ஆகஸ்டு 15 – ஆர்.எஸ்.எஸ்-இன் பங்கு குறித்து கலாய்க்கும் டிவிட்டர்

4
125

ங்கிலாந்தின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட 1947க்கு முன் பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் 1942ம் ஆண்டு காந்தியின் தலைமையில் துவங்கியது வெள்ளையனே வெளியேறு இயக்கம். இவ்வியக்கத்தின் 75-ம் ஆண்டு நேற்று (ஆகஸ்டு 9-ம் தேதி புதன்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 1942-ன் உணர்வை நாம் மீண்டும் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் வெள்ளையருக்கு எதிராக “செய் அல்லது செத்து மடி” என்கிற முழக்கத்தை காந்தி முன்வைத்திருந்தார்; அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து “செய்வோம், நிச்சயம் செய்வோம்” என முழங்கினார் மோடி.

எதைச் செய்வதாம்?

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த உணர்வு மெல்ல மெல்ல வடிந்து போனதால், மக்களிடையே கடமையின் முக்கியத்துவம் குறைந்து உரிமையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். போக்குவரத்து சிக்னல்களை மீறுவது, எச்சி துப்புவது என மக்கள் அடிப்படை விதிகளை கூட கடைபிடிப்பதில்லை என அங்கலாய்த்துள்ளார் பிரதமர். அதாவது இந்தியா முழுவதும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். பா.ஜ.க அரசின் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். அவர்களை எப்படித் தண்டிக்கலாம் என யோசித்துப் பார்த்த மோடி இறுதியில் அந்நியன் பட இயக்குநர் போல கருட புரணாத்தில் இறங்கி விட்டார் போலும்.

பொது இடங்களில் எச்சி துப்புவது இருக்கட்டும்; எந்த விதிகளின் அடிப்படையில் அதானிக்குக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் நிலங்களும் இன்னபிற அடிப்படை வசதிகளும் சல்லிக் காசுகளுக்கு வாரி வழங்கப்பட்டன என்பதை மாண்புமிகு பிரதமர் குறிப்பிடவில்லை. எந்த விதிகளின் அடிப்படையில் இந்திய வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திய மல்லையா தப்புவிக்கப்பட்டார் என்பதையும் பிரதமர் குறிப்பிடவில்லை. மேலும், எந்த விதிகளின் அடிப்படையில் வியாபம் கொலைகள் நடந்து வருகின்றன என்பதையோ, எந்த விதிகளின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு பொதுத்துறை வங்கிகள் பல்லாயிரம் கோடிக் கடன்களைக் கொடுத்து வருகின்றன என்பதையோ, எந்த விதிகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் மீறி பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகின்றது என்பதையோ பிரதமர் குறிப்பிடவில்லை.

மோடியின் இந்தியாவில், விதிகளை மீறி சாலையில் எச்சி துப்புவது குற்றம்; ஆனால் விதிகளின் மீதே எச்சி துப்புவதன் பெயர் “வளர்ச்சி”

போகட்டும்.

தனது பேச்சின் ஊடே 40-களில் நிலவிய தேச பக்த உணர்வை பலமுறை சுட்டிக் காட்டினார் பிரதமர். இன்றைய இந்தியாவில் ”தேசபக்தியின்” மொத்த குத்தகைதாரர்களாக பரிவாரங்களின் அவதாரங்களே இருப்பதால் இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை – ஆனால், பழைய இந்தியாவிலோ காவிகள் “அந்த” விசயத்தில் கொஞ்சமல்ல நிறையவே ”வீக்” என்பதால் சமூக வலைத்தளங்களில் பலரும் கழுவி ஊற்றினர். குறிப்பாக ட்விட்டரில்.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் தேச விடுதலைக்கு ஆற்றிய பங்கைக் குறித்து ட்விட்டரில் வெளியான சில கருத்துக்களை  கீழே தொகுத்திருக்கிறோம் : படியுங்கள், பரப்புங்கள்.

Dr. Sania
பக்தாள் : ஐயா, இங்கே “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு” என்கிற நூல் எங்கே இருக்கிறது?
நூலகர் : “காமிக்ஸ் பிரிவு” மேலே இருக்கிறது போங்கள்.

******

@RealHistoryPic
வரலாற்றாய்வாளர் ஒருவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் & ஹிந்து மகாசபாவின் பங்கு குறித்த ஆதாரங்களைத் தேடும் படம்.

******

@RealHistoryPic
லார்டு மவுண்ட்பேட்டனின் கொலையைத் திட்டமிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எடுத்த படம்.

******

@RealHistoryPic
”வெள்ளைக்காரனுக்கு மனிப்புக் கடிதம் எழுதிய என்னையெல்லாம் “வீரன்” என்று மக்கள் அழைப்பது ஒரே காமெடியாக இருக்கிறது” – வீர சாவர்கர் (1947)

******

@Trolacharya
கவனமா படியுங்கள் இது தான் ஆர்.எஸ்.எஸ் சுதந்திரப் போராட்டத்தில் களமாடியது குறித்த வரலாற்று நூல்.

******

@mihirssharma

மிஹிர் ஷர்மா என்பவர் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ”தேசபக்தி” குறித்து தொடர் கீச்சு எழுதியுள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து அந்தக் காலத்தில் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துள்ளார். அந்த தொகுப்பில் இருந்து சில

விடுதலைப் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்து என்ன?

