Friday, March 31, 2023
முகப்புசெய்திஆற்று மணலோடு கடல் மணல் கலப்படம் - கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆற்று மணலோடு கடல் மணல் கலப்படம் – கண்டன ஆர்ப்பாட்டம் !

-

கடல் மணல் கடத்தல் !

மக்களை கொல்லும் மாஃபியா கும்பல்! துணை போகும் அரசு கட்டமைப்பு !

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம் : செங்குன்றம் பேருந்து நிலையம்,
நாள் : 08.12.2017, மாலை 5 மணி

உழைக்கும் மக்களே!

சென்னையில் நடந்த மவுலிவாக்கம் கட்டிட விபத்தை நாம் அறிந்து இருப்போம். கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் உண்ட உணவு செரிக்கும் முன்பே மண்ணில் புதைந்து போயினர். தங்களின் சிறு சேமிப்பில் சொந்தமாக வீடு வாங்கலாம் என நினைத்து நடுத்தர குடும்பத்தின் தலையில் இடியாய் விழுந்தது மவுலிவாக்க கட்டிட விபத்து!

மவுலிவாக்கத்தை போல ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு ஆபத்து எனவும், அதுவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்தான் இந்த பேராபத்து நிகழப் போகிறது எனவும் நம்மை எச்சரிக்கிறது, சத்யம் தெலைக்காட்சி நடத்தியுள்ள ஆய்வு.

கேட்கவே நெஞ்சு வெடிக்கும் போல உள்ளதே. சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் கூட எப்போது வரும் என முன்கூட்டியே கணிக்க முடியும். ஆனால் இந்த செயற்கை பேரிடர் எப்போது கட்டிடங்கள் விழும் என தெரியாது! ஏனெனில் நமக்கு தெரியாமல் கடல் மணலை (சிலிகான் மணல்) கொண்டு வீடு கட்டியுள்ளளோம். கட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஆந்திரா மாநில நெல்லூர் மாவட்டத்தின் கூடுர் சிந்தாவரம் பகுதியில் இருந்து டாராஸ் லாரியில் கடல் மணல் கடத்தப்படுகிறது. தமிழக எல்லையான ஆரம்பாக்கத்திலிருந்து சென்னை மாதவரம் வரை தங்கு தடையின்றி கொண்டு வரப்படுகிறது. ரெட்ஹில்ஸ் அருகே பாடியநல்லூர் தான் இந்த கடத்தல் கடல் மணலை, ஆற்றுமணலோடு கலப்படம் செய்து விற்பனை செய்கின்ற மையப்புள்ளி. இந்த அயோக்கியதனத்திற்கும், அக்கிரமத்திற்கும் முழு துணையாக இருப்பது போலீசு மட்டுமல்ல வருவாய் துறையும் தான்!

இந்த கடல் மணல் வீடு கட்டுவதற்கோ, சுவரை பூசுவதற்கு கூட உதவாத நொய் மணல். வெயில் காலங்களில் சுவர்கள் வெடிக்கும் அபாயம் கொண்டது. இந்த கடல் மணலால் கட்டிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு கண்டிப்பாக சுவசக்கோளாறுகள் வரும் எனச் சொல்கிறார்கள் வேதியியல் துறையை சேர்ந்தவர்கள்.

மணல் மாபியா கும்பலின் இலக்கு நடுத்தர மக்கள் கட்டுகின்ற வீடுகள் தான். அவசரம் எனக் கேட்கின்றவர்களையும், மணலுக்கு பணம் தவணை முறையில் தந்தால் போதும் என ஆசை வார்த்தை கூறி இந்த நாசகர மணலை சப்ளை செய்து கொள்ளையடிக்கிறார்கள். இன்னொரு புறம் அரசுக்கட்டிடங்களில் சிலிகான் மணலை பயன்படுத்தி கட்டுவதை எந்த அரசு அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை என குற்றம் சாட்டுகிறார்கள் லாரி உரிமையாளர்கள்.

கனிம வளத்துறை மூலமாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கடல் மணல் கடத்துவதை தடுக்க கோரி கடிதம் எழுதி ஓராண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை என ஒதுங்கி கொள்கின்றனர். மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக SP -யிடம் மனு கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தஅரசு நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை!

மாவட்ட நிர்வாகத்தையே அடக்குகின்ற மணல் மாபியா கும்பலின் ஆட்சிதான் இது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும். லாரி உரிமையாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள், நிறுவனங்கள் என எல்லோரும் ஒரு சேர இந்த கடத்தலை நிறுத்த கோரி அபாய குரல் எழுப்பியும், யாருக்கு ஆதரவாக இருக்கிறது இந்த அரசு!

பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, வருவாய்துறை, போலீசு துறை என ஒட்டு மொத்த அரசு எந்திரமும் இந்த கடல் மணல் கடத்தலுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. ஒரு லாரிக்கு அதிகபட்சம் ரூ.10,000 கொடுத்து கடத்துகிறார்கள் தினந்தோறும் 300 -க்கும் மேற்பட்ட மூட்டை, பாடிலாரிகள் மூலம் ஆரம்பாக்கத்திலிருந்து சென்னை மாதவரம் வரை சப்ளை நடக்கிறது!

இந்த வசூலில் முன்னாடி இருப்பவர்கள் போலீசு தான்! நெடுஞ்சாலையில் டூட்டி வாங்குவதற்கே தனியாக கட்டிங் தர வேண்டும் என்பது தனி கதை.

மக்களின் உயிரோடு விளையாடுகின்ற இந்தஅரசு நம்மை பாதுகாக்கும் என்பதை இனியும் நம்ப முடியுமா? ஆற்று மணலை பாதுகாக்க போராட வேண்டியுள்ளது. கடல் மணல் கடத்தலையும், கலப்பட மணலை தடுக்க கோரியும் போராடிக் கொண்டிருக்கிறோம். இப்படி அனைத்திற்கும் போராடினால் தான் வாழ்க்கை நடத்த முடியும் எனில், இந்த அரசு எதற்கு?

அரசின் அனைத்து துறைகளும் மக்களுக்கு எதிராகவும், வேண்டாத ஒரு சுமையாக மாறிவிட்டது. மக்களுக்கு எதிரான இந்த அரசை நாம் கடத்தினால்தான். நம்முடைய இயற்கை வளங்களை காப்பாற்ற முடியும் ! நம்மையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு), காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 9444 61480, 94453 68009, 88075 32859.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க