Monday, January 17, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் !

ஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் !

-

மக்கள் அதிகாரத்தின் அதிரடி நடவடிக்கை :

சுகாதாரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது பாகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் !

சூரில் அடுத்துள்ள பாகலூர் பகுதியில் கடந்த 12.10.2017 அன்று டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அம்பலபபடுத்தி “எதிர் கட்சித் தலைவர்களே, ஊடகங்களே, செயலற்ற அரசுதான் மக்களின் மரணத்திற்கு காரணம்! டெங்கு, மலேரியா பிரச்சினைக்கு தீர்வு காண பேசுங்கள்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தினை கவனித்துச் சென்ற பகுதிவாழ் மக்கள் அங்குள்ள அரசு சுகாதார மருத்துவமனையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்படி 14.10.2017 அன்று மக்கள் அதிகாரம் தலைமையில் தோழர்களும், ஆர்வலர்களும், உள்ளூர் விவசாயிகள் பொதுமக்கள் என 20 பேர் கொண்ட குழு  பாகலூர் மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் நேரத்திற்கு வருவதில்லை, பல நோய்களுக்கு மருந்து இல்லை, ஒழுங்காக மருத்துவம் பார்ப்பதில்லை என்ற பொதுமக்களின் குற்றசாட்டுகள் இருந்தன. ஆனால், ஆய்வுக்கு சென்ற போது மருத்துவமனைதான் டெங்கு கொசுக்களின் உற்பத்தியிடம் போல காட்சியளித்தது.

உடனடியாக ஊடகங்களுக்கு அழைப்புக் கொடுத்துவிட்டு மருத்துவமனையின் உள்ளே சென்ற போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் “நாய் கடி, பாம்பு கடிக்கு மருந்து இருக்கிறாதா” என்று கேட்ட போது, அந்த மருத்துவர்கள், “இருக்கிறது என்று பொய் சொன்னார்கள்”, எங்கே காட்டுங்கள் என்று கேட்டவுடன் அமைதியாகிவிட்டனர். “செடிகொடிகள் அதிகமாக வளர்ந்து புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இவை எல்லா இடங்களிலும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இருக்கிறது இதனை சுத்தம் செய்து மருந்து அடிக்க வேண்டும் என்று இல்லாமல் அலட்சியமாக செயல்படுகிறீர்கள், நோயாளிகளை தொட்டு கூடப் பார்ப்பதில்லை, பார்வையாலேயே மருந்து மாத்திரைகளை பொதுவாக கொடுக்கிறீர்கள்”  என்று சொல்லி கேட்டோம். இதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல, இன்சார்ஜை கேளுங்கள் என்று நிறுத்திக் கொண்டார்கள்.

இன்சார்ஜ்க்கு போன் செய்தவடன் 30 நிமிடத்தில் வந்தார். அவர் மருத்துவர் சுகன்யா. அவரிடம் நாங்கள் மக்கள் அதிகாரம் சார்பாக வந்துள்ளதை அறிமுகப்படுத்திக்கொண்டு, ”மருத்துவமனை புதர்கள் மண்டியும் கொசுக்கள், கழிவுகள் என சுகாதார சீர்கேடாக உள்ளது, மருத்துவர்களின் பணி நேரம் காலை 8 மணிக்கு வந்து மாலை 4 மணி. ஆனால்  11 மணிக்கு வந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்பிவிடுகிறார்கள்” என்று மருத்துவமனையின் அவலத்தை அடுக்கிக் கொண்டிருக்கும் போது, “நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன், நீங்க எப்போது வந்தீர்கள்,  நீங்கள் கூறுவது எதுவும் உண்மையல்ல” என்றார். “நாங்கள் உள்ளூர்காரர்கள், மருத்துவமனை எப்படி இயங்குகிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்” என்றதும், “அதற்கு முன்பு இருந்தது மாதிரி இப்போது இல்லை சிஸ்டம் எல்லாம் மாறியிருக்கிறது” என்றார்.