சுதந்திரப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வந்த காலங்களில் வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அப்போது ஒருவர் டாக்டர்ஜியிடம் (ஹெட்கேவார்) வந்து தான் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைக்கு செல்லத் தயாராக இருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த டாக்டர்ஜி “நிச்சயமாக (சிறைக்கு) போ. ஆனால் யார் உனது குடும்பத்தைக் காப்பாற்றுவார்?” எனக் கேட்கிறார். அதற்கு அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனது குடும்பம் சிக்கலின்றி நடப்பதற்குத் தேவையான பொருளாதார வசதி இருப்பதாக பதிலளிக்கிறார். இப்போது டாக்டர்ஜி அவருக்கு அளிக்கும் ஆலோசனை: “அப்படியென்றால், நீ (போராட்டத்தில் ஈடுபடாமல்) அந்த இரண்டு வருடங்கள் சங்கத்திற்காக பணி செய்யலாமே” எனக் கேட்டுள்ளார். டாக்டர்ஜியின் “தேசபக்தியைக்” கண்டு மிரண்டு போன அந்த நபர் வீட்டுக்குப் போனதும் அப்படியே அடங்கி விட்டார் – (போராட்டத்தில் ஈடுபட்டு) ஜெயிலுக்கும் போகவில்லை சங்கத்துக்கும் (ஆர்.எஸ்.எஸ்) வரவில்லை.

விடுதலைப் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ் இரண்டாம் தலைவர் கோல்வால்கரின் கருத்து என்ன?

“இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரர்களை வெளியேற்ற பலரும் உணர்வெழுச்சியோடு பாடுபட்டனர். ஆனால், சுதந்திரத்திற்குப் பின் அந்த உணர்வு படிப்படியாக குறைந்து போனது. சொல்லப் போனால் அந்தளவுக்கு உணர்வெழுச்சி கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதன் ஊடான தேச விடுதலை குறித்து நமது (ஆர்.எஸ்.எஸ்) உறுதிமொழியில் குறிப்பிடுகிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதில் வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவது குறித்து நாம் ஏதும் சொல்லவில்லை”

விடுதலைப் போராட்டம் குறித்து சாவர்கரின் கருத்து என்ன?

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த போது காந்தி மக்களிடம் அரசுப் பணிகளைத் துறந்து விடுமாறு கேட்டார். அப்போது “ஹிந்து சங்கதானிகள் அனைவருக்கும் எனது தீர்மானமான உத்தரவு யாதெனில், நீங்கள் எல்லோரும் உங்களது அரசு பதவிகளை உறுதியாக பற்றிக் கொள்வதோடு உங்களது கடமைகளையும் முறையாகச் செய்ய வேண்டும்” என சாவர்கர் ஹிந்துக்களுக்கு உத்தரவிடுகிறார்.

இந்துத்துவ கும்பலுக்கு மக்களின் மறதியின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே தான் அந்தக் கால மைனர் குஞ்சுகளான தமது முன்னோடிகளை ஏக பத்தினி விரதர்களாக சித்தரித்துப் புளுகி வருகின்றனர்.

மக்களுக்கு நினைவூட்டத்தான் எம்மைப் போன்றவர்கள் இருக்கிறோமே? வரலாற்றை மக்களுக்கு நினைவூட்டுவோம்.

_______________________________

இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா

4 மறுமொழிகள்

  1. முதல் மீம்ல் காமிக் பகுதி என்பது நகைச்சுவை என்று பொருள் வருமில்லையா தோழர். காமிக்ஸ் என்பது படக்கதை என்று பொருள் படுமில்லையா

  2. சகோதரி பிரியா காமிக்கோ காமீக்ஸோ விடுதலைப்போரில் காவிகள் எந்த ஆணியையும் எடுக்கவில்லை என்பதே அதன் பொருள்.

  3. இன்றைய தேதியில் பன்னாட்டு கொள்ளைக்கும்பல் அனைத்தையும் இந்தியநாட்டுக்குள் வரவழைத்து நாட்டை அவர்களின் வேட்டைக்காடாக மாற்றிவிட்டு இன்னும் பல கனவாண்களை உற்ளே இழுத்துவிட உடல் வலிக்க விமானமேறி சுற்றிவரும் இன்றைய தேஷ்பக்தாக்களின்ேநாட்டுப்பற்றுதான் அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு என்றவுடஜ்ன் வெள்ளையன் ஏன் வெளியேற வேண்டும் நீங்கள் வெளிறேறுங்கள் உலகத்தை விட்டே என்று அவரை அனுப்பி வைத்ததே பரிவாரங்கள்தான்.விடுதலைப்போரீல் காவிகள் பங்குபெற்றார்கள் எஜ்ன்பதும் பார்ப்பன்ர்கள் பூர்வகுடீகள்தான் என்பதைப்போல அபத்தமானுதுதாஜ்ன்.இன்று மோசடி வருத்தப்படுகீறார் நாம் சாலையில் துப்புகிறோம் என்று.தவறில்லையா பின்னே நாட்டுப்பற்றாளர்கள் துப்ப வேண்டியது சாலையிலா என்ன?

  4. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் அடிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் இந்தியா இன்றுள்ளது. உண்மையில் சுதந்திர தினம் என்றும் குடியரசு தினம் என்றும் பட்டாசு கொளுத்தி மிட்டாய் கொடுப்பதே பலே வேடிக்கைதான்.

    எவ்வளவுதான் அடித்தாலும் தாங்குறானே என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் டயலக்தான் மிகப் பொருத்தமாகத் தெரிகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க