்கான வசதிகளை செய்யாதது எமது பிழை. தற்போது அதை சரி செய்திருக்கிறோம்.

இனி நீங்கள் (இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள்) டெபிட் கார்டு, கிரெடிக் கார்டு மூலம் பணம் அனுப்பலாம். ஆதரியுங்கள்!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

சந்தா செலுத்த கீழ்க்கண்ட இணைப்பை அழுத்துங்கள்

சந்தா