“எப்படி இரண்டு நாளில் சிஸ்டம் மாறியிருக்க முடியும். ஸ்வச் பாரதமுனு சொல்லுகிறீர்கள் அதன் யோக்கியதை இங்கு வந்து பார்த்தால் தெரிகிறது. கிராமப்புற கழிவுகளில் உற்பத்தியாவதை விட இந்த மருத்துவமனையில் தான் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. அதனை நாங்கள் வீடியோ எடுத்துள்ளோம் பார்க்கிறீர்களா?” என்றதும், “நாங்கள் என்ன சார் செய்வது, பீ.டி.ஓ கிட்ட பல முறை பேசியிருக்கோம்” என்றார்.

“அப்படியெல்லாம் நீங்க முயற்சி பண்ணதா தெரியவில்லை, வாங்க காட்டுகிறோம்” என்று மருத்துவமனை அவலங்களைச் சுற்றிக்காட்டினோம். தவறு செய்பவர்கள் தெரியாமல் செய்தால், அவர்களைத் திருத்தலாம். இந்த மருத்துவரோ, மருத்துவமனை சுகாதாரமாக இருக்கிறது என்று அப்பட்டமாக, மக்கள் மத்தியில் சொல்லியவராயிற்றே இந்த மருத்துவர். கழிவறையை காண்பித்து, “பாருங்கள் எவ்வளவு அசிங்கமாக உள்ளது” என்றதும், “பொது மக்கள் வெளியில் இருந்து வந்து கலீஜ் (அசிங்கம்) பண்ணிட்டு போகிறார்கள் நாங்கள் என்ன சார் பண்ண முடியும்” அபாண்டமாக பொய் கூறினார். ஆத்திரப்பட்ட உள்ளூர் மக்கள், “அப்படியெல்லாம் பொது மக்கள் யாரும் மருத்துவமனைக்கு வந்து அசிங்கம் செய்வதில்லை, இது பாழடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை நீங்கள் யாரும் பராமரிப்பது இல்லை, உங்க தவறை நீங்கள் மறைத்துக்கொண்டு பொது மக்கள் மேலே பழிபோட்டு அவங்கள நீங்க இழிவுபடுத்தாதீங்க” என்றனர் ஆவேசமாக.

ஊசி போடும் அறையின் பக்கத்தில் புதர் மண்டியிருந்ததைக் காட்டி, செடிகளைத் தட்டிய போது குபு குபு வென கொசுக்கள் கூட்டமாக பறந்தன, மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு லோடு தேங்காய் மட்டை கொட்டி வைக்கப்படிருந்தது. அதிலும் தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. சில மட்டைகளை கொசுக்கள் மூடியிருந்தன. அவ்வளவு கொசுக்கள். இதனைக் காண்பித்து “தேங்காய் மட்டையில் தண்ணீர் தேங்கினால் ஏ.டி.எஸ் கொசு உற்பத்தியாகும் என்று ஊருக்கெல்லாம் சொல்றீங்க ஆனால் நீங்க வேலை பார்க்கிற இந்த மருத்துவமனையை எப்படி வைத்துள்ளீர்கள்” என்று கேள்வி எழுப்பியதும் “இதெல்லாம் ஒன்றும் பிரச்சனையல்ல அது ஏ.டி.எஸ் கொசு கிடையாது அது நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும் அதெல்லாம் எடுக்க சொல்லி ஊழியர்களிடம் எச்சரித்து இருக்கோம்” என்று மழுப்பலாகப் பேசினார். “கொசு வராதுனு சொன்ன பிறகு ஏன் மேடம் எடுக்க சொல்றீங்க, நீங்க பொய் பேசுறதுக்கு ஒரு அளவே இல்லையா” என்று ஒரு முதியவர் திட்டினார். “இதே உங்க வீட்டில் இப்படி கிடந்தா எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு சும்மாவாக இருப்பீங்களா? உடனே கம்பளைன்ட் கொடுத்து நடவடிக்கை எடுக்க செய்வீர்கள் உங்கள் வீடு போல இந்த மருத்துவமனையை பாருங்கள்” என்று மக்கள் கண்டித்தனர்.

சிறிதும் நேர்மையோ மக்கள் தொண்டு என்ற சிந்தனையோ இல்லாத இந்த மருத்துவர் சுகன்யா, பேசிக்கொண்டிருக்கும் போதே, போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். முந்தைய நாள் ஆர்ப்பாட்டத்தின் போதே, மக்களைத் திரட்டி அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்ததால், போலீசும் பொதுமக்களுக்கு சல்யூட் அடித்துவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.

இதன் பிறகு வேறு வழியில்லாமல், சம்பந்தப்பட்ட நபரை அழைத்து அந்த தேங்காய் மட்டைகளை எடுக்க செய்தார். அது ஏறக்குறைய ஒரு குடோன் போல் இருந்தது, சில லாரிகளில் அள்ளிச்சென்றனர். பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் சுட்டிக்காட்டிய குறைகள் எல்லாவற்றையும் நாங்கள் சுத்தம் செய்துவிடுகிறோம் என்று சொல்லி மருந்து அடிப்பவர்களை வரவழைத்தார். கழிவறைகளை இடித்து தரைமட்டம் செய்வதற்கு ஜெ.சி.பி வரவழைத்தார். மருந்துகளும் வந்து இறங்கியது. மதியம் 1.30 க்கு சென்றுவிடக்கூடிய மருத்துவர்கள் மாலை 4.30 மணி வரை  இருந்தார்கள். இதற்கு முன்னால் ஆம்புலன்ஸ் எங்கே என்று கேட்டால் சூளகிரியில் இருக்கிறது இங்க இல்லை என்ற இதே மருத்துவர், மக்கள் அதிகாரம் ஆய்வை முடிப்பதற்க்குள் இந்த மருத்துவமனைக்கு உரிய இரண்டு ஆம்புலன்ஸ்களும் மருத்துவமனை வாசலில் நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு மூட்டை மருந்துகள் வந்து இறங்கியுள்ளது. நாய் படம் போட்டு நாய்கடி மருந்து கிடைக்கும் என போர்டு மாட்டினர். மருத்துவமனை சுத்தம் செய்வதை துரித வேகத்தில் தொடங்கியது. இவற்றை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். மக்கள் அதிகாரம் பிரச்சனையைக் கையில் எடுத்த பிறகு தான் ஒரு தீர்வு கிடைத்துள்ளது என்று அந்த பகுதிவாழ் மக்கள் தோழர்களின் கரம் பிடித்து நன்றி தெரிவித்தனர். நெகிழ்ந்து பாராட்டினர்.

டெங்கு கொசுவை உற்பத்தி செய்வதே மருத்துவமனையாக இருக்கிறது என்பது இந்த ஆய்வில் உணரமுடிந்தது. இந்த அரசு, சுகாதாரத்தை வளர்ப்பதைவிட டெங்குவை வளர்க்கிறது; சுகாதாரக் கேட்டை வளர்க்கிறது. மண்டிகிடக்கும் புதர்களாக, புழுக்கள் நெளியும் சாக்கடைகளாக அரசு மருத்துவமனைகள் திகழ்கின்றன. மேலும், இந்த அரசுக் கட்டமைப்பு கொசுக்களோடு சேர்த்து மக்கள் சேவை என்ற எண்ணமற்ற, மக்களின் வரிப்பணத்தில்தான் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியற்ற, மருத்துவம் என்பது சேவை என்ற சுரணையற்ற, பொய்களை அப்பட்டமாக பேசுகின்ற, அதிகாரத் திமிர் பிடித்த மருத்துவர்களையும் அதிகாரிகளையும் உருவாக்கியுள்ளது. டெங்குக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக விஜய பாஸ்கர் போன்ற அமைச்சர்கள் பேசுவதெல்லாம் அப்பட்டமான பொய், வடிகட்டிய பொய்.

இன்று மக்கள் அதிகாரம் மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்வு மருத்துவமனையை சுத்தம் செய்துள்ளது. இந்த அரசுக் கட்டமைப்பை சுத்தம் செய்ய முடியாது, துடைத்தெறிய வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம்தான் தீர்வு என்பதை மக்களும் உணர்ந்து வருகிறார்கள்…!

தகவல்:
தோழர்.காந்தராஜ்,பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
பாகலூர் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க